இலங்கை: முள்ளிவாய்க்கால் கஞ்சி தானங்களுக்கு தடை, கைது செய்யும் காவல்துறை - உரிமை மீறல் என மக்கள் கோபம்

ஒவ்வோர் ஆண்டும் மே 18ஆம் தேதி, இலங்கைப் போரில் இறந்த தமிழர்களின் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஆனால், சமீப ஆண்டுகளாகவே இந்த நிகழ்வுகளை நடத்துவதில் பல தரப்பினரிடம் இருந்து, பல்வேறு விதமான தடைகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த வாரம் வடகிழக்குப் பகுதி முழுவதிலும் பல இடங்களில், “முள்ளிவாய்க்கால் கஞ்சி” எனப்படும் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்ற நிலையில், கடந்த இரு தினங்களில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று இரு நிகழ்வுகளுக்கு காவல்துறையினர் தடை போட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவு

சம்பூரில் நடத்தப்பட்ட கஞ்சி வழங்கும் நிகழ்வுக்கு நீதிமன்ற உத்தரவைப் பெற்று தடை விதித்த காவல்துறை அதை முன் நின்று நடத்திய மூன்று தமிழ் பெண்கள் உட்பட நால்வரை கைது செய்துள்ளது.

மே 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட கமலேஸ்வரன் தென்னில (22), கமலேஸ்வரன் விஜிதா (40), செல்வ வினோத் சுஜானி (40), நவரத்ன ராசா ஹரிஹர குமார் (43) ஆகிய நால்வரும் மே 27ஆம் தேதி வரை மூதூர் நீதிமன்றத்தால் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரும் வகையில் மே 12ஆம் தேதி திரிகோணமலை சம்பூரில் உள்ள சேனையூர் பிள்ளையார் கோவில் முன்பு, உள்ளுர் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்க இவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த சம்பூர் காவல்துறையினர், ​​வெள்ளமுள்ளிவாய்க்காலில் மக்கள் ஒன்றுகூடல், உணவு வழங்குதல் போன்றவற்றுக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தடை ஆணையை நால்வரிடமும் வழங்க முற்பட்டுள்ளனர். அப்போது அவர்கள் அதை வாங்க மறுத்துள்ளனர்.

அந்தத் தடை உத்தரவில் ​​வெள்ளமுள்ளிவாய்க்காலில் எந்தவிதமான பள்ளிகள், கோவில்கள் அருகில் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தவும், வாகன அணிவகுப்புகளை நடத்தவும், பொது சுகாதாரத்திற்குக் கேடு விளைவிக்கும் வகையிலான கூட்டத்தைக் கூட்டவும், உணவுப் பொருட்கள் வழங்கவும் தடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றம் இந்தத் தடை உத்தரவை, மகாவீரர் சங்கத்தின் தலைவர் கந்தையா காண்டீபன், துணைத் தலைவர் சாந்தலிங்கம் கோபிராசா, பொருளாளர் நவரத்ன ராசா ஹரிஹர குமார், செயலாளர் செல்வ வினோத் சுஜானி, இதர உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு 14 நாட்களுக்குப் பிறப்பித்துள்ளது.

விடுதலை புலிகளுக்கான கொண்டாட்டமா?

இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த மே 14ஆம் தேதி காவல்துறையின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில், உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவு கூறும் வகையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல காவல் வட்டாரங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு சிலர் தயாராகி வருவதாக புலனாய்வு அமைப்புகளுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூர்வதே இக்குழுவின் நோக்கம் என காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, திரிகோணமலை சம்பூர் காவல் பிரிவில் விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கொண்டாடுவது சட்டவிரோதமான செயல் என்று, சம்பூர் காவல் நிலைய பொறுப்பதிகாரி மூதூர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்து தடை உத்தரவைப் பெற்றுள்ளார்.

'கஞ்சி விநியோகித்ததால் கைது செய்யப்படவில்லை'

இந்த வழக்கில் நால்வருக்கும் ஒரே மாதிரியான நீதிமன்ற உத்தரவை காவல்துறை பெற்றுள்ளது.

சம்பூர் காவல் நிலையத்தின் காவலர், கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று நீதிமன்ற தடை உத்தரவை அந்தக் குழுவிடம் வழங்கியதாகவும், ஆனால் அதை ஏற்க மாட்டோம் என்று கூறி அவர்கள் நிகழ்வை தொடர்ந்து நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் கைதாகியுள்ள நால்வரில் ஒருவர் இந்நிகழ்வில் ஈடுபடாதவர், அவரும் இதில் பங்கேற்று கைதாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஆனால், காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் வேறு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறிய வழக்கில் சந்தேக நபரைக் கைது செய்வதற்காக அவரது மகள் வீட்டுக்கு காவல்துறை சென்றபோது அவரின் மகள் கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை செய்து கொள்வதாக காவல் அதிகாரிகளை அச்சுறுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உடனே காவலர்கள் நிலைமையைக் கட்டுப்படுத்தி அந்தப் பெண்ணையும், மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்ததாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவர் காவலர்களை நோக்கி கூறிய ஆயுதத்தால் தாக்கியதில் பெண் காவலர் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் என்ன?

மேற்கண்ட சந்தேக நபர்கள் மீது குற்றவியல் சட்டத்தின்படி, நீதிமன்ற உத்தரவை மீறுதல், ஆபத்தான ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், காரணத்துடன் அல்லது விருப்பத்துடன் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரின் உத்தரவை மீறுதல் மற்றும் கிரிமினல் மிரட்டல் விடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

நால்வரும் 12.05.2019 அன்று சம்பூர் காவல் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மூதூர் கௌரவ நீதவான் நீதிமன்றில் 13.05.2024 அன்று ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மே 27ஆம் தேதி வரை ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், திரிகோணமலை துறைமுகம் மற்றும் உப்புவெளி காவல் பிரிவுகளில் இந்தக் கொண்டாட்டங்கள் இடம்பெற உள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்த நிலையில், அதைத் தடுக்கும் வகையில் அந்த காவல் நிலையங்களின் காவலர்கள் நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்று கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'வெசாக் உணவு தானத்தை தடுக்குமா காவல்துறை?'

பிபிசி சிங்கள சேவையிடம் பேசிய மனித உரிமை சட்டத்தரணியும், செயற்பாட்டாளருமான அம்பிகா சத்குணநாதன், “மே மாதத்தில் தமிழ் மக்கள் போரில் இறந்த, குறிப்பாக இறுதிக்கட்டத்தில் இறந்த அனைவரையும் நினைவு கூர்வார்கள்” என்று கூறினார்.

கஞ்சி விநியோகத்தைத் தடை செய்வதற்கான முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், “இந்த மாதம் அவர்கள் போரில் இறந்த அனைவரையும் நினைவு கூர்கின்றனர். ஆனால், அரசாங்கம் அவர்களைத் தடுக்க முயல்கிறது" என்றார்.

“ஆயுதப் போராட்டத்தில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் நவம்பர் மாதம் மகாவீரர் தினத்தில் நினைவுகூரப்படுவதாகவும், போரில் உயிரிழந்த அனைவரும் மே மாதத்தில் நினைவுகூரப்படுவதாகவும்” அவர் தெரிவித்தார்.

மேலும், கஞ்சி வழங்கும் நிகழ்வுகளைத் தடை செய்ய காவல்துறை கூறும் காரணங்களில் சுகாதாரமும் ஒன்று. இதே வெசாக் தான நிகழ்வுகளை அவர்களால் நிறுத்த முடியுமா என்ற கேள்வியை அவர் முன்வைக்கிறார்.

“இந்த மாதத் தொடக்கத்தில் மே தினப் பேரணிகள் நடந்தன. அப்போதும் மக்கள் உணவைப் பகிர்ந்து கொண்டனர். அங்கும் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அடுத்த வாரம் வெசாக் பண்டிகை நடக்கவுள்ளது. அதிலும் உணவு தானம் நடைபெறும். அதைத் தடை செய்ய காவல்துறை நீதிமன்ற உத்தரவைப் பெறுமா?"

'எல்லாவற்றையும் மறப்பதா நல்லிணக்கம்?'

போர் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை மீறப்படுவது நாட்டின் நல்லிணக்கத்திற்குத் தடையாக உள்ளதாக சட்டத்தரணி அம்பிகா சத்குணநாதன் வலியுறுத்துகிறார்.

நல்லிணக்கம் குறித்து அரசாங்கம் கொண்டுள்ள பார்வை என்ன என்பதை அவர் விளக்கினார்.

“நல்லிணக்கத்தின் மூலம் நீதி கிடைக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். என்ன நடந்தது என்பதை அறிய உரிமை இல்லை. இதுபோன்ற நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்த உரிமை இல்லை.

நமக்கு நடந்த அனைத்தையும் மறந்துவிடுவது, போர் குறித்தான அரசுத் தரப்பு வாதம் மற்றும் போரினால் உண்டான பின்விளைவுகளை எதிர்க்காமல் இருப்பது ஆகியவைதான் நல்லிணக்கம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.”

மேலும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையை அறியவும், நீதியைப் பெறவும், நினைவேந்தல் உரிமையும், இழப்புகளுக்கு நஷ்டஈடு பெறும் உரிமையும் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மனித உரிமை ஆணையத்தில் புகார்

இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் புகார் செய்துள்ள இளம் ஊடகவியலாளர் அமைப்பு, “மனித உரிமைகள் ஆணைக்குழு ‘நினைவேந்தல் உரிமையை’ 2016இல் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுக் கொண்டு காவல்துறையினர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிப்பதாக” தெரிவித்துள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டப்பிரிவின் (ஐசிசிபிஆர்) கீழ் அவர்கள் குற்றம் செய்துள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறி அவர்கள் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் நீதி, நல்லிணக்கம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் சம உரிமைகளை மட்டும் அரசாங்கம் மதிக்கவில்லை என்பதையே காவல்துறையினரின் இந்தத் தன்னார்வப் பணி காட்டுவதாக இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தன தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

மற்றொரு தடை உத்தரவு

இதற்கிடையில், மே 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை கல்முனை பாண்டிரிப்பு அரசடி அம்மன் கோவிலுக்கு அருகில் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர்.

கல்முனை நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நோக்கில் இவ்வாறான செயல்பாடுகளை மேற்கொள்வது மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்குவதற்கான செயல் என்பதாலேயே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அமுலுக்கு வரும் இந்த நீதிமன்றத் தடை உத்தரவு தமிழ் தேசிய ஜனதா பெரமுனவின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் புஷ்பராஜ் துஷானந்தனின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி என்றால் என்ன?

கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் உக்கிரமடைந்த நிலையில் அந்தப் போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த மக்கள் பல வார காலமாக உணவு கிடைப்பதில் சிரமங்களை எதிகொண்டனர்.

அந்தச் சூழலில் தமிழர்கள் அவர்களுக்குக் கிடைத்த அரிசியைக் கொண்டு, கஞ்சி தயாரித்து தமது பசியைப் போக்கிக் கொண்டனர்.

எனவே அதை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மே 12 முதல் 18 வரை வீடு வீடாகச் சென்று சேகரிக்கப்படும் அரிசியில் இருந்து கஞ்சி சமைத்து தானம் செய்வார்கள். மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவேந்தல் பேரணியுடன் இந்த நினைவேந்தல் வாரம் நிறைவடைகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)