You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிபர் பதவியின் கடைசி கட்டத்தில் இஸ்ரேலுக்கு 8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்க பைடன் முடிவு
- எழுதியவர், அனா ஃபாகுய்
- பதவி, பிபிசி செய்திகள், வாஷிங்டன்
இஸ்ரேலுக்கு 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிகாரி ஒருவர் பிபிசியிடம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்கள் போன்றவற்றை இஸ்ரேலுக்கு விற்பனை செய்ய பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் குழுவின் ஒப்புதல் தேவைப்படுகிறது.
அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து பைடன் விலகுவதற்கு 15 நாட்களுக்கு முன்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஸாவில் போரின்போது கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையின் காரணமாக இஸ்ரேலுக்கு ராணுவ உதவி வழங்குவதை இடைநிறுத்த வேண்டும் என்ற அழைப்புகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இஸ்ரேலுக்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான போர் விமானங்கள் மற்றும் பிற ராணுவ உபகரணங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்தது.
- இஸ்ரேல் ராணுவம் தடுத்து வைத்த பாலத்தீனர் கூட்டத்தில் இருந்த 3 வயது சிறுமி என்ன ஆனார்?
- 'பேய் நகரமாக' மாறிய வடக்கு காஸாவின் ஜபாலியா நகரம் எப்படி உள்ளது? காணொளி
- சின்ன குழந்தையை ஒரு மணி நேரம் தோளில் சுமந்து நடந்த சிறுமி; எங்கு நடந்தது?
- இஸ்ரேலின் நடவடிக்கையால் கோபத்தில் இருக்கும் ஐ.நா, அமெரிக்கா, பிரிட்டன் - என்ன நடந்தது?
தற்போது விற்பனை செய்யப்படவுள்ள ஆயுதத் தொகுப்பில் வான்வழி தாக்குதல் நடத்துவதற்கான ஏவுகணைகள், ஹெல்ஃபயர் ஏவுகணைகள்(hellfire missiles), பீரங்கிகள் மற்றும் குண்டுகள் ஆகியவை அடங்கும் என்று அமெரிக்க அதிகாரி கூறினார்.
"சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு இணங்க, நாட்டின் குடிமக்களை பாதுகாக்க இஸ்ரேலுக்கு உரிமை இருக்கிறது என்பதையும், இரான் மற்றும் அதன் ஆதரவு குழுக்களின் தாக்குதல்களை தடுக்க இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது என்பதையும் பைடன் தெளிவுப்படுத்தியுள்ளார்'' என்று இந்த ஆயுதங்கள் விற்பனை பற்றி நன்கு அறிந்த ஒரு அதிகாரி பிபிசியிடம் சனிக்கிழமை அன்று கூறினார்.
"இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்".
அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு மிகவும் உறுதியான ஒன்று என பைடன் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கு அதிக அளவில் ஆயுதங்களை வழங்கும் நாடு அமெரிக்கா ஆகும். இதனால் இஸ்ரேல், உலகிலேயே தொழில்நுட்ப ரீதியாக அதிநவீன ஆயுதங்களை கொண்ட ஒரு ராணுவத்தை உருவாக்க முடிந்தது.
2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கு இடையில் இஸ்ரேலின் முக்கிய வழக்கமான ஆயுதங்களின் இறக்குமதியில் அமெரிக்கா 69% பங்கு வகித்தது என்று ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்ட்டியூடின் தரவுகள் தெரிவிக்கின்றன.
2024-ஆம் ஆண்டு மே மாதம், தெற்கு காஸாவில் உள்ள ரஃபாவில் இஸ்ரேல் ஒரு மிகப்பெரிய தரைவழி தாக்குதலை நடத்தப்போகிறது என்று அறிவித்தது. இதன் பிறகு 2000 பவுண்டுகள் மற்றும் 500 பவுண்டுகள் எடை கொண்ட குண்டுகளின் ஆயுதத் தொகுப்பை வழங்குவதை நிறுத்தி வைத்ததாக அமெரிக்கா உறுதிப்படுத்தியது.
இதனால் அதிபர் பைடன் அமெரிக்காவில் உள்ள குடியரசுக் கட்சியினரிடமிருந்தும், நெதன்யாகுவிடமிருந்தும் எதிர்ப்பினை சந்தித்தார். இஸ்ரேல் பிரதமர் நெதென்யாகு இதனை "ஆயுதத் தடை" என்று கருதினார்.
அதிபர் பைடன் இந்த இடை நீக்கத்தை ஓரளவு தளர்த்தினார். அவர் இதுபோல மீண்டும் எதுவும் செய்யவில்லை.
அதிபர் பதவியை விட்டு வெளியேறும்போது தன்னுடைய நற்பெயரை உயர்த்த பைடன் முயற்சிக்கும் நிலையில், சமீப வாரங்களில் பைடன் நிர்வாகம் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளுள் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யும் முடிவும் ஒன்றாகும்.
அதிபர் ஜோ பைடன் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி அன்று, வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுகிறார். இதனை அடுத்து டொனால்ட் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்பதற்கு முன்பு இதுவே இஸ்ரேலுக்கு திட்டமிடப்பட்ட கடைசி ஆயுத விற்பனையாகவும் இருக்கலாம்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப், வெளிநாட்டு மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்தும், இதில் அமெரிக்காவின் தலையீட்டைக் குறைப்பது குறித்தும் பேசியிருக்கிறார்.
டொனால்ட் டிரம்ப் தன்னை இஸ்ரேலின் ஒரு தீவிர ஆதரவாளராக நிலைநிறுத்திக் கொண்டார். ஆனால் காஸாவில் ராணுவ நடவடிக்கைகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று இஸ்ரேலை அவர் வலியுறுத்தியுள்ளார்.
2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி அன்று, தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஹமாஸை அழிக்க இஸ்ரேல் அதன் எதிர்த்தாக்குதலை தொடங்கியது.
அப்போதிலிருந்து காஸாவில் 45,580-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)