You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அந்தஸ்தை இழக்கிறதா ஆங்கிலம்? பிரெஞ்சுக்கு மாறிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்
இத்தாலியில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன் கிளாட் ஜக்னர், "ஐரோப்பாவில் ஆங்கில மொழி தனது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது" என்று கூறினார்.
பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனது உரைகளை பிரெஞ்சு மொழியில் வழங்குவதாக அவர் கூறினார்.
தனது மொழி தெரிவுக்கான காரணத்தை விளக்கிய அவர், "மெதுவாக ஆனால் நிச்சயமாக ஐரோப்பாவில் ஆங்கிலம் முக்கியத்துவத்தை இழந்து வருகிறது, மேலும் பிரான்சில் தேர்தலும் நடைபெறுகிறது," என்று தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் இங்கிலாந்தின் முடிவை "ஒரு சோகம்" என்று அவர் குறிப்பிட்டார்.
ஆங்கில மொழியைப் குறித்த தனது கருத்துக்கு சிரிப்பு மற்றும் கைதட்டலுடன் ஆரவார வரவேற்பு இருந்ததை கண்ட அவர் முகத்தில் வறண்ட புன்னகை இருந்ததை காணமுடிந்தது.
"எங்களது பிரிட்டன் நண்பர்களுடன் நியாயமான பேச்சுவார்த்தை நடத்துவோம், ஆனால் பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியம் கைவிடவில்லை, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டுவிலகுவது பிரிட்டன்தான் என்பதை மறந்துவிடக் கூடாது" என்று கூறிய அவர், "இதுதான் வித்தியாசத்தை ஏற்படுத்தும் அம்சம்," என்றார்.
ஜூன் மாதம் எட்டாம் தேதியன்று நடைபெறவுள்ள இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் சில ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் செல்வாக்கு செலுத்த முயற்சித்ததாக இங்கிலாந்து பிரதமர் தெரீசா மே குற்றம் சாட்டியிருந்தார்.
சில ஆங்கில புள்ளிவிவரங்கள்
• ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகவும் பரவலாக பேசப்படும் வெளிநாட்டு மொழி ஆங்கிலம்தான். ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களில் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் என இரண்டு "புழக்க மொழிகள்" உள்ளன.
• ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ மொழிகள் 24. ஐரோப்பிய ஒன்றியம் 4,300 மொழிபெயர்ப்பாளர்களையும் (translators), ஒருவரின் பேச்சை உடனுக்குடன் மொழிபெயர்க்கும் 800 தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களையும் (interpreters) பயன்படுத்துகிறது.
• ஐரோப்பிய ஒன்றியத்தில் 1973 ஆம் ஆண்டில் பிரிட்டன் இணைவதற்கு முன்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய மொழியாக இருந்தது பிரெஞ்சு மொழி.
• உலகெங்கும் உள்ள மக்களில் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் 400 மில்லியன் பேர் என்பதும், பிரெஞ்சு மொழியை தாய்மொழியாக கொண்டவர்களின் எண்ணிக்கை 220 மில்லியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்