You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இனி ஐஃபோனிலும் சாதாரண சார்ஜர்தான் - புதிய மாடல்கள் வெளியீடு
புதிய ஐஃபோனில் தனது பிரத்யேக சார்ஜருக்கு பதிலாக பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தப்படும் டைப்-சி சார்ஜரையே பயன்படுத்துவதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி செய்திருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தரவின் காரணமாக இந்த முடிவை ஆப்பிள் நிறுவனம் எடுத்திருக்கிறது.
செவ்வாய்க்கிழமை நடந்த அதன் வருடாந்திர நிகழ்வில்” iPhone 15, USB-C கேபிளை பயன்படுத்தும்” ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இந்த நிகழ்வின்போது மேம்பட்ட சிப் கொண்ட புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் வெளியிடப்பட்டது.
புதிய ஐஃபோன் 15 அடுத்த வாரம் விற்பனைக்கு வர இருக்கிறது. 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு மாற்று சார்ஜிங் போர்ட்டைக் கொண்ட முதல் ஐபோன் இதுவாக இருக்கும்.
iPad Pro மற்றும் Mac மடிக்கணினிகள் ஏற்கெனவே USB-C வகை சார்ஜரை பயன்படுத்தி வருகின்றன. ஐபோன்கள் மட்டுமே பிரத்யேகமான சார்ஜரை பயன்படுத்தி வந்தன.
ஐஃபோன்கள் மட்டுமல்லாமல் அதன் AirPods Pro போன்ற இயர்போன்கள் EarPods ஹெட்ஃபோன்களின் புதிய பதிப்புகளிலும் சி வகை சார்ஜர் வேலை செய்யும் என்று ஆப்பிள் கூறியுள்ளது.
நுகர்வோர்களுக்கு எளிதாக இருப்பதற்காகவும் பணத்தை மிச்சப்படுத்தவும், சார்ஜர்களை மீண்டும் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் மின்-கழிவைக் குறைக்கவும் பிரத்யேக சார்ஜிங் போர்ட்களை கைவிடுமாறு ஆப்பிள் நிறுவனத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது.
இருப்பினும், இந்த நடவடிக்கை அடுத்த ஆண்டுகளில் ஐபோன் சார்ஜர் கேபிள்களின் குப்பை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று சிலர் எச்சரிக்கின்றனர்.
புதிய ஆப்பிள் சாதனங்களில் சுற்றுச்சூழல் உறுதிமொழிகளை ஆப்பிள் நிறுவனம் வழங்கி இருக்கிறது. உதாரணமாக புதிய ஆப்பிள் வாட்சில் முதல் முறையாக கார்பன் நடுநிலை உத்தரவாதத்தை அளித்திருக்கிறது.
இது பேட்டரிகள், வாட்ச் மற்றும் ஐபோன்களில் மறுசுழற்சி செய்யப்படும் பொருள்களை பயன்படுத்துவதையும் ஆப்பிள் ஊக்குவித்திருக்கிறது.
பாகங்கள் எதிலும் தோலைப் பயன்படுத்த மாட்டோம் என்பதையும் ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தியது. 2030 க்குள் கார்பன் நடுநிலை என்ற இலக்கை ஆப்பிள் எட்டும் என்றும் உறுதியளித்திருக்கிறது.
புதிய ஐபோனில் என்ன சிறப்பு?
ஐபோன் 15 மற்றும் 15 பிளஸ் ஆகியவற்றில் பிரகாசமான திரைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் உயர்நிலை ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகியவை இப்போது டைட்டானியம் சட்டத்துடன் வருகின்றன.
ப்ரோ மற்றும் மேக்ஸ் ஆகியவை ம்யூட் பொத்தானுக்கு பதிலாக "செயல் பொத்தான்" ஒன்றைக் கொண்டுள்ளன. அவை பல்வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
புதிய ஆப்பிள் வாட்ச் சைகைக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும். உதாரணமாக அணிந்திருக்கும் அதே கையில் இரண்டு விரல்களை ஒன்றாகத் தட்டினால், அழைப்பிற்கு பதிலளிக்கவோ, உரையாடலை முடிக்கவோமுடிக்க முடியும்.
ஆனால் இதற்கு முந்தைய ஐஃபோன் மற்றும் வாட்ச்களை விட பெரிய அளவில் மேம்பாடு இல்லாத சாதனங்களுக்கு அதிக விலையைக் கொடுக்க நுகர்வோர் தயாராக இருப்பார்களா என்று கேள்வியை நிபுணர்கள் எழுப்புகிறார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்