நிர்மலா சீதாராமனின் கணவர் எழுதிய புத்தகம் 'பா.ஜ.க.வை வீழ்த்தும்' ஆயுதமாகுமா?

 பரகலா பிரபாகர்

பட மூலாதாரம், Parakala Prabhakar

படக்குறிப்பு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸிலும் படித்த பிரபாகர், ஆந்திர முதலமைச்சரின் தகவல் தொடர்பு ஆலோசகராக இருந்தவர்.
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ராமநாதபுரத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் எழுதிய 'The Crooked Timber of New India‘ என்ற நூலை மத்திய பா.ஜ.க. அமைச்சர்கள் அனைவரும் படிக்க வேண்டுமென்று குறிப்பிட்டார். அந்தப் புத்தகம் பா.ஜ.க. பற்றிக் கூறுவது என்ன?

ராமநாதபுரத்தில் நடைபெற்ற தென் மண்டல வாக்குச்சாவடி முகவர் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசைக் கடுமையாகச் சாடினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முன்வைத்து பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்தார்.

"இப்போதுதான் சகோதரி கனிமொழி சொன்னதால், சிலப்பதிகாரம் என்ற புத்தகத்தின் முன்னுரையைப் படிக்க ஆரம்பித்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதை அவர் முழுமையாகப் படிக்க வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஓய்வு கிடைக்கும். அப்போது முழுமையாகப் படிக்க நேரம் கிடைக்கலாம்.

ஆனால், அதற்கு முன்பு நிதியமைச்சரின் கணவரான டாக்டர் பரகலா பிரபாகர் எழுதிய ‘The Crooked Timber of New India‘ என்ற புத்தகத்தை ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்கள் அனைவரும் படிக்க வேண்டும். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அது நாட்டுக்குப் பேரழிவாக இருக்கும் என்று சொல்கிறார் நிதி அமைச்சரின் கணவர் பரகலா பிரபாகர்," என்று குறிப்பிட்டார்.

பரகலா பிரபாகர்

பட மூலாதாரம், FB/PARAKALA PRABHAKAR

படக்குறிப்பு, பரகலா பிரபாகர்

யார் இந்த பரகலா பிரபாகர்

பரகலா பிரபாகர் பரவலாக மதிக்கப்படும் அரசியல் பொருளாதார நிபுணர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸிலும் படித்த பிரபாகர், ஆந்திர முதலமைச்சரின் தகவல் தொடர்பு ஆலோசகராக இருந்தவர். இவரது மனைவி நிர்மலா சீதாராமன், பா.ஜ.கவை சார்ந்தவராக இருந்தபோதும் பரகலா பிரபாகர், காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவர்.

கடந்த சில ஆண்டுகளாக பரகலா பிரபாகர் மத்திய பா.ஜ.க. அரசைக் கடுமையாக விமர்சித்து எழுதி வருகிறார். 2020ஆம் ஆண்டிற்கும் 2022ஆம் ஆண்டிற்கும் இடையில் இவர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, 'The Crooked Timber of New India: Essays on a Republic in Crisis' என்ற பெயரில் சமீபத்தில் நூலாக வெளியானது.

மொத்தமாக 22 கட்டுரைகளைக் கொண்ட இந்தப் புத்தகம், பா.ஜ.க. தலைமையிலான கடந்த ஒன்பதாண்டு ஆட்சி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறது.

நரேந்திர மோதி - அமித் ஷா தலைமையின் கீழ் பா.ஜ.க. வந்த பிறகு அந்தக் கட்சி அடைந்திருக்கும் மாற்றம், அக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா அடைந்திருக்கும் மாற்றம், இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பரவல், மக்கள் தொகையை வைத்து பா.ஜ.க. செய்யும் அரசியல், இந்தியாவில் உள்ள வேலையில்லா பிரச்னை, ஹிஜாப் விவகாரம், ஆக்ஸ்ஃபாம் அறிக்கை, ஸ்டான் ஸ்வாமியின் மரணம், விவசாய சட்டங்கள், லக்கிம்பூர் கேரி சம்பவம், கோவிட் பரவலை அரசு கையாண்ட விதம் எனப் பல்வேறு விஷயங்களை முன்வைத்து அரசைக் கடுமையாக விமர்சிக்கிறது இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகத்தின் மையக் கருத்து, இந்தியா தற்போது அரசமைப்பைக் காப்பாற்றுவதில் துவங்கி பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது; இந்த நிலைக்கு இந்தியா எப்படி வந்தடைந்தது என்பதைத்தான் பல்வேறு கட்டுரைகளின் மூலமாகச் சொல்கிறார் பரகலா பிரபாகர்.

 பரகலா பிரபாகர்

பட மூலாதாரம், Nirmala sitharaman

படக்குறிப்பு, "இப்போதுதான் சகோதரி கனிமொழி சொன்னதால், சிலப்பதிகாரம் என்ற புத்தகத்தின் முன்னுரையைப் படிக்க ஆரம்பித்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்" எனப் பேசினார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் கட்டுரைகள்

'இந்தியாவை இதற்கு முன்பு ஆட்சி செய்த கட்சிகள் அரசியல் சாசனம் வலியுறுத்தும் கொள்கைகளைப் பரப்பாதது, அந்த அடிப்படைகளை யாராலும் அசைக்க முடியாது என்ற அலட்சியத்தில் இருந்தது, அவற்றைப் பாதுகாக்கப் பெரிதாக ஏதும் செய்ய வேண்டியதில்லை என்று நினைத்தது ஆகியவை இன்றைய இந்த நிலைக்குக் காரணம்.'

பா.ஜ.க. அடுத்த தேர்தலில் தோல்வியுற்றால், எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் இந்தியா ஒரே ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கான நாடு என்றும் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் இரண்டாம் தர குடிமக்களாகவே இருக்க வேண்டும் என்ற கருத்து மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது என்றும் சுட்டிக்காட்டுகிறார் பிரபாகர்.

உடனடிப் பலன்களையோ, உடனடியான தேர்தல் வெற்றிகளையோ எதிர்பார்க்காத, இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை நம்பும் ஓர் அரசியல் கட்சி மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும் என்று கூறும் பிரபாகர், ஆனால் அப்படியான சூழலே இல்லை என்பதுதான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.

கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு பிரிவுகளில் இந்தியா பின்னடைவைச் சந்தித்ததாக குற்றம் சாட்டுகிறது இந்தப் புத்தகம். 1990களில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில், அந்த நிலைமை தற்போது மாறி வருவதாகக் குறிப்பிடுகிறார் அவர்.

கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் புதிதாக 7.5 கோடி போ் ஏழைகளாகியிருப்பதாக பிரபாகர் கூறுகிறார். யுஎன்டிபியின் உலக மனித வளர்ச்சி தரவரிசைப் பட்டியலில் இந்தியா 132வது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதையும் உலகப் பட்டினிக் குறியீட்டில் 107வது இடத்தில் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு, வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரம் எதையும் மத்திய அரசு வெளியிடவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் பிரபாகர், அதற்கு ஒரு காரணத்தைச் சொல்கிறார். அதாவது 2015-16ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பின்மை புள்ளிவிவரத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை 5%ஆக உயர்ந்திருந்ததே இதற்குக் காரணம் என்கிறார் அவர்.

 பரகலா பிரபாகர்

பட மூலாதாரம், MK Stalin

படக்குறிப்பு, "மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அது நாட்டுக்குப் பேரழிவாக இருக்கும் என்று சொல்கிறார் நிதி அமைச்சரின் கணவர் பரகலா பிரபாகர்," என்று குறிப்பிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒருங்கிணைக்கப்பட்ட பொருளாதார சிந்தனையோ, திறம்மிக்க பொருளாதார ஆலோசகர்களோ இல்லாத நிலையில், அரசு மோசமான பொருளாதார ஆலோசகர்களிடம் வீழ்ந்துவிடுகிறார்கள் என்றும், அந்த ஆலோசகர்கள் பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்ற பேரழிவை ஏற்படுத்தும் ஆலோசனைகளை அளிக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டுகிறார் பிரபாகர்.

கட்டற்ற அதிகாரத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, எதிர்க்கட்சித் தலைவர்கள், அவர்களைச் சார்ந்தவர்களின் இடங்களில் வரித்துறை அதிகாரிகள் மூலம் ரெய்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது, அமலாக்கத் துறையினர் அவர்களைப் பிடித்துவைத்து பல மணிநேரம் கேள்வி எழுப்புவது, விசாரணை இன்றி சிறையில் அடைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டுகிறார். அரசின் சொல்படி கேட்காத ஊடக நிறுவனங்களுக்கு வரி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்புவதோடு, நிதி முறைகேடுகளுக்காக விசாரணையும் செய்கிறார்கள் என்றும் கூறுகிறார் பிரபாகர்.

The Rise and the Rise of New BJP என்ற கட்டுரை, இந்திய அரசியலின் மைய சக்தியாக பா.ஜ.க. எப்படி உருவெடுத்தது என்ற சித்திரத்தை மிகச் சுருக்கமாகவும் அதேநேரம் முழுமையாகவும் அளிக்கிறது. அதேபோல, இதற்கு முந்தைய அரசுகள் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்போது அவை பதற்றமடைந்து, வீழ்ச்சியைச் சந்திக்கும். ஆனால், பா.ஜ.க. அரசு அதுபோல பதறுவதில்லை என்றும் எதிர்க்கட்சிகள் பா.ஜ.க. தானாகவே வீழும் என்ற கற்பனையில் இருப்பதாகவும் கூறுகிறார் பிரபாகர்.

நரேந்திர மோதி பிரதமராக வந்த பிறகு சுதந்திர தினங்களின்போது ஆற்றிய உரைகள் பற்றி ஒரு கட்டுரை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. புத்தகத்தின் மிகவும் சுவாரஸ்யமான கட்டுரைகளில் இதுவும் ஒன்று. 2014இல் இருந்து 2020 வரை பிரதமர் பேசிய ஏழு சுதந்திர தின உரைகளை முன்வைத்து, அதில் ஆரம்பத்தில் பேசப்பட்ட விஷயங்கள் எப்படி படிப்படியாக மாறின என்பதை விளக்குகிறார் பிரபாகர்.

 பரகலா பிரபாகர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நரேந்திர மோதி பிரதமராக வந்த பிறகு சுதந்திர தினங்களின்போது ஆற்றிய உரைகள் பற்றி ஒரு கட்டுரை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.

மோதி உரையில் காணாமல் போன டீம் இந்தியா

கடந்த 2014ல் பேசும்போது அடிக்கடி Team India என்று குறிப்பிட்ட பிரதமர், 2016க்குப் பிறகு Team India குறித்துப் பேசுவதே இல்லை என்பது புத்தகத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது. அதேபோல, 2014ஆம் ஆண்டின் சுதந்திர தின உரையில், "இந்தியா சுதந்திரமடைந்து கடந்த 70 ஆண்டுகளில் பல மகத்தான விஷயங்கள் நடந்திருக்கின்றன" என்று குறிப்பிட்ட பிரதமர், தற்போது "கடந்த எழுபதாண்டுகளில் எதுவுமே நடக்கவில்லை" என்று கூறுவதை எப்படிப் புரிந்துகொள்வது என்கிறார் பிரபாகர்.

புத்தகத்தின் இறுதியில், கோவிட் - 19 தொற்றை இந்தியா கையாண்ட விதம் குறித்து ஒரு விரிவான, விமர்சனபூர்வமான சித்திரத்தை முன்வைக்கிறார் பிரபாகர். படிப்பவர் யாரையும் உலுக்கக்கூடிய சித்திரம் அது.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள ஆளும் கட்சியைக் கடுமையாக விமர்சிக்கும் இந்தப் புத்தகம், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசின் செயல்பாடுகள், பிற எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்துப் போதுமான விமர்சனங்களை முன்வைக்கவில்லை.

ஆனால், 2014இல் இருந்து தற்போது வரையிலான பா.ஜ.க. அரசின் ஒவ்வொரு மோசமான அம்சத்தையும் குறிப்பிட்டு, புள்ளி விவரங்களோடு வாதிடுகிறது இந்தப் புத்தகம்.

 பரகலா பிரபாகர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புத்தகத்தின் இறுதியில், கோவிட் - 19 தொற்றை இந்தியா கையாண்ட விதம் குறித்து ஒரு விரிவான, விமர்சனபூர்வமான சித்திரத்தை முன்வைக்கிறார் பிரபாகர்.

"அறிவொளிக் கால ஜெர்மன் தத்துவ மேதையான இம்மானுவேல் கன்ட்டின் புகழ்பெற்ற மேற்கோளில் இருந்து இந்தப் புத்தகத்தின் தலைப்பு எடுக்கப்பட்டிருக்கிறது.

'கோணலான மரத்திலிருந்து நேரான எதுவும் உருவானதில்லை' என்பதுதான் அந்த மேற்கோள். புதிய இந்தியாவின் கோணல் மரங்களில் இருந்து நேரான எதுவும் உருவாகப் போவதில்லை என்பதுதான் இந்தப் புத்தகம் சொல்லும் செய்தி. மிகவும் ஆச்சரியம் தரக்கூடிய புத்தகம் இது.

வழக்கமாக புள்ளிவிவரங்களை அடிப்படையாக வைத்து எழுதப்படும் புத்தகங்கள், படிக்க முடியாத வகையில் அலுப்பூட்டும். ஆனால், இந்தப் புத்தகம், மிக சுவாரஸ்யமானது. நிறைய புள்ளிவிவரங்கள், தர்க்கங்களோடு, விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட புத்தகம் இது.

எதிர்க்கட்சிகள் இதைத் தங்கள் பிரசாரத்திற்கே பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆளும் கட்சியால் இதற்குப் பதிலே சொல்ல முடியாது," என்கிறார் மூத்த பத்திரிகையாளரும் ஃப்ரண்ட் லைன் இதழின் முன்னாள் ஆசிரியருமான ஆர். விஜயஷங்கர்.

கட்சித் தொண்டர்களிடையே முதலமைச்சர் பேசியதைப் பார்க்கும்போது, இந்த நூல் எதிர்க்கட்சிகளுக்கு நல்ல ஆயுதம் என்ற அம்சத்தை தி.மு.க. தரப்பு புரிந்துகொண்டதைப் போலத்தான் தெரிகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: