You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சரஸ்வதி நதி: உண்மையா, கட்டுக்கதையா? இஸ்ரோ ஆய்வில் தெரிய வந்தது என்ன?
- எழுதியவர், அமரேந்திர யார்லகட்டா
- பதவி, பிபிசி செய்தியாளர்
கும்பமேளா நிகழ்வைத் தொடர்ந்து, பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமம் தொடர்பான கருத்துகள் வலம்வருகின்றன. திரிவேணி சங்கமம் குறித்து எப்போதெல்லாம் பேசப்படுகிறதோ அப்போதெல்லாம் கங்கை மற்றும் யமுனை நதிகளுடன் சரஸ்வதி நதியும் குறிப்பிடப்படும்.
பல ஆண்டுகளாகவே சரஸ்வதி நதி குறித்த மர்மம் நீடிக்கிறது.
உண்மையிலேயே சரஸ்வதி என்ற நதி இருந்ததா? அந்த நதி இந்தியாவில் எங்கு இருந்தது என்பது குறித்த நீண்ட விவாதம் இன்னும் நடைபெற்று வருகிறது.
சரஸ்வதி நதி குறித்து புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீப காலங்களில் அதுகுறித்து சில ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அவற்றில் சரஸ்வதி நதி குறித்த பல தகவல்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.
சரஸ்வதி நதி குறித்தும் கும்பமேளாவுடன் அதற்குள்ள தொடர்பு குறித்தும் இங்கு தெரிந்துகொள்வோம்.
ஜனவரி 13 முதல் மகா கும்ப மேளா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வரலாற்றுபூர்வ நிகழ்வில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள், கங்கை, யமுனை மற்றும் இன்னும் மர்மம் நீடிக்கும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் ஒன்றுகூடுவார்கள்.
இந்தாண்டு மகா கும்ப மேளா நிகழ்வில், சுமார் 40 கோடி பேர் பங்கேற்பர் என அரசாங்கம் கணித்துள்ளது.
கும்ப மேளாவின் முதல் நாளான ஜன. 14 அன்று ஷாஹி ஸ்நான் அதாவது நாக சாதுக்கள் நீராடினர். ஷாஹி ஸ்நான் என்பதை, அம்ரித் ஸ்நான் என உத்தர பிரதேச அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.
தற்போது பக்தர்கள் திரிவேணி சங்கமத்தை நோக்கித் திரண்டு வருகின்றனர். திரிவேணி சங்கமம் என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடம் என நாம் கேள்விப்பட்டிருப்போம்.
பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமம் எனும் மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில், கங்கை மற்றும் யமுனை நதிகள் நட்டுமே தெரியும். இந்த இரு நதிகளிலிருந்து வரும் நீர்தான் அங்கு சங்கமிக்கும்.
யமுனை நதி மேற்குப் பகுதியிலிருந்தும் கங்கை நதி வடக்குப் பகுதியிலிருந்தும் பாயும்.
இது திரிவேணி சங்கமம் என அழைக்கப்பட்டாலும், மூன்றாவதாக குறிப்பிடப்படும் சரஸ்வதி ஆறு அப்பகுதியில் தெரிவதில்லை. வரலாற்று ஆய்வாளர்கள் இதுகுறித்துக் கூறுவது என்ன? ஏன் சரஸ்வதி ஆறு அப்பகுதியில் தெரிவதில்லை? சரஸ்வதி ஆறு இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் ஏதும் உள்ளதா?
உண்மையிலேயே சரஸ்வதி ஆறு இருந்து, பின்னர் அது மறைந்துவிட்டதா? அல்லது சரஸ்வதி ஆறு என்பதே ஒரு கட்டுக்கதையா? உண்மை என்ன?
புராணக் கதைகள் கூறுவது என்ன?
திரிவேணி சங்கமத்தில் கங்கை, யமுனை நதிகளுக்கிடையே சரஸ்வதி நதி ஓடுவதாக ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர். சரஸ்வதி நதி மறைந்தது தொடர்பான பல கதைகள் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பண்டைய வரலாறு குறித்த பேராசிரியர் அனாமிகா ராய் இதுதொடர்பாக பிபிசியிடம் பேசினார்.
அவர் கூறுகையில், "புராணங்களின்படி சரஸ்வதி நதி பிரம்மாவின் மகளாக அறியப்படுகிறார். சரஸ்வதி, கௌஷாம்பி பேரரசர் புருரவா மீது காதல் கொண்டதாக புராணங்களில் உள்ளது. கௌஷாம்பி என்பது பிரயாக்ராஜுக்கு அருகில் உள்ளது. சரஸ்வதியின் காதலை அறிந்த பிரம்மா, கோபத்தில் சரஸ்வதி மறைந்துபோகுமாறு சாபம் விடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன." என்றார்.
மதுராவை சேர்ந்த தனஞ்செய தாஸ் என்பவர் மற்றொரு புராணக் கதையை விளக்கினார்.
அவர் கூறுகையில், "பத்ரிநாத் எனும் இடத்திலிருந்து சரஸ்வதி ஆறு உருவானதாக கூறப்படுகிறது. முனிவர் ஒருவரின் சாபத்தால் அந்த ஆறு அழிந்துபோனதாக கதைகள் உள்ளன. சரஸ்வதி ஆறு ஓடும்போது எழும் சத்தத்தால் முனிவரின் தவம் கலைந்துபோனதாக அக்கதையில் உள்ளது." என்றார்.
"புராணங்கள் மற்றும் பண்டைய வேதங்களின்படி, பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தின்போது சரஸ்வதி நதி தெரிவதில்லை. எனினும், இந்த நதி கண்ணுக்குத் தெரியாமல் பாய்கிறது. அதனால் தான் அந்த இடத்தைத் திரிவேணி சங்கமம் என்கின்றனர்."
சரஸ்வதி நதி குறித்தத் தடங்கள் உள்ளதா?
சரஸ்வதி நதி என்ற பெயரை நாம் கேட்டிருக்கிறோம், ஆனால், இந்தியாவின் எந்த பகுதியிலும் இந்த நதி காணப்படவில்லை.
கங்கை, யமுனை மற்றும் காவிரி ஆறுகளைப் போல அல்லாமல், இந்த ஆறு எங்கும் பாய்வதில்லை.
எனினும், சரஸ்வதி நதி என்ற ஒன்று இருப்பதாக பக்தர்கள் பலரும் நம்புகின்றனர்.
அனாமிகா ராய் கூறுகையில், "சரஸ்வதி நதி என்பது மக்களின் மனங்களில் உள்ளது. இந்த நதி குறித்து மக்கள் நம்புகின்றனர். உள்ளூர் மக்கள் கூறும் கதைகள் வாயிலாக இந்த நதி உயிர்ப்புடன் இருக்கிறது. திரிவேணி சங்கமத்துக்கு முன்னதாகவே சரஸ்வதி நதி யமுனையுடன் கலந்து திவிவேணி (இரண்டு நதிகளும் கலந்து) என அறியப்படுகின்றது." என்றார்.
கடைசியாக குருக்ஷேத்திரத்தின்போது ஹரியாணாவில் கடைசியாக சரஸ்வதி நதி பாய்ந்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும் அனாமிகா ராய் கூறுகிறார்.
"தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுத்த ஆதாரங்களின்படி, ஹரியாணாவின் காகர் பகுதியில் சரஸ்வதி நதி, யமுனை நதியை சந்திக்கிறது. அங்கிருந்து, பிரயாக்ராஜ் வரை யமுனை நதியுடன் இரண்டு ஆறுகளாக பாய்கிறது சரஸ்வதி நதி. பிரயாக்ராஜில் கங்கை நதியுடன் சரஸ்வதி நதி சங்கமித்து திரிவேணியாகிறது."
புராணங்களில், "கங்கா யமுனையோ யாத்ரா என குறிப்பிடப்பட்டுள்ளது, ரகசியமாக பாயும் சரஸ்வதி நதியைத்தான்." என்கிறார் அவர்.
சரஸ்வதி நதி குறித்து ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளதா?
ஜூன் 15, 2002-ல் அப்போதைய கலாசாரத்துறை அமைச்சர் ஜக்மோகன் சரஸ்வதி நதி குறித்த ஆராய்ச்சிக்காக தொல்லியல் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.
இதற்காக நிபுணர்கள் குழுவும் அமைக்கப்பட்டது. அக்குழுவில் இஸ்ரோவின் பல்தேவ் சஹாய், தொல்லியல் நிபுணர் எஸ். கல்யாண் ராமன், பனிப்பாறை நிபுணர் ஒய்.கே. புரி மற்றும் நீரியல் ஆலோசகர் மாதவ் சிட்டாலே ஆகியோர் இருந்தனர்.
அக்குழு ராஜஸ்தானின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்றது. ராஜஸ்தானின் எல்லை மாநிலங்களுக்கும் சென்றது. அக்குழுவினர் பல தகவல்களைச் சேகரித்தனர். அதுகுறித்தத் தகவல்கள் மற்றும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில், நவம்பர் 28, 2015ல் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் சரஸ்வதி நதி குறித்த அறிக்கையை வெளியிட்டனர்.
'சரஸ்வதி ரிவர்: அன் இன்டகிரேட்டட் ஸ்டடி பேஸ்ட் ஆன் ரிமோட் சென்சிங் மற்றும் ஜி.ஐ.எஸ். டெக்னிக்ஸ் வித் ஆக்சுவல் கிரௌண்ட் இன்ஃபர்மேஷன்' எனும் பெயரில் அந்த ஆய்வறிக்கை வெளியானது. மூத்த விஞ்ஞானிகள் டாக்டர் ஜி.ஆர். ஷர்மா, டாக்டர் பி.சி. பத்ரா, டாக்டர் ஏ.கே. குப்தா மற்றும் டாக்டர் ஜி.ஸ்ரீநிவாஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டது.
இந்த அறிக்கை, ஜோத்பூரில் உள்ள இஸ்ரோவின் பிராந்திய தொலை உணர்வு மையத்தால் ( Regional Remote Sensing Centre) தயாரிக்கப்பட்டது. இந்தியாவின் வடமேற்கு பகுதியில் பல நதிகள் பாய்ந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிந்து நதியைப் போல கிறிஸ்துவுக்கு 6,000 ஆண்டுகளுக்கு முன்பாக சரஸ்வதி நதி பாய்ந்ததாக வேதங்களும் புராணங்களும் கூறுகின்றன. அதாவது, இந்த நதி 8,000 ஆண்டுகளுக்கு முன்பாக பாய்ந்ததாக கூறுகின்றன.
தற்போதைய இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் வழியே பாய்ந்து, குஜராத்தின் கட்ச் பகுதியில் கடலில் கலந்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே காலநிலை மாற்றம் காரணமாகவும் டெக்டோனிக் தட்டுகளின் (பூமியின் மேற்பரப்பு தட்டுகள்) நகர்வு காரணமாகவும் சரஸ்வதி நதி வறண்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
பிரபலமான கும்ப மேளா
கவிஞர் காளிதாசர் கி.மு 4-5 ஆம் நூற்றாண்டில், தன்னுடைய 'ரகுவன்ஷ்' எனும் கவிதையில் கங்கை மற்றும் யமுனை நதிகளின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். ஆனால், சரஸ்வதி நதியின் பெயரை குறிப்பிடவில்லை.
அந்த காலகட்டத்தில் சரஸ்வதி நதி குறித்துப் பெரிதளவில் குறிப்பிடப்படாமல் இருந்ததால், காளிதாசர் அப்பெயரை குறிப்பிடாமல் இருந்திருக்கலாம் என அனாமிகா ராய் கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில், "கும்ப மேளா நடைபெறுவதைத் தொடர்ந்து, சரஸ்வதி நதி மிகவும் பிரபலமானது. எனினும், வரலாற்று ஆதாரங்களை நாம் கவனித்தால், சரஸ்வதி நதி என்ற ஒன்று இருந்தது, பின்னர் அது மறைந்துவிட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன" என்றார்.
அனாமிகா ராய் கூறுகையில், "கே சாட்டோபத்யாய் போன்ற வரலாற்று அறிஞர்கள், சிந்து நதிதான் சரஸ்வதி நதி என கூறுகின்றனர். எனினும், இறையியல் குறித்து எழுதும் பி.வி. கேன் போன்றவர்கள் இந்த வாதத்தை ஏற்பதில்லை. மற்ற அறிஞர்கள், குருக்ஷேத்திரத்தின்போது, சரஸ்வதி நதி பல நதிகளாக பிரிந்து பாய்ந்ததாக கூறுகின்றனர்." என்றார்.
திரிவேணி சங்கமத்திற்கு சிறப்பு முக்கியத்துவம்
மகா கும்ப மேளா பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. திரிவேணி சங்கமம் நடக்கும் இடத்தில் கும்ப மேளா நடக்கிறது.
கும்ப மேளாவுக்கு செல்பவர்களுக்கென படகுகளும் இயக்கப்படுகின்றன. கங்கை மற்றும் யமுனை நதிகளில் நீர்வரத்து குறையும் நேரங்களில், பக்தர்கள் படகுமூலம் திரிவேணி சங்கமத்திற்கு சென்று நீராடுகின்றனர்.
அங்கு பல்வேறு சடங்குகளை பக்தர்கள் செய்கின்றனர். இறந்துபோன தங்கள் உறவினர்களின் அஸ்தியையும் இங்கு எடுத்துவருகின்றனர்.
இவை ஆறுகளில் அசுத்தத்தை ஏற்படுத்துவதாக பக்தர்கள் சிலர் கூறுகின்றனர்.
ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு
திரிவேணி சங்கமத்திற்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகைபுரிகின்றனர். கும்ப மேளாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதாக உத்தர பிரதேச அரசு கூறுகிறது.
அங்கு படகோட்டுபவர்கள், பிரயாக்ராஜில் 2,000 படகுகள் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆயிரக்கணக்கானோர் கும்ப மேளாவால் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு வருவதால் படகோட்டிகள் பல்வேறு மொழிகளில் சில வார்த்தைகளை தெரிந்து வைத்திருக்கின்றனர்.
"15-20 மொழி பேசுபவர்கள் இங்கு வருகின்றனர். அவர்களுடன் பேசுவதற்காக, சில வார்த்தைகளைக் கற்றுக்கொண்டிருக்கிறோம்," என பச்சன்லால் என்பவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)