You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"இனி என்ன செய்யப் போகிறோம்" - கள்ளச் சாராயத்தால் தந்தை, கணவர், மகனை இழந்த பெண்கள் கண்ணீர்
- எழுதியவர், சாராதா வி
- பதவி, பிபிசி தமிழ்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது அங்குள்ள பெண்களின் வாழ்க்கைகையை புரட்டிப் போடப்பட்டுள்ளது. தந்தைகளை, கணவர்களை, மகன்களை இழந்து வாடும் பெண்களை நேரில் சந்தித்தது பிபிசி தமிழ்.
"தந்தையாகப் போவது தெரியாமலே இறந்துவிட்டாரே"
கும்பகோணத்தை சேர்ந்த, பெற்றோரை இழந்த 36 வயது ராதா, 33 வயது மணிகண்டனை திருமணம் (இரண்டாவது திருமணம்) செய்து கொண்டு கருணாபுரம் வந்தார். அவருக்கு பத்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சொந்த ஊரில் உறவுகள் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லாத நிலையில், மணிகண்டனின் வருமானத்தை நம்பி வாடகை வீட்டில் கருணாபுரத்தில் வசித்து வந்துள்ளார் ராதா.
இறப்பதற்கு மூன்று நாட்கள் முன்பு, சிறு சண்டை காரணமாக கணவருடன் பேசாமல் இருந்துள்ளார். அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றறிந்த உடன் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளார். அங்கு சென்ற போது, தான் இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது ராதாவுக்கு. அதை அவரிடம் தெரிவிக்கும் முன்பே இறந்துவிட்டார் என்று அழுது புலம்புகிறார் ராதா.
“அவர் பஜாரில் மூட்டை தூக்குபவர். எவ்வளவு மூட்டை தூக்குகிறாரோ அவ்வளவு காசு கிடைக்கும். அவர் வருமானம் மட்டுமே போதாது என்று நான் மூன்று வீடுகளுக்கு சென்று பாத்திரம் கழுவினேன். எல்லாவற்றுக்கும் அவரையே நம்பி இருந்துவிட்டேன். எங்கு சென்றாலும் அவர் உடன் வர வேண்டும் என்று வற்புறுத்துவேன்.
நான் இல்லாமல் போனால் என்ன செய்வாய் என்று என் கணவர் விளையாட்டாகக் கேட்பார். இன்று நிஜமாகிவிட்டது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வீட்டுக்கு வாடகை எப்படி கொடுப்பது, பிள்ளைகளை எப்படி படிக்க வைப்பது எஎன தெரியவில்லை” என்கிறார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
'குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை?'
வடிவுக்கரசி, சுரேஷ் தம்பதியினர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களில் இருவர். இவர்களுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் வீட்டுக்கு சென்ற போது, மூவரில் மூத்தவரான 11ஆம் வகுப்பு மாணவி கோகிலா, தற்போது அக்கா என்பதை தாண்டி கூடுதல் பொறுப்புகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளார் என்பது தெரிகிறது.
இவர்களது நிலை பலரது கவனத்தையும் பெற்றதால், தொடர்ந்து ஊடகப் பேட்டிகள் கொடுத்து கொண்டிருந்தார் கோகிலா. உடையாமல், மனம் தளராமல் ஒவ்வொருவருக்கும் நிதானமாக தன் சூழலை விளக்கிக் கொண்டிருந்தார். விரக்தியும் தைரியமும் கலந்த தொனியில் பிபிசி தமிழிடம் அவர் பேசிய போது, தனது அம்மா விரும்பிய படி, பொறியியல் படிப்பு படிப்பேன் என்றார்.
“எனக்கு நடனக் கலைஞராக வேண்டும் என்று ஆசை. எனது அம்மாவுக்கு நான் பொறியியல் படிக்க வேண்டும் என்று ஆசை. அவரின் ஆசைப்படியே நான் பொறியியல் பட்டதாரி ஆவேன்.” என்றார்.
பெயிண்டராக இருந்த சுரேஷுக்கு ரூ.500-ம், கூலி வேலை செய்து வந்த வடிவுக்கரசிக்கு ரூ.250-ம் தினக்கூலியாக கிடைக்கும். இதை வைத்து தான் மூன்று பிள்ளைகளின் படிப்பு மற்றும் வீட்டுக்கு தேவையான செலவுகளை சமாளித்து வந்தனர்.
“தினந்தோறும் சாப்பாட்டுக்காக காசு மிச்சப்படுத்துவதே சிரமம் தான். நாங்கள் மெல்லமெல்ல மேலே வந்துக் கொண்டிருக்கும் போது, எல்லாம் சரிஞ்சு விழுவது போல் இருக்கிறது.” என்கிறார் கோகிலா.
எத்தனை ஊடகக் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தாலும் அவரிடம் ஒரு கேள்வி உள்ளது, “கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு தண்டனை கிடைத்து விட்டது. இதை தயாரிப்பவர்கள், விற்பவர்கள், விநியோகம் செய்பவர்களுக்கு என்ன கிடைத்தது? 23 தடவை உள்ளே சென்று வந்த நபர், 24வது தடவையாக உள்ளே செல்லப் போகிறார். அவ்வளவு தானே?” என்று கேட்கிறார்.
தனது கணவரின் தம்பி முருகன் உயிரிழந்தது ஷகிலாவுக்கு தாங்க முடியாத இடியாக விழுந்துள்ளது. முருகனின் மனைவி மருத்துவமனையில் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார்.
வீட்டுக்கு வெளியே விறகு அடுப்பு வைத்து சமைத்துக் கொண்டிருந்தார் முருகனின் அண்ணி ஷகிலா. அண்ணன் தம்பி ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்ததாக கூறும் அவர், “ கூலி வேலை தான் என்றாலும், முருகன் இருந்தது மிகப்பெரிய பலமாக இருந்தது. முருகனுக்கு திருமணம் ஆகாத மகன், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மகள் இருக்கிறார்கள்.
பாதி கட்டிய வீடு இருக்கிறது. இதை எல்லாம் எப்படி அவர் மனைவி பார்த்துக் கொள்வார் என்று தெரியவில்லை. எனது கணவரும் மூட்டை தூக்குபவரே, எங்களால் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை” என்றார்.
கண் பார்வை இழந்த மூதாட்டி முலவி தனது 45 வயதான மகன் சுரேஷை நம்பியே வாழ்ந்து வந்துள்ளார். சுரேஷ் அந்தப் பகுதியில் மூட்டை தூக்கி தினமும் ரூ.300 முதல் ரூ.500 வரை சம்பாதிப்பார். பல ஆண்டுகளாக குடி பழக்கம் கொண்ட அவர், கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தான் கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்திற்கு பலியான முதல் நபர். அவர் இல்லாமல் இன்று அவரது தாய் ஆதரவின்றி நிற்கிறார்.
சுரேஷ் தான் அருகில் இருந்து அம்மாவை பார்த்துக் கொண்டதாக அவரது சகோதரரின் மனைவியான மாரியம்மாள் கூறுகிறார். “குடிப்பார் என்பது உண்மை தான். ஆனால் அம்மாவுக்கு தேவையானதை அவர் தான் பார்த்துக் கொண்டார். நாங்கள் வேறு ஊரில் இருக்கிறோம். நானும் என் கணவரும் தினமும் வேலைக்கு சென்றால் தான் கூலி. இந்நிலையில், கடைசி வரை அம்மாவை எப்படி பார்த்துக் கொள்வது என்று தெரியவில்லை” என்றார்.
‘ஆண்களின் குடிப் பழக்கத்தால் பாதிக்கப்படும் பெண்கள்’
கருணாபுரம் பகுதியில் பிறந்தது முதல் வசித்து வரும் 38 வயதான அம்மு ஆண்களின் குடிப்பழக்கத்தால், அப்பகுதி பெண்கள் தினம் தினம் சித்ரவதை அனுபவித்து வருவதாக கூறினார். “இந்த தெருவில் எப்போதும் குடிகாரர்கள் உலவிக் கொண்டே இருப்பார்கள். இதோ இங்கே தான் இருக்கிறது” என்று 500 மீட்டர் தொலைவில் கள்ளச்சாராயம் விற்கப்பட்ட இடத்தை சுட்டிக் காட்டுகிறார் அவர்.
“எங்களுக்கு இருப்பது ஷீட் போட்ட வீடுகள். வெயில் காலத்தில் உள்ளே வெந்துவிடும். அதற்கு பயந்து வெளியே வந்து அமர்ந்தால், குடிகாரர்கள் தள்ளாடி வந்து மேலே விழுவார்கள். இதை எல்லாம் புகார் என்று யார் ஏற்றுக் கொள்வார்கள்? கதவு திறந்திருந்தால், போதையில் இது என் வீடு என்று கூறி வீட்டுக்குள் வந்துவிடுகிறார்கள்.
பாத்திரங்களை வெளியே வைத்து விட்டு அவசரத்துக்கு எங்காவது சென்றால், சாராயம் வாங்க காசு இல்லாத நபர்கள் அதை விற்றுவிடுகிறார்கள். என் வீட்டில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளைப் பார்த்தால், ஆடைகள் இல்லாத அத்தனை குடிகாரரர்கள் இந்த தெருவில் உலவி வருவதை காணலாம்” என்றார்.
“இரண்டு நாட்களாக கள்ளச்சாராயக் கடை மூடப்பட்ட பிறகே இந்த தெருவில் நிற்கவே முடிகிறது” என்று கூறும் அவர் தனது தாத்தாவை இழந்துள்ளார்.
கருணாபுரத்தில் துப்புரவு தொழிலாளியாக இருக்கும் கஜலட்சுமி குடும்பச் செலவுகளை தானே கவனித்து வந்ததாக தெரிவித்தார். “எனது கணவர் ஒரு நாள் விடாமல் தினமும் குடிப்பார், வேலைக்கு செல்வதில்லை. என் வருமானத்தில் தான் எங்களுக்கு சாப்பாடும், பிள்ளைகளுக்கு படிப்பும் கிடைக்கிறது. புதன்கிழமை காலை அவர் உடல் நிலை சரியில்லாததால் வெளியே சென்று குடிக்கவில்லை. அதனால் தான் தப்பித்து விட்டார்” என்று கூறினார்.
துயரம், கோபம், ஏமாற்றம், போராட்டம் என வேறுபட்ட உணர்வுகளின் கலவைக்கு நடுவே, வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கவுள்ளனர் கருணாபுரம் பெண்கள்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)