You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒருவரை கைது செய்வதற்கான விதிகள் மற்றும் அவருக்கு சட்டம் வழங்கும் உரிமைகள்
- எழுதியவர், அம்ரிதா துர்வே
- பதவி, பிபிசி மராத்தி
'நியூஸ் கிளிக்' செய்தி இணையதளத்தின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தா கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று கடந்த மே 15 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.
புர்கயஸ்தாவை காவலில் எடுப்பதற்கு முன்பு கைதுக்கான காரணம் குறித்து அவருக்குத் தெரிவிக்கப்படாததால், இந்தக் கைது செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
ஒருவரைக் கைது செய்வதற்கான விதிகள் என்ன? கைது செய்யப்படுபவருக்கு சட்டம் என்னென்ன உரிமைகளை வழங்குகிறது?
பிரபீர் புர்கயஸ்தா மீதான வழக்கு
சீனாவில் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்ற குற்றச்சாட்டின் பேரில் 2023 அக்டோபரில் சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA- யுஏபிஏ) புர்கயஸ்தா கைது செய்யப்பட்டார்.
பிரபீர் புர்கயஸ்தாவின் வழக்கறிஞர் கபில் சிபல் உச்சநீதிமன்றத்தில் வாதாடுகையில், “பிரபீர் புர்கயஸ்தா கைது செய்யப்பட்டபோது, கைதுக்கான காரணம் குறித்து அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை. உண்மையில் இந்தத் தகவல் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்டிருக்க வேண்டும்,” என்றார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் புர்கயஸ்தா கைது செய்யப்பட்ட நேரமும் ஒரு முக்கியமான விஷயமாக இருந்தது. டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் காலை 6:30 மணியளவில் அவரது வீட்டிலிருந்து யுஏபிஏ சட்டத்தின் கீழ் புர்கயஸ்தா கைது செய்யப்பட்டார்.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நீதிமன்றக் காவல் விசாரணைக்காக சிறப்பு நீதிபதியின் வீட்டிற்கு தாம் அழைத்துச் செல்லப்பட்டதாக புர்கயஸ்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், புர்கயஸ்தாவின் வழக்கறிஞருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பப்பட்ட நீதிமன்றக் காவல் நகலில் கையெழுத்து இல்லை என்றும், கைதுக்கான காரணம் மற்றும் அதிகாலையில் கைது செய்ததற்கான காரணம் குறித்தும் அதில் குறிப்பிடப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
புர்கயஸ்தாவை நீதிமன்றக் காவலில் எடுப்பதற்கான உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவித்து புர்கயஸ்தாவின் வழக்கறிஞர்கள் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே நீதிமன்றக் காவலுக்கான உத்தரவு நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.
அதிகாரபூர்வ பதிவுகளில் உள்ள தகவல்களின்படி, காவலில் வைப்பதற்கான உத்தரவில் காலை 6 மணிக்குத்தான் கையெழுத்திடப்பட்டது. அதாவது, மனுதாரரை நீதிபதியிடம் ஆஜர்படுத்துவதற்கு முன் அல்லது அவரது வழக்கறிஞர்களுக்கு தகவல் தெரிவிக்கும் முன்.
இதைக் குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், புர்கயஸ்தாவின் கைது மற்றும் அவரைக் காவலில் வைப்பதற்காகப் பின்பற்றப்பட்ட வழிமுறைகளை சட்டவிரோதமானது என அறிவித்தது.
கைது நடவடிக்கை என்றால் என்ன?
தேசிய குற்றப் புலனாய்வுத் துறையின் (என்சிஐபி- NCIB) இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, இந்தியாவின் காவல்துறை எந்த நபரையும் விசாரணைக்காக காவலில் வைக்க முடியாது. அதற்கு, அந்த நபர் வாரன்ட் மூலம் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில் அல்லது வழக்குகளில், வாரன்ட் இல்லாமலும் கைது செய்யப்படலாம்.
கைது வாரன்ட் என்பது குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கைது செய்து ஆஜர்படுத்த காவல்துறைக்கு நீதிமன்றத்தால் வழங்கப்படும் எழுத்துப்பூர்வ உத்தரவு. ஒரு குறிப்பிட்ட பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ள அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளைத் தேடுவதற்கும் இந்த வாரன்ட் பெறப்படலாம்.
இந்த எழுத்துப்பூர்வ உத்தரவில், தலைமை அதிகாரியின் கையெழுத்து இருக்கும் மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ கையெழுத்தும் இருக்கும்.
குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர், முகவரி மற்றும் அவர்மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் பற்றிய விவரங்களும் அதில் இருக்கும். இவற்றில் ஏதேனும் ஒரு விவரம் அந்த வாரன்டில் இல்லை என்றால், அது செல்லாது மற்றும் அத்தகைய வாரன்டை பயன்படுத்தி கைது செய்வது சட்டவிரோதமானது.
வாரன்டுகள் இரண்டு வகைப்படும்,
- ஜாமீனில் வெளிவரக்கூடியது
- ஜாமீனில் வெளிவரமுடியாதது
வாரன்ட் இல்லாமல் ஒருவரை எப்போது கைது செய்ய முடியும்?
குற்றம் என்று தெளிவாகத் தெரிந்துணரப்படக் கூடிய தெளிகுற்றத்தில் (cognisable offence) ஒருவர் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்டால், காவல்துறை அதிகாரிகள் அவரை வாரன்ட் இன்றி கைது செய்யலாம்.
கொலை, பாலியல் வல்லுறவு, கொள்ளை, திருட்டு, நாட்டுக்கு எதிராகச் சதி செய்தல் போன்ற அனைத்து கடுமையான குற்றங்களும் தெளிகுற்றத்தின் கீழ் வரும்.
இது தவிர, திருடப்பட்ட சொத்தை வைத்திருப்பது, காவல்துறையினரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், சட்டக் காவலில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தல், தெளிகுற்றம் தொடர்பான செயல்களில் ஈடுபடத் தயாராவது போன்ற வழக்குகளிலும் ஒருவரை வாரன்ட் இன்றிக் கைது செய்யலாம்.
ஒருவரை எவ்வாறு கைது செய்ய வேண்டும்?
இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 46படி, ஒரு நபரை போலீசார் சுற்றி வளைக்கிறார்கள் என்பது மட்டுமே கைது நடவடிக்கையாகாது.
எழுத்துப்பூர்வமாக மற்றும் செயலின் மூலம் அந்த நபரை காவலில் சமர்ப்பித்தால்தான் கைது செயல்முறை நிறைவு அடையும். கைது செய்யப்படுபவரைத் தொடவோ, பிடிக்கவோ தேவையில்லை.
ஆனால், அந்த நபர் தனது பலத்தைப் பயன்படுத்தி கைது செய்வதைத் தடுக்க முயன்றால், காவல்துறையினர் தங்களது பலத்தைப் பயன்படுத்த முடியும். ஆனால் அதிலும் காவல்துறையினருக்கு சில வரம்புகள் உள்ளன.
தேவையின்றி அந்த நபரின் கை, கால்களைக் கட்ட காவல்துறைக்கு அனுமதி இல்லை. கைது செய்யப்பட்டவர் வன்முறையில் ஈடுபடவில்லை என்றாலோ அல்லது தப்பியோட அல்லது தனக்குத்தானே தீங்கு விளைவிக்கவோ முயலவில்லை என்றாலோ அவருக்கு கைவிலங்குகளை அணிவிக்க வேண்டிய அவசியமில்லை.
ஒருவரை கைது செய்த பின்னரே போலீசார் அவரைச் சோதனையிட முடியும். இந்தச் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களும் காவல்துறையினரால் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட நபருக்கு ரசீது வழங்கப்பட வேண்டும்.
அதேபோல் ஒரு பெண் கைது செய்யப்பட்டால், அவரை பெண் காவலர்கள் மட்டுமே சோதனை செய்ய முடியும். மேலும் அந்தச் சோதனை மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்.
கைது செய்யப்பட்ட நபருக்கான உரிமைகள் என்ன?
கைது செய்யப்படும் நபருக்கு சட்டத்தின் கீழ் சில முக்கியமான உரிமைகள் உள்ளன.
- நீங்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை உங்களிடம் தெரிவிக்க வேண்டும்.
- நீங்கள் வாரன்டுடன் கைது செய்யப்பட்டால், வாரண்டை பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு.
- நீங்கள் விரும்பும் ஒரு வழக்கறிஞரை அணுக உங்களுக்கு உரிமை உண்டு.
- நீங்கள் கைது செய்யப்பட்ட பிறகு, நீங்கள் கூறும் நபர், உறவினர் அல்லது நண்பரிடம் உங்கள் கைது குறித்து காவல்துறை தெரிவிக்க வேண்டும். நீங்கள் எங்கு அடைக்கப்படுவீர்கள் என்பதையும் அவர்களிடம் காவல்துறை தெரிவிக்க வேண்டும்.
- கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் அருகில் உள்ள நீதித்துறை நடுவர் முன் நீங்கள் ஆஜர்படுத்தப்பட வேண்டும்.
- நீங்கள் ஜாமீன் பெற தகுதியுள்ளவரா என்பது உங்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
ஒரு பெண்ணை கைது செய்வதற்கான விதிகள் என்ன?
ஒரு பெண்ணை கைது செய்யும்போது காவல்துறை அதிகாரிகள் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 46இன் படி,
- ஒரு பெண்ணைக் கைது செய்வது பெண் போலீஸ் அதிகாரியாக இருக்க வேண்டும்.
- பெண் போலீஸ் இல்லாத நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணை ஆண் அதிகாரிகள் கைது செய்தால் அந்தப் பெண்ணைத் தொடக்கூடாது.
- கைது செய்யப்பட்ட பிறகு, குற்றம் சாட்டப்பட்ட அந்தப் பெண்ணை பெண் அதிகாரிகள் மட்டுமே சோதனையிட முடியும். அதிலும் அவர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
- ஒரு பெண்ணை மாலை 6 மணிக்குப் பிறகும் காலை 6 மணிக்கு முன்பும் கைது செய்ய முடியாது. அவசர வழக்கு என்றால் மட்டுமே ஒரு பெண்ணை இந்த நேரத்தில் கைது செய்ய முடியும். ஆனால், அதற்கு முதலில் குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் அனுமதி பெறவேண்டும்.
அரசமைப்பின் 39A பிரிவின்படி, சட்ட உதவி பெற முடியாத நபர்களுக்கு இலவச சட்ட உதவி பெற உரிமை உண்டு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)