You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராகுல் காந்தியின் 'இந்து' கருத்தால் மக்களவையில் அமளி - மோதியும், அமித் ஷாவும் சொன்னது என்ன?
காங்கிரஸ் எம்.பி-யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி திங்கள்கிழமை (ஜூலை 1) மக்களவையில் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுடன் ராகுல் காந்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அரசியல் சாசன நகலை கையில் ஏந்தியவாறு ராகுல் காந்தி தனது உரையைத் தொடங்கினார்.
ஆனால் உரையின் நடுவில் இந்துக் கடவுளான சிவபெருமானின் படத்தைக் காட்டியபடி அவர் கூறிய கருத்து காரணமாக சபையில் சலசலப்பு ஏற்பட்டது. பா.ஜ.க எம்.பி-க்கள் ராகுலை எதிர்க்கத் தொடங்கினர்.
பிரதமர் நரேந்திர மோதி தனது இருக்கையில் இருந்து எழுந்து, ’ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தையும் வன்முறையாளர்கள் என்று ராகுல் காந்தி சொல்வது சரியல்ல,’ என்று கூறினார்.
மோதி அரசின் ‘அக்னிவீர் திட்ட’த்தையும் தாக்கிப்பேசிய ராகுல் காந்தி, அக்னிவீரர்கள் 'யூஸ் அண்ட் த்ரோ' (பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியும்) தொழிலாளர்களாகிவிட்டனர் என்று தெரிவித்தார்.
“தவறான கருத்துகளைக் கூறி நாடாளுமன்றத்தை திசை திருப்ப முயற்சிக்கக் கூடாது,” என்று இடையில் குறுக்கிட்டுப்பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ராகுலின் 'இந்து' கருத்து
தனது உரையின் போது, சிவபெருமானின் படத்தைக் காட்டி, ராகுல் காந்தி, "இந்தியா யாரையும் தாக்கியதில்லை என்று மோதி ஒரு நாள் தனது உரையில் கூறினார். இந்தியா அகிம்சையை கடைப்பிடிக்கும் நாடு என்பதே அதற்குக் காரணம். இந்தியா யாருக்கும் பயப்படும் நாடு அல்ல,” என்று தெரிவித்தார்.
"நம்முடைய மகான்கள் 'பயப்படாதே, பயமுறுத்தாதே’ என்ற செய்தியைக் கொடுத்தார்கள். சிவபெருமானும் ‘பயப்படாதே, பயமுறுத்தாதே’ என்று கூறி திரிசூலத்தை மண்ணில் நட்டார்.
மறுபுறம், தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் 24 மணி நேரமும் ‘வன்முறை-வன்முறை-வன்முறை’ ‘வெறுப்பு-வெறுப்பு-வெறுப்பு’ என்று உள்ளனர். நீங்கள் இந்துவே இல்லை. உண்மைக்கு துணை நிற்க வேண்டும் என்று இந்து மதத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது,” என்றார் அவர்.
ராகுல் காந்தியின் பேச்சைத் தொடர்ந்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோதி எழுந்து நின்று, “இந்தப் பிரச்சனை மிகவும் தீவிரமானது. ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தையும் வன்முறையாளர்கள் என்று அழைப்பது தீவிரமானது,” என்றார்.
பிரதமர் மோதியின் இந்தக் கருத்துக்குப் பதிலடி கொடுத்த ராகுல் காந்தி, "நரேந்திர மோதி மட்டுமே முழுமையான இந்து சமூகம் அல்ல, பா.ஜ.க மட்டுமே முழுமையான இந்து சமூகம் அல்ல, ஆர்.எஸ்.எஸ் மட்டுமே முழுமையான இந்து சமூகம் அல்ல," என்று கூறினார்.
அக்னிவீரர்கள் ‘யூஸ் அண்ட் த்ரோ தொழிலாளர்கள்’
மோதி அரசின் அக்னிவீர் திட்டத்தையும் ராகுல் காந்தி கடுமையாகத் தாக்கினார்.
"ஒரு அக்னிவீரர் கண்ணிவெடியால் வீரமரணம் அடைந்தால் நான் அவரை தியாகி என்று சொல்கிறேன். ஆனால் இந்திய அரசும், நரேந்திர மோதியும் அவரைத் தியாகி என்று அழைக்கவில்லை. அவரை ‘அக்னிவீர்’ என்று அழைக்கிறார்கள். அவருக்கு ஓய்வூதியம் கிடைக்காது. அந்த வீட்டிற்கு இழப்பீடு கிடைக்காது. தியாகி அந்தஸ்து கிடைக்காது," என்று அவர் குறிப்பிட்டார்.
"இந்தியாவின் ஒரு ராணுவ வீரருக்கு ஓய்வூதியம் கிடைக்கும். ஆனால் அக்னிவீரரை சிப்பாய் என்று அழைக்க முடியாது. அக்னிவீர் ஒரு ‘யூஸ் அண்ட் த்ரோ’ தொழிலாளி. அவருக்கு ஆறு மாதங்கள் பயிற்சி கொடுத்து, ஐந்து ஆண்டுகள் பயிற்சி பெற்ற சீன வீரர்களுக்கு முன்னால் நிறுத்துகிறீர்கள்,” என்றார் ராகுல் காந்தி.
"ஒரு ராணுவ வீரனுக்கும் மற்றொரு வீரனுக்கும் இடையே பிளவை உருவாக்குகிறீர்கள். ஒருவருக்கு ஓய்வூதியம், தியாகி அந்தஸ்து கிடைக்கிறது. மற்றவருக்கு ஓய்வூதியம், தியாகி அந்தஸ்து கிடைக்காது. பிறகு உங்களை நீங்களே தேசபக்தர் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். இது எந்தவிதமான தேசபக்தி,” என்று அவர் வினவினார்.
“நாட்டின் ராணுவத்துக்கு தெரியும், முழு நாட்டிற்கும் தெரியும், அக்னிவீர் திட்டம் ராணுவத்தின் திட்டம் அல்ல, பிரதமர் அலுவலகத்தின் திட்டம். அந்த திட்டம் பிரதமரின் யோசனை, ராணுவத்தின் யோசனை அல்ல என்பது ஒட்டுமொத்த ராணுவத்துக்கும் தெரியும்,” என்று அவர் குற்றம் சாட்டினார்.
அக்னிவீர் குறித்து ராஜ்நாத், அமித் ஷா அளித்த பதில்
ராகுல் காந்தியின் பேச்சை இடைமறித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “தவறான கருத்துகளை கூறி சபையை திசை திருப்ப முயற்சிக்கக் கூடாது,” என்றார்.
”போரின் போது அல்லது எல்லைப் பாதுகாப்பு பணியின் போது அக்னிவீரர் மரணமடைந்தால் அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்,” என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா எழுந்து நின்று சபையில் பொய் சொல்ல வேண்டாம் என்று ராகுல் காந்திக்கு அறிவுறுத்தினார்.
"ஒரு கோடி ரூபாய் வழங்கப்படவில்லை என்று அவர் (ராகுல் காந்தி) கூறுகிறார். உயிர் தியாகம் செய்யும் அக்னிவீரனுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைக்கும் என்று ராஜ்நாத் சிங் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார். அவர் உண்மை நிலையை சொல்ல வேண்டும். இந்த சபை பொய் சொல்வதற்கான இடம் அல்ல,” என்று அமித் ஷா குறிப்பிட்டார்.
“இங்கு உண்மையைப் பேச வேண்டும். அவர் தனது பேச்சின் உண்மைத்தன்மையை சரிபார்க்கவில்லை என்றால் அவர் இந்த சபை, நாடு மற்றும் அக்னி வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.
அமித்ஷாவின் அறிக்கைக்கு பிறகு ராகுல் காந்தி மீண்டும் தனது கருத்தை முன்வைத்தார். “அக்னிவீரனின் உண்மையை நான் சபையில் முன்வைத்துள்ளேன். ராஜ்நாத் சிங்கும் கூறியிருக்கிறார். இந்திய ராணுவத்திற்கும், அக்னிவீரருக்கும் உண்மை தெரியும். நானோ, அவர்களோ சொல்வதால் அதில் எந்த வித்தியாசமும் ஏற்படாது. யார் உண்மையைச் சொல்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்,” என்று அவர் சொன்னார்.
அவரது அறிக்கைக்குப் பிறகு மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுந்து நின்று, "இந்த விஷயம் தீவிரமானது. ராஜ்நாத் சிங் சொல்வதால் என்ன வித்தியாசம் ஏற்படும் என்று ராகுல் காந்தி கூறினார். இது போன்ற மேலோட்டமான அறிக்கையை ஒரு எதிர்க்கட்சித் தலைவர் எப்படி கொடுக்க முடியும்? எனவே, ராகுல் காந்தி தான் கூறியதை உறுதிப்படுத்த வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
நீட் தேர்வு, விவசாயிகள் போராட்டம், மணிப்பூர்
நீட் தேர்வு கேள்வித்தாள் கசிவு மற்றும் மணிப்பூர் விவகாரம் குறித்து மக்களவையில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற அரசின் பழைய முடிவுகளையும் அவர் தாக்கிப் பேசினார்.
"நீட் தேர்வு பணக்காரர்களுக்கானது. தேர்வு எழுதிய பல மாணவர்களிடம் நான் பேசினேன். பணக்காரர்களுக்கு உதவும் வகையில் தேர்வு முறை உள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டனர்," என்று ராகுல் காந்தி கூறினார்.
"நீட் தேர்வு குறித்து ஒரு நாள் விவாதம் நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். இது மிக முக்கியமான விஷயம். இரண்டு கோடி இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளன. ஒரு நாள் விவாதம் நடத்தப்பட வேண்டும்,” என்று முன்னதாக அவர் தெரிவித்திருந்தார்.
விவசாயிகள் போராட்டம் குறித்தும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். "விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று அழைக்கும் அளவுக்கு அரசுக்குத் திமிர்பிடித்துள்ளது. விவசாயிகள் இயக்கத்தில் வீரமரணம் அடைந்தவர்களுக்காக ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்த விரும்பினோம். ஆனால் அவர்களை பயங்கரவாதிகள் என்று கூறி நீங்கள் அதை மறுத்துவிட்டீர்கள். குறைந்தபட்ச ஆதரவு விலையின் சட்டப்பூர்வ உத்தரவாதத்தை அரசு இன்னமும் அவர்களுக்கு வழங்கவில்லை," என்றார் அவர்.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக அரசைத் தாக்கி பேசிய ராகுல் காந்தி, இந்த மாநிலத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக அரசு கருதவில்லை என்று கூறினார்.
”மணிப்பூர் இந்த நாட்டின் அங்கம் அல்ல என்பது போல, பிரதமரும், உள்துறை அமைச்சரும் இதுபற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. பா.ஜ.க-வின் அரசியலும், கொள்கைகளும் மணிப்பூரை தீயில் தள்ளிவிட்டன. பா.ஜ.க உள்நாட்டுப் போரின் விளிம்பிற்கு இந்த மாநிலத்தை தள்ளியுள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.
திங்கட்கிழமை மக்களவை அமர்வின் ஆரம்பமே பரபரப்பு நிறைந்தாக இருந்தது. கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன் சபாநாயகர் ஓம் பிர்லா, ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு அனுமதி இல்லை என்று கூறியதையடுத்து அமளி ஏற்பட்டது. இதன் நடுவே சபாநாயகர் ஓம் பிர்லா, ‘தான் மைக்கை அணைப்பதில்லை’ எனத் தெரிவித்தார்.
"சபாநாயகர் அல்லது அந்த இருக்கையில் அமர்ந்திருப்பவர் மைக்கை அணைத்துவிடுகிறார் என்று பல மரியாதைக்குரிய உறுப்பினர்கள் வெளியில் குற்றம் சாட்டுகிறார்கள். மைக்கின் கட்டுப்பாடு இந்த இருக்கையில் அமர்ந்திருப்பவரிடம் இல்லை,” என்று ஓம் பிர்லா கூறினார்.
“யார் பேச வேண்டும் என்ற சபாநாயகரின் முடிவின்படி மைக்கின் கட்டுபாடு அளிக்கப்படுகிறது. நாற்காலியில் அமர்பவரிடம் மைக் கட்டுப்பாடு இல்லை. எனவே சபாநாயகர் மீது இதுபோன்ற ஆட்சேபங்களை யாரும் கூறாமல் இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். அரசியல் சாசன மதிப்புகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)