கிட்டார் வாசிக்கும் கங்காரு, நடனமாடும் நீர்நாய் - விலங்குகளின் நவரசங்களைப் படம்பிடித்த கலைஞர்கள்

ஒரு கங்காரு கிட்டார் வாசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் சாம்பல் நிற குட்டி கங்காரு ஒன்று வெறுங்கையில் காற்றில் கிட்டார் வாசிப்பது போன்ற படம் ஒன்றை எடுத்துள்ளார் ஜேசன் மூர்.

‘ஏர் கிட்டார் ரூ’ என்ற தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம்தான், 2023-ஆம் ஆண்டின் காமெடி காட்டுயிர் புகைப்பட விருதுகளின் ஒட்டுமொத்த வெற்றியாளராக இந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் க்ரியேச்சர்ஸ் ஆஃப் லேண்ட் பிரிவிலும் இது பரிசு வென்றுள்ளது.

"உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், பெரும்பாலான நேரம் கங்காருக்கள் மிக சாந்தமாகவும், சலிப்பாகவும் இருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. இருந்த போதிலும் இந்த கங்காரு ஏர் கிட்டார் போஸ் தருவதை பார்த்தபோது, உடனடியாக என் முகத்தில் புன்னகை மலர்ந்தது. மேலும் உண்மையிலேயே நான் ஒரு சிறப்புமிக்க படத்தை பதிவு செய்துள்ளேன் என்பது எனக்குத் தெரிந்தது," என்று கூறுகிறார் மூர்.

இந்த படம் 85 நாடுகளில் இருந்து வந்த 5,300 பதிவுகளோடு போட்டியிட்டது. இந்த பட்டியலில் மற்ற பிரிவுகளில் வெற்றியை ஈட்டியுள்ள சிங்கப்பூரை சேர்ந்த 'ஓட்டர் பாலேரினா' என்ற பெயரிடப்பட்ட நீர்நாய் ஒன்று நடனமாடும் படமும், தென்னாபிரிக்காவில் உள்ள ஜிமாங்கா தனியார் கேம் ரிசர்வ் நீர்நிலையில் விட்டோரியோ ரிச்சி பதிவு செய்த எதிர்பாராவிதமாக விழும் நாரையின் படமும் அடங்கும்.

பறவைகளுக்குள் சண்டை

மற்றொரு இளம் புகைப்படக்கலைஞர் ஜேசெக் ஸ்டான்கிக்ஸுக்கு இரு பிரிவுகளில் வெற்றி கிடைத்துள்ளது. அவரின் டிஸ்ப்யூட் எனப்படும் இரண்டு கிரீன்ஃபின்ச் பறவைகளின் படத்திற்காக ஜூனியர் விருது மற்றும் மக்கள் தேர்வு விருது ஆகிய இரண்டையும் தன்வசப்படுத்தியுள்ளார் இவர்.

இந்த விருதுகள் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பாதுகாவலர்களான பால் ஜாய்சன்-ஹிக்ஸ் மற்றும் டாம் சுல்லம் ஆகிய இருவரால் முதன் முதலில் 2015-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் மனிதகுலம் தனது கிரகத்தைப் பகிர்ந்து கொள்ளும் மாறுபட்ட, துடிப்பான மற்றும் எப்போதும் ஆச்சரியமூட்டும் உயிரினங்களை நினைவூட்டுவதாக உள்ளது.

ஆனாலும், விலங்குகளின் உலகில் இருந்து வரும் கதைகள் எப்போதும் மிகவும் உற்சாகமானதாக இருப்பதில்லை : கடந்த 50 ஆண்டுகளில், உலகளவில் காட்டு விலங்குகளின் எண்ணிக்கை சராசரியாக 70% குறைந்துள்ளது.

அடிக்கடி ஏற்படும் வெப்ப அலைகள், வறட்சி மற்றும் காட்டுத்தீ ஆகியவை விலங்குகளின் நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி மனிதர்கள் மற்றும் காட்டு விலங்குகள் சந்திக்கும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. தங்கள் வீட்டின் பின்புறத்தில் ஒரு கங்காருவைக் காண விரும்புவோருக்கு வேண்டுமானால் இது ஒரு நல்ல செய்தியாகத் தோன்றலாம், ஆனால் இது பிரச்னைக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.

இந்நிலையில் வனவிலங்கு ஆர்வலர்கள் துபாயில் நடந்து வரும் COP28 காலநிலை மாநாட்டை உற்றுநோக்கி கொண்டிருக்கலாம். காரணம் பல்லுயிர் இழப்புக்கான ஐந்து முக்கிய காரணிகளில் காலநிலை மாற்றமும் ஒன்றாகும், இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் நாடுகள் இந்த அச்சுறுத்தலைத் தடுக்க உதவும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.

இது ஒரு பெரிய எதிர்பார்ப்புதான், ஆனாலும் உண்மையில் மகிழ்ந்து சிரிக்குமளவிற்கான பெரிய விஷயம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)