You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அக்னிவீர் சர்ச்சை: பணியில் இறந்த வீரரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டதா? குடும்பத்தினரும் ராணுவமும் கூறுவது என்ன?
- எழுதியவர், குர்மிந்தர் கிரேவால்
- பதவி, பிபிசி செய்தியாளர்
பஞ்சாப் மாநிலம், லூதியானாவுக்கு அருகில் உள்ள ராம்கர் சர்தாரன் கிராமத்தைச் சேர்ந்தவர் பக்ஷோ தேவி. பக்ஷோ தேவியின் சகோதரர் அஜய்குமார் அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். ஜனவரி 2024இல், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்ணிவெடி வெடித்ததில் இறந்து போனார் அஜய்குமார்.
இந்திய ராணுவத்தின் இணையதளத்தின்படி, அக்னிவீர் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு இந்திய ராணுவத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்படுகிறார்கள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களில் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே நிரந்தர பணி வழங்கப்படும்.
அக்னிவீர் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களின் ஆண்டுச் சம்பளம் ரூபாய் 4.76 லட்சத்தில் இருந்து தொடங்கி, சேவை முடிவடையும் வரை ஆண்டுக்கு ரூபாய் 6.92 லட்சம் வரை வழங்கப்படும். பணியிலிருந்து ஓய்வு பெறும்போது ரூபாய் 11.71 லட்சம் வழங்கப்படுகிறது. பணியில் இருக்கும் காலத்தில் அவர்களுக்கு ரூபாய் 48 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது. பணியின் போது இறந்தால் ரூபாய் 44 லட்சம் கூடுதல் மானியமாக வழங்கப்படுகிறது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அக்னிவீர் திட்டத்தை எதிர்க்கின்றன. மக்களவை பொதுத் தேர்தல்களிலும், சபையின் முதல் அமர்விலும் தங்கள் அரசாங்கம் அமைந்தவுடன் அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்படும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் கூறப்பட்டது.
இது இந்திய ராணுவத்தின் திறன்களை மேம்படுத்துவதாக மத்திய அரசாங்கம் விவரித்தாலும், பல பாதுகாப்பு நிபுணர்களும் இந்த திட்டத்தை எதிர்க்கின்றனர்.
கடந்த திங்கட்கிழமை, 18வது மக்களவையின் முதல் அமர்வில் அக்னிவீர் திட்டத்தை கடுமையாக விமர்சித்தார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இது குறித்து அஜய் குமாரின் குடும்பத்தினர் கூறுவது என்ன? அவர்களுக்கு அரசின் நிதியுதவி முறையாக கிடைத்ததா?
அஜய்குமாரின் குடும்பத்தினர் கூறுவது என்ன?
அஜய்குமாரின் தந்தை சரண்ஜித் சிங், ஜனவரி 18 அன்று மாலை தனது மகன் இறந்த செய்தியை அறிந்த தருணத்தை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்.
மகனின் மரணம் அந்த வயதான தந்தைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. "அன்று மாலை ஒரு கண்ணிவெடி வெடித்ததாக எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் மூன்று பேர் காயமடைந்தனர் என்றும், அவர்களில் ஒருவர் உங்கள் மகன் என்றும் கூறினார்கள்" என்கிறார் சரண்ஜித் சிங்.
சரண்ஜித் சிங்கிற்கு ஆறு பிள்ளைகள், அவர்களில் நான்கு பேருக்கு திருமணமாகிவிட்டது. அதில் இளையவர் அஜய்குமார்.
அஜய்குமாரின் மரணத்திற்காக தங்கள் குடும்பம் பெற்ற நிதியுதவி குறித்து சரண்ஜித் சிங் பேசுகையில், பஞ்சாப் அரசிடமிருந்து தனது குடும்பம் ரூபாய் 1 கோடி பெற்றுள்ளதாகவும், இதனுடன் சமீபத்தில் இந்திய ராணுவத்திடம் இருந்து ரூபாய் 48 லட்சம் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் அஜய்குமாரின் குடும்பத்தாருக்கு மத்திய அரசு மீது கோபம் உள்ளது.
''எல்லையில் பணியாற்றச் சென்ற எங்கள் மகன் இறந்ததற்கு, மத்திய அரசு எங்களுக்கு இரங்கல் கடிதம் கூட அனுப்பவில்லை'' என்கிறார்கள்.
அக்னிவீர் யோஜனா திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
“தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்றத்தில் பொய்யான கூற்றை தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூபாய் 48 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளனர்."
“எங்கள் மகன் வீரமரணம் அடைந்த பிறகு அவருக்கான ஓய்வூதிய நிதி மற்றும் எந்த வசதிகளும் வழங்கப்படவில்லை. எங்கள் மகன் இறந்ததற்கு மத்திய அரசு எங்களுக்கு ஆறுதல் கூட கூறவில்லை." என்கிறார் சரண்ஜித் சிங்.
மக்களவையில் எதிரொலித்த அக்னிவீர் சர்ச்சை
கடந்த திங்கள்கிழமை மக்களவையில் பேசிய எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அக்னிவீர் திட்டத்தை கடுமையாக விமர்சித்தார்.
"ஒரு அக்னிவீரர் கண்ணிவெடியால் வீரமரணம் அடைந்தால் நான் அவரை தியாகி என்று சொல்கிறேன். ஆனால் இந்திய அரசும், நரேந்திர மோதியும் அவரைத் தியாகி என்று அழைக்கவில்லை. அவரை ‘அக்னிவீர்’ என்று அழைக்கிறார்கள். அவருக்கு ஓய்வூதியம் கிடைக்காது. அந்த வீட்டிற்கு இழப்பீடு கிடைக்காது. தியாகி அந்தஸ்து கிடைக்காது," என்று அவர் குறிப்பிட்டார்.
"இந்தியாவின் ஒரு ராணுவ வீரருக்கு ஓய்வூதியம் கிடைக்கும். ஆனால் அக்னிவீரரை சிப்பாய் என்று அழைக்க முடியாது. அக்னிவீர் ஒரு ‘யூஸ் அண்ட் த்ரோ’ தொழிலாளி. அவருக்கு ஆறு மாதங்கள் பயிற்சி கொடுத்து, ஐந்து ஆண்டுகள் பயிற்சி பெற்ற சீன வீரர்களுக்கு முன்னால் நிறுத்துகிறீர்கள்,” என்றார் ராகுல் காந்தி.
"ஒரு ராணுவ வீரனுக்கும் மற்றொரு வீரனுக்கும் இடையே பிளவை உருவாக்குகிறீர்கள். ஒருவருக்கு ஓய்வூதியம், தியாகி அந்தஸ்து கிடைக்கிறது. மற்றவருக்கு ஓய்வூதியம், தியாகி அந்தஸ்து கிடைக்காது. பிறகு உங்களை நீங்களே தேசபக்தர் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். இது எந்தவிதமான தேசபக்தி,” என்று அவர் வினவினார்.
“நாட்டின் ராணுவத்துக்கு தெரியும், முழு நாட்டிற்கும் தெரியும், அக்னிவீர் திட்டம் ராணுவத்தின் திட்டம் அல்ல, பிரதமர் அலுவலகத்தின் திட்டம். அந்த திட்டம் பிரதமரின் யோசனை, ராணுவத்தின் யோசனை அல்ல என்பது ஒட்டுமொத்த ராணுவத்துக்கும் தெரியும்,” என்று அவர் குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தியின் பேச்சை இடைமறித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “தவறான கருத்துகளை கூறி சபையை திசை திருப்ப முயற்சிக்கக் கூடாது,” என்றார்.
”போரின் போது அல்லது எல்லைப் பாதுகாப்பு பணியின் போது அக்னிவீரர் மரணமடைந்தால் அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்,” என்றார் அவர்.
செவ்வாய்க்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதியும் ராகுலின் அறிக்கை தவறானது என்று விவரித்தார். இதன் மூலம் ஒரு பொய்யான பிம்பம் உருவாக்கப்படுகிறது என்றார் மோதி.
அஜய்குமார் குடும்பத்தினருடனான ராகுலின் சந்திப்பு
கடந்த மே 29ஆம் தேதி, மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி, மறைந்த அஜய்குமாரின் குடும்பத்தினரை சந்தித்தார். குடும்ப உறுப்பினர்களுடன் பேசிய அவர், அவர்களின் தேவைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.
ராகுல் காந்தி தனது வீட்டிற்கு வந்தபோது, அக்னிவீர் யோஜனா திட்டத்தை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்ததாகவும், தனக்கு ஆறுதல் கூறியதாகவும் சரண்ஜித் சிங் கூறுகிறார்.
தங்கள் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு உள்ளூர் எம்பி அமர்சிங்கிடம் தெரிவித்ததாகவும் சரண்ஜித் சிங் கூறினார்.
"ராஜ்நாத் சிங்கின் கூற்றில் எனக்கு உடன்பாடு இல்லை" என்று சரண்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
ஏனைய ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் போன்ற பலன்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும், அதனை பெற்றுத் தருமாறும் அஜய்குமாரின் குடும்பத்தினர் கோருகின்றனர்.
அஜய் குமாரின் சகோதரி பக்ஷோ தேவி, தனது சகோதரர் வழக்கமான முறையில் தான் ராணுவத்தில் சேர முயன்றதாகவும், ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆவணங்கள் கிடைக்கவில்லை என்றும், அதனால் தான் அவர் அக்னிவீர் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர்ந்தார் என்றும் கூறுகிறார்.
சுமார் 6-7 மாத ராணுவ பயிற்சிக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதம் அஜய் குமார் வீட்டுக்கு வந்ததாகச் சொல்கிறார்கள். இதைத் தொடர்ந்து அவர் செப்டம்பர் மாதம் காஷ்மீரில் பணியமர்த்தப்பட்டார்.
அக்னிவீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இழப்பீடு
இறந்த அக்னிவீர் வீரர்களின் இழப்பீடு தொடர்பாக அரசின் அக்னிபத் யோஜனா திட்டத்தில் என்னென்ன பரிந்துரைகள் உள்ளன என்பதை இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் படிக்கலாம்.
இதன்படி, அக்னிவீர் திட்டத்தில் சேரும் வீரருக்கு அவரது பதவிக்காலம் முடியும் வரை 48 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும்.
அக்னிவீர் திட்டத்தில் சேரும் ராணுவ வீரர்கள் இறந்தால், அவர்களுக்கான இழப்பீடுகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த பிரிவுகளுக்கு (X), (Y), (Z) என்று பெயரிடப்பட்டுள்ளது. ராணுவ சேவையின் போது ஏற்படும் விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் (Y) வகையில் சேரும்.
அத்தகைய சூழ்நிலையில், இறந்த ராணுவ வீரருக்கு 48 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடு, 44 லட்சம் இழப்பீடு, அவரது வேலையின் மீதமுள்ள சம்பளம் மற்றும் பிற நிதி உதவிகள் கிடைக்கின்றன.
அக்டோபர் 2023இல் பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் உள்ள கோட்லி கலான் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான அம்ரித்பால் சிங், அக்னிவீர் திட்டத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக இந்திய ராணுவம் கூறியது. அம்ரித்பாலின் குடும்பத்தினர் தங்கள் மகனுக்கு ராணுவத்தின் இறுதி மரியாதை கிடைக்கவில்லை என்று போராட்டம் நடத்தினர்.
ராணுவம் கூறுவது என்ன?
பணியின் போது உயிரிழந்த அக்னிவீர் அஜய் குமாரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு ராணுவம் பதில் அளித்துள்ளது.
இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், "அக்னிவீர் அஜய் குமாரின் உன்னத தியாகத்திற்கு இந்திய ராணுவம் தலை வணங்குகிறது. முழு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. அக்னிவீர் அஜய் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டிய மொத்தத் தொகையில், 98.39 லட்சம் ரூபாய் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. " என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
''அக்னிவீர் திட்டத்தின் விதிகளின்படி, காவல்துறை சரிபார்த்த பிறகு உடனடியாக 67 லட்சம் ரூபாய் கருணைத்தொகை மற்றும் இதர பலன்கள் இறுதி கணக்கு தீர்வு மூலம் வழங்கப்படும். மொத்த தொகை சுமார் ரூ.1.65 கோடியாக இருக்கும். வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகை உடனடியாக வழங்கப்படுகிறது, அதில் அக்னிவீரர்களும் அடங்குவார்கள்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்னிபத் திட்டம் என்றால் என்ன?
இந்திய அரசின் அக்னிபத் திட்டத்தின் கீழ், அக்னிவீரர்கள் என்ற பெயரில் இந்திய ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணியில் இளைஞர்கள் இணைகின்றனர்.
அவர்களுக்கு இந்த நான்கு வருடங்களில் ராணுவப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களில் 25 சதவீதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்திர பணியில் சேர முடியும். இந்த இளைஞர்களின் வயது 17.5 முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும்.
எனவே, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுவது அவசியம். ஆனால் ஒரு இளைஞர் 10ஆம் வகுப்பு படித்திருந்தால், பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற முயற்சிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
அக்னிவீர் இளைஞர்கள் அரசாங்கத்திடமிருந்து தொடக்கத்தில் ரூபாய் 30,000 சம்பளம் பெறுகிறார்கள்.
பணியின் போது ஒருவர் 100 சதவீதம் மாற்றுத்திறனாளியாக மாறினால், அவருக்கு ரூ.44 லட்சமும், 75 சதவீத மாற்றுத்திறனாளியாக மாறினால் ரூ.25 லட்சமும், 50 சதவீத மாற்றுத்திறனாளியாக மாறினால் ரூ.15 லட்சமும் வழங்கப்படும்.
பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் இளைஞருக்கு அரசிடம் இருந்து ரூ.44 லட்சமும், மீதமுள்ள பணிக்கான ஊதியமும் வழங்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கு பயணத்தின் போது வழங்கப்படும் கொடுப்பனவுகள், ரேஷன்கள், சீருடைகள் மற்றும் கட்டணச் சலுகைகள் என அனைத்து சலுகைகளும் இவர்களுக்கும் வழங்கப்படும்.
ஜூன் 2022இல் மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை அறிவித்த பிறகு, ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தினர். ஜூன் 14ஆம் தேதி இத்திட்டம் அறிவிக்கப்பட்டு, ஜூன் 20ஆம் தேதி பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதற்கிடையில், நாடு தழுவிய பந்த் அறிவிக்கப்பட்டதால், பல இடங்களில் ரயில்களும் நிறுத்தப்பட்டன.
உண்மையில், இந்த திட்டத்தின் விதிகள் மற்றும் அதன் கீழ் வழங்கப்படும் வசதிகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இளைஞர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)