தோனி: புறக்கணிக்கப்பட்ட வீரர்களை நட்சத்திரங்களாக மாற்றும் மாய வித்தைக்காரர்

    • எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

2008-ம் ஆண்டு...

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அறிமுக தொடர் அது. 8 அணிகள் களம் கண்ட அந்த தொடரில் ரசிகர்களின் பார்வை முழுவதும் டெக்கான் சார்ஜர்ஸ் அணி மீதே குவிந்திருந்தது. கிப்ஸ், கில்கிறிஸ்ட், சைமன்ட்ஸ், அப்ரிடி போன்ற அதிரடியில் மிரட்டும் அசகாய சூரர்கள் நிறைந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணியே கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க, அந்த அணியோ லீக் சுற்றில் 14 போட்டிகளில் 12-ல் தோல்வியுற்று கடைசி இடத்தையே பிடித்தது.

அணி எவ்வளவு பலமிக்கதாக தோன்றினாலும், வி.வி.எஸ். லட்சுமணனின் கேப்டன்சி சரியில்லை என்று வெளிப்படையாகவே பேசினார் ஷாகித் அப்ரிடி. முதல் தொடரின் நடுவிலேயே கேப்டனை மாற்றிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி, கில்கிறிஸ்ட் தலைமையில் அடுத்த ஆண்டு கோப்பையை வென்றது வரலாறு.

இதேபோன்று தொடருக்கு நடுவே கேப்டனை மாற்றிய வரலாறு சென்னை சூப்பர் கிங்சுக்கும் இருக்கிறது. முந்தைய இரு தொடர்களில் களத்தில் மிகச்சிறந்த வீரராக ஜொலித்த ரவீந்திர ஜடேஜாவை, கடந்த தொடரில் கேப்டனாக்கி அழகு பார்த்தது சென்னை சூப்பர் கிங்ஸ். தோனிக்கு அடுத்தபடியாக அணியை முன்னோக்கி வழிநடத்திச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா ஏமாற்றத்தையே பரிசளித்தார்.

கேப்டனாக சிறப்பாக செயல்பட முடியாமல் தவித்த அவரிடம், கேப்டன்சி தந்த அழுத்தம் அப்பட்டமாக தெரிந்தது. அது அவரது ஆட்டத்திலும் எதிரொலிக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்விப்பாதையில் பயணித்தது.

கடந்த தொடரின் கடைசிப் பகுதியில் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றாலும் அதற்குள் காலம் கடந்து விட்டிருந்தது. லீக் சுற்றில் சென்னை அணியால் 9-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி பிளேஆஃபுக்கு முன்னேறாமல் போன 2-வது தொடர் அதுதான். 2020-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீகரத்தில் நடத்தப்பட்ட தொடரில் லீக் சுற்றோடு சென்னை வெளியேறிவிட்டது. புதிய கேப்டனை வெள்ளோட்டம் பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரலாற்றுத் தோல்வியே பரிசாக கிடைத்தது.

மிக மோசமாக சென்ற ஐ.பி.எல். தொடரை முடித்த அதே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் நடப்புத் தொடரிலும் களம் கண்டது. அணியில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை. அந்த அணியை வைத்துக் கொண்டே கோப்பை வென்றிருக்கிறார் தோனி

தோல்வியுற்ற அதே அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பிய சாதுர்யம்

சென்ற ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் கேப்டன்சி தான். ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்ற தோனி, அதே அணியை, அதே வீரர்களை வைத்துக் கொண்டு தனது வழக்கமான தனித்துவமான அணுகுமுறையால் அணியை மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திருப்பியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மற்ற அணிகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது தோனியின் கேப்டன்சி தான். சாதாரண வீரர்களைக் கூட மேட்ச் வின்னர்களாக மாற்றும் திறமை தோனியின் கேப்டன்சிக்கு உண்டு.

ஐ.பி.எல்.லில் வெற்றிகரமான அணியாக பார்க்கப்படும் மற்றொரு அணியான மும்பை இந்தியன்சை எடுத்துக் கொண்டால், சச்சின், ஜெயசூர்யா, ஜாகீர்கான், ரோகித் சர்மா, குயின்டன் டி காக், சூர்யகுமார், பொல்லார்ட், பும்ரா, மலிங்கா என்று ஒவ்வொரு கால கட்டத்திலுமே பெரிய நட்சத்திர பட்டாளத்தைக் கொண்டதாகவே இருந்து வந்திருக்கிறது.

பல தொடர்களில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய மேட்ச் வின்னர்கள் நிரம்பியது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால், சென்னை சூப்பர் கிங்சை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு தொடரிலும் ஒரு புதிய மேட்ச் வின்னர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, அதன் பிறகு தற்போது ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸின் தூணாக நீண்ட காலம் விளையாடி வருகிறார்கள்.

மற்றபடி, ஐ.பி.எல். தொடங்குவதற்கு முன்பாக அதிகம் அறியப்பட்டிராத அல்லது ஃபார்மில் இல்லாத மற்ற அணிகளில் சொதப்பிய வீரர்களையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மேட்ச் வின்னர்களாக உருவாக்கியுள்ளது. இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் அணுகுமுறையும், கேப்டன் தோனியின் கேப்டன்சியுமே காரணம்.

கேப்டன்சியில் தனித்துவமான அணுகுமுறை

கேப்டன் கூல் என்று வர்ணிக்கப்படும் தோனி களத்தில் எந்தவொரு கட்டத்திலும் நிதானம் இழக்காதவர். அணி எப்போதெல்லாம் இக்கட்டான நிலையில் இருக்கிறதோ அப்போதெல்லாம் மிக நேர்த்தியாக செயல்பட்டு லக்கானை சரியான திசையில் செலுத்தக் கூடியவர்.

அணி வீரர்களின் பலம், பலவீனம் அறிந்து அதற்கேற்ப அவர்களை சரியாக பயன்படுத்திக் கொள்பவர். அத்துடன், எதிரணி வீரர்களின் பலம், பலவீனங்களை அறிந்து அதற்கேற்ப வியூகங்களை வகுத்து ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக திருப்பக் கூடியவர். ஆட்ட நுணுக்கம், புள்ளிவிவரம், மதி நுட்பம், புத்திசாலித்தனம் போன்ற எல்லாவற்றையும் தாண்டி தனது உள்ளுணர்வின் அடிப்படையில் தைரியமாக முடிவெடுக்கக் கூடியவர் என்று விமர்சகர்கள் புகழ்கிறார்கள்.

இந்திய அணிக்கு முதன் முறையாக, அதுவும் அறிமுக டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக டை ஆன போட்டியில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கடைபிடிக்கப்பட்ட 'பவுல் அவுட்' முறையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் உத்தப்பாவை பந்துவீசச் செய்தார் தோனி.

அதே பாகிஸ்தானுக்கு எதிராக பரபரப்பான இறுதிப் போட்டியில் நெருக்கடியான தருணத்தில் ஜோகிந்தர் சர்மாவுக்கு வழங்கி அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் தன் பக்கம் திருப்பினார் தோனி.

யாரும் பரீட்சித்து பார்க்கக் கூட விரும்பாத செயல்களை உலகக்கோப்பை போன்ற முக்கியமான, அதுவும் கேப்டனான முதல் தொடரிலேயே செய்யத் துணிந்த தோனி, ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதுபோன்ற புதுமையான, துணிச்சலான முடிவுகளால் பலமுறை வெற்றி தேடித் தந்துள்ளார். சூதாட்டத் தடையால் ஐ.பி.எல். தொடரில் இருந்து 2 ஆண்டுகள் விலகியிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2018-ம் ஆண்டு மீண்டும் வந்த போது 'மூத்தோர் அணி' என்று கேலி செய்யப்பட்டது. காரணம், தோனி உள்பட அணியில் இருந்த ஷேன் வாட்சன், முகமது தாஹிர், பிராவோ, ஹர்பஜன் என பலரும் 35 வயதை தாண்டியிருந்தன. அந்த வீரர்களைக் கொண்டே, இளமைக்கிடையிலான போட்டியாக கருதப்படும் ஐ.பி.எல். டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவர் கோப்பையை வென்று கொடுத்தார்.

பந்துவீச்சு பலவீனத்தை நிவர்த்தி செய்யும் அபார வியூகம்

ஐ.பி.எல். தொடர் வரலாற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் யூனிட் எப்போதுமே மிகச்சிறந்த ஒன்றாக இருந்ததில்லை. சென்னையின் பந்துவீச்சு பலவீனங்களை தனது அபாரமான பீல்டிங் வியூகங்கள் மூலம் நிவர்த்தி செய்து விடுகிறார் தோனி. பல் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் யூனிட் அபாயகரமான ஒன்றாக மாறும் சூட்சுமம் இதுதான். இதில்தான் தோனி என்ற கேப்டன் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு தனித்து நிற்கிறார்.

நடப்புத் தொடரில் காயம் காரணமாக நியூசிலாந்தின் கைல் ஜேமிசன், விலகியதும், தீபக் சாஹர் தொடக்க ஆட்டங்களில் பங்கேற்காததும் சென்னை அணியின் பந்துவீச்சு பலவீனத்தை மேலும் மோசமாக்கியது. அதிக விலை கொடுத்து வாங்கிய இங்கிலாந்து சூப்பர் ஸ்டார் பென் ஸ்டோக்சும் முழு உடல் தகுதியுடன் இருக்கவில்லை. சிஎஸ்கேவின் ரெண்டு ஸ்பின்னர்களும் சிறப்பான ஃபார்மில் இருக்கவில்லை. உண்மையைச் சொல்லப் போனால், டெத் ஓவர்களை வீசுவதற்கு சென்னை அணியில் சரியான வேகப்பந்துவீச்சாளர்களே இல்லை. அந்த இடத்தில்தான் தோனி தனது அனுபவத்தையும் புத்திசாலித்தனத்தையும் காட்டினார்.

இளம் வீரர்களை தயார் செய்யும் மதிநுட்பம்

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியின் போது, கடைசிக் கட்டத்தில் பதற்றத்துடன் காணப்பட்ட மதிஷா பதிராணாவிடம் இரண்டு பாலுக்கு ஒருமுறை அருகில் சென்று, டெத் ஓவர்களில் எப்படி வீச வேண்டும் என்று தோனி ஆலோசனை வழங்கியதை பார்க்க முடிந்தது.

ஆசிரியர் மாணவனுக்கு சொல்லிக் கொடுப்பது போன்ற தோனியின் இந்த செயல்பாடே அவரது வெற்றிச் சூத்திரம். பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே இதை முன்னிறுத்தி செய்த ட்வீட் ரசிகர்களிடையே வைரலாகிப் போனது.

குட்டி மலிங்கா என்று வர்ணிக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த மதிஷா பதிராணாவை தோனி பட்டை தீட்டினார். ரன்களை வாரி வழங்கிய இளம் வீரர் துஷார் தேஷ்பாண்டேவை தட்டிக் கொடுத்து உத்வேகம் அளித்தார் தோனி.

இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் ஓரளவு சிறப்பாக இவர்கள் செயல்பட, பிற்பாதியில் தீபக் சாஹரும் அணியில் இணைய, அவர்களுடன் தோனியின் வியூகங்களும் இணைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றிமேல் வெற்றி தேடித் தந்து கொண்டிருக்கின்றன.

அதன் உச்சக்கட்டமாகவே, இதுவரை ஒருமுறை கூட வென்றிராத குஜராத் டைட்டன்ஸ் அணியை முதல் முறையாக ஆல் அவுட் செய்து அணிக்கு வெற்றித் தேடித் தந்திருக்கிறார்கள் பந்துவீச்சாளர்கள்.

குஜராத் அணியின் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஆட்டத்தின் அப்போதைய சூழல், ஆடுகளத்தின் தன்மை, பேட்ஸ்மேனின் மனநிலை ஆகியவற்றைப் பொருத்து அவ்வப்போது பீல்டிங் வியூகங்களை மாற்றி அமைத்து, பொறியில் விழச் செய்தார்.

அதிலும், குஜராத் அணிக்கு பேட்டிங்கில் தூணாக விளங்கும் இளம் நட்சத்திரம் சுப்மான் கில்லுக்கு தோனி வகுத்த வியூகம் சிறப்பானது.

எதிரணி பேட்ஸ்மேனை 'ஸ்கெட்ச்' போட்டு காலி செய்யும் புத்திசாலித்தனம்

சுப்மான் கில் களத்தில் நிற்கும் ஒவ்வொரு கனமுமே ஆபத்தானது என்பதை உணர்ந்த தோனி, அவரை அடித்தாட தூண்டும் வகையில் வேகப்பந்துவீச்சாளர் மதிஷா பதிராணாவை பந்துவீசச் செய்தார். சுப்மான் கில் நிலைத்தால் சென்னை காலி என்பதால்தான், தீபக் சாஹருக்கு கடைசி ஓவராக இருந்தாலும் அவரையே அடுத்த ஓவரை வீசச் செய்தார் தோனி.

அதற்கு பலனும் கிடைத்தது. தோனி விரித்த வலையில் சுப்மான் கில் சிக்கிக் கொண்டார். சுப்மான் கில் அடித்தாடும் உத்வேகத்தில் இருந்ததை கண்டு கொண்ட தீபக் சாஹர் 111 கி.மீ. வேகத்தில் பந்தின் வேகத்தை குறைத்து வீச, அவரசரப்பட்டு புல் ஷாட் ஆடிய கில் ஸ்கொயர் லெக்கில் நின்றிருந்த கான்வேயிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார்.

தோனி நினைத்தபடியே ஆட்டமும் படிப்படியாக சென்னை வசம் வந்தது.

நிராகரிக்கப்பட்ட வீரர்களை மேட்ச் வின்னர்களாக்கும் வித்தை

பதிராணா போல் தோனி பட்டை தீட்டிய இளம் வீரர்கள் ஏராளம். ருதுராஜ் கெய்க்வாட் தீபக் சாஹர், தீட்ஷனா போன்ற பல இளம் வீரர்கள் ஐ.பி.எல். போட்டிகளில் ஜொலிக்க தோனியும் ஒரு காரணம். வயது அதிகம், பார்மில் இல்லை என்பன போன்ற காரணங்களால் மற்ற அணிகளால் புறக்கணிக்கப்பட்ட வீரர்களை ஏலத்தில் வாங்கி அவர்களை மேட்ச் வின்னர்களாக்குவதும் தோனியின் அணுகுமுறைதான். ஷேன் வாட்சன், மொயீன் அலி, ராபின் உத்தப்பா என்று அந்த பட்டியல் மிக நீண்டது. நடப்புத் தொடரில் அஜிங்கியா ரஹானே அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.

தற்போதைய சிஎஸ்கே அணியில் விளையாடுபவர்களில் ஜடேஜா, மொயீன் அலி ஆகிய 2 பேரைத் பேரை தவிர வேறு யாரும் எந்த நாட்டு தேசிய அணியிலும் இடம் பிடித்து சர்வதேச அளவில் விளையாடுபவர்கள் அல்ல. இத்தகைய பலவீனமான அணியை வைத்துக் கொண்டுதான் இப்போது மட்டுமல்ல, ஐ.பி.எல். வரலாறு நெடுகிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிகரமானதாகவே தொடரச் செய்திருக்கிறார் கேப்டன் தோனி.

சி.எஸ்.கே. உடன் தோனியின் பிணைப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தோனிக்கும் இடையிலான பிணைப்பே அலாதியானது. சென்னையை தனது இரண்டாவது வீடு என்றே தோனி பலமுறை வர்ணித்திருக்கிறார். சூதாட்டத் தடையால் 2 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் ஐ.பி.எல்.லுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரும்பிய தருணம் தோனிக்கு மிகவும் உணர்ச்சிகரமான ஒன்றாக அமைந்தது. அன்றைய இரவு உணவின் போது தோனி உணர்ச்சி மேலிட கண்ணீர் விட்டதாக நேற்றைய போட்டியின் நடுவே வர்ணனையின் போது தெரியப்படுத்தினார் ஹர்பஜன் சிங். அப்போது உடனிருந்த முகமது தாஹிரும் அதனை ஆமோதித்தார். இருவருமே அந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர்கள். அத்துடன் தோனியின் கேப்டன்சியையும் ஹர்பஜன்சிங் வெகுவாக புகழ்ந்தார்.

வெற்றிகரமான கேப்டன்

டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் என மூன்று வித போட்டிகளிலும் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தலைமை தாங்கி சுமார் 9 ஆண்டுகள் வழிநடத்திய தோனி, விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் எல்லாவற்றிற்கும் மேலாக கேப்டன் என மூன்று பொறுப்புகளையும் திறம்பட நிறைவேற்றியுள்ளார்.

விக்கெட் கீப்பர் என்ற அதிக உழைப்பு தேவைப்படும் பணியுடன் பேட்ஸ்மேனாக அணிக்கு சிறப்பான பங்களிப்பையும் செய்துள்ள தோனி, கேப்டனாக 140 கோடி ரசிகர்களின் எதிர்பார்ப்பு தரும் மிக அதீதமான மன அழுத்தங்களையும் சமாளித்து வெற்றி கண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கம் முதல் இன்றுவரை கேப்டனாக இருந்து ரசிகர்களின் நம்பிக்கை என்னும் சிகரத்தில் வெற்றிகரமான தலைவராக உயர்ந்து நிற்கிறார் தோனி.

ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 226 போட்டிகளில் தலைமை தாங்கியுள்ள தோனி 132 போட்டிகளில் வெற்றி தேடித் தந்துள்ளார்.

இந்த வெற்றி சதவிகிதம் ஐ.பி.எல்லுக்கு புதிதாக வந்துள்ள குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயேன்ஸ்ட் அணிகளுக்கு மட்டுமே உண்டு. 41 வயதை எட்டிவிட்ட நிலையிலும், டெத் ஓவர்களில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட பேட்ஸ்மேனாக தோனியே இருக்கிறார். டெத் ஓவர்களில் அவரது ஸ்டிரைக் ரேட் 160-க்கும் அதிகம்.

ஓய்வு எப்போது? என்று விடாது துரத்தும் கேள்வி

நடப்பு ஐ.பி.எல். தொடர் தோனியின் கடைசி ஐ.பி.எல். தொடராக இருக்கலாம் என்றே தொடக்கம் முதலே கூறப்பட்டு வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடும் ஒவ்வொரு போட்டியையுமே தோனியின் கடைசிப் போட்டியாக கருதியே நாடெங்கும் அனைத்து மைதானங்களிலும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

எந்த அணியின் சொந்த மைதானமாக இருந்தாலும் தோனி என்ற மந்திரச் சொல் அவற்றையெல்லாம் மஞ்சள்மயமாக்கி சென்னை அணியின் ரசிகர் கூட்டமாக மாற்றிவிட்டிருந்தது.

ஒவ்வொரு போட்டி முடிவிலும் தோனியிடம் ஓய்வு குறித்த கேள்வியை நெறியாளர்கள் முன்வைப்பதும், அதற்கு பிடிகொடுக்காமல் தோனி பதில் கொடுப்பதுமே விடாமல் தொடர்கிறது.

நேற்றைய ஆட்டத்தின் முடிவிலும் அதே கேள்வியை தோனி எதிர்கொண்டார். அதற்கும் வழக்கம் போல், "எனக்குத் தெரியாது. அதுகுறித்து தீர்மானிக்க 8, 9 மாதங்கள் அவகாசம் இருக்கிறது. டிசம்பர் மாதத்தில் மினி வீரர்கள் ஏலம் நடக்கவிருக்கிறது. ஆகவே, அந்த தலைவலி இப்போது எதற்கு?" என்று பதில் கூறி நழுவிவிட்டார் தோனி.

"வீரராகவோ அல்லது களத்திற்கு வெளியிலோ நான் எப்போதும் சி.எஸ்.கே.வுக்காக இருப்பேன்." என்றும் உணர்ச்சி பொங்கக் கூறினார் கேப்டன் தோனி.

ரசிகர்கள் மனதில் என்றுமே 'தல' தோனிதான்

ஐபி.எல். வரலாற்றில் பங்கேற்ற 14 தொடர்களில் பிளேஆஃப் சுற்றுக்கு 12 முறையும், இறுதிப்போட்டிக்கு 10 முறையும் முன்னேறி சாதனை படைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 4 முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

இப்போது பத்தாவது முறையாக ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கிறது. குஜராத் டைட்டன்சோ, லக்னோ சூப்பர் ஜெயென்ட்ஸோ அல்லது பரம வைரியான மும்பை இந்தியன்ஸோ எது எதிரணியாக இருந்தாலும் தனது மந்திர வியூகத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி கோப்பையை வென்று கொடுப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

அமைதி, அரவணைக்கும் பண்பு, எளிமையான அணுகுமுறை, தனித்துவமான முடிவுகள், இளைஞர்களுக்கு வழிகாட்டும் தோழமை என்று தலைவனுக்கான அத்துணை தகுதிகளும் நிரம்பி இருப்பதால்தான் ரசிகர்களின் மனதில் 'தல' தோனியாக உயர்ந்து நிற்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: