You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க டாலர் கையிருப்பு கரைந்தது: இந்திய ரூபாய் இலங்கைக்கு உதவுமா?
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையில் அமெரிக்க டாலருக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், இரு தரப்பு வணிகம் மேற்கொள்ள இலங்கை அரசு இந்திய ரூபாயைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
இது இலங்கைக்கு எந்த அளவுக்கு பலன் தரும் என்பதையும், அது எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதையும் இந்தக் கட்டுரை அலசுகிறது.
இந்திய ரூபாயில் இருதரப்பு வர்த்தகம் மேற்கொள்ள இலங்கை வங்கி ஒன்று பாரத ஸ்டேட் வங்கியில் வோஸ்ட்ரோ (vostro) கணக்கை திறந்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர் ஆணையம் இந்த தகவலை, தமது ட்விட்டர் பதிவில் இந்த வாரம் உறுதிப்படுத்தியது.
வோஸ்ட்ரோ கணக்கு என்றால் என்ன?
வங்கி ஒன்று, மற்றுமொரு வங்கியின் சார்பாக வைத்திருக்கும் கணக்கு வோஸ்ட்ரோ கணக்கு என கூறப்படுகின்றது. நிதியை வைத்திருக்கும் வங்கியானது, வெளிநாட்டு கணக்கை வைத்திருக்கும் வங்கியின் பாதுகாவலராகவும் செயற்படுகின்றது. பொருளாதார நெருக்கடியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை, டாலர் கையிருப்பு கரைந்ததால் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றது. குறிப்பாக எரிபொருள், எரிவாயு, மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்வதில் பாரிய சிரமங்களை இலங்கை கடந்த காலங்களில் சந்தித்து வந்தது.
இந்த நிலையில், டாலர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்துகொள்ளும் வகையில், சர்வதேச வர்த்தகத்தில் இந்திய ரூபாயை பயன்படுத்த கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை இணக்கம் தெரிவித்தது. டாலர் தட்டுப்பாடு காணப்படுகின்ற நாடுகளை, இந்திய ரூபாய் வர்த்தக தீர்வு பொறிமுறைக்கு கொண்டு வருவதற்கான வழிகளை பார்ப்பதாக இந்திய அரசாங்கம் அறிவித்திருந்த நிலையிலேயே, இந்த வோஸ்ட்ரோ கணக்கு திறக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு என்ன பயன்?
வோஸ்ட்ரோ கணக்கு திறப்பதன் ஊடாக, இலங்கையிலுள்ள ஒருவர் 10,000 அமெரிக்க டாலர் பெறுமதியான இந்திய ரூபாயை வைத்திருக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியா மற்றும் இலங்கை குடிமக்களுக்கு இடையிலான சர்வதேச கொடுக்கல் - வாங்கல்களின் போது, அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயைப் பயன்படுத்த முடியும் என கூறப்படுகின்றது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு நட்பு நாடு என்ற வகையில், தீர்வை வழங்கும் நோக்கிலேயே இந்தியா இந்த தீர்வை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடைமுறை சாதகமாகுமா?
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கத்திடம் இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ் வினவியது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான கொடுக்கல் - வாங்கல்களுக்கு (ஏற்றுமதி - இறக்குமதி வணிகம்) மட்டுமே இந்த முறையை பயன்படுத்த முடியும் என அவர் கூறினார்.
சீனாவுடனான வர்த்தகத்தில், இந்திய ரூபாயில் அந்த கொடுக்கல் வாங்கல்களை செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், டாலர் கொடுக்கல் - வாங்கலானது, சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று எனவும், இந்திய ரூபாய் சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாணய அலகு கிடையாது எனவும் அவர் கூறுகின்றார். அதேபோன்று, பெருமளவிலான பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் இலங்கை, குறுகிய அளவிலான பொருட்களையே இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கின்றது. அவ்வாறான நிலையில், இலங்கையிலிருந்து பெருமளவிலான இந்திய ரூபாய், இந்தியாவிற்கு செல்லும் எனவும், ஏற்றுமதி வருமானமாக இந்திய ரூபாய் பெருமளவு இலங்கைக்கு கிடைக்காது எனவும் அவர் கூறுகின்றார். அதனால், இலங்கையில் இந்திய ரூபாய்க்கு தட்டுப்பாடு வரக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் அவர் கூறுகின்றார். இலங்கையில் டாலர் தட்டுப்பாடு காணப்படுகின்ற நிலையில், இந்த முறைமை சிறந்தது என்றாலும், கொடுக்கல் - வாங்கல்களின் போது, சில தடங்கல்கள் காணப்படுவதாகவும் சிரேஷ்ட பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவிக்கின்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்