You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெங்கு நோய் குழந்தைகளை அதிகம் தாக்குவது ஏன்? பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
சென்னை மதுரவாயில் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் அய்யனார் மற்றும் சோனியா தம்பதியின் நான்கு வயது மகன் டெங்கு நோயால் பலியாகியுள்ளான்.
காய்ச்சல் ஏற்பட்டது முதலே மருத்துவர்களை அணுகிய போதும் சிறுவனின் மரணத்தைத் தவிர்க்க முடியவில்லை. டெங்கு நோய்க்குக் காரணமான டெங்கு எனப்படும் வைரஸை தாக்கும் நேரடி மருந்துகள் கிடையாது.
உடலில் நீர்ச் சத்தை சீராக வைத்துக் கொள்வதே டெங்குவின் முக்கியமான சிகிச்சை வழி. இது கேட்பதற்கு எளிதாகத் தோன்றினாலும், அலட்சியமாக எடுத்துக் கொண்டால், மரணத்தில் முடியும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
டெங்கு மரணங்களைத் தவிர்க்க பெற்றோர்கள் கண்டிப்பாகச் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவற்றை மருத்துவர்கள் பட்டியலிடுகின்றனர்.
சென்னையில் நான்கு வயது சிறுவன் பலி
மதுரவாயில் பகுதியில் வசித்து வந்த சிறுவன் ரக்ஷனுக்கு, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளான்.
காய்ச்சல் குறையாததன் காரணமாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் கடந்த 6ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளான்.
அங்கு சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் கடந்த சனிக்கிழமை இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்து விட்டான். ஓடி விளையாடி, பள்ளிக்குச் சென்று வந்த சிறுவன், திடீரென உயிரிழந்தது பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அப்பகுதியில் திங்கள்கிழமை பார்வையிட்டு, கொசு உற்பத்தியாகும் தண்ணீர் தேங்கிய பகுதிகளை அகற்ற உத்தரவிட்டார்.
சிறுவனின் தாய் சோனியா, “ஐஸ் கிரீம் சாப்பிட்டு சளி ஏற்பட்டதால் கடந்த வாரம் சனிக்கிழமை அருகில் உள்ள மருத்துவரிடம் குழந்தையை கூட்டி சென்றேன். அவர் சளி மற்றும் ஜூரத்துக்கு மருந்துகள் கொடுத்தார்.
ஆனால் சளி, ஜூரம் குறையாததால், திங்கள்கிழமை மீண்டும் அந்த மருத்துவரை நேரில் சென்று பார்த்து, அவர் கொடுத்த மருந்துகள் எதுவும் வேலை செய்யவில்லை என்று கூறினோம். சளி குறையும்போது ஜூரமும் போய்விடும் என அவர் கூறினார்.
ஆனால் அவர் மீது நம்பிக்கை இல்லாமல் செவ்வாய்க்கிழமை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு என் குழந்தையைக் கூட்டிச் சென்றேன். அங்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் டெங்கு தீவிரமாக தாக்கியுள்ளதாக மருத்துவர்கள் கூறினர். என் மகன் என் கண் முன்னே இறப்பதை நான் காணும் அவலம் நேரிட்டது,” என்று வேதனையுடன் கூறினார்.
இதுகுறித்துப் பேசிய சென்னை எழுப்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் ரமா சந்திரமோகன், “சிறுவன் மருத்துவமனைக்கு வரும்போதே காய்ச்சல் மற்றும் வாந்தி இருந்ததாக" கூறினார்.
"உடலில் நீர்ச் சத்தை சீர்படுத்த எவ்வளவு முயன்றும் பலனளிக்கவில்லை. அதன் பிறகு சிறுவனுக்கு டெங்கு ஷாக் சின்ட்ரோம் ஏற்பட்டது. அலோபதி, இந்திய மருத்துவம் என அனைத்து விதமான சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்து விட்டான்."
சிறுவனின் பெற்றோர்கள் முதலில் தனியார் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டுப் பின்னரே எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
“டெங்கு நோயில் முதல் மூன்று நாட்கள் காய்ச்சல் மட்டுமே இருக்கும். அப்போது எந்த காய்ச்சல் என்று தெரியாது. அதன் பிறகு வாந்தி ஏற்பட்டாலோ, சிறுநீர் சரியாக கழிக்கவில்லை என்றாலோ அதுவே ஆபத்துக்கான அறிகுறி. அப்போதுதான் டெங்குவுக்கான சிகிச்சையை யாராக இருந்தாலும் தொடங்க முடியும்,” என்று ரமா சந்திரமோகன் தெரிவித்தார்.
எட்டு மாதங்களில் 253 பேருக்கு பாதிப்பு
உலகமெங்கும் ஒவ்வோர் ஆண்டும் 100 முதல் 400 மில்லியன் பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. ஆனால் மிக அரிதாகவே மரணங்கள் ஏற்படுகின்றன என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகள், மேற்கு பசிபிக் பகுதிகள் போன்ற வெப்ப மண்டல, துணை வெப்ப மண்டல நாடுகளிலேயே டெங்கு நோய் அதிகமாகக் காணப்படுகிறது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் 10ஆம் தேதி வரை 253 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செவ்வாய்கிழமை தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள்
சென்னையில், உயிரிழந்த சிறுவனின் பெற்றோர், பொதுவாக எந்த ஒரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு காய்ச்சல் என்றால், அவர்கள் செய்யும் அனைத்தும் முயற்சிகளையும் செய்துள்ளனர்.
எனினும் சிறுவனின் மரணத்தைத் தவிர்க்க முடியவில்லை. டெங்குவால் அதிகம் பாதிக்கப்படுவதும், இறப்பதும் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரே.
‘ஒரு வயதுக்கு கீழான குழந்தைகள் மற்றும் 10 வயதுக்கு மேலான சிறார்களுக்கே டெங்கு தீவிரமாக பாதிக்கப்படும். குழந்தைகளின் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே இதற்கு காரணமாக இருக்கலாம்” என குழந்தைகள் நல மருத்துவர் கண்ணன் தெரிவிக்கிறார்.
இந்நிலையில், தங்கள் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டால், பெற்றோர்கள் செய்ய வேண்டிய, செய்யக்கூடாத விஷயங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டோம்.
காய்ச்சல், உடல் வலிதான் டெங்குவின் முதல் அறிகுறிகள். தற்போது வைரஸ் காய்ச்சலும் பரவி வருவதால் இதைப் பிரித்தறிந்து தெரிந்து கொள்வது அவசியம். குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால், அது டெங்குவாக இருப்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறிய முடியும். பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்களை மூத்த தொற்றுநோய் மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன் தெரிவிக்கிறார்.
- வீட்டில் யாருக்கும் காய்ச்சல் இல்லாமல் குழந்தைக்கு மட்டுமே காய்ச்சல் இருப்பது (வைரஸ் காய்ச்சல் ஒரே நேரத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு பரவக் கூடியது)
- சளி, இருமல், தும்மல் என வேறு எந்த அறிகுறிகளும் இல்லாமல் காய்ச்சல் மட்டுமே இருப்பது
இவை தவிர, சில குழந்தைகளுக்கு உடலில் தடிப்புகள் தோன்றலாம். 48 மணிநேரத்தில் காய்ச்சல் குறையவில்லை என்றால் உடனடியாக ரத்த பரிசோதனை செய்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
பெற்றோர்கள் செய்யக்கூடாதது
குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் உடல்வலி ஏற்படும்போது பாராசிடாமல் கொடுப்பது வழக்கம். ஆனால் அதனுடன் சேர்த்து ibuprofen, aspirin போன்ற வலி நிவாரணிகள் எதையும் கொடுக்கக் கூடாது என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
“வலிநிவாரணிகள் கொடுப்பது டெங்கு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் ஆபத்தாக முடியும். இந்த வலி நிவாரணிகள் உடலில் தட்டணுக்கள் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.
எனவே எந்த காய்ச்சல் எனத் தெரியாதபோது, வலி நிவாரணிகளை கொடுக்கக் கூடாது,” என குழந்தைகள் நல மருத்துவர் கண்ணன் அறிவுறுத்துகிறார்.
பெற்றோர்கள் செய்ய வேண்டியவை
பெற்றோர்கள் செய்ய வேண்டிய ஒரே முக்கியமான விஷயம் நீர்ச் சத்து குறையாமல் பார்த்துக் கொள்வதுதான். வைரஸால் ஏற்படும் டெங்கு நோய்க்கு அந்த வைரஸை தாக்கும் நேரடி மருந்து கிடையாது.
உடலில் நீர்ச் சத்து சீராக இருந்தாலே டெங்கு மரணங்களைத் தவிர்க்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
“காய்ச்சலின் போது, குழந்தைகள் திட ஆகாரம் சாப்பிடாவிட்டால் பெற்றோர்கள் கவலையே பட வேண்டாம். அவர்களுக்கு இளநீர், பால், பழச்சாறு, கஞ்சி, தண்ணீர் என ஏதாவது ஒரு வகையில், நீர் சத்து உடலில் சேர வேண்டும்.
குழந்தைகளுக்கு பொதுவாகவே பெரியவர்களைவிட அதிக நீர் தேவைப்படும். காய்ச்சல் நேரத்தில் மேலும் அதிகமாக நீர் தேவைப்படும். திட ஆகாரம் கொடுத்து வயிற்றை நிரப்பி நீர் சத்து குறைவாகிவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்,” என எச்சரிக்கிறார் மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன்.
காய்ச்சல் குறைந்த பிறகே கவனம் தேவை
டெங்கு நோய் ஏற்பட்டால், முதல் மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு காய்ச்சல் இருக்கும். அதன் பிறகு காய்ச்சல் குறையும். காய்ச்சல் குறைந்த பிறகு தீவிர டெங்கு பாதிப்பின் அறிகுறிகள் தோன்றும்.
“வாந்தி, தீவிர வயிற்று வலி, உடல் சோர்வு, ஈறுகளில் ரத்தம் கசிதல் ஆகிய அறிகுறிகளை அபாய எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்,” என்று குழந்தைகள் நல மருத்துவர் கண்ணன் தெரிவிக்கிறார்.
உரிய சிகிச்சை வழங்காவிட்டால், ‘டெங்கு ஷாக் சிண்ட்ரோம்’ ஏற்படும். அதாவது மெல்லிய ரத்த நாளங்களிலிருந்து திரவம் உடலில் வெளியேறும். அதன் காரணமாக மூளை, இதயம் என அனைத்து உறுப்புகளும் ஒவ்வொன்றாகச் செயலிழக்கும்.
டெங்கு கொசுவை எப்படி தவிர்க்கலாம்?
டெங்கு கொசு நல்ல நீரில்தான் உருவாகும். எனவே குடிநீர் தொட்டிகள், மழை நீர் தேங்கும் இடங்கள் ஆகியவற்றை உடனே சுத்தம் செய்வது அவசியமாகிறது.
டெங்குவை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் கடிக்கக்கூடியவை. அதன் கால்களில் வெள்ளை மற்றும் கருப்பு நிற கோடுகள் இருக்கும்.
இந்த கொசுக்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, ஓடோமாஸ் போன்ற கொசுக் கடியை தடுக்கும் க்ரீம்களை தடவிக் கொள்வது மிகவும் உதவிகரமாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
“குழந்தைகளின் உடம்பில், கை மற்றும் கால் முட்டிகள், கழுத்துக்கு பின்னால் இவற்றை தடவிக் கொண்டாலே போதும்,” என்கிறார் சுப்ரமணியம் சுவாமிநாதன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்