புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்ட பிறகு பழைய நாடாளுமன்றம் என்னவாகும்?

பட மூலாதாரம், CENTRALVISTA.GOV.IN
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோதி மே 28ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
இந்த விழாவை காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க உள்ளன.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோதிக்குப் பதிலாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ திறந்துவைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை சுற்றியுள்ள அரசியலைத் தாண்டி வேறு சில கேள்விகளுக்கான விடைகள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் தேடப்படுகின்றன.
புதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கும்? ஏன் தற்போது புதிய நாடாளுமன்றம் தேவை? பழைய கட்டடம் என்னவாகும்?
புதிய நாடாளுமன்றத்திற்கு தற்போது தேவை என்ன?
செண்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த மொத்த திட்டத்திற்கும் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
ராஜ்பத்திற்கு அருகேயுள்ள பகுதி சென்ட்ரல் விஸ்டா என அழைக்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம், நார்த் பிளாக், சவுத் பிளாக், துணை ஜனாதிபதி இல்லம் ஆகியவையும் சென்ட்ரல் விஸ்டாவின் கீழ் வருகின்றன.
தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. இந்த நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் அமர போதிய இடமில்லை என மத்திய அரசு கூறுகிறது.
இடப்பற்றாக்குறை - தற்போது, லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 545.
2026ஆம் ஆண்டுவரை இந்த எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது. அதன் பிறகு இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அப்போது புதிய எம்.பி.க்களுக்கு போதிய இடம் இருக்காது.
உட்கட்டமைப்பு - சுதந்திரத்திற்கு முன் பாராளுமன்ற கட்டடம் கட்டப்பட்டபோது, பாதாள சாக்கடை, குளிரூட்டும் வசதி, தீ பாதுகாப்பு, சிசிடிவி, ஆடியோ வீடியோ ஆகியவை கவனத்தில் எடுக்கப்படவில்லை என அரசு கூறுகிறது.
தற்போது மாறிவரும் காலத்திற்கு ஏற்ப நாடாளுமன்ற வளாகத்தில் அவை சேர்க்கப்பட்டாலும், கட்டடத்தில் ஈரப்பதம் போன்ற பிரச்னைகளால் தீ விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு - சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்ட போது, நில அதிர்வு மண்டலம்-2இல் டெல்லி இருந்தது. ஆனால் தற்போது நான்காம் நிலையை டெல்லி எட்டியுள்ளது.
புதிய நாடாளுமன்றக் கட்டடம் எப்படி மாறுபட்டது?

பட மூலாதாரம், CENTRALVISTA.GOV.IN
புதிய நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவை கட்டடம் தேசிய பறவையான மயில் என்ற கருப்பொருளிலும், மாநிலங்களவை தேசிய மலரான தாமரை என்ற கருப்பொருளிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பழைய மக்களவையில் அதிகபட்சமாக 552 பேர் மட்டுமே அமர முடியும் என்ற நிலையில், புதிய அவையில் 888 இருக்கைகள் உள்ளன.
பழைய மாநிலங்களவை கட்டடத்தில் 250 உறுப்பினர்கள் மட்டுமே அமர முடியும் நிலையில், புதிய அவையில் 384 பேர் அமர முடியும்.
நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வின் போது 1272 பேர் அமரும் வகையில் புதிய கட்டடம் உள்ளது.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் வேறு என்ன சிறப்பு?
'காகிதமில்லா அலுவலகங்கள்' என்ற இலக்கை நோக்கி நகரும் வகையில், நவீன டிஜிட்டல் வசதிகளுடன் புதிய கட்டடத்தில் அனைத்து எம்.பி.க்களுக்கும் தனி அலுவலகம் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய கட்டடத்தில் இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை சித்தரிக்கும் வகையில் பிரமாண்ட அரசியலமைப்பு மண்டபம் இருக்கும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அசல் அங்கு வைக்கப்படும்.
எம்.பி.க்கள் அமர பெரிய அறை, நூலகம், சாப்பாட்டு அறைகள் மற்றும் அதிகப்படியான பார்க்கிங் வசதிகள் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும்.
இந்த முழு திட்டத்தின் கட்டுமானப் பகுதி 64,500 சதுர மீட்டர். புதிய நாடாளுமன்றத்தின் பரப்பளவு தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்தை விட 17,000 சதுர மீட்டர் அதிகம்.
பழைய நாடாளுமன்றம் என்னவாகும்?

பட மூலாதாரம், Getty Images
பழைய நாடாளுமன்றக் கட்டடம் பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் 'கவுன்சில் ஹவுஸ்' என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டது. இதை உருவாக்க ஆறு ஆண்டுகள் (1921-1927) ஆனது. அக்காலத்தில் ஆங்கிலேய அரசின் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் இந்தக் கட்டடத்தில் செயல்பட்டுவந்தது.
பழைய நாடாளுமன்றக் கட்டடம் 83 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட நிலையில், புதிய கட்டிடம் சுமார் 862 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்ற போது கவுன்சில் ஹவுஸ் நாடாளுமன்ற கட்டடமாக மாற்றப்பட்டது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, பழைய நாடாளுமன்றக் கட்டிடம் நாடாளுமன்ற நிகழ்வுகளுக்கு தொடர்ந்து பயன்படுத்தப்படும்.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை யார் கட்டியது?
புதிய கட்டடத்தை கட்டும் ஒப்பந்தத்தை டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் பெற்றது. 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் ரூ. 861.90 கோடிக்கு இந்த ஒப்பந்தத்தை அவர்கள் ஏலம் எடுத்திருந்தனர்.
புதிய நாடாளுமன்ற கட்டடம் மத்திய விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த திட்டத்தின் வரைபடத்தை குஜராத்தை சேர்ந்த கட்டடக்கலை நிறுவனமான ஹெச்.சி.பி. டிசைன்ஸ் உருவாக்கியது.
இதற்காக கடந்த ஆண்டு செப்டம்பரில் சிபிடபிள்யூடி மூலம் டெண்டர் கோரப்பட்டது. இதற்கான செலவினம் ரூ.229.75 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், ஹெச்.சி.பி. டிசைன்ஸ் இந்த ஏலத்தை வென்றது.
இதற்கு முன் குஜராத்தின் காந்திநகரில் உள்ள மாநில செயலகம், அகமதாபாத் சபர்மதி நதி முகப்பு மேம்பாடு, மும்பை துறைமுக வளாகம், வாரணாசியில் மந்திர் வளாக மறுவடிவமைப்பு, ஐஐஎம் அகமதாபாத்தின் புதிய வளாக மேம்பாடு போன்ற திட்டங்களில் ஹெச்.சி.பி. டிசைன்ஸ் பணியாற்றியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












