26 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நபர் பக்கத்து வீட்டு பாதாள அறையில் உயிருடன் மீட்பு

    • எழுதியவர், லூசி கிளார்க்-பில்லிங்க்ஸ்
    • பதவி, பிபிசி செய்திகள்

அல்ஜீரியாவில் சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன ஒரு நபர் அவரது பக்கத்து வீட்டு நிலவறையில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

உமர் பின் ஓம்ரான் என்ற அந்த நபர் 1990களில் அல்ஜீரிய உள்நாட்டுப் போரின்போது அந்நாட்டிலுள்ள ஜெல்ஃபாவில் (Djelfa) இருந்து காணாமல் போனார். அப்போது அவர் தனது பதின்வயதுகளின் முடிவில் இருந்தார்.

தற்போது, 45 வயதான பின் ஓம்ரான், அவர் வளர்ந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அவரை அடைத்து வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 61 வயது நபர் ஒருவரைக் கைது செய்திருப்பதாக அல்ஜீரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

ஆட்டுத்தொழுவத்தில் இருந்த நபர்

அல்ஜீரிய அரசாங்கத்திற்கும் இஸ்லாமிய குழுக்களுக்கும் இடையில் 10 ஆண்டுகள் நீடித்த மோதலின் மத்தியில் உமர் பின் ஓம்ரான் காணாமல் போனார்.

இந்த உள்நாட்டு மோதலின்போது கொல்லப்பட்ட 2 லட்சம் பேரிலோ, கடத்தப்பட்ட 20,000 பேரிலோ அவரும் இருந்திருக்கலாம் என அவரது குடும்பத்தினர் அஞ்சினார்கள்.

ஆனால் அவர் கடந்த மே 12ஆம் தேதி வைக்கோல்போர்களுக்கு அடியிலிருந்த ஒரு நிலவறை ஆட்டுத் தொழுவத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டார் என்று செய்தியறிக்கைகள் தெரிவிக்கின்றன.

'பின் ஓம்ரான் என்று தன்னைக் கூறிக்கொண்ட ஓர் அடையாளம் தெரியாத நபர் தனது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரின் வீட்டில், ஒரு ஆட்டுத் தொழுவத்தில் இருந்ததாக' அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு ஒரு புகார் வந்ததாக நீதிமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த நீதிமன்ற அதிகாரி மேலும் கூறுகையில், "இந்த அறிக்கையைத் தொடர்ந்து, இதை ஆழமாக விசாரிக்க தேசிய பாதுகாப்புப் படையினருக்கு அரசு வழக்கறிஞர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்றனர்," என்றார்.

"மே 12ஆம் தேதி உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு, அதிகாரிகள். பாதிக்கப்பட்ட, 45 வயதான உமர் பின் ஓம்ரானை, 61 வயதாகும் அவரது பக்கத்து வீட்டுக்காரரான பிஏ 'BA', என்பவரது வீட்டின் நிலவறையில் இருப்பதைக் கண்டுபிடித்தனர்," என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

'குடும்பத்தைப் பார்ப்பேன், ஆனால்...'

அந்தச் சந்தேக நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்றதாகவும், ஆனால் அவர் தடுக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டதாகவும் நீதிமன்ற அதிகாரி தெரிவித்தார்.

இந்த வழக்கில் இன்னும் விசாரணை நடந்து வருவதாகவும், உமர் பின் ஓம்ராமனுக்கு மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சைகள் அளிக்கப்படும் பணி நடைபெறு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்தக் குற்றத்தை 'கொடூரமானது' என்று விவரித்தார்.

தன்னை மீடவர்களிடம், பின் ஓம்ரான் சில நேரங்களில் தனது சிறையில் இருந்து தனது குடும்பத்தினரைப் பார்த்ததாகக் கூறினார். ஆனால் 'தன்னைச் சிறைப்பிடித்தவர் தன்மீது செலுத்திய மந்திரத்தின் காரணமாக' அவரால் உதவிக்குரல் கொடுக்க முடியவில்லை என்று அவர் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உமர் பின் ஓம்ரானின் தாயார் 2013இல் இறந்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)