யானைத் தந்தத்தில் பவுடர், காண்டாமிருக கொம்புகளில் கூழ் - கடத்தல்காரர்களின் புதிய உத்திகள்

    • எழுதியவர், நவீன் சிங் கட்கா
    • பதவி, சுற்றுச்சூழல் நிருபர், பிபிசி உலக சேவை

யானையின் தந்தங்கள் பவுடராக மாறுகிறது, காண்டாமிருக கொம்புகள் அரைக்கப்பட்டு கூழாக்கப்படுகிறது, பாம்புகள் உருளைக் கிழங்கு சிப்ஸ் கேன்களில் அடுக்கி வைக்கப்படுகின்றன.

காட்டுயிர் கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் சில கடத்தல் நுட்பங்கள் இவை. இதை அதிகாரிகள் மற்றும் புலனாய்வாளர்கள் வெளியிட்டனர்.

காட்டுயிர்களைக் கடத்துவதற்கான இத்தகைய சட்டவிரோத உத்திகள் இதோடு முடிவதில்லை. உயிருள்ள விலங்குகள் அஞ்சல் அல்லது கூரியர் மூலம் வேறு இடத்திற்கு அனுப்பப்படுகின்றன, மேலும் சோதனை ஸ்கேனர்களில் இருந்து தப்பிப்பதற்காக ஈல்கள் எனப்படும் கண்ணாடி மீன் இனங்கள் உருமறைத்து அனுப்பி வைக்கப்படுகின்றன.

உலகளாவிய சட்டவிரோத காட்டுயிர் வர்த்தகத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்கும்போது, மிகப்பெரிய தடையாக இருப்பது காட்டுயிர் கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் வித்தியாசமான கடத்தல் நுட்பங்கள்தான் என்று பாதுகாவலர்கள் கூறுகின்றனர். குறிப்பாக கடத்தப்படும் பொருட்களை மறைத்து அல்லது வேறு ஒரு சட்டரீதியான பொருளாக மாற்றிக் கடத்துகின்றனர்.

மே மாதம் வெளியிடப்பட்ட காட்டுயிர் குற்றங்கள் குறித்த சமீபத்திய ஐ.நா அறிக்கையின்படி, காட்டுயிர்களைக் கடத்துபவர்கள் புதிய சட்டங்கள் மற்றும் மிகவும் கடுமையான விதிமுறைகளுக்கு ஏற்றவாறு தங்கள் செயல்பாடுகளை மாற்றிக் கொள்கின்றனர்.

சர்வதேச மற்றும் தேசிய மட்டங்களில் இருபது ஆண்டுகளாக ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் இருந்தபோதிலும், காட்டுயிர் கடத்தல் உலகம் முழுவதும் தொடர்கிறது என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆண்டுக்கு 20 பில்லியன் டாலர் மதிப்புக்கு சட்டவிரோத வர்த்தகம் நடப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

"சமீபத்திய காட்டுயிர் கடத்தல்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்ப்பதற்காக அதிநவீன மற்றும் மாறுபட்ட கடத்தல் முறைகளைப் பயன்படுத்துகின்றனர்" என்று ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் உலகளாவிய சட்ட அமலாக்க நிபுணரான ஜிகியாங் தாவோ பிபிசியிடம் கூறினார்.

கடந்த 2022ஆம் ஆண்டில் சுங்கச் சாவடிகளில் 3,428 காட்டுயிர்கள் விலங்கு வர்த்தகத்தின்போது பறிமுதல் செய்யப்பட்டதாக உலக சுங்க அமைப்பு தெரிவித்துள்ளது. இது 2021இல் 3,316 ஆக இருந்தது.

மாட்டின் கொம்புகள் குவியலில் ‘கருப்பு தந்தங்கள்’

கடந்த மார்ச் மாதம், வடகிழக்கு வியட்நாமில் உள்ள ஹை போங் நகரில் உள்ள சுங்க அதிகாரிகள், நைஜீரியாவில் இருந்து வந்த வாகனத்தில் ஒரு வித்தியாசமான பொருளைக் கண்டுபிடித்தனர்.

கன்டெய்னர்கள் முழுவதும் நிரப்பப்பட்டிருந்த மாட்டு கொம்புகளின் குவியலுக்குக் கீழே, கருப்பு தந்தங்கள் போல் ஏதோ இருந்ததைப் பார்த்தனர்.

அவர்கள் கூர்ந்து கவனித்தபோது, ​​அந்தப் பொருள்கள் உண்மையில் கறுப்பு வர்ணம் பூசப்பட்ட தந்தங்கள் என்பதைக் கண்டுபிடித்தனர். அதில் 550 தந்தங்கள் இருந்தன. அவை ஏறக்குறைய 1,600 கிலோ எடை இருந்தது.

சட்டவிரோத காட்டுயிர் வர்த்தகத்தை ஆய்வு செய்யும் வல்லுநர்கள் கருப்பு வர்ணம் பூசப்பட்ட தந்தம், மாட்டின் கொம்புகளுடன் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தது இதுவே முதல் நிகழ்வாக இருக்கலாம் என்றனர்.

இந்த தந்தக் கடத்தல் விவகாரத்தில் நைஜீரியாவின் சுங்க நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் ஒரு சர்வதேச அமைப்பான காட்டுயிர் நீதி ஆணையம், நைஜீரியாவில் தந்தம் ஏற்றுமதி தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறியது.

ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை குறைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று சட்டவிரோத வர்த்தகம். கடந்த 30 ஆண்டுகளில் ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை சுமார் 90% குறைந்துள்ளதால், இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) வெளியிடும் மிகவும் ஆபத்தான நிலையிலுள்ள அழிந்து வரும் உயிரினங்களின் சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

காட்டுயிர்கள் மற்றும் தாவரங்களின் (CITES) அழிந்து வரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் கீழ், அழிந்து வரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ளது. இது அந்த இனங்களின் எண்ணிக்கையை மீட்டெடுக்க அனுமதிக்கும்.

அஞ்சல் மூலம் அனுப்பப்படும் விலங்குகள்

சட்டவிரோத காட்டுயிர் கடத்தலைக் கண்காணிக்கும் அமைப்புகளின்படி, கடத்தல்காரர்கள் அதிகளவில் அஞ்சல் மற்றும் கூரியர் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர்.

உதாரணமாக, டிசம்பர் 2023 மற்றும் ஜனவரி 2024க்கு இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள தபால் நிலையங்களைப் பயன்படுத்திப் பல்வேறு வகையான பல்லிகளைக் கடத்த முயற்சிகள் நடந்தன.

ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சகத்தின் கூற்றுபடி, ஊர்வன உயிரினங்கள் பிளாஸ்டிக் கொள்கலன்களில் கண்டுபிடிக்கப் பட்டதாகவும், காலுறைகளுக்குள் முடிச்சு போடப்பட்டுக் கிடந்ததாகவுவும், பிளாஸ்டிக் பொம்மைகளுடன் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறுகின்றது.

இதுபோன்ற சூழல்களில் "விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் தங்கள் சொந்தக் கழிவுகளோடு அடைத்து வைக்கப்படுகின்றன” என்று அமைச்சகம் ஒரு செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"சில ஊர்வனங்கள் ரப்பர் பொம்மை விலங்குகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டன."

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கடத்தல்காரர், ஏழு தனித்தனி பார்சல்களில் 43 பல்லிகளை (நீல நாக்கு அரணை, சிங்கிள் பேக் அரணை மற்றும் ஈஸ்டர் வாட்டர் டிராகன்கள் உள்ளிட்ட பல்லி வகைகள்) ஹாங்காங்கிற்கு அனுப்ப முயன்றார்.

பல்லி போன்ற சிறிய ஊர்வனங்களை செல்லப் பிராணிகளாக வளர்ப்பதற்கான உலகளாவிய தேவை அதிகரித்து வருவதாக ஆராய்ச்சி சுட்டிக்காட்டியுள்ளது, இதனால் அவை அதிகளவில் கடத்தப்படுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உலகளாவிய அஞ்சல் சேவைகளின் வலையமைப்பான யுனிவர்சல் போஸ்டல் யூனியனின் அஞ்சல் பாதுகாப்புத் திட்ட மேலாளரான டான் வில்க்ஸ் கருத்துப்படி, அஞ்சல் மூலம் கொண்டு செல்லப்படும் காட்டுயிர்கள் பெரும்பாலும் அளவில் சிறியவையாகவும், உயிருள்ள விலங்குகளாகவும் இருக்கின்றன.

"குற்றவாளிகள் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி சட்டவிரோத கடத்தல்களை மறைக்கின்றனர். குழந்தைகளுக்கான பொம்மைகளைப் பயன்படுத்துவது ஒரு வழக்கமான நுட்பம்” என்று வில்க்ஸ் பிபிசியிடம் கூறினார்.

உலக சுங்க அமைப்பின் கூற்றுப்படி, சிறிய அஞ்சல் பார்சல்களுக்குள் தாவரங்கள் மற்றும் விலங்குகளை பேக்கிங் செய்வது 2022இல் அவற்றைக் கடத்துவதற்கான மிகவும் பிரபலமான வழியாக இருந்தது. அந்த ஆண்டில் பிடிபட்ட கடத்தல் சம்பவங்களில் 43% சிறிய அஞ்சல் மூலமாக நடந்தவை.

இந்த அமைப்பின் சட்டவிரோத வர்த்தக அறிக்கை 2022இன் தரவுகளின்படி, 2021 மற்றும் 2022க்கு இடையில் அஞ்சல் பறிமுதல் 17% அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் உருமாற்றி அனுப்பப்படும் பொருட்களின் அளவு 7% அதிகரித்து மொத்தம் 6,453 ஆக உள்ளது.

பிலிம்-ரோல்களில் விஷத் தவளைகள்

தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் பறிமுதல் சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் மட்டுமல்ல, மற்ற இடங்களிலும் அதிநவீன உத்திகளைப் பயன்படுத்தி காட்டுயிர் கடத்தல்காரர்கள் கடத்தல் சம்பவங்களை மேற்கொள்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனவே கடத்தல் அதிகம் நடக்கும் பகுதிகளைத் தாண்டி பிற பகுதிகளிலும் கடத்தம் சம்பவங்கள் அதிகமாக நிகழ்கின்றன.

பொகோடா விமான நிலையத்தில் கொலம்பிய அதிகாரிகளால் ஜனவரி மாதம் ஃபிலிம்-ரோல் கொள்கலன்களில் 130 விஷத் தவளைகள் (dart frogs) மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். டிஜிட்டல் கேமராக்களின் வருகைக்குப் பிறகு ஃபிலிம்-ரோல் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் ஃபிலிம் ரோல்கள் இருந்த கொள்கலன்களை சோதனை நடத்தி தவளைகளைக் கடத்தும் முயற்சியைக் கண்டுபிடித்தனர்.

கொலம்பிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கூற்றுபடி, IUCN அழிந்து வரும் உயிரினங்களுக்கான சிவப்புப் பட்டியலில் இருக்கும் இந்தத் தவளைகள் பிரேசிலுக்கு கொண்டு செல்லப்பட இருந்தன.

"அடைத்து வைக்கப்பட்டிருந்த தவளைகள் ஆபத்தான நிலையில் இருந்தன... அவை முற்றிலும் நீரிழப்பு மற்றும் மன அழுத்தத்துடன் இருந்தன" என்று அதிகாரிகள் ஓஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பொதுவாக டார்ட் தவளைகளை அவற்றின் விஷத்தில் இருந்து மருந்துகளைத் தயாரிக்க முடியுமா என்று ஆய்வு செய்ய பயன்படுத்துகின்றனர், இருப்பினும் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தவளைகள் எதற்காக கடத்தப்பட்டது என்னும் சரியான காரணம் தெளிவாக இல்லை.

சுறா துடுப்புகள் கடத்தல்

தரவுகளின்படி 500க்கும் மேற்பட்ட சுறா வகைகள் உள்ளன. இந்த இனங்கள் பலவற்றின் துடுப்புகளின் (shark fins) சர்வதேச வர்த்தகம் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அழிந்து உயிரினங்கள் பட்டியலில் இருக்கும் சுமார் 60 சுறா வகைகளின் பாகங்களை விற்பதும் வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளன.

இதனால் கடத்தல்காரர்கள் சுலபமாக இயங்குவதாக காட்டுயிர் வர்த்தக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெ அனாப்ரிக்காவில் ஒரு வழக்கு கண்டறியப்பட்டது, சுங்க அதிகாரிகள் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இரண்டு வகையான சுறா துடுப்புகளின் கலவையைக் கண்டுப்பிடித்தனர். சட்டப்பூர்வமாக ஏற்றுமதிக்கு அனுமதி இருக்கும் சுறாக்களின் துடுப்புகள் மற்றும் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்ட சுறா துடுப்புகள் கலவையாக இருந்தன.

"அழிந்து வரும் சுறா இனங்களின் துடுப்புகளை சட்டப்பூர்வமாக வர்த்தகம் செய்யப்படும் இனங்களின் துடுப்புகள் என்று குற்றவாளிகள் வாதிடுவார்கள்" என்று காட்டுயிர் குற்றங்களை ஆராய்ந்து சட்ட அமலாக்க மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் வழங்கும் குழுவான டிராஃபிக் இன்டர்நேஷனலின் நிபுணர் சாரா வின்சென்ட் கூறினார்.

"எனவே, சுறா ரகங்களின் துடுப்புகளை வித்தியாசப்படுத்திப் பார்ப்பது சட்ட அமலாக்கத் துறைக்குத் தெரிந்திருப்பது மிகவும் முக்கியம்."

சுறா துடுப்பு சூப் என்னும் உணவு வகை, உலகின் பல பகுதிகளில் மிகவும் விரும்பப்படும் உணவு. இது பெரும்பாலும் சுறா துடுப்புகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

மேலும், இதுபோன்று கலவை செய்து சுறாக்கள் மட்டுமின்றி, மற்ற பொருள்களையும் கடத்துகின்றனர் என்று ஐரோப்பிய காட்டுயிர் குற்றவியல் புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

"ஐரோப்பாவில் அழிந்து வரும் மரங்கள் (timbers) உள்ளன, ஆனால் கடத்தல்காரர்கள் அவற்றைச் சாதரண மரங்களுடன் கலப்பதில் மிகவும் திறமையானவர்கள். கலப்படம் செய்த பிறகு அவற்றின் வர்த்தகம் அனுமதிக்கப்படுகிறது. அத்தகைய சட்டவிரோத பொருட்கள் ஐரோப்பா முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன" என்று யூரோபோலின் (Europol) முன்னாள் புலனாய்வாளர் ஜார்ஜ் ஜீசஸ் கூறினார்.

ஆர்க்கிட் மலர்களா அல்லது உருளைக் கிழங்கா?

மேற்கு நேபாள மாவட்டமான லாம்ஜங் மாவட்டத்தில் 400 கிலோ உருளைக் கிழங்கைக் கொண்டு சென்றதாகக் கூறப்படும் டிரக்கை டிசம்பர் 23, 2018 அன்று அதிகாரிகள் நிறுத்தினர். அவை முதலில் பார்க்கும்போது, நாட்டின் மத்திய மலைப் பகுதியில் பயிரிடப்படும் உருளைக் கிழங்குகளாகத் தோன்றின.

இருப்பினும், கொஞ்சம் உற்று நோக்கும்போது, அவர்கள் சந்தேகமடைந்தனர் மற்றும் தாவர ஆராய்ச்சியாளர் பக்த ரஸ்கோடியிடம் சந்தேகத்தை உறுதிப்படுத்தினர்.

முனைவர் பட்டம் பெற்ற ஆர்க்கிட் (orchid bulbs) நிபுணரான டாக்டர். ரஸ்கோடி பிபிசியிடம் கூறுகையில், "அது காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் அழிந்து வரும் உயிரினங்களில் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டில் (CITES) பட்டியலிடப்பட்டுள்ள `ஆர்க்கிட்’ மலர் வகை என்பதை நான் அவர்களுக்கு உறுதிப்படுத்தினேன், அதன் வர்த்தகம் தடைசெய்யப்பட்டுள்ளது" என்று விளக்கினார்.

“நான் கடத்தல்காரரிடம் கேட்டபோது, ​​அவர் இதுபற்றி எனக்குt தெரியாது, யாரோ ஒருவரின் பொருட்களைக் கொண்டு செல்கிறேன் என்று கூறினார்.” "இந்த ஆர்க்கிட்கள் சீனாவிற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் கூறினார்" என்று விவரித்தார்.

ஆர்க்கிட்கள் உலகில் அதிகம் கடத்தப்படும் தாவரங்களில் ஒன்று. ஏனெனில் அவற்றுக்கு அதிக தேவை உள்ளது - புதிதாகப் பறிக்கப்பட்ட பூக்கள் மத நோக்கங்களுக்காக, பானங்கள் மற்றும் உணவுகளில் சுவைகளுக்காக (உதாரணமாக, வெண்ணிலா ஐஸ்கிரீமில்), மற்றும் பாரம்பரிய மருத்துவத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

பல ஆர்க்கிட் இனங்களின் வர்த்தகம் தடை செய்யப்பட்டதாக இருப்பதால், கடத்தல்காரர்கள் தாவரங்களைக் கடத்துவதற்கு அவற்றின் வேர்களைப் பொடி செய்வது போன்ற பிற வழிகளைக் கண்டுபிடிக்கின்றனர்" என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

தென்கிழக்கு ஆசியாவில் போக்குவரத்து தொடர்பான மூத்த காட்டுயிர் ஆய்வாளர் எலிசபெத் ஜான், "கடத்தல் முறைகள் தொடர்ந்து உருவாகி வருகின்றன" என்று கூறினார்.

"அதனால்தான் அமலாக்க முகமைகள் இந்தக் கடத்தல் சம்பவங்கள் எப்படி நடந்தது என்பதை பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்வது எப்போதும் முக்கியமானது, இதனால் கடத்தல்காரர்களுக்கு எதிரான போராட்டம் ஒன்றுபட்டதாக இருக்கும்" என்றார்.

காலப்போக்கில், தகவல் பகிர்வு அதிகரித்தது, எனவே அதிக பறிமுதல்களுக்கு வழிவகுத்தது.

உலக சுங்க அமைப்பின் 2022 சட்டவிரோத வர்த்தக அறிக்கை காட்டுயிர்கள் மற்றும் மரக்கட்டைகள் கைப்பற்றுவதில் ஒரு மேல்நோக்கிய போக்கை உறுதிப்படுத்தியது. 2022ஆம் ஆண்டில் பறிமுதல் செய்தல் 2020 புள்ளிவிவரங்களைவிட 10% அதிகரிப்பையும், 2021 உடன் ஒப்பிடும்போது 56% அதிகரிப்பையும் காட்டுகிறது.

ஆனால் அதிகரித்த பறிமுதல்கள் ஒரு ஆபத்தான போக்கையும் சுட்டிக்காட்டுகின்றன.

"சட்டவிரோதமான காட்டுயிர்கள் மற்றும் மரங்களின் வர்த்தகம் இன்னும் நடைமுறையில் இருப்பதாக இந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன, மேலும் இந்த சட்டவிரோத குற்றத்தைத் தடைசெய்யும் சட்டங்களில் இருந்து தப்பிக்க கடத்தல்காரர்கள் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர்," என்று அறிக்கை கூறுகிறது.

காட்டுயிர் வர்த்தகத்தில் உள்ள நிபுணர்களின் கூற்றுப்படி, எல்லைக் கட்டுப்பாடு மற்றும் சுங்க அதிகாரிகளுக்கு கடத்தல்காரர்களால் எப்போதும் உருவாகி வரும் புதிய உத்திகளைவிட முன்னேறப் போதுமான ஆதாரங்கள் மற்றும் பயிற்சி இருப்பதை உறுதி செய்வதில் சிரமம் உள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)