ப்ளேபாய் இதழில் மீண்டும் நிர்வாணப் படங்கள்

கவர்ச்சிப் பத்திரிகையான ப்ளேபாய் மீண்டும் தனது பதிப்புகளில் நிர்வாணப் படங்களை வெளியிட முடிவு செய்துள்ளது.

அப்படியான படங்களை பதிப்பிப்பதில்லை என்ற முடிவை கடந்த ஆண்டுதான் ப்ளேபாய் எடுத்திருந்தது.

தமது பத்திரிகையிலிருந்து நிர்வாணத்தை முற்றாக நீக்குவது தவறான ஒரு முடிவாகும் என்று அதன் புதிய தலைமை வடிவமைப்பு அதிகாரி கூப்பர் ஹெஃப்னர் கூறியுள்ளார்.

"இழந்த அடையாளத்தை மீட்டு நாம் யார் என்பதை மீண்டும் உணர்த்தியுள்ளோம்" என்று ட்வீட் ஒன்றின் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தடாலடி தலைகீழ் மாற்றத்தை சமூக ஊடகங்களில் சிலர் வரவேற்றுள்ளனர். ஆனால் வேறு சிலரோ விற்பனை நெருக்கடியில் இதுவொரு வியாபார யுக்தியே எனக் கூறியுள்ளனர்.

"நிர்வாணம் பிரச்சினை இல்லை"

"நிர்வாணத்தை விற்பதும் அது எளிதில் கிடைப்பதும்" ப்ளேபாயின் முடிவின் மாற்றத்துக்கு ஒரு முக்கியக் காரணமாகவுள்ளது என்று சமூக ஊடகக் கருத்துக்கள் வந்துள்ளன.

ஒருபோதும், "நிர்வாணம் என்பது ஒரு பிரச்சினையாக இருந்ததே இல்லை" என்று ப்ளேபாய் நிறுவனர் ஹ்யூ ஹெஃப்னரின் மகன் கூப்பர் கூறுகிறார்.

ஆனால் மிஸிசிப்பி பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் பேராசிரியராக இருக்கும் சமீர் ஹுஸ்னியோ ப்ளேபாய் நிர்வாணத்தை கைவிட்ட பிறகு அப்பத்திரிகையை ஆதரித்தவர்களைவிட ஒதுக்கியவர்களே அதிகம் என்கிறார்.

"நிர்வாணம் இல்லாத ப்ளேபாய் பத்திரிகை என்பது முரணான ஒரு விஷயம்" என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஆனாலும் டிஜிட்டல் காலகட்டத்தில் நிர்வாணத்தை தவிர்க்க முடியாத சூழலில், இளம் ரசிகர்களை தக்கவைத்துக் கொள்ள ப்ளேபாய் புதிய வழிகளை கையாள வேண்டும் என்றும் ஹுஸ்னி கூறுகிறார்.

மீண்டும் பழைய பல்லவி

தமது அடுத்த இதழில் ஆபாச நகைச்சுவைகள், கிளுகிளுப்பு விஷயங்கள் போன்ற தனது பழைய பல்லவிகளையே ப்ளேயாப் முன்னெடுக்கிறது.

பொது இடங்களில் தாய்ப்பால் கொடுக்கும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், 'மார்பகங்களை விடுவியுங்கள்' என்கிற தலைப்பில் நடிகை ஸ்கார்லெட் பர்ண் எழுதியுள்ள கட்டுரையும் அடுத்த இதழில் வெளியாகிறது.

இருந்தாலும் 'ஆண்களுக்கான கிளுகிளுப்பு' எனும் வாசகத்தை தனது அட்டையில் வெளியிடுவதை நிறுத்துகிறது.

வாழ்வியல் கலாச்சாரத்தை முன்னெடுக்கும் ஒரு பத்திரிகையாகவே ப்ளேபாய் இருக்கும் என்று ஹென்ஃபர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 1953ஆம் ஆண்டு வெளிவரத் தொடங்கிய ப்ளேபாய் பத்திரிகை கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நிர்வாணப் படங்களைப் பிரசுரிப்பதை நிறுத்தியது.

இணையதளத்தில் நிர்வாணம் மலிந்துவிட்டதால், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் 56 லட்சம் விற்பனையான நிலையில் ப்ளேபாயால் கடந்த ஆண்டு ஏழு லட்சம் இதழ்களையே விற்க முடிந்தது.

ஆனாலும் முயல் ஒன்று கழுத்தில் சிறிய டை ஒன்றை கட்டிக்கொண்டிருக்கும் அதன் சின்னம் உலகளவில் மிகவும் அறியப்பட்ட ஒன்றாக இன்றளவும் உள்ளது.

நகைகள், உயர்வகை மதுபானங்கள், அழகுசாதனப் பொருட்கள் ஆகியவற்றின் உலகளாவிய விற்பனை மூலமே தற்போது ப்ளேபாய் தனது வருமானத்தை ஈட்டுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க :பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்