You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை ஜனாதிபதி ரணில் இந்து மத தனித்துவத்தைப் பாதுகாப்பது பற்றி சொன்னது என்ன?
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையிலுள்ள இந்து மதத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பது தொடர்பில் ஆராய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (29) விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இந்து ஆலயங்களில் மாத்திரமன்றி, பௌத்த விஹாரைகளிலும் இந்து தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணத்தில் சிவ வழிபாடு பொதுவானது என்பதுடன், இலங்கையின் தென் பகுதியில் விஷ்ணு கடவுளை வழிபடுவது பொதுவாகக் காணப்படுகின்றது என ரணில் கூறுகின்றார். மேலும், தென் பகுதியில் பல இந்து கடவுள்களை மக்கள் வழிபட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவிக்கின்றார்.
விஷ்ணு, முருகன், பத்தினி (அம்மன்) உள்ளிட்ட பல தெய்வங்களை, தென் பகுதியில் மக்கள் வழிபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்தியாவிலுள்ள இந்து மதத்திற்கும் இலங்கையிலுள்ள இந்து மதத்திற்கும் இடையில் தனித்துவங்கள் காணப்படுகின்றன.
இலங்கையிலுள்ள இந்து மதம் குறித்து, அறிக்கையொன்றை தொகுத்து வழங்குமாறு, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் தான் கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த நடவடிக்கைகளுக்கு ஏனைய கட்சிகளும் உதவிகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி பகிரங்க கோரிக்கை விடுக்கின்றார்.
அத்துடன், வட இந்தியாவிற்கும் தென் இந்தியாவிற்கும் இடையில் இந்து மதத்திற்கு வித்தியாசம் காணப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கையில் வரலாற்று ஆய்வு நிறுவனத்தை ஸ்தாபித்தல்
இலங்கையில் வரலாற்று ஆய்வு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
''நாம் வரலாற்றை மறந்து விடுகின்றோம். எனவே, வரலாறு குறித்து அறிவையும் ஆராய்ச்சியையும் முன்னெடுப்பதற்காக இந்த நிறுவனம் செயற்பட வேண்டும். மகா வம்சத்துடன் நாம் அறிந்த வரலாற்றில் பெரிய வித்தியாசம் இருக்கின்றது.
தகா வம்சத்தில் உள்ள தேதிகளை மாற்ற முடியாது. மகா வம்சத்தில் ஒரு தரப்பினரின் கருத்துகளே உள்ளன. வெளியே மாறுப்பட்ட கருத்துகள் காணப்படுகின்றன.
இவற்றை கருத்தில் கொண்டு, இலங்கையில் வரலாற்று நிறுவனமொன்றை ஆரம்பிக்க வேண்டும்" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதியின் தீர்மானத்தை வரவேற்கும் இந்துக்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானத்தைத் தான் வரவேற்பதாக இலங்கை இந்து குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி சிவஸ்ரீ கு.வை.கா.வைதீஸ்வர குருக்கள் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
''இதுவொரு நல்ல விடயம். நாட்டின் தலைமைத்துவ பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவர், ஜனாதிபதியாக இருக்கக்கூடிய ஒருவர் நாடாளுமன்றத்தில் பகிர்ந்துள்ள கருத்து, வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இலங்கை தீவிலே நாம் பல விதமான இன்னல்கள், சமூக பிரச்னைகள், சமய பிரச்னைகள், இனப் பிரச்னைகள் என்று பலவற்றை எதிர்கொண்டு வந்திருக்கின்றோம்.
அண்மைக் காலமாக சைவ மக்களாகிய நாம், மிகுந்த சவால்களை எதிர்நோக்கி இருந்திருக்கின்றோம்.
சமய ரீதியிலான புறக்கணிப்புக்கள், இன ரீதியிலான புறக்கணிப்புக்கள், அதேபோல், சமய தலங்கள் மீதான ஆக்கிரமிப்புக்கள், அந்தத் தலங்களை புனர்நிர்மாணம் செய்யும் போது, அதற்கு ஏற்படுத்தப்படுகின்ற தடைகள், அந்தத் தலங்களுக்கு உரிய சொத்துக்களில் குறிப்பிடக்கூடிய வகையில் காணப்படுகின்ற சொத்துக்கள் ஏனைய ஒரு தொகுதியினரால் எல்லையிடப்படுகின்றமை என்று பல விடயங்களை நாம் மிகுந்த வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அவ்வாறான காலங்களை நாம் கடந்து வந்திருந்தோம். இவை இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஜனாதிபதி இவ்வாறான கருத்தைக் கூறியிருப்பது, சைவ சமயம் சார்பில் நான் வரவேற்கின்றேன்.
அமைக்கப்படுகின்ற குழுவோ, அல்லது எதுவாக இருந்தாலும் நிதானமான போக்குடன், பக்கச்சார்பு அற்ற நிலையிலே, இலங்கை தேசத்தில் இந்து சமயத்தின் தொன்மையை, பௌத்த சமயத்தின் தொன்மையை ஒவ்வொன்றாகப் பகுப்பாய்வு செய்து, உரிய வகையிலே அது அறிக்கையிட வேண்டும்.
அவ்வாறு அறிக்கையிடப்படுகின்ற பொழுது தான், ஜனாதிபதி கூறியிருக்கக்கூடிய கருத்தினுடைய உண்மையை நடைமுறை சாத்தியமாக்க முடியும் என நான் நினைக்கின்றேன்.
இந்து மதம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில், இந்து மதம் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள் என பிபிசி தமிழ், இலங்கை இந்து குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி சிவஸ்ரீ கு.வை.கா.வைதீஸ்வர குருக்களிடம் வினவியது.
''இந்த விடயத்தை இரண்டு, மூன்று பகுதிகளாகப் பார்க்கலாம். தனித்துவங்கள் பேணப்படுதல், அவர்களுடைய தனித்துவத்தில் எந்தவித தலையீடுகளும் இல்லாமல், அவரவர் வழியிலேயே விட்டு விடுதல் ஒன்று.
அடுத்தது, எனக்கு என்று சொல்லிச் சில பொருட்களை வைத்திருப்பேன். அதை இன்னொரு பகுதியினர் வந்து, தேவையற்ற விதத்திலே ஆக்கிரமிக்கவோ அல்லது அதைப் பறிமுதல் செய்யவோ முடியாது, கூடாது, இயலாது.
ஆனால், அப்படியான சில சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு சில சம்பவங்கள் நடந்தால் கூட அது வேதனை. ஆகவே, ஒவ்வொரு சமயத்திற்கும் இருக்கக்கூடிய தனித்துவங்கள் பேணப்பட வேண்டும் என்பதே என்னுடைய கருத்து" என்று அவர் பதிலளித்திருந்தார்.
இலங்கையிலுள்ள பல இந்து ஆலயங்கள், கடந்த காலங்களில் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள், இந்துக்களின் தொல்பொருள்களைப் பாதுகாக்க முடியாமை, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து ஆலயங்களின் தொன்மை பாதுகாக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியிருந்தன.
இவ்வாறான சூழ்நிலையிலேயே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து மதத்தின் தனித்துவத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபையில் நேற்றைய தினம் கூறியிருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்