You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை: மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளியதாக பெற்றோர் கைது - ஆபாச வீடியோக்களை விற்று வருமானம் ஈட்டியதாக புகார்
தமிழ்நாடு, இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இன்று, ஜனவரி 17 அன்று, வெளியான நாளேடுகளில் இடம் பெற்றுள்ள முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
ஜனவரி 16-ஆம் தேதியன்று, தங்களின் மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளியதாக பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என, சென்னை காவல்துறை தெரிவித்துள்ளதாக, 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
குழந்தைகள் நலக்குழு அளித்தப் புகாரின் அடிப்படையில், விசாரணையை நடத்திய காவல்துறையினர், அந்த பெற்றோரை கண்டுபிடித்துள்ளனர். அப்பெண்ணின் தந்தையிடம் இருந்து கைப்பற்றிய செல்போனில், சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அந்த பெண் குழந்தைகளின் அனுமதியின்றி எடுக்கப்பட்டது என்றும், அந்த நபருடைய மகளின் வீடியோக்களும் அதில் இருந்தது என்றும் காவல்துறையினர் விசாரணையின் மூலம் கண்டறிந்துள்ளனர் என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை ஆன்லைனில் விற்று அதன் மூலம் வருமானம் ஈட்டியுள்ளார் அந்த நபர். மேலும், இந்த விற்பனைக்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்ததை கண்டறிந்துள்ளனர் காவல்துறையினர்.
தற்போது இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது அவர்களின் மகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவருக்குத் தேவையான மனநல ஆலோசனைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
30 வழக்குகளில் தேடப்பட்டு வந்தவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த காவல்துறை
புதன்கிழமை இரவு முல்லை நகரில் தலைமறைவாய் இருந்த சரித்திர பதிவேட்டு குற்றவாளியான ஏ. சரவணனை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர் என்று 'தி இந்து' ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறப்பு காவல்துறை பிரிவினர் அவரை சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றபோது, அவர் காவல்துறையை தாக்க முயன்றதாகவும், அதன் பிறகு காவல்துறை ஆய்வாளர் அவரை காலில் சுட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சரவணன் மீது கொலை, கொலை முயற்சி போன்ற குற்றங்களுக்காக 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக காவல்துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். சமீபத்தில் அவர் வியாசர்பாடி பகுதியில் ஒளிந்திருப்பதாக தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, புளியந்தோப்பு காவல்துறை ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான சிறப்புப் பிரிவு சரவணனை முல்லை நகரில் சுற்றிவளைத்தது.
அம்பேத்கரை கத்தியால் தாக்க முயன்றதாகவும், அதனை தடுக்க முயன்ற எஸ்.ஐ.க்கு காயம் ஏற்பட்டதாகவும் மேலும், நாட்டு வெடிகுண்டை காவல்துறையினர் மீது வீசியதாகவும் கூறப்படுவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த குண்டு வெடிக்காத நிலையில், அம்பேத்கர் சரவணனை காலில் சுட்டுப் பிடித்துள்ளனர்.
சரவணன் மற்றும் காயம் அடைந்த காவலர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சரவணனிடம் இருந்து நான்கு நாட்டு வெடிகுண்டுகள், இரண்டு கத்திகள், 5 கிலோ கிராம் கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு - சந்திரபாபு நாயுடு
குழந்தை பிறப்பை ஊக்குவிக்க புதிய கொள்கை கொண்டு வரவேண்டும். அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்குதான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்க வேண்டும் என்று, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதாக, தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "தம்பதிகளிடம் இப்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் குறைந்துவருகிறது. இரண்டு குழந்தைகள் பெற்றால் அவர்களை வளர்க்க அதிக பணம் தேவைப்படுகிறது என்ற எண்ணம் உருவாகியுள்ளது. உங்கள் பெற்றோர்கள் இப்படி நினைத்து இருந்தால், நீங்கள் பிறந்திருக்க முடியுமா? அவர்கள் அதிக குழந்தைகளை பெற்று வளர்க்கவில்லையா? குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துவருவதால், மக்கள்தொகை வீழ்ச்சியடைந்து வருகிறது. தென் கொரியா, ஜப்பான், ஐரோப்பா நாடுகள் இதுபோன்ற மக்கள்தொகை வீழ்ச்சியை பெருமளவில் சந்தித்து வருகிறது. அந்த தவறை இந்தியாவும் செய்ய வேண்டாம்" என பேசியுள்ளார்.
மேலும், "ஒருகாலத்தில் அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், இப்போது அதை மாற்ற வேண்டும். அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்குதான் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும். குழந்தை பிறப்பு அதிகரிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக கொள்கையில் மாற்றம் கொண்டுவர இருக்கிறேன்." என பேசியுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பிறப்பு குறைந்துகொண்டே சென்றால் 2047ம் ஆண்டுக்கு பின்னர் அதிகளவில் முதியோர்களே இருப்பார்கள். இளைஞர்களை பார்க்கவே முடியாது. எனவே, ஒவ்வொரு பெண்ணும் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றால் மக்கள்தொகை அதிகரிக்கும் என அவர் பேசியுள்ளார்.
8-வது ஊதியக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் திருத்தம் செய்ய 8-வது ஊதியக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
"மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய விகிதங்கள், சலுகைகளை தீர்மானிக்க 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழு அமைக்கப்படுகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டில் 7-வது ஊதியக்குழு அமைக்கப்பட்டது. இதன் பரிந்துரையின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் ரூ. 7000-ல் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 3,500ல் இருந்து ரூ. 9,000 ஆக உயர்த்தப்பட்டது. அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ. 2,50,00 ஆகவும், அதிகபட்ச ஓய்வூதியம் ரூ. 1,25,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.
7-வது ஊதியக்குழுவின் பதவிக் காலம் 2025 டிசம்பர் 31-ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த சூழலில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று (டிசம்பர் 16) நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 8-வது ஊதியக்குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைகள் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.
8-வது ஊதியக் குழு தலைவர், 2 உறுப்பினர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ஊதியத்தைக் கணக்கிடுவதற்காக ஃபிட்மெண்ட் காரணி, 7-வது ஊதியக் குழுவில் 2.57 என முடிவு செய்யப்பட்டதால், சம்பளம் 2.57 என மடங்கு உயர்ந்தது. 8-வது ஊதியக் குழு, 3 அல்லது அதற்கு மேல் ஃபிட்மெண்ட் காரணியை முடிவு செய்ய வாய்ப்பு உள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன," என்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீன- இலங்கை உறவை மேம்படுத்த முயற்சி - அநுரகுமார
சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை சீனாவுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொண்டுள்ளார் அநுரகுமார திஸாநாயக்க.
இரு நாடுகளினதும் உயர்மட்ட பிரநிதிகளுக்கிடையில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள இலங்கை – சீன கூட்டறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
"சுமூகமான மற்றும் நட்பு சூழ்நிலையில் இரு தரப்பினருக்கிடையில் பாரம்பரிய நட்பை மேலும் வலுப்படுத்தல், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒரு மண்டலம் - ஒரு பாதை திட்டத்தை மேம்படுத்தல், பல்துறை நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்தல் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து இவ்விஜயத்தின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
சீன- இலங்கை உறவுகளை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் முயற்சிகளை மேற்கொள்வதற்கு இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர்." என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி கூறுகிறது.
மேலும், "சீன அரசானது, முழு சீனாவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே சட்டப்பூர்வ அரசாங்கம் என்பதையும், தைவான் சீனப்பிரதேசத்தில் பிரித்தெடுக்க முடியாத பிரதேசம் என்பதையும் அங்கீகரித்து, ஒரே சீனா கொள்கைக்கான தனது வலுவான உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)