You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாஜி கொடூரத்திற்கு சாட்சியாக திகழும் யூத சிறுமியின் நாட்குறிப்பு - என்ன எழுதியிருந்தார்?
ப்ஜூன் 25, 1947இல், ஆனி ஃபிராங்கின் நாட்குறிப்பு முதன்முதலில் வெளியிடப்பட்டது. இது உலகளவில் மிகவும் விரும்பப்படும் அதிகம் விற்பனையான புத்தகமாக மாறியது. ஆனி ஃபிராங்கின் எழுத்துகளைப் புத்தகமாக வெளியிட்டதன் காரணத்தை, அவரது தந்தை ஒட்டோ பிபிசியிடம் பிரத்யேகமா பகிர்ந்துகொண்டார்.
சுமார் 77 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட தனது மகளின் நாட்குறிப்பைப் படிக்கும் மன தைரியம் முதலில் ஒட்டோ பிராங்கிற்கு இல்லை. இதைப் புத்தகமாக வெளியிடுவது குறித்தும் அவர் நிலையான முடிவை அவர் முன்பு எடுக்கவில்லை. 1976ஆம் ஆண்டு பிபிசியின் ப்ளூ பீட்டர் ஸ்டுடியோவிற்கு சென்ற அவர், இந்த முடிவை ஏன் எடுத்தார் என்பதை விளக்கினார்.
‘’நாட்குறிப்பு மூலமே எனது மகளை முழுமையாக அறிந்துகொண்டேன’’ எனக் கூறிய அவர், தனது அன்புக்குரிய மகளின் எழுத்துகளைக் காண்பித்தார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கடந்த 1942ஆம் ஜூன் 12ஆம் தேதி தனது 13வது பிறந்தநாளைக் கொண்டாடிய மதிநுட்பம் வாய்ந்த தனது மகளுக்கு, ஒரு ஆட்டோகிராஃப் புத்தகத்தை ஒட்டோ பரிசளித்தார். ஆனால், இதை நாட்குறிப்பாகப் பயன்படுத்த முடிவெடுத்த ஆனி, தனது நெருங்கிய தோழியிடம் ரகசியங்களைக் கூறுவது போலத் தனது எண்ணங்களை இதில் எழுதத் துவங்கினார்.
ஒரு குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்து ஆனி எழுதியதை ஒட்டோ வாசித்துக் காண்பித்தார். "இதுவரை யாரிடமும் இல்லாத அளவுக்கு உன்னிடம் முழுமையாக நம்பிக்கை வைக்க முடியும் என்று நம்புகிறேன். நீ எனக்கு மிகப்பெரிய ஆறுதலையும், ஆதரவையும் அளிப்பாய் என நம்புகிறேன்’’ என ஆனி எழுதியுள்ளார்.
ஜெர்மனி நாடாளுமன்றத் தேர்தலில் நாஜி கட்சி வெற்றிபெற்று, ஹிட்லர் சான்சிலராக நியமிக்கப்பட்ட பிறகு ஆனி பிறந்த ஃபிராங்க்ஃபர்ட் நகரில் இருந்து 1933-ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமிற்கு குடும்பத்துடன் சென்றார் ஒட்டோ. நாஜிக்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வந்த நிலையில், நெதர்லாந்து தலைநகரில் கிடைத்த பாதுகாப்பு இவர்களின் குடும்பத்திற்குக் கிடைத்த தற்காலிக ஆசுவாசமாக இருந்தது.
1940-ம் ஆண்டு ஹிட்லர் நெதர்லாந்து மீது படையெடுத்தார். யூதர்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே ஜெர்மனியில் இந்த ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது.
யூதர்கள் வணிக நிறுவனங்களை நடத்தத் தடை விதிக்கப்பட்டது. அவர்களை அடையாளம் காண மஞ்சள் நட்சத்திர அடையாளங்களை அணியக் கட்டாயப்படுத்தப்பட்டனர். விட்டை விட்டு வெளியேற முடியாதபடி தடுக்கப்பட்டனர்.
ஓட்டோ போன்ற பல யூதர்கள் 1938-ம் ஆண்டு முதலே அமெரிக்காவுக்குக் குடியேற முயன்று வந்தனர். ஆனால், புகலிடக் கொள்கை இல்லாதது மற்றும் விசாவைப் பெறுவதற்கான நீண்ட செயல்முறை ஆகியவை காரணமாக, ஜெர்மனி ஆக்கிரமிப்பு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தூதரங்களை ஜூலை 1941-ம் ஆண்டு நாஜிகள் மூடுவதற்கு முன்பு அவர்களால் விசா பெறுவதற்கான ஆவணப்பணிகளை முடிக்க முடியவில்லை.
1942-ம் ஆண்டு ஆனியின் பிறந்த நாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, ஓட்டோவின் மூத்த மகள் ஜெர்மனியின் தொழிலாளர் முகாமிற்கு வர அழைக்கப்பட்டார். அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க, ஆம்ஸ்டர்டாமில் தனது வணிக நிறுவனம் அமைந்துள்ள இடத்தில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் ஒட்டோ குடும்பத்தினர் குடிபெயர்ந்தனர். மற்றொரு குடும்பம் மற்றும் ஒரு குடும்ப நண்பருடன் 2 ஆண்டுகளுக்கு ஒட்டோவின் குடும்பம் இந்த இடத்தில் மறைந்து இருந்தது.
இந்த சிறிய மறைவிடத்தில் வாழும் அனைவரும் பகலில், அமைதியாகவே இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். யாருக்காவது கேட்டுவிடுமோ என்ற அச்சம் காரணமாக, அருகில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றும் அனைவரும் சென்றபிறகு இரவு நேரத்தில் மட்டுமே கழிவறையைப் பயன்படுத்தினர். சிறிய அளவிலான நம்பிக்கைக்குரிய உதவியாளர்கள் குழு மூலமாக உணவு மற்றும் பிற பொருட்கள் கொண்டுவரப்பட்டன.
இங்கிருந்தபோது, ஆனி தனக்கு தோன்றிய எண்ணங்களை ரகசியமாக நாட்குறிப்பில் எழுதி வந்தார். தனது வயதுடைய நண்பர்கள் இல்லாத ஏக்கத்தில், கிட்டி போன்ற கற்பனை கதாபாத்திரங்களை உருவாக்கி எழுதினார். அவரது கவலை, விருப்பம், சலிப்பு, மற்றவர்களுடன் மிகவும் குறுகிய இடத்தில் வாழும் விரக்தி என அனைத்தும் அவரது நாட்குறிப்பில் உள்ளது.
இந்த நாட்குறிப்பின் கடைசி பக்கம் ஆகஸ்ட் 1-ம் தேதி 1944-ம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 4-ம் தேதி காலை நாஜியின் ரகசிய போலிஸ் இந்த மறைவிடத்தை கண்டுபிடித்து அனைவரையும் கைது செய்தது. இவர்களின் மறைவிடம் எப்படிக் கண்டறியப்பட்டது என்பது இன்னும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.
ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் வதை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஓட்டோ, அங்குத் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களான மார்கோர் மற்றும் ஆனி ஆகியோரிடம் இருந்து பிரிக்கப்பட்டார். அதன் பிறகு அவர்களை அவர் பார்க்கவே இல்லை. ஒட்டோ தவிர மற்ற மூவரும் முகாமிலே இறந்துபோயினர்.
ஆனி, தனது சகோதரியுடன் இறுதியில் பெர்கன்-பெல்சன் வதை முகாமுக்கு மாற்றப்பட்டார். நேச நாட்டுப் படையினரால் இந்த முகாம் விடுவிக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு மார்ச் 1945 இல் காய்ச்சல் காரணமாக இறந்தார்.
அசாதாரண தைரியம் மற்றும் மனிதாபிமானம்
மறைவிடத்தில் தங்கியிருந்தவர்களில் உயிர் பிழைத்தவர் ஓட்டோ மட்டுமே. போர் முடிந்தபிறகு தனது குடும்பத்தை தேடி ஆம்ஸ்டர்டாம் சென்ற அவர், அவர்களுக்கு நிகழ்ந்த மோசமான முடிவை அறிந்துகொண்டார்.
ஆனியின் நாட்குறிப்புகள் மற்றும் கடிதங்கள், மறைவிடத்திலிருந்து அவரது நண்பர்களான மீப் கீஸ் மற்றும் பெப் வோஸ்குய்ஜ்ல் ஆகியோரால் மீட்கப்பட்டன. ஒட்டோ திரும்பியவுடன், அந்த நாட்குறிப்புகளை அவர்கள் ஒப்படைத்தனர்.
ஆனால், துக்கம் காரணமாக அவரால் அவற்றைப் பார்க்கக் கூட முடியவில்லை. 1945 ஆகஸ்ட் 22 அன்று சுவிட்சர்லாந்தில் உள்ள தனது தாயாருக்கு எழுதிய கடிதத்தில் "அந்த நாட்குறிப்புகளை படிக்கும் தைரியம் எனக்கு இல்லை" என்று ஓட்டோ குறிப்பிட்டுள்ளார்.
அந்த நாட்குறிப்புகளைப் படிக்கும் மன ஆற்றல் ஓட்டோவுக்கு வந்தபிறகு, அந்த நாட்குறிப்பு பல விஷயங்களை அவருக்கு வெளிப்படுத்தியது. மிகவும் அச்சமான சூழ்நிலையில், இளமைப் பருவத்தை தனது மகள் எப்படிக் கடந்தார் என்பதை புரிந்துகொள்ள இது உதவியது.
தன் தாயுடனான மோதல்களையும், சகோதரி மீதான வெறுப்பையும், தனது நற்பெயரைப் பற்றிய கவலைகளையும், உடலில் ஏற்பட்ட மாற்றங்களையும் ஆனி விவரித்திருக்கிறார். மறைவிடத்தில் அமைதியாக மற்றவர்களுடன் வாழ்ந்தபோது, அவருக்கு எப்படி எரிச்சலாக இருந்தது என்பதை நாட்குறிப்புகள் வெளிப்படுத்தின. தனிமையில் இருந்தது பற்றியும், தங்களது இருப்பிடம் தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் வாழ்ந்தது பற்றியும் அவர் எழுதியுள்ளார்.
அதே சமயம், தனது மகளின் மகிழ்ச்சியான தருணங்களைப் பற்றியும் ஒட்டோ அறிந்துகொண்டார். ஆனி ஜன்னல் வழியாகப் பார்த்த இயற்கைக் காட்சிகளையும் மற்றும் மறைவிடத்தில் வாழ்ந்த பீட்டர் வான் டான் என்ற சிறுவனுடன் தனக்கு இருந்த ஈர்ப்பு பற்றியும் அவர் எழுதியுள்ளார்.
பனிச் சறுக்கு விளையாட ஆசை
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாட வேண்டும் என்ற தனது கனவுகள் மற்றும் லட்சியங்கள் பற்றியும், உண்மையான மற்றும் கற்பனையான நண்பர்களுடனான உறவுகள் பற்றியும் ஆனி எழுதியுள்ளார்.
ஆனியின் கற்பனையான எண்ணங்கள் மாறி பின்னர் அவர் முதிர்ச்சியடைந்ததை ஓட்டோ புரிந்துகொண்டார். "இனி என்னால் அப்படி எழுத முடியாது," என்று தனது நாட்குறிப்பு பதிவுகளில் ஒன்றில் ஆனி குறிப்பிட்டுள்ளார்
"இப்போது நான் என் நாட்குறிப்பை ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படிக்கிறேன். என் குழந்தைத்தனமான அப்பாவித்தனம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் எவ்வளவு அப்பாவியாக இருக்க விரும்பினாலும், இனி ஒருபோதும் அந்த அப்பாவியாக இருக்க முடியாது என்று ஆழமாக எனக்குத் தெரியும்." என ஆனி எழுதியுள்ளார்.
"நான் நாட்குறிப்பைப் படித்த பிறகு, நான் அதை நகலெடுத்து எனது நண்பர்களுக்கு வழங்கினேன்," என்று அவர் 1976 இல் பிபிசியின் ஓட்டோ கூறினார்.
"அவர்களில் ஒருவர் வெளியீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார், அவர் என்னிடம் 'நீ நாட்குறிப்பைத் தனிப்பட்ட சொத்தாக வைத்திருக்க உரிமை இல்லை, அது ஒரு மனித ஆவணம், நீங்கள் அதை வெளியிட வேண்டும்.’ எனக் கூறினார். எனவே நான் அதை வெளியிட்டேன்’’ என்கிறார்.
25 ஜூன் 1947 அன்று, ஆனியின் நாட்குறிப்பு பதிவுகள் தொகுக்கப்பட்டு ‘தி சீக்ரெட் அனெக்ஸ்’ என்ற ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது. ஆனியின் எழுத்தில் இருந்த சில மொழித் தவறுகளை ஒட்டோ திருத்தினார்.
இந்த புத்தகம் விரைவாகவே வெற்றியைப் பெற்றது. நாஜிகள் செய்த மோசமான படுகொலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த பெண் திகழ்ந்தார். 1952 இல் ஆங்கிலத்தில் Anne Frank: The Diary of a Young Girl என்ற தலைப்பில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது.
இது 1956 இல் புலிட்சர் பரிசு பெற்ற நாடகமாகவும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டது. ஆனியின் எழுத்துக்கள் 70 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும் உலகெங்கிலும் உள்ள வாசகர்களிடம் தொடர்ந்து எதிரொலித்து வருகின்றது.
தனது மகளின் தனிப்பட்ட எண்ணங்களை வெளியிட்டது குறித்து வருத்தப்படுகிறீர்களா என ஓட்டோவிடம் கேட்டபோது. "நான் வருந்தவில்லை, ஏனென்றால் ஆனி தனது நாட்குறிப்பு ஒன்றில் 'நான் என் மரணத்திற்குப் பிறகு வாழ விரும்புகிறேன்’ என எழுதியிருந்தாள். அவள் நாட்குறிப்பின் மூலம் பல இதயங்களில் வாழ்கிறாள்" என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)