மாதவிடாய் ரத்தத்தை கட்டாயப்படுத்தி எடுத்து விற்றதாக மாமனார், மாமியார் மீது பெண் புகார்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மான்சி தேஷ்பாண்டே
- பதவி, புனேவில் இருந்து பிபிசி மாராத்திக்காக
தனது மாதவிடாய் ரத்தத்தை விற்குமாறு மாமனார் உள்ளிட்ட கணவன் வீட்டார் கட்டாயப்படுத்தியதாக பெண் ஒருவர் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள விஷ்ராந்த்வாடி காவல் நிலையத்தில் 28 வயது பெண் ஒருவர் அளித்த புகாரின் மூலம் இப்படி ஒரு குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.
தனது கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக அப்பெண் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார். தனது மாதவிடாய் ரத்தத்தை விற்க சொல்லி மாமியாரும், மாமனாரும் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டாயப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாதவிடாய் ரத்தத்தை கொடுக்க மறுத்தபோது, வலுக்கட்டாயமாக அதை எடுத்துக் கொண்டதாக சம்பந்தப்பட்ட பெண்ணின் சார்பாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பீட் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக புனேவில் உள்ள விஷ்ராந்த்வாடி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் மார்ச் 7ஆம் தேதி அளித்த புகாரின்பேரில் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விஷ்ராந்த்வாடி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் தத்தாத்ரே பாப்கர் கூறுகையில், "புகார் அளித்துள்ள பெண்ணுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. பின்னர் அந்த தம்பதி சந்தன்நகர் மற்றும் ஃபுர்சுங்கியில் வசித்து வந்தனர்.
கடந்த 2021ஆம் ஆண்டே தனது மாமியார், மாமனாரால் குடும்ப வன்முறைக்கு உள்ளானதாக அப்பெண் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவரது புகார் விசாரணையில் இருந்தபோது, அவரது மாமியார் மற்றும் கணவர் விளக்கமளித்து வழக்கை வாபஸ் பெறச் செய்தனர். பின்னர் அப்பெண்ணை கணவரின் சொந்த ஊருக்கு அழைத்து சென்றுவிட்டனர்" என்றார்.
'மாதவிடாய் ரத்தம்' தொடர்பான இந்தச் சம்பவம் புகாரளித்த பெண்ணுடைய கணவரின், சகோதரர் வேலை செய்யும் இடத்தில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை
2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கணபதி பண்டிகையின் போது தனது கணவரின் சகோதரர் வீட்டில் அப்பெண் தங்கியிருந்தார். அப்போது, அவரின் 'மாதவிடாய் ரத்தம்' தேவைப்படுவதாக கணவரின் சகோதரர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், உங்கள் மனைவியிடம் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
அப்போது, குழந்தை இல்லாத பெண்ணின் 'மாதவிடாய் ரத்தம்' தான் தேவைப்படுகிறது. இதனை ஒருவரிடம் கொடுத்தால் தனக்கு 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று கணவரின் சகோதரர் கூறியுள்ளார். எனினும், இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தனது விருப்பத்தை மீறி மாதவிடாய் ரத்தத்தை அவர்கள் எடுத்து சென்றுவிட்டனர் என்று அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், குடும்ப துன்புறுத்தல், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆய்வாளர் தத்தாத்ரே பாப்கர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்று புனே போலீசார் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தை மாநில மகளிர் ஆணையம் உற்று நோக்கி வருவதாக அதன் தலைவர் ரூபாலி சகாங்கர் கூறியுள்ளார்.
“சர்வதேச மகளிர் தினம் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களைப் பார்க்கும்போது, பெண்கள் மீதான அநீதிக்கும், அடக்குமுறைக்கும் எதிராக இன்னும் எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என வியப்பு ஏற்படுகிறது. இந்த வழக்கின் போக்கை ஆணையம் கவனிக்கும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்தில் நிகழாமல் தடுக்க, மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம் மற்றும் சமூக அமைப்புகளின் உதவியுடன் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று ரூபாலி சகாங்கர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Empics
மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம்
இந்த விவகாரம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சட்டப்பேரவை கூட்டத்தில் தெரிவித்தார்.
மூடநம்பிக்கை, அகோரி தொடர்பான நிகழ்வுகளைத் தடுக்க மாந்திரீக எதிர்ப்புச் சட்டத்தை திறம்பட அமல்படுத்துவது அவசியம் என்று மூடநம்பிக்கை ஒழிப்புக் குழு அறிவுறுத்தியுள்ளது.
“மூடநம்பிக்கைக்கு எதிரான சட்டங்களை திறம்பட அமல்படுத்துவது அவசியம். இந்த சட்டத்திற்கான விதிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களும் அவர்களுக்கு துணையாக வரும் சமூக அமைப்புகளும் இதுபோன்ற வழக்குகளை காவல் நிலையத்தில் புகார் செய்யும்போது பிரச்சனை எதிர்கொள்கின்றனர். அதன் பின்னரே வழக்கு பதிவு செய்யப்படுகிறது."
“காவல்துறைக்கு சட்டம் புரியவில்லை. இதுபோன்ற சம்பவங்களில், ஒடுக்கப்பட்ட பெண்கள் சமூக அமைப்புகளின் உதவியை நாட வேண்டியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களின் பின்னணி என்ன என்பதை காவல்துறை புரிந்து கொள்ளவில்லை. காவலர்களுக்கு பயிற்சி அவசியம்" என்று மூடநம்பிக்கை ஒழிப்புக் குழுவின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், இது தொடர்பான மாநில துறையின் அலுவலகப் பொறுப்பாளருமான நந்தினி ஜாதவ் கூறினார்.
“இந்தச் சட்டம் இன்னும் பத்து ஆண்டுகளில் முழுமையடையும். நாங்கள் எப்போதும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இதில் அரசு நிர்வாகத்திற்கு மிக முக்கிய பங்கு உள்ளது. அதன் விதிமுறைகள் அவசியம். இப்போது ஒரு குழு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குழுவின் வழியாக பணியாற்ற அதில் உள்ள ஆட்கள் கேட்டுகொள்ளப்படுவதில்லை. அதனால் இதற்கு கிடைக்கும் நிதி என்னவாகும்? எந்த சட்டத்திற்கான டாக்டர் நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டாரோ, அந்தச் சட்டத்தின் விதிகளை உருவாக்க முடியாமல் போனதை விட துரதிர்ஷ்டம் வேறு என்ன இருக்க முடியும்? என்று நந்தினி கேள்வி எழுப்புகிறார்.
அகோரி பூஜைக்காகவே அப்பெண்ணிடம் அவரது கணவரின் குடும்பத்தினர் மாதவிடாய் ரத்தத்தை விற்பனை செய்யக் கோரி கட்டாயப்படுத்தியுள்ளனர் என்பது புகார் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து நந்தினி கூறுகையில், `குடும்ப வன்முறை மட்டுமின்றி மாந்திரீகம், மூட நம்பிக்கைகள் ஆகியவையும் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து வருகிறது` என்றார்.
“குடும்ப வன்முறையுடன் சேர்த்து இது போன்ற சம்பவங்களும் இப்போது அதிக எண்ணிக்கையில் நிகழ்கின்றன. சில படித்த பெண்கள் கூட மூட நம்பிக்கைகளுக்கு இரையாகிறார்கள் என்பது தெரியவருகின்றன. பெண் ஒருவர் பிற பெண்களிடம் அகோரி பூஜையில் ஈடுபட்டதாக புகார் ஒன்று வெளிவந்தது. பெண்களே பெண்களிடம் இப்படி நடந்துகொண்டால் சமூகம் எப்படி முன்னேறும்? என்று நந்தினி கேள்வி எழுப்புகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












