தமிழக வனப்பகுதிகளில் மலையேற்றத்திற்கு அனுமதி - அரசின் திட்டத்தால் ஏற்படப்போகும் தாக்கங்கள்

    • எழுதியவர், ச.பிரசாந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாடு வனத்துறை 12 மாவட்ட வனப்பகுதிகளில், 40 இடங்களில் சுற்றுலா பயணிகளை மலையேற்றம் அழைத்துச் செல்லும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள இந்த மலையேற்றம், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய காடுகளில் நடத்தப்படவுள்ளது.

வனம், காட்டுயிர்கள் தொடர்பான ஆய்வாளர்கள் மட்டுமின்றி, சாகசம் செய்ய விரும்புவோர், வனத்தை நேசிப்போர் என பலரும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மலையேற்றம் (டிரெக்கிங்) செல்கின்றனர்.

தமிழ்நாடு தவிர்த்து கேரள, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் அம்மாநிலத்தின் வனத்துறையே முறையான அனுமதி வழங்கி, சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் கட்டணம் பெற்றுக்கொண்டு சுற்றுலா பயணிகள் மற்றும் ஆய்வாளர்களை பாதுகாப்பாக மலையேற்றத்திற்கு அழைத்துச் செல்கின்றன.

இந்தியாவின் முக்கிய பல்லுயிர் பெருக்க மண்டலமான மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வழியாக பயணித்து குஜராத் மாநிலத்தில் முடிவடைகிறது.

இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தவிருக்கும் நிலையில், வனத்துறை, சுற்றுலா பயணிகள் கவனிக்க வேண்டியது என்ன? சூழல் சுற்றுலாவின் சாதக, பாதகங்கள் என்னென்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சூழல் சுற்றுலாவில் தமிழகத்தில் மலையேற்றம்

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஆராய்ச்சி மற்றும் ஆன்மீக காரணங்கள் தவிர மலையேற்றத்திற்கு பெரும்பாலான பகுதிகளில் அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆனால் வனத்துறை சார்பாக சில இடங்களில் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் வனத்திற்குள் வாகன சுற்றுலா(சஃபாரி), படகு சுற்றுலா ஆகியவை உள்ளன.

சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் மலையேற்றம் செய்ய தமிழ்நாட்டில் அனுமதி இல்லாத நிலையில், ஒரு சில இடங்களில் அனுமதியற்ற முறையில் சிலர் மலையேற்றத்திற்கு மக்களை அழைத்துச் செல்கின்றனர். இதனால், அசம்பாவிதங்கள் ஏற்பட்டு உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன.

கடந்த 2018 மார்ச் மாதம் தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் இரண்டு குழுக்களாக 36 பேர் மலையேற்றத்திற்கு சென்றனர். அப்போது, காட்டுத்தீ ஏற்பட்டு வனப்பகுதியில் தீயில் சிக்கி 17 பெண்கள் உள்பட 26 பேர் உடல் கருகி பரிதாபமாக மரணித்தனர்.

இச்சம்பவம் குறித்த விசாரணையின் போது இவர்கள் முறையான வழிகாட்டி இல்லாமல், வனத்துறை அனுமதியின்றி சென்று காட்டுத்தீயில் சிக்கி இறந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள வனப்பகுதிகளில் மலையேற்றம் மேற்கொள்ள அரசு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியதுடன், பல இடங்களில் மலை ஏற்றத்திற்கு தடை விதித்தது.

இப்படியான நிலையில், கர்நாடகா மற்றும் கேரளாவைப் போன்று, சூழல் சுற்றுலாவின் கீழ் பாதுகாப்பான முறையில் மலையேற்றம் அழைத்துச் செல்லும் திட்டத்தை ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு வனத்துறை துவங்க உள்ளது.

இதற்காக மேற்குத்தொடர்ச்சி மலையில், 12 மாவட்டங்களை தேர்வு செய்து 40 பாதைகளை இறுதி செய்துள்ளது. இந்த வழித்தடங்களில் சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல பழங்குடியினர், உள்ளூர் மக்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

‘டிரக்கிங் செல்ல ஆர்வம்’

சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவன ஊழியரான உஷா, ஒரு சாகசப்பிரியர். மலையேற்றத்திற்கு தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முன்னெடுப்பு அவருக்கு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

வார இறுதி நாட்களிலும், விடுமுறை தினங்களிலும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் டிரக்கிங் செய்ய தனியாகவோ, குழுவாகவோ பயணிப்பது உஷாவுக்கு மிகவும் பிடித்த ஒன்று. வனத்துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டின் அடர் வனங்களை சென்று இயற்கையை ரசிக்க ஆர்வமாக உள்ளதாக பிபிசியிடம் கூறினார்.

“கேரளாவில் உள்ள அகஸ்தியர்கூடம், கர்நாடகாவின் நேத்ராவதி மலையுச்சி ஆகிய இரண்டும் தென்னிந்தியாவில் எனக்கு மிகவும் பிடித்த இடங்கள். இங்கு செல்ல அந்தந்த மாநிலங்களின் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் அனுமதி பெற்று ஒவ்வொர் ஆண்டும் சென்று வருவேன். தமிழ்நாட்டில் ஊட்டியிலுள்ள சில இடங்களுக்கு இப்படிச் செல்லவேண்டும் என எங்கள் குழுவுக்கு ஆசை உள்ளது. ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இதற்கான அனுமதி கிடைக்கும். இப்போது சூழல் சுற்றுலா திட்டம் மூலமாக பொதுமக்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது நல்ல திட்டம். விரைவில் தமிழ்நாட்டில் டிரெக்கிங் செல்ல ஆர்வமாக இருக்கிறேன்.”

‘வணிக நோக்கில் இருந்தால் வனம் அழியும்’

வணிக நோக்கில் மலையேற்ற திட்டம் இருந்தால் வனம் அழியும் என்கிறார் பெங்களூரை சேர்ந்த மூத்த சூழலியலாளரான உல்லாஸ்குமார்.

பிபிசியிடம் பேசிய உல்லாஸ்குமார், ‘‘வனத்தினுள் மலையேற்றம் மேற்கொள்பவர்கள் காடு, காட்டுயிர்களை பற்றி அறிந்துக்கொள்ளும் வாய்ப்பாக பார்க்க வேண்டும். என்னுடன் பயணித்த பலரும் வனம் மீதான ஆர்வத்தினால் சூழல் பாதுகாவலர்களாக மாறியுள்ளனர். அப்படியான திட்டமாக இந்த மலையேற்ற திட்டம் இருந்தால் நல்லது,” என்கிறார்.

ஆனால், சில மாநிலங்களில் வருமான நோக்கில் மலையேற்ற திட்டம் செயல்படுகிறது எனவும் அவர் குற்றம்சாட்டுகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் உள்ள சில மலையேற்ற பாதைகளில் தனியார் அமைப்பால் அழைத்து வரப்பட்ட நபர்கள் ஒரே நேரத்தில் அதிகளவில் திரண்டதால் அங்கு நெருக்கடி நிலை ஏற்பட்டது. இதையடுத்து மலையேற்றம் செல்வது தொடர்பாக சில கட்டுப்பாடுகளை கர்நாடகா அரசு அறிவித்தது.

அதேபோல பருவமழையின் போது, மகாராஷ்டிரா மாநிலத்திலும் சில இடங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையால் சூழல் சுற்றுலாவில் சிக்கல் ஏற்படுகின்றன என சூழல் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

‘‘மலையேற்றத்தின் போது வரும் சுற்றுலா பயணிகள் சிலர் வனத்தை மாசுபடுத்தி, வனத்தின் உயிர் கோள அமைப்பில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர். வணிக நோக்கங்களுக்காக சூழல் சுற்றுலா மாறும் போது இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்கான உதாரணமாக கர்நாடகா, கேரளா மாநிலங்களில் சில நிகழ்வுகள் நடந்துள்ளன,” என்கிறார் உல்லாஸ்குமார்.

மற்ற மாநிலங்களைப் போல் வருமான நோக்கில் அல்லாமல், தமிழ்நாடு அரசு வனம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்கிறார் அவர்.

சூழல் சுற்றுலா வழித்தடங்களை பொதுமக்கள் மாசுபடுத்தும் நிகழ்வுகளில் சமூக ஊடகங்களின் தாக்கம் கணிசமாக உள்ளது என்பதை உஷா ஒப்புக் கொள்கிறார்.

“நான் நிறைய இடங்களுக்கு டிரெக்கிங் செல்லும் போது அங்கு வரும் பலரும் சமூக ஊடகங்களால் ஈர்க்கப்பட்டு அங்கு வருகின்றனர். சில இடங்களில் அனுமதியின்றி அதிக நபர்கள் கூடுவதால் மாசுபாடு ஏற்படுவது உண்மை தான்.”

சட்டவிரோத மலையேற்றம் குறையும்

அரசே மலையேற்றத்தை முறையாக நடத்தினால், தனியார் சார்பில் நடக்கும் சட்ட விரோத மலையேற்றங்கள் குறையும் என்கிறார், ஊட்டியை சேர்ந்த சுற்றுலா ஏற்பாட்டாளரான ஜான்பாஸ்கோ.

“நீலகிரியில் உள்ள சில தனியார் ரிசார்ட்கள், மலையேற்றத்திற்கு அழைத்துச்செல்வதாக விளம்பரம் செய்து, சட்ட விரோதமாக சுற்றுலா பயணிகளை ஆபத்தான முறையில் காட்டுக்குள் அழைத்துச் செல்கின்றனர். தமிழ்நாடு அரசு மலையேற்ற திட்டத்தை செயல்படுத்தினால், தனியாரின் சட்ட விரோத செயல்கள் குறையும்,’’ என்று பிபிசியிடம் பேசிய போது கூறினார்.

மலையேற்றத்திற்காகவே பல சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால், சுற்றுலாவை நம்பியுள்ள பலரின் வாழ்வாதாரம் மேம்படும் எனவும் ஜான்பாஸ்கோ தெரிவிக்கிறார்.

அரசின் மலையேற்ற சுற்றுலா திட்டத்தில் உள்ளூர் பழங்குடி மக்களை வழிகாட்டியாக பயன்படுத்தவுள்ளதாக வனத்துறை கூறும் நிலையில், இதன் மூலம் பழங்குடியினருக்கு பொருளாதார ரீதியாக வளர்ச்சி கிட்டும் என்கிறார் உல்லாஸ்குமார்.

மருத்துவ பரிசோதனை அவசியம்

மலையேற்றம் என்பது பொதுவாக உடல் வலிமையை வெளிப்படுத்தும் செயலாகத்தான் உள்ளது. ஆனால், வனத்தினுள் மலையேற்றம் என்பது வனத்தில் காட்டுயிர்களின் வீட்டில் பயணித்து அவற்றின் வாழ்வை, சூழலை தெரிந்துகொள்வதற்கான செயலாக இருக்க வேண்டும். இந்த மனநிலையில்தான் சுற்றுலா பயணிகள் வனத்தில் மலையேற்றம் செய்ய வேண்டும் என்கிறார் கோவை ‘ஓசை’ சூழல் அமைப்பின் நிறுவனர் காளிதாசன்.

பிபிசி தமிழிடம் பேசிய காளிதாசன், ‘‘சூழல் சுற்றுலா நடக்கும் பல பகுதிகளில், பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்கள் வீசப்படுவதை காண முடிகிறது. வனத்துறை இதைத்தடுக்க தனிக்கவனம் செலுத்த வேண்டும். மலையேற்றம் செல்வோர் வனத்தை மாசுபடுத்தாமல், குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். காட்டிலிருந்தும் எதையும் எடுத்து வரக்கூடாது,” என்கிறார்.

மலையேற்றத்திற்கு செல்லும் நபர்கள் அதிகபட்சமாக எட்டு பேரைக் கொண்ட குழுக்களாக இருக்கவேண்டும் என உல்லாஸ்குமார் வலியுறுத்துகிறார்.

பாதுகாப்பான மலையேற்றத்திற்காக வயது வாரியாகவும், உடல் தகுதிக்கு ஏற்றவாறும் பாதைகளை தேர்வு செய்ய வேண்டுமென குறிப்பிடுகிறார் காளிதாசன்.

“கோவை வெள்ளையங்கிரி, கொல்லிமலை ஆகாசகங்கை போன்ற இடங்களுக்கு செல்லும் நபர்களின் உடல் தகுதியை மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறிவது போல மலையேற்றம் செல்லும் நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து தகுதி சான்றிதழ் அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும். வனத்துறை இதற்கான முறையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்”, என்கிறார் அவர்.

‘பாதுகாப்பாக இருக்கும்’

தமிழ்நாடு அரசின் மலையேற்ற சுற்றுலா திட்டத்தில் இருக்கும் சில சவால்கள் குறித்து தமிழ்நாடு முன்னாள் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹுவிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது. இந்த கட்டுரைக்காக அவரிடம் பேசிய போது வனத்துறை செயலாளராக இருந்த அவர், தற்போது சுகாதாரத்துறையின் செயலாளராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் வனத்தினுள் மலையேற்றம் (டிரெக்கிங்) திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படுத்தப்படும். இதற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில், மலையேற்ற பகுதிகள், கட்டணம் போன்ற தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ளலாம் என்றார்.

இத்திட்டத்திற்காக 400 பழங்குடியினர் மற்றும் மலையேற்றம் செல்லும் வனத்துறை பணியாளர்களை தேர்வு செய்துள்ளோம். இவர்களுக்கு, அவசர காலத்தில் எப்படி செயல்பட வேண்டும், மருத்துவ முதலுதவி, தாவரங்கள் மற்றும் வனவிலங்குகள் குறித்து முழுமையான பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கு பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

‘‘வனம் மாசுபடாமல் இருப்பதை வனத்துறை நிச்சயமாக உறுதிப்படுத்தும். விழிப்புணர்வு என்ற நோக்கத்தில் மட்டுமே இத்திட்டம் செயல்படும். கோவை, நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி என 12 மாவட்டங்களில், 40 பாதைகளை தேர்வு செய்துள்ளோம். அவற்றில் எவ்வளவு ஆபத்து என்னென்ன இருக்குமென்பதை ஏற்கனவே பதிவு செய்து, வயதிற்கு ஏற்ப ஒவ்வொரு பாதைகளிலும் அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளோம்,’’ என்கிறார் சுப்ரியா சாஹு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)