அணுஆயுதப் போட்டி: பனிப்போரின் உச்சக்கட்டத்தில் நிலவில் அணுகுண்டு வெடிக்க அமெரிக்கா திட்டமிட்டதா?

நிலாவில் அணுகுண்டு வெடிக்கும் முடிவை அமெரிக்கா எடுத்ததா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மார்க் பியெசிங்
    • பதவி, பிபிசி ஃப்யூச்சர்

1950-களில் விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்திய ரஷ்யாவுக்கு ஒரு அச்சத்தை உருவாக்கும் முயற்சியாக அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு வினோதமான திட்டத்தை தீட்டினர். ஆனால் அணு குண்டு வெடித்து அந்த நிலவின் நிலப்பரப்பை கதிரியக்கம் மிக்க ஆபத்தான நிலப்பரப்பாக மாற்றியிருந்தால் அது எப்படியிருக்கும்?

நிலவுக்கு மேற்கொள்ளப்படும் பயணங்கள் குறித்த ஆய்வறிக்கை, தொகுப்பு 1 என்ற அந்த புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் அது ஒரு சாதாரண அறிவியல் ஆராய்ச்சி குறித்த தகவல்களை வெளிப்படுத்தும் விதத்திலேயே இருக்கிறது. அந்த புத்தகத்தை சாதாரணமாக நாம் புறந்தள்ளிவிட முடியும். அது தான் அந்தத் தலைப்பின் நோக்கமும் கூட.

இருப்பினும் அந்த ஆய்வுக் கட்டுரையின் முன் அட்டையைப் பார்த்தால் கொஞ்சம் வித்தியாசம் தெரிகிறது.

அட்டையின் மையத்தில் ஒரு கேடயத்தின் படம். அதற்குள் அணு, அணுகுண்டு, காளான் போல் கிளம்பும் பெருமேகம்- அணு ஆயுதங்களை தயாரிப்பதில் முக்கிய பங்காற்றிய, நியூமெக்சிகோவின் கிர்ட்லாண்ட் விமானப் படை தளத்தில் உள்ள விமானப் படையின் சிறப்பு ஆயுதப் பிரிவின் சின்னம் என அந்த அட்டை அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கீழே பார்த்தால் அந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளரின் பெயர்: எல். ரீஃபெல். இவர் அமெரிக்காவின் அதிக முக்கியமான அணு ஆராய்ச்சி விஞ்ஞானி. உலகின் முதல் அணு உலையை உருவாக்கிய என்ரிகோ ஃபெர்மியுடன் இணைந்து பணியாற்றியவர்.

நிலவின் நிலப்பரப்பில் ஹைட்ரஜன் குண்டை வெடிக்கும் அந்த ரகசிய நடவடிக்கையின் பெயர் Project A119. ஹைட்ரஜன் குண்டுகள், 1945-ம் ஆண்டு ஹிரோஷிமாவின் மீது வீசப்பட்ட அணுகுண்டை விட நவீனமான ஆயுதங்களாகவும், சக்திவாய்ந்தவையாகவும், பேரழிவை ஏற்படுத்தக்கூடியவையாகவும் இருந்தன. நிலவில் அணுகுண்டை வெடிக்கச் செய்யும் ஆய்வறிக்கையை விரைவாக தயாரித்துமுடிக்க மூத்த அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் 1958 மே மாதம் மற்றும் 1959 ஜனவரி மாதத்துக்குள் அத்திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஏராளமான அறிக்கைகளை எல். ரீஃபெல் தயாரித்திருந்தார்.

ஏவுகணைகளைத் தயாரிப்பதில் ரஷ்யா வேகமாக முன்னேறி வந்ததாக அமெரிக்கா கவலை கொண்டிருந்தது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, Project A119

எதிர்காலத்தில் மிகப்பெரிய வானியல் அறிஞராக அறியப்பட்ட கார்ல் சேகன் மூலம் தான் இந்த திட்டம் இருந்த விவரம் 1990களில் வெளியில் தெரிந்தது. ஒரு மிகப்பெரிய பல்கலைக்கழகத்துக்கு அவர் அளித்திருந்த விண்ணப்பத்தில் இத்திட்டம் குறித்து அப்போது குறிப்பிட்டிருந்தார்.

நிலவைப் பற்றிய சில அடிப்படையான கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் அத்திட்டம் உதவியிருக்கலாம் என கருதப்படும் நிலையில், Project A119-வின் அடிப்படை நோக்கமே அதிகாரத்தையும், பலத்தையும் வெளிப்படுத்துதல் தான். ஒரு அணுகுண்டு உத்தேசமாக நிர்ணயிக்கப்பட்ட ஒரு இடத்தில்- அதாவது நிலவின் மேற்பரப்பில் இருளும், ஒளியும் சந்திக்கும் ஒரு இடத்தில் வெடித்து ஒரு மிகப்பெரிய வெளிச்சத்தை உருவாக்கி, அந்த வெளிச்சத்தை ரஷ்ய அதிபர் மாளிகையிலிருந்து வெறும் கண்களால் பார்க்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. அங்கு வளிமண்டலம் இல்லாமல் இருக்கும் என்பதால் காளான் போன்ற தோற்றத்தில் பெரும் புகை உருவாகும் வாய்ப்பில்லை.

பாதுகாப்பற்ற அல்லது நம்பிக்கையற்ற நிலையில் அமெரிக்கா இருந்ததால் தான் இப்படி ஒரு பயங்கர திட்டத்தைச் செயல்படுத்தும் எண்ணம் தோன்றியிருக்கவேண்டும் என்பதே ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கமாக இருக்க முடியும்.

1950களில், ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் நிலவிய பனிப்போரில் அமெரிக்கா வெற்றி பெறும் என எந்த ஒரு நம்பிக்கையும் இருந்ததாகத் தெரியவில்லை. அரசியல் ரீதியான மற்றும் பொது கருத்துக்களின் படி, அமெரிக்காவை விட அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை ரஷ்யா அதிகம் வைத்திருந்ததாகவே அனைவரும் புரிந்துவைத்திருந்தனர்.

1952-ல், அமெரிக்கா தனது முதல் ஹைட்ரஜன் குண்டு வெடிப்பை நடத்தியது. மூன்றாண்டுகளுக்குப் பின் ரஷ்யாவும் அது போல் ஒரு ஹைட்ரஜன் குண்டுவெடிப்பை நிகழ்த்தி அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை அளித்தது. 1957-ல் அதைவிட ஒருபடி முன்னேறி ஸ்புட்னிக் 1 என்ற முதல் செயற்கைக் கோளை புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிறுத்தி ரஷ்யா பெரும் வியப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், ஒரு செயற்கை நிலவை விண்வெளிக்கு அனுப்ப அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியின் போது, அது வெடித்துச் சிதறி ஒரு மோசமான தோல்வியை அளித்தது. இந்நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஒரு ஏவுகணையின் மூலம் புவியின் சுற்றுவட்ட பாதைக்கு அனுப்பிவைக்கப்பட்ட ரஷ்யாவின் ஸ்புட்னிக் என்ற செயற்கைக் கோள், அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் இருந்தது என்பதே உண்மை. இதற்கிடையே, அமெரிக்காவின் செயற்கை நிலவு வெடித்துச் சிதறிய போது பற்றி எரிந்த தீ, அந்நாட்டுக்கு ஒரு மோசமான பெயரை ஈட்டித்தந்தது. உலகம் முழுவதும் அந்த தீ எரிந்தது தொடர்பான காட்சிகள் பரவின. அதிலும், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு ஊடகம், கௌரவம் மற்றும் விளம்பரத்துக்காக அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி பெரும் தோல்வியைச் சந்தித்ததாக விமர்சித்தது.

1957-ல் ஸ்புட்னிக் என்ற செயற்கைக் கோளை ரஷ்யா விண்வெளிக்கு ஏவியது அமெரிக்காவிடம் ஒரு திகைப்பை ஏற்படுத்தியிருந்தது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, Project A 119

அதே நேரம், அணு ஆயுத தாக்குதல் நடந்தால் எப்படி தப்புவது என்பது குறித்து பாடம் எடுப்பதற்காகவே தயாரித்து வெளியிடப்பட்ட Duck and Cover என்ற அனிமேசன் திரைப்படம் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இந்த படத்தில் பெர்ட் என்ற ஆமை, அணு ஆயுத தாக்குதல் நடந்தால் உடனடியாக என்ன செய்வது என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கியது.

அதே ஆண்டில் சில மாதங்கள் கழித்து, ஒரு மூத்த புலனாய்வு அதிகாரியை மேற்கோள் காட்டி, நவம்பர் புரட்சி நினைவு தினமான நவம்பர் 7-ம் தேதியன்று ரஷ்யா ஹைட்ரஜன் குண்டு ஒன்றை நிலவில் வெடிக்கச் செய்யவிருப்பதாக தி டெய்லி டைம்ஸ், நியூ ஃபிலடெல்பியா, ஒஹையோ போன்ற நாளேடுகள் தெரிவித்தன. மேலும், அமெரிக்காவுக்கு மிக அருகில் உள்ள நாட்டில் இருந்து ராக்கெட் மூலம் அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா ஏற்கெனவே திட்டமிட்டிருந்ததாகவும் அந்த ஏடுகள் தெரிவித்தன.

பனிப்போர் நடைபெற்ற போது பரவிய ஏராளமான வதந்திகளைப் போலவே, இந்த தகவல்களும் எங்கிருந்து வெளியாகின என்பதைக் கண்டுபிடிக்கமுடியாத நிலையே இருந்தது.

அதே நேரம் இது போன்ற வதந்திகள் தான் ரஷ்யா தனது திட்டத்தை மேம்படுத்த ஊக்குவித்தன. இருப்பினும் E4 என பெயரிடப்பட்ட ரஷ்யாவின் திட்டத்தை நிறைவேற்றும் போது ஒரு வேளை தோல்வி ஏற்பட்டு அந்த குண்டு ரஷ்ய மண்ணுக்கே கேடு விளைவிக்குமோ என்ற அச்சத்தில் E4 திட்டத்தை ரஷ்யா கைவிட்டது. "உலக அளவில் விரும்பத்தகாத விளைவை" தவிர்க்கவே அத்திட்டத்தைக் கைவிட்டதாக ரஷ்யா அறிவித்தது.

நிலவில் இது போன்ற திட்டத்தை நிறைவேற்றுவது செலவு மிகுந்தது என அவர்கள் உணர்ந்திருக்கலாம்.

ஆனால் Project A119 திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கலாம்.

2000-வது ஆண்டில் வெளிப்படையாக இத்திட்டம் குறித்து எல். ரீஃபெல் பேசினார். தொழில்நுட்ப ரீதியில் அந்த திட்டம் சாத்தியமானது தான் என அறிவித்த அவர், அது போன்ற ஒரு குண்டுவெடிப்பை நிலவின் மேற்பரப்பில் நடத்தியிருந்தால் அது பூமியில் இருந்த அனைவரின் கண்களுக்கும் தெரிந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.

விஞ்ஞானிகளிடம் பயம் தென்பட்டாலும், அந்த தொடக்க முயற்சி அமெரிக்க விமானப் படைக்கு அந்த அளவு கவலையை ஏற்படுத்தவில்லை.

"ஸ்புட்னிக் செயற்கைக் கோளுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டிருந்த பிரச்சாரத்தின் ஒரு அங்கமாகவே Project A119 இருந்தது," என அறிவியல் மற்றும் அணு ஆராய்ச்சி வரலாற்று அறிஞரான அலெக்ஸ் வெல்லெர்ஸ்டீன் தெரிவிக்கிறார். ஸ்புட்னிக் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்துவது போன்ற வெறுப்பேற்றும் கதைகளும் அவற்றில் அடங்கும். இது போன்ற பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டால் தான் மக்களுக்குப் புரியும் என அமெரிக்கர்கள் நினைத்திருந்தனர்.

"இதன் இறுதியாக அவர்கள் செய்தது என்னவென்றால், அவர்களும் தனியாக ஒரு செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவினர். குறைந்தது 1950களின் இறுதியில் இந்த திட்டத்தில் அவர்கள் வெற்றிகண்டிருந்தனர்.

அணுகுண்டு

பட மூலாதாரம், Getty Images

"அமெரிக்காவின் எண்ணத்தில் இது ஒரு ஆச்சரியமூட்டும் முன்னேற்றமாகவே பார்க்கப்பட்டது. மேலும், அனைவரும் ஏற்கத்தக்க ஒரு விண்வெளி மற்றும் அணு ஆய்வுப் போட்டியில் அமெரிக்கா இறங்கவும் வழிவகைகளை ஏற்படுத்தியது. இதில் திகிலும், ஆர்வமும் ஒன்றுடன் ஒன்று நெருங்கியிருந்தது."

"அணு ஆயுத விஞ்ஞானிகள் அமெரிக்காவால் கடுமையாக நிர்பந்திக்கப்பட்டதால் தான் இத்திட்டத்தில் இணைந்தனரா என்பதை அவரால் சரியாகத் தீர்மானிக்க முடியவில்லை. இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்ட அனைவரும் ஏதாவது ஒரு வகையில் தங்களது ஆர்வத்தினால் தான் இணைந்தனர்," என்கிறார் அவர். "இந்த வேலையை அவர்கள் செய்வதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இதில் அவர்கள் பயந்திருந்தால், வேறு ஏராளமான பணிகளை அவர்கள் மேற்கொண்டிருக்க முடியும். அப்போது பெரும்பாலான விஞ்ஞானிகள் பனிப்போர் தொடர்பான ஏதாவது ஒரு வேலையைச் செய்துகொண்டிருந்தனர். இயற்பியலும் அரசியலாக்கப்பட்டு விட்டதாக அவர்கள் கூறினர்."

1957-ல் விண்வெளிக்கு ஒரு செயற்கைக் கோளை அனுப்ப அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி ராக்கெட் வெடித்ததால் தோல்வியைச் சந்தித்தது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, Project A 119

"இது போன்ற ஆய்வுகள் மிகவும் முக்கியமானவை. ஆனால் அவர்கள் அந்த பணியிலிருந்து விலகிய பின் அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்கு உதவிகளும் அளிக்கப்படவில்லை. 1950களின் இறுதி மற்றும் 60களின் தொடக்கத்தில் விண்வெளி ஆய்வு எங்கு பயணித்துக்கொண்டு இருந்தது என்பது தெரியாத நிலையில், அது குறித்த ஒரு பைத்தியகாரத்தமான ஈர்ப்பு காணப்பட்டது," என்கிறார் அவர்.

"ஆனால் நிலவு குறித்த இது போன்ற பைத்தியகாரத்தனமான நடவடிக்கைகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டால் உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச ஒழுக்கத்திற்கு கேடு விளைவிக்கும் செயலாகவே இருக்கும்."

உலக நாடுகளின் ஒப்புதல் இல்லாமல் மீண்டும் இது போன்ற திட்டங்கள் உருவாகுமா? "அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் தகவல்கள், விண்வெளியில் ஒரு ராணுவப் படையை உருவாக்குவது அமெரிக்காவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகவே இருப்பதை உறுதிப்படுத்துகின்றன," என விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளின் உறவுகள் குறித்து ஆய்வு செய்யும் போவென் கூறுகிறார்.

அமெரிக்காவிடம் இது போன்ற வழக்கொழிந்த யோசனைகள் இல்லை என்பதாலேயே அவற்றை மீண்டும் தொடர மாட்டார்கள் என ஏற்பதற்கில்லை. சீனாவைப் போல் அவர்கள் மாறினாலும் மாறக்கூடும். ”சீன அரசு இது போல் நிலவை இலக்காகக் கொண்டு ஏதாவது ராணுவ ரீதியிலான திட்டங்களைச் செயல்படுத்தினால் அது எனக்கு ஆச்சரியமளிக்காது," என்கிறார் போவென்.

Project A119 குறித்து பெரும்பாலான விவரங்கள் இன்னும் மறைக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. அவற்றில் ஏராளமான விவரங்கள் அழிக்கப்பட்டு விட்டன.

எனவே, அந்த ஆய்வு புத்தகத்தை ஒருமுறையாவது படித்துப் பார்க்காமல், அது ஒரு சாதாரண ஆய்வறிக்கை தான் என புறந்தள்ளிவிட முடியாது என்பதே நமக்கு கடைசியில் கிடைக்கும் தகவலாக இருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: