You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
`மெர்சல்` பாடல் வெளியீடு: 'தமிழர்களுக்கான பாடல்' என விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் புகழாரம்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்` படத்தில் இடம்பெற்றுள்ள `ஆளப்போறான் தமிழன்` என்ற பாடலின் வரிகள் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ள நிலையில், இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளை வெகுவாக புகழ்ந்து பல விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
`தெறி` படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்-அட்லீ கூட்டணி இணையும் இரண்டாவது திரைப்படம் இது என்பதால், படபூஜையிலிருந்தே `மெர்சல்` திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதால், அவருடைய ரசிகர்களும் இந்த படப்பாடல்களை பெரிதும் எதிர்பார்த்து வந்தனர்.
இந்நிலையில் படத்தில் இடம்பெறும் `ஆளப்போறான் தமிழன்` என்ற பாடலின் வரிகள், ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த செய்தியை சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கினர்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை `ஆளப் போறான் தமிழன்` பாடலின் வரிகள் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில், சமூக வலைத்தளங்கள் #mersal மற்றும் #AalaPoraanTamizhan ஆகிய ஹேஷ் டாக்குகள் டிரெண்டாகின.
இந்த பாடல் முழுவதும் தமிழர்களின் பெருமைகள் இடம்பெற்றுள்ளதாகவும், ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றிபெறச் செய்த இளைஞர்களை பாராட்டுவது போல அமைந்துள்ளதாகவும் விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
சிலர், இன்னும் ஒரு படி முன்னே போய், `வெற்றி மக வழிதான் இனி எல்லாமே` மற்றும் `ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்` போன்ற வழிகளை சுட்டிக் காட்டி, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அந்த பாடலில் குறிப்பிட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளன.
விஜய் ரசிகர்களால் ஆளப்போறான் தமிழன் பாடல் சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டாலும், `தமிழன் என்ற உணர்வை தூண்டிவிட்டு, அதன் மூலம் வியாபாரம் செய்ய நினைக்கிறார் விஜய்` எனவும் சிலர் தங்கள் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.
மெர்சல் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.
பிபிசி தமிழில் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்