You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை 'மாவீரர் நாள்' நிகழ்வில் கூடிய பல்லாயிரம் பேர்
இலங்கையில் தமிழர் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று இலங்கை உள்நாட்டுப் போரில் பங்கேற்று உயிர் நீத்த தமிழர்களை நினைவுகூர்ந்தனர்.
விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ்ப் போராளிக் குழுக்கள் இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு-கிழக்கு மாகாணங்களை தனியாகப் பிரித்து தமிழ் ஈழம் என்ற தனி நாடாக்கவேண்டும் என்று போராடினர்.
பல கட்டங்களை கடந்த இந்தப் போராட்டம், இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே களத்தில் இருக்கும் நிலையை எட்டியது. 2008-09 காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு போரில் பலத்த பின்னடைவுகளை சந்தித்தது. அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் சுருங்கிக் கொண்டே வந்தன. இறுதியில் அவர்கள், முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள நந்திக் கடல் பகுதிக்குள் சுருக்கப்பட்டனர்.
அந்த ஆண்டு மே மாதம் புலிகள் அமைப்புக்கும் இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் ஏற்பட்ட கடும் போரில் புலிகள் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டனர். இந்தப் போரில் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பல்லாயிரம் பேர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாகவும் இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டுக்கு உள்ளானது.
மக்களை, சிறார்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கேடயமாகப் பயன்படுத்தியதாக இலங்கை அரசாங்கமும் குற்றம்சாட்டியது. இரு தரப்பின் மீதும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்பட்ட காலத்தில் போரில் இறந்த தங்கள் படையினரை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 27-ம் தேதியை மாவீரர் நாள் என்று அவர்கள் அனுசரித்தனர்.
2009ம் ஆண்டின் இறுதிப் போருக்குப் பிறகு, விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றிலும் இல்லாமல் போனாலும், அந்த இறுதிப் போரில் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்ட நிகழ்வு காரணமாக, தமிழர்கள் மத்தியில் அந்த நாளுக்கு ஒரு உணர்வுபூர்வமான முக்கியத்துவம் ஏற்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இந்த நிகழ்வை பொதுவெளியில் அனுசரிக்க முயற்சிகள் நடந்தாலும் அரசாங்கம் அதைத் தடுப்பது வழக்கம்.
இந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி, அதை ஒட்டி ஏற்பட்ட தீவிரமான மக்கள் போராட்டம், அரசியல் நெருக்கடி, இந்தப் போராட்டத்தின்போது சிங்கள - தமிழ் மக்களிடையே ஏற்பட்ட இணக்கம் ஆகியவை அரசாங்கத்தின் அணுகுமுறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.
இதனால், இந்த ஆண்டு 'மாவீரர் நாள்' என அழைக்கப்படும் இந்த நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் பெரும் மக்கள் பங்கேற்புடன் நடந்தது.
இவற்றிலேயே மிகப்பெரிய நிகழ்வு, கிளிநொச்சி கனகபுரம் 'மாவீரர் துயிலும் இல்லம்' என அழைக்கப்படும் இடத்தில் நடந்தது.
முதலாவது நிகழ்வாக இன்று மாலை 6 மணி 3 நிமிடத்தில் மணி ஓசை ஒலிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து தமிழ் மக்கள் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
பிறகு தீபச் சுடர் ஏற்றப்பட்டு, போரில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்து பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகளில் இந்த முறையே அதிக அளவிலான மக்கள் கலந்து கொண்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு பிபிசி தமிழிடம் தெரிவித்தது.
இன்று நடைபெற்ற மாவீரர் நினைவு தின நிகழ்வில் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
மாவீரர் துயிலும் இல்ல வளாகத்திற்கு இன்றைய தினம் சுமார் 3600 க்கும் அதிகமான தென்னங்கன்றுகள் கொண்டு வரப்பட்டன.
இந்த தென்னங்கன்றுகள் வரிசையாக வைக்கப்பட்டு, அதற்கு அருகில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தனது உறவுகளை இழந்தவர்கள் தென்னங்கன்றுகளுக்கு அருகில் அமர்ந்து, உயிரிழந்த உறவுகளின் புகைப்படங்களை வைத்து, அவற்றுக்கு மாலையிட்டு, விளக்கேற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபிகள் ராணுவத்தினால் ஏற்கனவே உடைக்கப்பட்டிருந்தன. அந்த தூபிகள் தற்போது ஓரிடத்தில் குவிக்கப்பட்டு அந்த இடத்திற்கு இன்றைய தினம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த காலத்தைப் போல இந்த நாளை அனுசரிக்க அரசாங்கம் தடையேதும் விதிக்கவில்லை. எனினும் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்