சினிமா செய்திகள்: இடைவெளிக்கு பிறகு வரும் நடிகை அஞ்சலியின் திட்டம் என்ன?

முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்.

இடைவெளிக்கு பிறகு வரும் நடிகை அஞ்சலியின் திட்டம் என்ன?

சில பிரச்சனைகளால் சினிமாவில் இருந்து விலகியிருந்தவர் நடிகை அஞ்சலி. ஒரு ஆண்டுக்கு மேல் சினிமாவில் நடிக்காமல் இருந்த அஞ்சலி மீண்டும் நடிக்க தொடங்கினார். ஆனால் இரண்டாவது இன்னிங்க்ஸில் அவர் நடித்த எந்த படங்களும் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. தற்போது ஹீரோயினுக்கு முக்கியதுவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதில் ஏற்கனவே லிசா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

இந்த நிலையில் புதுமுக இயக்குனர் பிரவீன் பிகாட் இயக்கும் ஹாரர் படத்தில் அஞ்சலி ஹீரோயினாக நடிக்கிறார். முழுக்க முழுக்க ஹீரோயினுக்கு முக்கியதுவம் கொடுத்து அந்த படம் எடுக்கப்படவுள்ளது. ஹாரர் வகையில் உருவாகவிருக்கும் அஞ்சலியின் படத்திற்கு "ஒ" என்று தலைப்பு வைத்துள்ளனர்.

எப்போது வெளியாகும் வட சென்னை?

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வட சென்னை படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளது. முதலில் மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டனர். ஆனால் தற்போது இரண்டு பாகங்களாக குறைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. வட சென்னை படத்திற்கான படப்பிடிப்பு இரண்டு வருடங்களுக்கு மேல் நடைப்பெற்று வருகிறது. இதில் முதல் பாகத்துக்கு தேவையான காட்சிகளை படமாக்கி முடித்த வெற்றிமாறன்.

அதை வெளியிடவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். அதில் முதல்கட்டமாக போஸ்ட் புரெடெக்‌ஷன் வேலைகளில் இறங்கியுள்ளார். அதை தொடர்ந்து ஜூலை 28ம் தேதி ட்ரைலரையும், செப்டம்பர் மாதம் வட சென்னை படத்தையும் வெளியிட வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் சீமராஜா. காமெடியை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுகிறது. அதேசமயம் வரலாற்று நிகழ்வுகளையும் சீமராஜா படத்தில் நிகழ்காலத்தோடு தொடர்பு படுத்தியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான படப்பிடிப்பு இன்னும் ஒரிரு நாட்களில் முடியவிருக்கிறது.

சீமராஜா படத்தில் சமந்தா ஹீரோயினாகவும், சூரி காமெடியனாகவும் நடித்துள்ளனர். அதுவும் சூரி 6 பேக் வைத்து நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ், சீமராஜா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அவரின் காட்சி வரலாற்று நிகழ்வோடு வரும் என்று கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் சீமராஜா படத்தை வினாயகர் சதூர்த்திக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அடங்க மறு படத்தில் ஜெயம் ரவி

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் டிக் டிக் டிக் படம் வரும் 22ம் தேதி வெளியாகவிருக்கிறது. இதை தொடர்ந்து அடங்க மறு என்ற படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். இந்தப் படத்திற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. கார்த்திக் தங்கவேல் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் அடங்க மறு படத்திற்கான முதல்கட்ட வேலைகள் நடந்து வந்த நிலையில் வரும் 24ம் தேதி முதல் பார்வையை வெளியிடுகின்றனர். இதன் பின் படத்தின் வேலைகளையும் வேகப்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு படம் ஆக்‌ஷன் பார்முலாவில் உருவாகவுள்ளது.

துல்கர் சல்மானின் 'வான்'

மலையாளத்தில் இருக்கும் முன்னணி நடிகர்கள் துல்கன் சல்மானும் ஒருவர். இவர் நடிக்கும் எல்லா திரைப்படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. மலையாள சினிமாவில் நடித்துவரும் அதேவேலையில் தமிழிலும் சில படங்களில் நடிக்கிறார் துல்கர். ஏற்கனவே இவர் நடிப்பில் வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி ஆகிய படங்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் துல்கர் சல்மான் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கார்த்திக் என்ற புது முக இயக்குனரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் துல்கர் சல்மான். காதலை மையமாக வைத்து எடுக்கப்படவிருக்கும் அந்த படத்திற்கு வான் என்று தலைப்பு வைத்துள்ளனர். கெனன்யா நிறுவனம் வான் படத்தை தயாரிக்கவுள்ளனர். நடிகர் மற்றும் படத்தின் தலைப்பு பற்றிய விவரங்கள் வெளியான நிலையில் விரைவில் மற்ற நடிகர்கள் பற்றி அறிவிப்பை வெளியிடவுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :