குலுக்கலில் பரிசு விழுந்திருப்பதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி - அர்ச்சகரை ஏமாற்றிய மூவர் கைது

சைபர் கிரைம்

பட மூலாதாரம், Getty Images

கோவில்பட்டி அருகே குலுக்கல் முறையில் பைக், கார் பரிசு என ஆசை காட்டி கோவில் அர்ச்சகரிடம் 14 லட்ச ரூபாய் மோசடி செய்த கும்பலில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் ராமசுந்தரம் (40) என்பவர் கோவில்பட்டியில் உள்ள 4 கோவில்களில் அர்ச்சகராக இருந்து வருகிறார். அவர் துபாயிலும் பணிபுரிந்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு இலுப்பையூரனி பகுதிக்கு ஆம்னி வேனில் வந்த நபர்கள் குலுக்கல் முறையில் பரிசு என்று கூறி விளம்பரம் செய்துள்ளனர்.

அப்போது அவர்கள் கொடுத்த பேப்பரை ராமசுந்தரம் வாங்கிச் சுரண்டியபோது அவருக்குப் பரிசு கிடைத்துள்ளது. நீங்கள் எங்களிடம் 5,000 ரூபாய்க்கு மெத்தை, தலையணை, ஃபேன் வாங்கினால் குலுக்கல் முறையில் உங்களுக்குப் பரிசு விழும் என்று கூறியதால் ராமசுந்தரமும் கேட்ட பணத்தைக் கொடுத்து பொருள்களை வாங்கியுள்ளார். மேலும் செல்ஃபோன் எண்ணையும் கொடுத்துள்ளார்.

இதையெடுத்து சில நாட்கள் கழித்து சூர்யா ஹோம் அப்ளையன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம் என்று ராமசுந்தரத்தை கைபேசியில் தொடர்பு கொண்ட அந்த கும்பல் குலுக்கலில் பைக் பரிசு விழுந்துள்ளதாகக் கூறியுள்ளனர். மேலும், அவற்றுக்கு முன்பணம், வருமானவரி போன்றவற்றைச் செலுத்த வேண்டியுள்ளது எனப் பல்வேறு காரணங்களைக் கூறி 14,500 ரூபாய் பணம் கேட்டுள்ளனர். ராமசுந்தரமும் அவர்கள் கொடுத்த வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியுள்ளார்.

“அதன் பின்னர் உங்களுக்கு கார் தர எங்கள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 5 லட்சம் ரூபாய் செலுத்தினால் கார் உங்கள் வீட்டிற்கு வந்துவிடும்” என்று தெரிவித்துள்ளனர். இதை நம்பி ராமசுந்தரம் 5 லட்ச ரூபாய் பணத்தை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.

இதன்பின்னர் சில தினங்கள் கழித்து மீண்டும் தொடர்புகொண்ட அந்த கும்பல் “உங்களுக்கு பரிசுப் பொருட்கள் தயாராகிவிட்டன. ஆனால் நிறுவனம் உங்களுக்கு 2 கார்களைத் தர முடிவு செய்துள்ளது,” என்று கூறியதோடு மேலும் 5 லட்சம் தரும்படி கேட்டுள்ளனர்.

சற்று தயக்கம் காட்டிய ராமசுந்தரம் ஒரு கார் போதும் என்று தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் 2 கார்தான் தரமுடியும், ஒரு கார் என்றால் முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

பணம் கிடைக்காது என்று மிரட்டல்

இதையெடுத்து ராமசுந்தரம் தனது பெற்றோர் மற்றும் அமெரிக்காவில் உள்ள தனது சகோதரரிடம் பணத்தைப் பெற்று அனுப்பி வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல், கார்களை கொண்டு வருவதற்கு ஆகும் செலவு எனக் கூறி தொடர்ந்து ராமசுந்தரத்திடம் பணத்தைப் பெற்றுள்ளனர்.

ராமசுந்தரம் பண தர மறுத்தால், ஒட்டு மொத்த பணமும் கிடைக்காது என்று அவர்கள் மிரட்டியதால் வேறு வழியின்றி கொடுத்துள்ளார். இப்படியாக 14,28,660 ரூபாயைப் பறிகொடுத்த நிலையில் திடீரென அந்த கும்பலை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றதும் தான் ஏமாற்றப்பட்டது அவருக்குத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ராமசுந்தரம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் புகாரை எடுக்க மறுக்கவே கடந்த ஆண்டு சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் தொழில் நுட்பரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக தூத்துக்குடி கோரம்பள்ளம் சவேரியார்புரத்தை சேர்ந்த முத்துகுமார் என்பவரை, சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வைத்து கைது செய்து அவரது ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருடன் மோசடியில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்டம் புல்லலங்கோட்டை பகுதியைச் சேர்ந்த முனிரத்னம் என்பவரை அவரது வீட்டில் வைத்தும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டியன் என்பவரை சங்கரன்கோவிலில் வைத்தும் கைது செய்தனர்.

கைது

மேலும் அவர்களிடமிருந்த 13 செல்போன்கள், 2 லேப்டாப், ஒரு டேப், ஒரு ஹார்ட் டிஸ்க், 5 டெபிட் கார்டுகள், ரொக்கமாக 20,000 ரூபாய் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து தூத்துக்குடி அழைத்து வந்தனர். அங்கு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் கைதான முத்துகுமார் ஏற்கெனவே தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் ஒரு மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டு இருந்ததால் அந்த வழக்கிலும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு குறித்து சைபர் குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வழக்கில் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்து மூவரை கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.

தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம்

இந்த வழக்கு குறித்து தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், அர்ச்சகர் ஏமாற்றப்பட்ட சம்பவத்தில், கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவரான முத்துக்குமார் டெல்லி வரை நட்பை ஏற்படுத்திக்கொண்டு சைபர் கிரைமில் ஈடுபட்டு வருபவர்.

இவர் பொதுமக்களிடம் குலுக்கலில் பரிசுகள் விழுந்திருப்பதாக கூறி அவர்களிடமிருந்து தொலைபேசி எண், ஆதார், வங்கி எண் உள்ளிட்டவைகளை பெற்று அந்த எண்களை வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து சைபர் குற்ற செயல்களில் ஈடுபட கூடிய நபர்களிடம் கொடுப்பதும் ஏமாற்றி பறிக்கும் பணத்தை கமிஷனாக பெற்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கை பொறுத்தவரை அர்ச்சகர் இழந்த பணத்தை உடனடியாக மீட்டு கொடுத்துள்ளோம். பொதுமக்கள் தேவையில்லாமல் தங்களது தகவல்கள், புகைப்படம் மற்றும் செல்போன் எண் உள்ளிட்டவைகளை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

அதேபோல் யாராவது நண்பர்கள் பெயரிலோ அல்லது குலுக்கல் மூலம் பரிசு தொகை கிடைத்துள்ளது என கூறி தங்களது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புமாறு குறுஞ்செய்தி அனுப்பினால், அந்த வங்கி கணக்கு குறித்து வங்கிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்யவேண்டும்.

முடிந்தவரை பணம் அனுப்புவதை தவிர்த்துக் கொண்டால் இவ்வாறான சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்’ என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: