நீங்கள் 30 வயதை கடந்தவரா? இந்த மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்வது நல்லது

    • எழுதியவர், மயங்க் பகவத்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஒரு பிரச்னை வந்தி பிறகு அதனை சமாளிப்பதை விட அந்த பிரச்னை நடக்காமல் தடுப்பதே சிறப்பானது என்று நாம் கேள்வி பட்டிருப்போம். உண்மையிலேயே அதனை நாம் பின்பற்றுகிறோமா? நம் உடல் மீது உண்மையாகவே அக்கறை காட்டுகிறோமா?

தற்போதெல்லாம், 30 வயதிலேயே குடும்ப பாரத்தை தோளில் தூக்கி சுமக்கும் பொறுப்புகள் கூடிப்போகின்றன. அதனுடன் வேலை பளுவும் சேர்ந்துகொள்கிறது. குடும்பத்தினருடனும் நேரத்தை செலவழிக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய கடும் நெருக்கடிக்கு மத்தியில் நமது உடல் குறித்து கவலைப்பட நமக்கு நேரமே இருப்பது இல்லை.

ஆனாலும், 30 வயதை எட்டிவிட்டீர்கள் என்றாலே உங்களின் உடல் மீது நீங்கள் அக்கறை செலுத்திதான் ஆக வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

உடல் மீது கவனம் செலுத்துவதன் மூலம், வயதாவதாலும் நமது வாழ்க்கை முறை மாற்றத்தாலும் ஏற்படக்கூடிய நோயை தடுக்க முடியும்.

நிபுணர்களின் கூற்றுப்படி, இதய நோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் புற்றுநோய் போன்ற வாழ்க்கை முறை நோய்கள் முப்பது வயதுகளில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் உள்ளன. உணவுப் பழக்கத்தில் ஏற்படும் மாற்றங்களாலும், உடலைப் புறக்கணிப்பதாலும், இதுபோன்ற நோய்களை வரவழைத்து வருகிறோம்.

முன்பெல்லாம் ஐம்பது வயதுகளில்தான் மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால் இப்போது முப்பதுகளிலேயே வரும் மாரடைப்பு இளைஞர்களை நிலைகுலையச் செய்கிறது.

நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளுக்கு ஓடுவதை விட, தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்துவது நல்லது, சரியான நேரத்தில், சரியான நோயறிதலினால், நோயை தடுக்கலாம்.இதற்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என, பொது மருத்துவர் சன்வேதா சாமேல் தெரிவித்தார்.

என்னென்ன பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்?

சிறப்புப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, மருத்துவ பரிசோதனை என நோய் கண்டறியும் சோதனைகள் குறித்து மருத்துவர் சன்வேதா நம்மிடம் விளக்கினார்.

ரத்த அழுத்தம் (பிபி) சோதனை: மருத்துவரிடம் செல்லும்போது முதலில் செய்ய வேண்டியது உங்கள் ரத்த அழுத்தத்தை பரிசோதிப்பதுதான். 120-80 என்ற அளவில் பிபி இருப்பது சாதாரணமானது. உயர் ரத்த அழுத்தம் இதய நோய் அபாயத்தின் அறிகுறியாகும். எனவே, ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்.

வீட்டிலேயே டிஜிட்டல் ரத்த அழுத்த மானிட்டர் வைத்திருப்பது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ரத்த பரிசோதனை: இது குறித்து நீங்கள் பலமுறை கேட்டிருக்கலாம். சிபிசி(CBC) செய்ய வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். CBC என்பது முழுமையான ரத்த அணுக்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. இது மிகவும் பொதுவான சோதனை. இது ரத்தத்தில் உள்ள செல்கள் பற்றிய முழுமையான விவரங்களைத் தருகிறது.

இந்த சோதனை ரத்த சோகை, தொற்று மற்றும் சில வகையான புற்றுநோய்கள் உள்ளனவா என்பதை வெளிப்படுத்தும்.

இந்தியாவில் பெண்களிடையே ரத்த சோகை மிகவும் அதிகமாக உள்ளது. ரத்த சோகை ரத்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் சதவீதத்தைக் குறைக்கிறது. இதன் காரணமாக, உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜன் சரியாக கிடைப்பதில்லை.

எனவே, இந்த பரிசோதனையை வருடத்திற்கு ஒரு முறையாவது செய்து கொள்ளுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ரத்த சர்க்கரை சோதனை (ரத்தத்தில் நீரிழிவு நிலை): இது சர்க்கரை சோதனை என்று அழைக்கப்படுகிறது. இந்த சோதனைக்கு 12 மணி நேரத்திற்கு முன் உணவு அல்லது பானங்கள் எதுவும் எடுக்கக்கூடாது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு 99க்கு குறைவாக இருந்தால் அது சாதாரணமாகக் கருதப்படுகிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 100 முதல் 125 வரை இருந்தால், அது நீரிழிவு நோய்க்கு முந்தையதாகக் கருதப்படுகிறது. 126க்கு மேல் இருந்தால் அது சர்க்கரை நோய் என கண்டறியப்படுகிறது.

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், HbA1c பரிசோதனை செய்ய வேண்டும். இது பொதுவாக கடந்த 3 மாதங்களில் உங்களது ரத்த சர்க்கரையின் சராசரி அளவைக் காட்டும்.

லிப்பிட் ப்ரொஃபைல் (Lipid profile): உடல்நலப் பரிசோதனைகளில் இது ஒரு முக்கியமான சோதனை.

உங்கள் இதயம் எப்படி வேலை செய்கிறது? உள்ளிட்ட முழுமையான தகவல்களை இந்த சோதனை மூலம் அறியலாம். இது சீரம் ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சரிபார்க்கிறது.

ஹெச்டிஎல் (High Density Lipoprotein) கொலஸ்ட்ரால் உடலுக்கு மிகவும் நல்லது. அதிக HDL அளவு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் குறைவு. இது குறைந்தபட்சம் 60க்கு மேல் இருக்க வேண்டும்.

எல்டிஎல் (Low Density Lipoprotein) கொலஸ்ட்ரால் கெட்ட கொலஸ்ட்ரால் ஆகும். இது உங்கள் தமனிகளில் பிளேக் கட்டி இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். இதன் அளவு 130க்கு குறைவாக இருக்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். உடல் பருமன், நீரிழிவு போன்ற நோய்கள் உள்ளவர்கள் வருடத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் நல்லது.

இசிஜி (ECG) : இதயத் துடிப்பில் ஏற்ற இறக்கம் இருந்தால் மருத்துவர்கள் இந்தப் பரிசோதனையை பரிந்துரைக்கின்றனர்.

இதயம் சரியாக வேலை செய்கிறதா என்பதை இசிஜி சோதனை மூலம் அறிந்துகொள்ளலாம்.

கல்லீரல் செயல்பாடு சோதனை: கல்லீரல் சரியாக செயல்படுகிறதா? அல்லது கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதா என்பனவற்றை கல்லீரல் செயல்பாடு சோதனை மூலம் இது கண்டறியலாம்

இந்த சோதனையின் மூலம் ஹெபடைடிஸ்-பி, ஹெபடைடிஸ்-சி, கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) போன்றவை உள்ளனவா என்பதை அறிந்துகொள்ளலாம்.

பிஎம்ஐ (BMI-Body Mass Index) சோதனை: மருத்துவ ரீதியாக இது உடல் பருமன் என்று அழைக்கப்படுகிறது. தவறான வாழ்க்கை முறையால் ஏற்படுகிறது. இந்தியாவில் உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். மேலும், உடல் பருமன் இதய நோய், நீரிழிவு , புற்றுநோய் போன்றவைக்கும் வழிவகுக்கிறது.

ஒரு நபர் எவ்வளவு எடை இருக்க வேண்டும் என்பது அவர்களின் உயரத்தைப் பொறுத்து அளவிடப்படுகிறது. பாடி மாஸ் இண்டெக்ஸ் (பிஎம்ஐ) சோதனை உங்கள் உடலில் எவ்வளவு கொழுப்பு உள்ளது என்பதைக் காட்டுகிறது. பிஎம்ஐ அதிகமாக இருந்தால் உடல் நலத்திற்கு கேடு என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சிறுநீர் பரிசோதனை: தற்போதெல்லாம் பலரும் குறைந்த அளவே தண்ணீரை குடித்து வருகின்றனர். பயணத்தின் போது பொது கழிப்பறைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற சூழல்கள் சிறுநீர் தொற்றுக்கு வழிவகுக்கும். எனவே, சிறுநீர் தொற்று உள்ளதா என்பதை அறிய சிறுநீர் பரிசோதனையைப் மேற்கொள்ளலாம்.

சிகரெட் புகைப்பவர்களுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சிறுநீரில் ரத்தம் கலந்துவருவது சிறுநீர்ப்பை புற்றுநோயின் அறிகுறிகளில் ஒன்றாகும். சிறுநீரில் உள்ள புரதம், சர்க்கரை மற்றும் ரத்த அளவுகளை இச்சோதனை மூலம் அறிந்துகொள்ளலாம்.

சிறுநீரக செயல்பாடு பரிசோதனை: நமது உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை அறிந்துகொள்ள சீரம் கிரியேட்டின் சோதனை செய்யப்படுகிறது. சீரம் கிரியேட்டின் அளவு அதிகமாக இருந்தால் சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.

தைராய்டு பரிசோதனை: முப்பது முதல் நாற்பது வயதுக்குள் பெரும்பாலானவர்களுக்கு தைராய்டு நோய் வருவதுண்டு. இதனால் ஒன்று உடல் எடை அதிகமாக அதிகரித்துவிடுகிறது இல்லையென்றால் அதிகமாக குறைந்து விடுகிறது. எனவே, தைராய்டு பரிசோதனை மூலம் இதனை அறிந்துகொள்வது அவசியம். ரத்த பரிசோதனை மூலம் தைராய்டு குறித்து அறிந்துகொள்ளலாம்.

ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வைட்டமின் டி சோதனை: இப்போதெல்லாம் யாரும் வெளியில் செல்வதே இல்லை. அதனால் உடலுக்கு தேவையான அளவு வைட்டமின் டி கிடைக்காமல் போகிறது. இதன் காரணமாக வயது ஏற ஏற எலும்புகள் வலுவிழக்கின்றன.

பெரும்பாலானவர்களுக்கு 30 மற்றும் 40 வயதுகளில் மூட்டுவலி வரத் தொடங்குகிறது. எலும்புகள் உடையக்கூடியவையாக வலுவிழப்பது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே எலும்பு வலிமைக்கு வைட்டமின் டி அவசியம்.

வைட்டமின் டி குறைபாடு உள்ள பெண்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர் பிரதிமா தம்கே கூறுகிறார்.

பேப் ஸ்மியர் டெஸ்ட்: இது கர்ப்பப்பை வாய் பரிசோதனை ஆகும். பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்க்குப் பிறகு கருப்பை புற்றுநோய்க்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

கருப்பையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அது புற்றுநோயாக மாறுவதற்கு முன்பே இந்த சோதனை மூலம் கண்டறிய முடியும். 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த சோதனைகளை செய்துகொள்ள வேண்டும் . ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சுயமாக மார்பகப் பரிசோதனை மேற்கொள்ளுதல்: மார்பகங்களில் புற்றுநோயைக் கண்டறிய மருத்துவர்கள் இந்தப் பரிசோதனையை பரிந்துரைக்கின்றனர்.

“பெண்கள் வீட்டிலேயே மார்பகங்களை பரிசோதிக்கலாம். மார்பகங்களில் கட்டிகள் உள்ளதா? காம்புகளில் பிரச்சனையா? தோல் நிறத்தில் மாற்றம் உள்ளதா? என்பனவற்றை இந்த சோதனையில் கண்டறிய முடியும்” என மகளிர் மருத்துவ நிபுணர் தோம்மே கூறினார்.

மாதவிடாய் பிரச்சனைகள்: மாதவிடாயின் போது ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் அல்லது வலி தாங்க முடியாததாக இருந்தால், பெண்கள் இது தொடர்பாக அவசியம் பரிசோதிக்க வேண்டும். தேவைப்பட்டால் சோனோகிராஃபி பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: