You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பொலிவியா: ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி முறியடிப்பு, சதி செய்த ராணுவத் தலைவர் கைது
- எழுதியவர், வில் கிரான்ட்
- பதவி, மெக்சிகோ மத்திய அமெரிக்கா, கியூபாவுக்கான செய்தியாளர்
பொலிவியா தலைநகர் லா பாஸில் உள்ள அதிபர் மாளிகையை ராணுவப் படையினர் சுற்றி வளைத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, சதிப்புரட்சி செய்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி மேற்கொண்ட ராணுவ தலைவரை பொலிவிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முக்கிய அரசாங்க கட்டடங்கள் அமைந்துள்ள முரில்லோ சதுக்கத்தில் (Murillo Square) ராணுவத்தின் கவச வாகனங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் தங்களை நிலை நிறுத்தியிருந்தனர். அவர்கள் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி மேற்கொண்டனர். அதன் பின்னர் அனைவரும் கட்டடங்களை விட்டு வெளியேறினர்.
கிளர்ச்சி ராணுவத் தலைவரான ஜெனரல் ஜுவான் ஜோஸ் ஜூனிகா (Gen Juan José Zúñiga), தான் "ஜனநாயகத்தை மறுசீரமைக்க" விரும்புவதாகவும், அதிபர் லூயிஸ் ஆர்ஸை மதிக்கும் அதே வேளையில், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு கண்டனம் தெரிவித்த அதிபர் லூயிஸ் ஆர்ஸ் (Luis Arce), "ஜனநாயகத்திற்கு ஆதரவாக ஒன்றுகூடி அணி திரள வேண்டும்" என்று மக்களை வலியுறுத்தினார்.
"பொலிவிய மக்களின் உயிர்களைப் பறிக்கும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளை மீண்டும் நாங்கள் அனுமதிக்க முடியாது" என்று அவர் அதிபர் மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார்.
அவரது வார்த்தைகள் மக்கள் மத்தியில் தெளிவாக எதிரொலித்தது, ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் அரசாங்கத்திற்கு ஆதரவாக வீதிகளில் இறங்கிப் போராட்டம் செய்தனர்.
அதிபர் மாளிகைக்குள் படமாக்கப்பட்ட காட்சிகளில், அதிபர் ஆர்ஸ் ஜெனரல் ஜூனிகாவை எதிர்கொள்வதைக் காணலாம். அந்தக் காட்சிகளில், அவரைக் கீழே நிற்கும்படி கட்டளையிட்டு, பதவியைத் துறக்குமாறும் அதிபர் கேட்டுக் கொண்டார்.
பொலிவியாவின் முன்னாள் தலைவரான ஈவோ மொரேல்ஸை வெளிப்படையாக விமர்சித்ததைத் தொடர்ந்து ஜெனரல் ஜூனிகா பதவி நீக்கம் செய்யப்பட்டதாக வெளியான செய்திகளை உறுதிப்படுத்தியதோடு, அதிபர் ஆர்ஸ் புதிய ராணுவத் தளபதிகளை நியமிப்பதாகவும் குறிப்பிட்டார்.
திங்கட்கிழமை தொலைக்காட்சியில் அவர் பேசியது ஒளிப்பரப்பானதைத் தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஜூனிகா தொலைகாட்சி உரையில், முன்னாள் அதிபர் மொரேல்ஸ் அடுத்த ஆண்டு மீண்டும் பதவிக்குப் போட்டியிட்டால் அவரைக் கைது செய்வேன் என்று மிரட்டல் விடுத்திருந்ததைத் தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைக் கண்டித்ததோடு, ஜெனரல் ஜூனிகாவும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களும் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று முன்னாள் அதிபர் மொரேல்ஸ் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக குற்றவியல் விசாரணையையும் அரசு தொடங்கியுள்ளது. பொலிவிய கடற்படையின் தலைவரான வைஸ்-அட்மிரல் ஜுவான் ஆர்னெஸ் சால்வடாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெனரல் ஜூனிகா ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை மேற்கொண்டதற்கான உண்மையான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இது பெரியளவில் திட்டமிடப்பட்ட அதிகார ஒருங்கிணைப்பு அல்ல, மாறாக ஒரு சிறியளவிலான, மோசமாகத் திட்டமிடப்பட்ட ஆயுதமேந்திய கிளர்ச்சி என்பது தெளிவாகிறது.
எவ்வாறாயினும், ஜெனரல் ஜூனிகாவின் ராணுவ எழுச்சி பொலிவியாவில் ஒரு தனித்துவமான அத்தியாயமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதில் அடுத்த சில வாரங்கள் முக்கியமானதாக இருக்கும்.
சந்தேகத்திற்கு இடமின்றி, அரசாங்கம் தற்போது எளிதில் பாதிக்கப்படக்கூடிய சூழலில் உள்ளது. மற்றவர்கள் அதிபர் ஆர்ஸின் நிர்வாகத்தைக் கவிழ்க்க முயற்சி செய்யலாம். இருப்பினும் ராணுவ சக்திக்கு எதிராக அரசியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், செல்வாக்கு மிக்க முன்னாள் அதிபரும் பொலிவிய இடதுசாரிகளில் மூத்த அரசியல்வாதியுமான ஈவோ மொரேல்ஸின் ஆதரவை தற்போதைய அதிபர் நம்பலாம்.
மொரேல்ஸ் தனது ஆதரவாளர்களை வீதிக்கு வந்து ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை நிறுத்தக் கோருமாறு வலியுறுத்தினார். குறிப்பாக நாட்நாட்டின் பூர்வீக கோகோ விவசாயிகள் இயக்கத்தினரை அரசுக்கு ஆதரவு கொடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த மக்கள் சக்தி, ஜெனரல் ஜுனிகாவின் திட்டங்களுக்கு எதிரான உறுதியை வலுப்படுத்த உதவியிருக்கலாம். ஜுனிகாவின் திட்டத்தில் முன்னாள் தலைவர் ஜீனைன் அனெஸ் உட்பட்ட "அரசியல் கைதிகளை" விடுவிப்பதும் அடங்கும்.
ராணுவப் படைகள் முரில்லோ சதுக்கத்தைக் கைப்பற்றிய பிறகு, ஜெனரல் ஜூனிகா "நாங்கள் இந்தத் தாயகத்தை மீட்டெடுக்கப் போகிறோம்” என்றார்.
”எல்லாவற்றையும் நாசமாக்கிய காழ்ப்புணர்ச்சியாளர்களின் உயரடுக்கு பணக்காரர்கள் குழுவால் தேசம் கைப்பற்றப்பட்டுள்ளது" என்று பேசினார்.
முன்னாள் கூட்டாளிகளான ஆர்ஸ், மொரேல்ஸ் ஆகியோர் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் பொலிவியாவில் அரசியல் மாற்றத்தைக் கட்டாயப்படுத்த ராணுவத்தைப் பயன்படுத்துவதை எதிர்ப்பதில் ஒன்றுபட்டனர்.
கடந்த 2019ஆம் ஆண்டில், அப்போதைய அதிபர் மொரேல்ஸ், அதிபர் தேர்தலில் மோசடி செய்ய முயல்வதாகக் கூறி ராணுவத் தலைவர்களால் ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னர், 2019இல் மெக்சிகோவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
கடந்த 2005இல் ஈவோ மொரேல்ஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை பொலிவியா அரசியல் ரீதியாக அமெரிக்காவின் மிகவும் நிலையற்ற நாடுகளில் ஒன்றாக இருந்தது. அவர் ஆட்சியில் இருந்த காலகட்டம் ஆண்டியன் தேசத்திற்கு (Andean nations) மிகவும் தேவையான நிலைத்தன்மையைக் கொண்டு வந்தது.
தற்போதைய அதிபர் ஆர்ஸ், 2019 தேர்தலில், ஒரு கொந்தளிப்பான காலத்தைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்குப் பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு கிடைத்தது.
வெனிசுலா மற்றும் கொலம்பியாவில் உள்ள சோசலிச ஆட்சிகள் போன்ற நெருங்கிய ஆதரவாளர்கள் இந்தச் சம்பவத்தை உடனடியாகக் கண்டித்து ஜனநாயகத்தை மீட்டெடுக்குமாறு கோரினர். வாஷிங்டனும் நாட்டில் அமைதியைக் கோரியது.
அவரது சோசலிச ஆட்சியை எதிர்த்த பொலிவியர்கள்கூட தென் அமெரிக்காவில் ஒரு இருண்ட காலத்திற்குத் திரும்புவதைக் காண விரும்ப மாட்டார்கள். அங்கு பயங்கரமான மனித உரிமைகள் மீறல் நடவடிக்கைகளைக் கொண்ட ராணுவத்தினர், நாட்டின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைத் துப்பாக்கி முனையில் ஆட்சியை விட்டு வெளியேற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்,எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)