You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகிழ்ச்சி தொழிற்சாலை: பிள்ளைகளுக்காக 'சிறைவாசத்தை' அனுபவிக்கும் தென் கொரிய பெற்றோர்கள்
- எழுதியவர், ஹியோஜுங் கிம்
- பதவி, பிபிசி கொரிய சேவை
'ஹாப்பினஸ் ஃபேக்டரி'யில் உள்ள ஒவ்வொரு சிறிய அறையையும் அதிலுள்ள உணவு வழங்கப்படும் ஒரு சிறிய துளைதான் வெளியுலகத்துடன் இணைக்கிறது.
ஒரு அலமாரியை விட பெரிதாக இல்லாத இந்த அறைகளுக்குள் போன் அல்லது லேப்டாப்கள் அனுமதிக்கப்படுவதில்லை. உள்ளே இருப்பவர்களுக்கு வெற்று சுவர்கள்தான் துணையாக உள்ளன.
இதில் வசிப்பவர்கள் சிறையில் வழங்கப்படுவதைப் போன்ற நீல நிற சீருடையை அணிந்திருக்கலாம், ஆனால் அவர்கள் சிறைவாசிகள் அல்லர். "சிறைவாசத்தை அனுபவித்துப் பார்க்க" தென் கொரியாவில் உள்ள இந்த மையத்திற்கு வந்துள்ளனர்.
இங்குள்ளவர்கள் பெரும்பாலானோரின் குழந்தைகள், சமூகத்திடமிருந்து முற்றிலும் விலகியிருக்கின்றனர். அதனால் வெளியுலக வாழ்க்கையை துண்டித்துக் கொள்வது எப்படி இருக்கும் என்பதை கற்றுக்கொள்ள அவர்களின் பெற்றோர்கள் இங்கு வந்துள்ளனர்.
பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்.
தனிமைச் சிறை
இங்கு உள்ளவர்களின் பிள்ளைகளைப் போன்று தனிமையில் வாழும் இளம்வயதினர், ஹிகிகோமோரி என அழைக்கப்படுகின்றனர். இந்தச் சொல் வார்த்தை ஜப்பானில் 1990களில் இப்படி தீவிரமாக சமூகத்திலிருந்து விலகி வாழும் இளம்வயதினரை குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.
கடந்தாண்டு 19-34 வயதுக்குட்பட்ட 15,000 பேரிடம் தென் கொரியா சுகாதாரம் மற்றும் நலவாழ்வு அமைச்சகம் மேற்கொண்ட கணக்கெடுப்பில், 5% பேர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது தெரியவந்தது.
இந்த எண்ணிக்கை, தென் கொரியாவின் பரந்துபட்ட மக்கள்தொகையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக எடுத்துக்கொண்டால், அந்த எண்ணிக்கை சுமார் 5,40,000 பேர் இதே சூழலில் வாழ்வதை குறிப்பதாக அர்த்தம் கொள்ளலாம்.
அரசு-சாரா அமைப்புகளான கொரியா இளைஞர்கள் அறக்கட்டளை மற்றும் புளூ வேல் (whale) மீட்பு மையம் நிதியளித்து நடத்தும் 13 வார குழந்தைகள் வளர்ப்புப் பயிற்சித் திட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பெற்றோர்கள் பங்கேற்றுள்ளனர்.
தங்கள் குழந்தைகளுடன் எப்படி சிறந்த முறையில் தொடர்புகொள்வது என்பதை கற்றுக்கொடுப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
கங்வோன் மாகாணத்தில் உள்ள ஹோங்சியோன்-கன்-யில் உள்ள மையம் ஒன்றில் தனிமை சிறையை பிரதிபலிக்கும் ஒரு அறையில் அவர்கள் மூன்று நாட்கள் கழிப்பதும் இத்திட்டத்தில் அடக்கம்.
தங்கள் குழந்தைகளை ஆழமாக புரிந்துகொள்வதில் பெற்றோர்களுக்கு இந்த தனிமை சிறை பங்களிக்கும் என்பதுதான் இதிலுள்ள நம்பிக்கை.
'உணர்வுபூர்வமான சிறை'
ஜின் யோங்-ஹே-யின் மகன் கடந்த மூன்று ஆண்டுகளாக தன் அறையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
ஆனால், இந்த தனிமை சிறையில் நேரம் செலவழிப்பதன் மூலம் தன் 24 வயது மகனின் "உணர்வுபூர்வமான சிறையை" கொஞ்சம் சிறந்த முறையில் புரிந்துகொள்ள முடிந்ததாக ஜின் (உண்மையான பெயர் அல்ல) கூறுகிறார்.
"நான் என்ன தவறு செய்தேன் என வியப்பில் இருந்தேன்... அதை நினைப்பதே வலிமிகுந்ததாக உள்ளது," என 59 வயதான அவர் கூறுகிறார்.
"ஆனால், அதையே நான் செய்து பார்க்கும்போது, எனக்கு கொஞ்சம் தெளிவு கிடைக்கிறது."
பேசுவதில் தயக்கம்
தன் மகன் மிகவும் திறமையானவர் எனக்கூறும் ஜின், அவரும் அவருடைய கணவரும் மகன் மீது மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்டிருந்ததாக கூறுகிறார்.
ஆனால், அவருடைய மகனுக்கு அடிக்கடி உடல்நலம் இல்லாமல் போயிருக்கிறது. நட்பு பேணுவதில் சிக்கல், அதைத்தொடர்ந்து சாப்பிடுவதில் ஒழுங்கின்மை, இதன் காரணமாக பள்ளிக்கு செல்வதும் கடினமாகியுள்ளது.
ஜின்னின் மகன் பல்கலைக்கழகத்திற்கு சென்றபோது ஒரு பருவம் வரை அவர் நன்றாக இருந்ததாகவும் அதன்பிறகு முழுமையாக சமூகத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறுகிறார்.
தனிமனித சுகாதாரத்தைப் பேணாமல், உணவைப் புறக்கணித்து, அறையில் தன் மகன் முடங்கிப் போவதை பார்த்தது, அவருடைய இதயத்தை நொறுக்குவதாக இருந்தது.
மேலும், பதற்றம், குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உறவுகளில் சிக்கல் மற்றும் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏற்றுக்கொள்ளப்படாததால் ஏற்பட்ட விரக்தி ஆகியவை அவருடைய மகனை பாதித்திருக்கலாம். உண்மையில் எங்கு தவறு நடந்தது என்பதை அம்மாவிடம் பேசுவதில் அவருக்குத் தயக்கம் இருந்துள்ளது.
ஹாப்பினஸ் ஃபேக்டரிக்கு ஜின் வந்தபோது, அங்கு தனிமையில் உள்ள மற்ற இளம்வயதினர் எழுதிய குறிப்புகளை வாசித்தார்.
"அந்த குறிப்புகளை படித்தபோது, 'யாருமே அவனை (மகனை) புரிந்து கொள்ளாததால் அவன் அமைதியின் மூலம் தன்னை பாதுகாத்துக்கொள்கிறான்' என்பதை உணர முடிந்தது," என்கிறார் ஜின்.
பார்க் ஹான்-சில் (உண்மையான பெயர் அல்ல) ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வெளியுலக வாழ்க்கையுடன் அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துக் கொண்ட தன் 26 வயது மகனுக்காக இங்கு வந்திருக்கிறார்.
சில முறை வீட்டிலிருந்து ஓடிய பின்பு, இப்போது அவருடைய மகன் தன் அறையை விட்டு அரிதாகவே வெளியே வருகிறார்.
பார்க் தன் மகனை ஆலோசகர் மற்றும் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றுள்ளார்- ஆனால் அவர்கள் பரிந்துரைத்த மனநல மருந்துகளை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டு, வீடியோ கேம் விளையாடுவதில் தீவிர ஆர்வம் காட்டியுள்ளார்.
தனிப்பட்ட உறவுகள்
தன் மகனை புரிந்துகொள்ளும் முயற்சியில் பார்க் போராடிக் கொண்டிருந்தாலும், இந்த தனிமைப்படுத்தும் திட்டத்தால் அவருடைய உணர்வுகளை சிறப்பாக புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்.
"என் மகனை குறிப்பிட்ட மாதிரியாக உருவாக்க வேண்டும் என்பதில் வற்புறுத்தாமல், அவருடைய வாழ்க்கையை ஏற்றுக்கொள்வது முக்கியம் என புரிந்துகொண்டுள்ளேன்," என்கிறார் அவர்.
வெளிவாழ்க்கையில் இருந்து இளம் வயதினர் துண்டித்துக்கொள்வதற்கு பல காரணங்கள் இருப்பதாக தென் கொரியா சுகாதார அமைச்சகம் நடத்திய ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
19-34 வயதுக்குட்பட்டவர்களிடையே மேற்கொண்ட ஆய்வின்படி பொதுவான காரணங்கள்:
- வேலை கிடைப்பதில் சிரமங்கள் (24.1%)
- உறவுகளில் சிக்கல்கள் (23.5%)
- குடும்ப பிரச்னைகள் (12.4%)
- உடல்நல பிரச்னைகள் (12.4%)
உலகிலேயே அதிகளவிலான தற்கொலை விகிதங்கள் கொண்ட நாடு தென் கொரியா. அதன் அரசாங்கம் இதனை தீர்ப்பதற்கு ஐந்தாண்டு திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது.
20-34 வயதினரிடையே இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மனநல பரிசோதனைகள் அரசு செலவில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்த கடுமையாக உழைப்பதே, பொறுப்புணர்வை வலியுறுத்தும் கன்ஃபூசிய கலாசாரத்தின் வழக்கமான உதாரணம்.
கடுமையாக உழைக்கும் இந்த கலாசாரம் 21-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் தென் கொரியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சியில் பிரதிபலித்து, உலகின் முதன்மை பொருளாதாரமாக மாற்றியது.
எனினும், உலக சமத்துவமின்மை தரவுத்தளத்தின்படி, தென் கொரியாவில் பொருளாதார சமத்துவமின்மை கடந்த முப்பது ஆண்டுகளில் மோசமாகியுள்ளது.
புளூ வேல் மீட்பு மையத்தின் இயக்குநர் கிம் ஓக்-ரேன் கூறுகையில், இளம் வயதினர் தனிமைப்படுத்திக் கொள்வதால், அவர்களுடைய பெற்றோரும் தங்களை சுற்றியுள்ளவர்களிடமிருந்து துண்டித்துக் கொள்கின்றனர். இதுவொரு "குடும்பப் பிரச்னை" என கூறுகிறார்.
அவர்களில் சிலர் தங்களை மற்றவர்கள் மதிப்பிடுவது குறித்து அச்சம் கொள்கின்றனர். தங்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிடம் கூட தங்களின் நிலை குறித்துப் பேசுவதில்லை.
"தங்களின் பிரச்னைகளை அவர்கள் வெளியே கொண்டு வருவதில்லை. இது, அவர்களின் பெற்றோர்களும் தனிமைப்படுத்திக்கொள்ள வழிவகுக்கிறது," என்கிறார் கிம்.
"அடிக்கடி அவர்கள் விடுமுறை நாட்களில் குடும்ப உறுப்பினர்கள் கூடுகைகளில் கலந்துகொள்வதையும் நிறுத்திவிடுகின்றனர்."
'நான் கவனித்துக் கொள்கிறேன்'
ஹாப்பினஸ் ஃபேக்டரியில் உள்ள பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் இயல்பான வாழ்க்கையை மீண்டும் தொடங்கும் நாளுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
தனிமையிலிருந்து அவருடைய மகன் வெளிவந்த பிறகு என்ன சொல்வீர்கள் எனக் கேட்டபோது ஜின்னின் கண்கள் கலங்குகின்றன.
"நீ நிறைய பார்த்து விட்டாய்," என கூறும்போது அவருடைய குரல் நடுங்குகிறது.
"இது மிகவும் கடினமாக இருந்ததில்லையா?
" உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன்."
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)