சென்னையில் தந்தை, இரு மகன்களின் உயிரை பறித்த 'கண்ணுக்குத் தெரியாத கொலையாளி'

- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னையில் ஜெனரேட்டரில் இருந்து வெளியேறிய புகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், கடந்த ஜூலை 1 அன்று உயிரிழந்ததாக புழல் காவல்துறை தெரிவித்துள்ளது.
மறுநாள் (ஜூலை 2) சென்னை ஆலந்தூரில் ஜெனரேட்டர் புகை காரணமாக 7 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர்கள் கிண்டி அரசு மருத்துவமனையிலும் சிலர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
'ஜெனரேட்டர் மற்றும் எரிவாயு சாதனங்களை உரிய முறையில் கையாளாவிட்டால் உயிரிழப்பு ஏற்படலாம்' என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஜெனரேட்டரை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை என்ன? சென்னையில் மேற்கூறிய இரு சம்பவங்களிலும் என்ன நடந்தது?
சென்னை புழலில் என்ன நடந்தது?
சென்னையை அடுத்துள்ள புழல் கதிர்வேடு பகுதியில் வசித்து வந்த செல்வராஜ், லாரி போக்குவரத்துக்கான முன்பதிவு அலுவலகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அரியலூரை சேர்ந்த இவருக்கு மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த ஜூலை 1 ஆம் தேதி இரவு உணவை முடித்துவிட்டு தனது மகன்களுடன் உறங்கச் சென்றுள்ளார்.
மனைவியும் மகளும் ஓர் அறையில் உறங்கியுள்ளனர். தனது மகன்களுடன் வேறு ஓர் அறையில் செல்வராஜ் உறங்கியுள்ளார். மறுநாள் காலையில் (ஜூலை 2) நீண்ட நேரமாகியும் செல்வராஜ் எழுந்திருக்காததால், அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவரது மனைவி கதவை உடைத்துள்ளார்.
அப்போது வாயில் நுரையுடன் தனது கணவரும் இரு மகன்களும் இறந்துகிடந்ததாக, புழல் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டிருந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மூன்று பேரின் உடல்களையும் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூவரின் உடலிலும் வேறு காயங்கள் இல்லை என்பதால் மரணத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
"தனது மகன்களுடன் செல்வராஜ் உறங்கிய அறை மிகச் சிறிதாக இருந்தது. போலீஸ் உள்ளே சென்றபோது புகை வாசம் அடித்தது. முதல்நாள் இரவு மின்தடை ஏற்பட்டதால் டீசலில் இயங்கும் சிறிய ஜெனரேட்டரை செல்வராஜ் இயக்கியுள்ளார்" எனக் கூறுகிறார், பெயர் குறிப்பிட விரும்பாத புழல் காவல்நிலைய காவலர் ஒருவர்.
சிறிய அளவிலான அந்த அறையில் காற்றோட்ட வசதி இல்லை எனக் கூறும் அவர், "ஜெனரேட்டரில் இருந்து வெளியேறிய புகையால் மூவரும் உயிரிழந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம்" எனக் கூறுகிறார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் ஜெனரேட்டரில் இருந்து வெளியான கார்பன் மோனாக்ஸைடு வாயு காரணமாக மூவரும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கார்பன் மோனாக்ஸைடு வாயுவை மூவரும் சுவாசித்ததற்கான (carbon monoxide inhalation) தடயங்கள் நுரையீரலில் இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆலந்தூரில் என்ன நடந்தது?
சென்னை ஜி.எஸ்.டி சாலையில் ஆலந்தூர் அருகில் தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு புதன்கிழமை (ஜூலை 2) அதிகாலையில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜெனரேட்டர் மூலம் அறைகளுக்கு மின் விநியோகம் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது ஜெனரேட்டரில் இருந்து வெளியான புகையால் விடுதியின் வரவேற்பறையில் இருந்த நபரும் ஓர் அறையில் தங்கியிருந்த 6 பேரும் மயக்கமடைந்துள்ளனர்.
கிண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினரும் காவல்துறையினரும் அவர்களை மீட்டு கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிலரை அனுமதித்தனர். சிலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் தற்போது அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
"குறுகிய நேரத்தில் பாதிப்பு"

"காற்றோட்டம் இல்லாத அறைக்குள் ஜெனரேட்டரை இயக்கும் போது அது வெளியிடும் கார்பன் மோனாக்ஸைடு வாயுவால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்" எனக் கூறுகிறார், சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் வீ.புகழேந்தி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்த வாயு ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுடன் ஒட்டிக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. ரத்தத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை (Hypoxia) இது ஏற்படுத்துகிறது. ஆக்ஸிஜனைவிட சுமார் 200 மடங்கு ஹீமோகுளோபினுடன் இணையும் ஆற்றல் வாய்ந்ததாக இந்த வாயு உள்ளது" என்கிறார்.
கட்டடங்களில் தீப்பிடித்து எரியும்போது சிலருக்கு தீக்காயங்கள் ஏற்படாவிட்டாலும் உயிரிழப்பு ஏற்படுவதை மேற்கோள் காட்டிப் பேசிய வீ.புகழேந்தி, "தீப்பிடிக்கும் போது அறையில் கார்பன் மோனாக்ஸைடு வாயு பரவுகிறது. இது மரணத்தை ஏற்படுத்துகிறது" எனக் கூறுகிறார்.

"மூடிய அறைக்குள் எவ்வளவு வேகமாக வாயு பரவுகிறதோ அதற்கேற்ப பாதிப்புகள் அதிகரிக்கும். வாயுவை சுவாசித்த குறுகிய நேரத்துக்குள் இறப்பு ஏற்படும். மூச்சுத் திணறல் ஏற்பட்டு நுரையீரலையும் பாதிக்கும்" எனவும் மருத்துவர் வீ.புகழேந்தி குறிப்பிட்டார்.
"பெட்ரோல், டீசல் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது கார்பன் மோனாக்ஸைடு வாயு வெளியேறி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பேட்டரிகள் மூலம் இயக்கும் போது பெரும்பாலும் இதுபோன்ற பாதிப்புகள் வருவதில்லை" எனக் கூறுகிறார் வீ.புகழேந்தி.
"மூச்சுக் குழாய்களில் பாதிப்பு"

"கார்பன் மோனாக்ஸைடு என்பது நிறமற்ற, மணமற்ற வாயுவாக உள்ளது. காற்றோட்டம் இல்லாத இடங்களில் இந்த வாயு வெளியேறும்போது மனிதர்களின் மூச்சுக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது" என்கிறார், அசாமில் உள்ள தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி பார்த்திபன்.
சயனைடு சாப்பிட்டு இறந்து போவதற்கும் கார்பன் மோனாக்ஸைடு வாயுவுக்கும் ஒரே மாதிரியான செயல்பாடுகள் உள்ளதாகக் கூறும் பார்த்திபன், "மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். சில மணித்துளிகளில் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
யாருக்கெல்லாம் அதிக ஆபத்து?
இதுதொடர்பாக, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் இணையதளத்தில் சில தகவல்கள் கூறப்பட்டுள்ளன. 'இந்த வாயு பெரும்பாலும் கண்டறியப்படாமல் கவனக்குறைவால் உறக்க நிலையில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வாயுவை, 'கண்ணுக்குத் தெரியாத கொலையாளி' என வர்ணித்துள்ள அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில், கார், லாரி, சிறிய இயந்திரங்கள், அடுப்புகள், விளக்குகள், நெருப்பு வைக்கும் இடங்கள், சிறிய ஜெனரேட்டர்கள், உலைகளில் எரிபொருளை எரிப்பது போன்றவற்றின் மூலம் உருவாவதாக கூறுகிறது.
மூடப்பட்ட இடங்க ளில் கார்பன் மோனாக்ஸைடு உருவாகும் போது அதை சுவாசிக்கும்போது மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
குழந்தைகள், முதியவர்கள், நாள்பட்ட இதயநோய், ரத்த சோகை மற்றும் சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம் (CDC) கூறுகிறது.
குளிர்காலங்களில் கார்பன் மோனாக்ஸைடு பரவல் அதிகம் உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. குளிர்காலங்களில் வெப்பத்தை ஏற்படுத்துவதற்கு மக்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை ஒரு காரணமாக வகைப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு வழிமுறைகள் என்ன?
இதனைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளையும் அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம் பட்டியலிட்டுள்ளது.
- வீட்டில் உள்ள வாட்டர் ஹீட்டர், உலை (furnace) உள்பட எரிவாயு சாதனங்களை ஆண்டுதோறும் தொழில்நுட்ப வல்லுநர் மூலம் பழுது பார்த்தல்
- உள்புற அறைகளில் ரசாயன ஹீட்டர்களை பயன்படுத்தக் கூடாது
- வீட்டில் காற்றோட்டத்தில் இருந்து 20 அடிக்கு குறைவான தூரத்தில் ஜெனரேட்டரை பயன்படுத்தக் கூடாது. கதவு, ஜன்னல்கள் திறந்திருந்தாலும் சில நிமிடங்களில் அபாயகரமான அளவில் கார்பன் மோனாக்ஸைடு வெளிப்படும்.

அறிகுறிகள் என்ன?
கார்பன் மோனாக்ஸைடு நச்சு வாயுவை சுவாசிக்கும் போது ஏற்படும் லேசான அறிகுறிகள் காய்ச்சல் என தவறாகக் கருதப்படுவதாக அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம் கூறியுள்ளது.
தலைவலி, சோர்வு, மூச்சுத் திணறல், குமட்டல், தலைசுற்றல் ஆகியவற்றை அறிகுறிகளாக அது வகைப்படுத்தியுள்ளது. அதுவே, அதிகளவு கார்பன் மோனாக்ஸைடு வாயுவை சுவாசித்தால் ஏற்படும் அறிகுறிகளையும் பட்டியலிட்டுள்ளது. அதன்படி,
- மனக் குழப்பம்
- வாந்தி
- தசை ஒருங்கிணைப்பை இழத்தல் (Loss of muscular coordination)
- சுயநினைவு படிப்படியாக இழத்தல்
இவற்றில் ஏதேனும் அறிகுறிகள் இருப்பதாக நினைத்தால், உடனே வெளியில் சென்று காற்றை சுவாசிக்கலாம். வீட்டிலேயே இருந்தால் சுயநினைவை இழந்து இறக்க நேரிடும்' எனவும் அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மையம் கூறியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












