You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சினிமா விமர்சனம்: காத்திருப்போர் பட்டியல்
- எழுதியவர், முரளீதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
ரயில் நிலையங்களில் சிறு தவறுகளைச் செயபவர்களை ரயில்வே காவல்துறை கைதுசெய்து அபராதம் விதிக்கும். சிறு அபராதத் தொகைதான் என்றாலும் அதனைச் செலுத்திமுடித்துவிட்டுச் செல்வதற்குள் நாளின் பாதி செலவழிந்துவிடும். இதைப் பின்னணியாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.
சட்டம் - ஒழுங்கு, போக்குவரத்து காவல்துறையை மதிப்பதைப் போல ரயில்வே காவல்துறையை யாரும் மதிப்பதில்லை என அத்துறையில் ஆய்வாளராக இருக்கும் வில்லியம்ஸிற்கு ஒரே வருத்தம். அதனால், இனிமேல் பிடிபடுபவர்களிடம் கடுமையாக இருக்க முடிவுசெய்கிறார்.
அன்றைய தினம் சத்யா (சச்சின் மாணி), குஞ்சிதபாதம் (மனோபாலா), கோடீஸ்வரன் (மயில்சாமி), சதீஷ் (அப்புக்குட்டி), பாஸ்கர் (சென்றாயன்), குட்டிப் புலி (அருண்ராஜா காமராஜ்) என ஒரு பெரிய கும்பல் வில்லியம்ஸிடம் சிக்கிக்கொள்கிறது. இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. நாயகன் சத்யாவைப் பொறுத்தவரை, அந்த ரயில்வே லாக்கப்பிலிருந்து விரைவில் வெளியேறுவதில்தான் வாழ்க்கையே இருக்கிறது. சத்யாவை காதலிக்கும் மேகலாவை, அவருடைய தந்தை வேறொருவருக்கு திருமணம் செய்துவைக்க முயல்கிறார். அதனால், வீட்டைவிட்டு வெளியேறத் திட்டமிட்ட நிலையில்தான் ஒரு சிறு தவறுக்காக ரயில்வே காவல்துறையிடம் சிக்கிக்கொள்கிறார் சத்யா.
இதற்கிடையில், அந்த ரயில் நிலையத்தில் குண்டுவைக்கப்பட்டிருப்பதாக தகவல்வர, கைதுசெய்யப்பட்டவர்களை மாலைவரை விடுதலைசெய்ய வேண்டாமென தகவல் வருகிறது. அந்த நாள் முடிவதற்குள் சத்யாவால் தப்பிக்க முடிந்ததா, காதலியோடு சேர்ந்தாரா என்பது மீதமுள்ள கதை.
ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாதவர்களைக் கொண்ட ஒரு குழு, ஒவ்வொருவருக்கும் ஒரு சிறிய கதை, அதில் ஒருவருக்கு மிகப் பெரிய சிக்கல் என்று சுவாரஸ்யமான களத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர். துவக்கத்தில் எதிர்பார்த்தபடி சின்னச்சின்ன சுவாரஸ்யங்களோடு நகரவே செய்கிறது. ஆனால், சத்யா தன் கதையை ஃப்ளாஷ் பேக்கில் சொல்ல ஆரம்பித்ததும் படம் துவண்டுவிடுகிறது.
ரொம்பவும் சுமாரான, தமிழ் சினிமாவில் பார்த்துப் பார்த்துப் புளித்துப்போன ஒரு காதல் கதையை கதாநாயகனுக்கு வைத்திருப்பது, படத்தின் ஒட்டுமொத்த சுவாரஸ்யத்தையும் கெடுத்துவிடுகிறது. கதாநாயகனும் நாயகியும் அறிமுகமாகும் காட்சி, நாயகியின் தந்தையிடமே நாயகன் பொய் சொல்லும் காட்சியைத் தவிர, அந்தக் காதல் காட்சியில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. தவிர, நடுநடுவே வரும் பாடல்கள் பொறுமையை ரொம்பவுமே சோதிக்கின்றன.
இடைவேளைக்குப் பிறகு, நாயகன் ரயில்வே காவல்துறையிடமிருந்து தப்பிக்க உடனிருப்பவர்கள் சின்னச் சின்னத் திட்டங்களால் சிறிது வேகமெடுக்கிறது. ஆனால், அதிலும் பல லாஜிக் சொதப்பல்கள். இப்படியாக ஒரு சுவாஸ்யமான படமாக வந்திருக்க வேண்டிய 'காத்திருப்போர் பட்டியல்' கடுப்பேத்துவோர் பட்டியலாக மாறிவிடுகிறது.
வில்லியம்ஸாக வரும் அருள்தாஸில் துவங்கி, ரயில்வே லாக்கப்பில் சிக்கியிருக்கும் அனைவருமே வெவ்வேறுவிதங்களில் ஈர்க்கிறார்கள். அதிலும் இயக்குனர் சசிகுமாரின் ரசிகராக வருபவர், சில காட்சிகளே வந்தாலும் பெரிதும் ஈர்க்கிறார். நாயகன் சச்சின் மானியும் நாயகி நந்திதாவும் இன்னும் ஆர்வம் காட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்