You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தென் கொரிய அதிபர் இல்லத்திற்குள் ஏணி மூலம் குதித்த அதிகாரிகள் - என்ன நடந்தது?
தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபரான யூன் சுக் யோல் சற்று முன் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தென் கொரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவரை கைது செய்ய இரண்டாவது முறையாக அதிகாரிகள் இன்று முயற்சி செய்தனர். முதல் முறையைப் போலவே, இம்முறையும் அவரது பாதுகாப்புப் பிரிவினர் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். வீட்டை சுற்றிலும் யூன் சுக் யோலின் பாதுகாப்பு சேவையால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் வேறு வழியின்றி, சில அதிகாரிகள் ஏணிகளைப் பயன்படுத்தி அவரது வீட்டுக்குள் நுழைந்ததாக யோன்ஹாப் என்ற தென் கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது.
யூன் சுக் யோலை கைது செய்து அவரது இல்லத்தில் இருந்து புலனாய்வு அதிகாரிகள் அழைத்து சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. "புலனாய்வு அதிகாரிகள் யூனை கைது செய்ய வழங்கப்பட்டிருந்த உத்தரவை நிறைவேற்றிவிட்டதாக", தென் கொரியாவின் ஊழல் புலனாய்வு அலுவலகம் (CIO) தெரிவித்துள்ளது
இம்மாத தொடக்கத்தில் யூனை கைது செய்வதற்கான முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், அவரை கைது செய்ய நீதிமன்றம் கூடுதல் கால அவகாசம் வழங்கியது.
கடந்த டிசம்பர் மாதத்தில் தென் கொரியாவில் ராணுவ ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற யூனின் குறுகிய கால முயற்சிக்குப் பிறகு, பல வாரங்களாக யூனிடம் விசாரணை நடந்து வந்தது.
யூனின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் மற்றும் விமர்சகர்கள் ஆகியோர் திரளாக கூடியுள்ளனர். மேலும் இவர்களை கட்டுப்படுத்த 1000 பேர் கொண்ட காவல்படை அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக சோலில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.
அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் நுழைந்ததை அடுத்து, யூனின் ஆதரவாளர்கள் மிகவும் கோபமாகவும் வருதத்துடனும் இருக்கின்றனர். யூனின் வீட்டிற்குள் நுழைவது சட்டவிரோதமானது என்று அவரது ஆதரவாளர்கள் கோஷமிடுகின்றனர்.
யூனின் ராணுவச் ஆட்சி அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்புக்கு பிறகு ஏற்பட்டிருக்கும் விளைவுகள் அவரை விசாரிக்கும் ஊழல் புலனாய்வு அலுவலகத்திற்கு (CIO) சவாலாக உள்ளது.
இந்த அமைப்பு தொடங்கி நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆகின்றது. இது முன்னாள் அதிபர் பார்க் கியூன்-ஹே மீதான பொதுமக்களின் கோபத்திற்கு பதிலளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, ஊழல் மோசடிக்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
தென் கொரிய அதிபர்கள் இதற்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், பதவி விலகுவதற்கு முன்பு கைது நடவடிக்கையை எதிர்கொண்ட முதல் நபர் யூன் ஆவார்.
ஊழல் புலனாய்வு அலுவலகத்தில் ஆஜராக ஒப்புக்கொண்டுள்ளதாக வீடியோ பதிவு ஒன்றின் மூலம் யூன் சுக் யோல் தெரிவித்துள்ளார்.
"இந்த விசாரணை சட்டவிரோதமாக இருந்தாலும், எந்தவொரு விரும்பத்தகாத வன்முறையும் நடக்காமல் தடுப்பதற்காக ஊழல் புலனாய்வு அலுவலகத்தில் ஆஜராக முடிவு செய்தேன். ஆனால் இதன் மூலம் நான் அவர்களின் இந்த விசாரணையை ஏற்றுக்கொள்கிறேன் என்று பொருளல்ல", என்று அவர் கூறியுள்ளார்.
தென் கொரியாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை என்றும், தன்னை விசாரணை செய்யும் அமைப்புகளுக்கோ அல்லது தன்னை கைது செய்ய உத்தரவு பிரப்பிக்கும் நீதிமன்றங்களுக்கோ, அவ்வாறு செய்ய அதிகாரம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
"இவை இருண்ட நாட்கள் என்றாலும், இந்த நாட்டின் எதிர்காலம் நம்பிக்கைக்குரியதாகவே இருக்கின்றது", என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த கட்டுரை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)