'லட்சுமி' குறும்படம் மீதான கடும் விமர்சனங்கள் - குறுகிய கண்ணோட்டத்தின் வெளிப்பாடா?

    • எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

அன்றாட வாழ்க்கையில் அழுத்தத்துக்கு ஆளாகும் திருமணமான ஒரு பெண், திடீரென அறிமுகமாகும் ஆண் ஒருவருடன் நெருங்கிப் பழகி, அந்த நட்பினால் அவர் எவ்வளவு தூரம் செல்கிறார், பின்னர் அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பது அண்மையில் சமூகவலைத்தளமான யு டியூப்பில் வெளியாகி மிகவும் வைரலான லட்சுமி குறும்படத்தின் கதையாகும்.

கே. எம். சர்ஜூனின் இயக்கத்தில் வெளிவந்த இந்த குறும்படத்தில், பாரதியார் பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பதும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இந்த குறும்படம் உண்டாக்கிய தாக்கம் குறித்தும், சமூகவலைதளத்தில் இது குறித்து எழுந்த விமர்சனங்கள் குறித்தும் கருத்து கேட்டபோது, கருத்துக்கூற இயக்குநர் கே. எம். சர்ஜூன் மறுத்துவிட்டார்.

இந்த குறும்படத்தில் லட்சுமி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள லட்சுமிபிரியா, பிபிசி தமிழிடம் கூறுகையில், ''இந்த குறும்படம் குறித்து வரவேற்பு அல்லது விமர்சனம் என்று எந்த கருத்தை தெரிவிப்பவராக இருந்தாலும், அனைவரையும் இந்த குறும்படம் பார்க்க வைத்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது'' என்று தெரிவித்தார்.

''ஒரு இயக்குநர் மற்றும் எழுத்தாளரின் எண்ணத்தை திரையில் வெளிப்படுத்தும் கருவியாகத்தான் நான் செயல்பட்டேன். மேலும், இந்த குறும்படத்தை தவறாக புரிந்து கொண்டவர்கள்தான் விமர்சனங்களை தெரிவிக்கின்றனர். படத்தின் காலவரிசையை பலரும் தவறாக புரிந்து கொண்டனர்'' என்று அவர் தெரிவித்தார்.

'விமர்சிப்பவர்கள் நாகரீகமாக கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்'

சமூகத்தின் பார்வையில் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்ற நிலை இன்னமும் மாறவில்லை. இந்த படம் என்றில்லை பல விஷயங்களிலும் பெண்ணுக்கு சமஉரிமை இன்னமும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட லட்சுமிபிரியா, ''இந்த படத்தின் கரு குறித்து பல விமர்சனங்கள் இருந்தாலும், எனது பங்களிப்பு குறித்து பொதுவாக பாராட்டுக்களே கிடைத்துள்ளது'' என்று கூறினார்.

''இந்த குறும்படத்தை விமர்சனம் செய்பவர்கள் முழுமையாக படத்தை பார்த்துவிட்டு , அவர்களின் கருத்து எதுவாக இருந்தாலும், அதனை நாகரீமாகவும், மரியாதையாகவும் கூறவேண்டும். அதுவே மதிக்கத்தக்கதாக இருக்கும்'' என்று கூறிய லட்சுமிபிரியா, சமூகவலைத்தளங்களில் தன் மீதும், குறும்படத்தின் இயக்குநர் மீதும் சிலர் வசைக்கருத்துக்களுடன் கூடிய விமர்சனங்களை பதிவிடுவதாக குறிப்பிட்டார்.

'லட்சுமி செய்தது சரியா?'

சமூகவலைத்தளத்தில் இந்த குறும்படம் பற்றி எழுந்த விமர்சனங்கள் குறித்து கட்டுரை எழுதியவரும், பத்திரிக்கையாளருமான சௌமியா ராஜேந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''இந்தப் படம் ஒரு சாதாரண பெண்ணின் கதை. இது நடக்காத ஒரு சம்பவம் இல்லை. சமூகத்தில் நடக்கும் ஒன்றுதான். புரட்சிகரமான கதையாக இதை பார்க்கத் தேவையில்லை'' என்று தெரிவித்தார்.

பாரதியின் புதுமைப்பெண் இது அல்ல என்று விமர்சிப்பவர்கள் பாரதியின் புதுமைப் பெண்ணையும் ஆதரிப்பவர்கள் இல்லை என்று குறிப்பிட்ட சௌமியா, ''ஆணாதிக்க சமூகத்தின் ஒரு எதிர்வினையாகதான் இதை பார்க்கிறேன்'' என்று தெரிவித்தார்.

''லட்சுமி செய்தது சரி என்று நான் வாதாடவில்லை. லட்சுமி ஒரு புனைவு காதாபாத்திரம்தான். ஒரு பெண் புனைவு கதாப்பாத்திரம் திரையில் செய்யும் ஒரு விஷயத்தைகூட சிலரால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இது ஏன்?'''' என்று வினவினார்.

ஆணுக்கு ஒரு நீதி? பெண்ணுக்கு ஒரு நீதியா?

''திரிஷா அல்லது நயன்தாரா என்று படத்தின் தலைப்பு கூட வருகிறது. திரையில் ஆண்கள் இரண்டு கதாநாயகிகளுடன் காதல் செய்வதை நாம் ஏற்றுக் கொண்டு ரசித்திருக்கிறோம் ஆனால், ஒரு பெண் குறும்படத்தில் இவ்வாறு நடித்தது ஏன் இந்த அளவுக்கு விமர்சிக்கப்படுகிறது?'' என்றும் சௌமியா கேள்வி எழுப்பினார்.

இதனை பெண்ணியம் என்று லட்சுமியோ அல்லது குறும்பட இயக்குநர் அளித்த குறிப்பிலோ எங்குமே கூறவில்லை. இது போன்ற படங்கள் வருவதே அரிது . அதனால், இது போன்ற படங்களை , பார்வையாளர்கள் பெண்ணிய பகுப்பாய்வு செய்யலாம் என்றும் கூறினார்.

''லட்சுமியோ அல்லது அந்த குறும்படத்தின் இயக்குநரோ பெண்ணிய ஆதரவாளர் என்று கூறுவதே தவறு. ஆனால், ஒரு ஆண் செய்யும் ஒன்றை எவ்வாறு வரவேற்கிறோமோ அதனை பெண் செய்யும்போது எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதில்தான் பெண்ணியம் என்ற அம்சமே வருகிறது'' என்று கூறிய செளமியா, ஆண் செய்யும் ஒன்றை பெண் செய்யும்போது ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை சிந்திப்பதுதான் பெண்ணியம் என்றும் குறிப்பிட்டார்.

இந்த படத்தில் உள்ள சில அம்சங்களை நான் ஆதரிக்கவில்லை. பெண் சுதந்திரம் என்றவுடன் பாரதியை மேற்கோள் காட்ட தேவையில்லை. அந்த பெண்ணின் பயணம் அவராகவே எடுத்த முடிவாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், இந்த அளவு விமர்சனங்கள் தேவையற்றது'' என்று செளமியா ராஜேந்திரன் குறிப்பிட்டார்.

ஓரிரு சம்பவங்களை மிகைப்படுத்துவதா?

லட்சுமி குறும்படம் குறித்த விமர்சனங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளரான நாராயணன் ''தேசத்தின் கலாசாரத்தை பாதிக்கும் எந்தவொரு சர்ச்சைக்குரிய விஷயமானாலும், அது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் செய்கிறது'' என்று கூறினார்.

'' இதுபோன்ற குறும்படம் எடுப்பவர்கள், கேலிச்சித்திரம் வரைபவர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து, அது சமுதாயத்தில் எவ்வித தாக்கத்தை உண்டாக்கும் என்று உணர்ந்து செயல்படவேண்டும்'' என்று அவர் தெரிவித்தார்.

அங்கொன்றும், இங்கொன்றும் நடக்கும் ஓரிரு சம்பவங்களை மிகைப்படுத்தி அதனை திரைப்படம், குறும்படம் அல்லது நாவல்களில் கூறுவது உறுதியாக சமூகத்தில் சில சிக்கல்களை உருவாக்கும். இதை தவிர்ப்பது நல்லது என்று நாராயணன் மேலும் கூறினார்.

நம் சமூகம் ஆணாதிக்க சமூகமாக இருப்பது நிச்சயம் களையப்பட வேண்டும் என்று கூறிய நாராயணன், ''ஒரு குறும்படம் தவறாக தெரிந்தாலும் அதனை விமர்சனம் செய்வதற்கு ஓர் எல்லை உண்டு என்பது உண்மைதான்'' என்றும் குறிப்பிட்டார்.

'நாள் முழுக்க ஒரு படம் குறித்து பேசி நேரத்தை வீணாக்குவதா?'

லட்சுமி குறும்படம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து பேசிய நடிகர் எஸ்.வி. சேகர் ''இந்த குறும்படத்தை நான் பார்த்தேன். குறும்படத்துக்கு உரிய அம்சத்துடன் கருத்தை மிகவும் சுருக்கமாகவும், நன்றாகவும் இதில் கூறியிருக்கிறார்கள். இதில் எப்படி சர்ச்சை வந்தது?'' என்று வினவினார்.

பாரதியின் கவிதைகள் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பது சர்ச்சைக்குள்ளானது குறித்து பேசிய அவர், படத்தில் எதை சேர்க்க வேண்டும், எதை சேர்க்கக்கூடாது என்பது இயக்குநர் முடிவு சார்ந்த விஷயம் என்று குறிப்பிட்டார்.

''ஆண்கள் இருதார மணம் செய்வது போன்ற திரைப்படங்கள் முன்பு வெளிவந்தபோது ஏன் அதிகமாக விமர்சிக்கப்படவில்லை என்று கேட்டதற்கு ''தற்போது சமூகவலைத்தளங்கள் மிக தீவிரமாக உள்ளதுதான் முக்கிய காரணம். அதே சமயம், சமூகத்தில் ஆணாதிக்க மனப்பான்மை முழுமையாக அகலவில்லை. அதற்கு காலம் ஆகும்'' என்று எஸ்.வி. சேகர் தெரிவித்தார்.

''எந்தப் படம் சர்ச்சையை நோக்கிப் போகிறதோ அது வெற்றிப்படம்தான் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், என்னைப் பொறுத்தவரை இது ஒரு தரமான குறும்படம். ஒரு படத்தை பார்த்தால் அதை பற்றியே நாள் முழுக்க பேசி நேரத்தை வீணாக்க கூடாது. அந்த அளவுக்கு என்னிடம் நேரம் இல்லை'' என்று எஸ்.வி. சேகர் தெரிவித்தார்.

'இயக்குநரே இந்த வெற்றியை எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்'

''இந்த குறும்படத்தில் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால், தமிழ் சமூகம் எப்போதுமே நடைமுறையில் இருப்பதையும், வெளியேயும் வெவ்வேறாக காட்டிக் கொள்வது வழக்கம். மேலும். மீம்கள் உருவாக்குபவர்கள் இந்த குறும்படம் குறித்து அதிகமாக கிண்டலடிக்க ஆரம்பித்தனர். இதனாலே இது இந்த அளவுக்கு வைரலானது'' என்று எழுத்தாளரும், வலைப்பூ பதிவருமான அராத்து பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''இந்த குறும்படம் இந்த அளவுக்கு வெற்றி பெறும் என்று அந்த இயக்குநரே எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். அதனால், இதனை ஒரு முன்மாதிரியாக கொண்டு இதைவிட கலாசார அதிர்ச்சிகள் சார்ந்த படங்கள் மேலும் வரக்கூடும்'' என்று அவர் தெரிவித்தார்.

''இந்த குறும்படத்தில் வரும் லட்சுமி ஒரு சாதாரண அச்சகத்தில் வேலை பார்ப்பதாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால், அவரது உடல் மொழி, மற்றும் அவர் அணிந்திருக்கும் ஆடை போன்றவை அவ்வாறு இருக்காது. மேலும் இந்த குறும்படத்தில் வரும் வேலையில்லாத ஓவியருக்கு இவ்வளவு பெரிய வீடு இருக்க வாய்ப்பில்லை'' என்று அராத்து கூறினார்.

இந்த குறும்படத்தில் நாடகத்தன்மை அதிகமாக உள்ளது. இதுவே கேலி, கிண்டலுக்கு வழிவகுத்தது என்று அராத்து மேலும் தெரிவித்தார்.

''திருமணத்தை மீறி ஒரு பெண் வேறொரு உறவு வைத்திருக்கிறாள் என்பதை எந்த ஜோடனையும் இன்றி கூறியிருந்தாலோ அல்லது அவளது கணவருக்கு வேறு ஏதோ தீவிர பிரச்சனை இருக்கிறது, அதனால் அந்த பந்தத்தில் இருந்து அவள் வெளியேறுகிறாள் என்று கூறப்பட்டிருந்தாலோ இந்த அளவு விமர்சிக்கப்பட்டிருக்காது'' என்று அராத்து குறிப்பிட்டார்.

ஜிமிக்கி கம்மல் நடனம் - லட்சுமி குறும்படம் - ஒரு ஒப்பீடு

இந்த குறும்படம் இந்த அளவுக்கு புகழ் பெற்றது ஏன் என்று கேட்டதற்கு பதிலளித்த அராத்து, ''தமிழ் சமூகத்தில் அந்த நேரத்தில் பேச வேறு விஷயம் கிடைக்காததுதான் காரணமா அல்லது எதையும் கிண்டல் செய்யும் மனப்பான்மையால் இது பிரபலம் அடைந்ததா என்று தெரியவில்லை என்று அராத்து கூறினார்.

''ஜிமிக்கி கம்மல் நடனம் எப்படி யாரும் எதிர்பாராமல் அந்த நேரத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பிரபலமானதோ, அது போன்றே லட்சுமியும் ஹிட்டானது. இந்த குறும்படம் குறித்த ஆக்கப்பூர்வமான கருத்துக்களால் இது பிரபலம் ஆகவில்லை. இது குறித்த மிகுதியான கிண்டல்களால்தான் பிரபலமானது'' என்றும் அவர் தெரிவித்தார்.

திருமண பந்தத்தை மீறி வேறொரு உறவை நாடிச் செல்லும் ஒருவர் , ஆணாக இருந்தால் ஒருவகை நிலைப்பாடு, பெண்ணாக இருந்தால் வேறொரு நிலைப்பாடு என்ற சமூகத்தின் பார்வை மாறவேண்டும் என்பதே சமூக பார்வையாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் கருத்தாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :