கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்து தொடரும் உயிரிழப்புகள் - 7 கேள்விகளும் பதில்களும்

    • எழுதியவர், ஆ.நந்தகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 53 பேர் உயிரிழந்துவிட்டனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியனின் கூற்றுப்படி, அவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. கள்ளச்சாராயம் குடித்ததால் 12 பேருக்கு கண் பார்வைக் குறைபாடு ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய நிகழ்வு குறித்த 7 முக்கியமான கேள்விகளையும், அதற்கான பதில்களையும் பார்க்கலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

1. கடந்த சில ஆண்டுகளில் நடந்த மரணங்கள் எவை?

தற்போது கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்திருக்கும் கள்ளச்சாராய மரணம், கடந்த 2 தசாப்தங்களில் தமிழ்நாட்டில் நடந்த மிகப்பெரிய கள்ளச்சாராய மரணமாக உள்ளது.

  • 2023 மே மாதம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டின் மதுராந்தகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 21 பேர் உயிரிழந்தனர்.
  • 2008-ம் ஆண்டு தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் கள்ளச்சாராயம் குடித்து 148 பேர் பலியாகினர், இதில் 41 பேர் தமிழர்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 21 போலிசாரை தமிழ்நாடு அரசுப் பணியிடை நீக்கம் செய்தது.
  • 2001-ம் ஆண்டு பண்ருட்டியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 52 பேர் இறந்தாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி குறிப்பிட்டுள்ளது. 20 பேருக்குக் கண்பார்வை பறிபோனது. புதுச்சேரியிலிருந்து சில வியாபாரிகள், கள்ளச்சாராயத்தைக் கொண்டுவந்து விற்றதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2. கள்ளச்சாராய விற்பனை தொடர்வது எங்கே?

திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டத்தின் ஜவ்வாது மலை, கள்ளக்குறிச்சியின் கல்வராயன் மலை ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்யப்பட்டதாக பலமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக ரெய்டு நடத்தப்பட்டு, கன்னியாகுமரி உள்பட சில இடங்களில் கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர விழுப்புரம், கடலூர், அரியலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடிக்கடி கள்ளச்சாராயம் தொடர்பான ரெய்டு நடத்தப்பட்டும் கைதும் நடக்கிறது.

யார் அதிக போதை தரும் சாராயத்தை உற்பத்தி செய்வது என்ற போட்டியில், மெத்தனால் கலந்து விற்கும் நிலை வட தமிழ்நாட்டில் சில இடங்களில் காணப்படுவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் அதிகளவிலான மக்கள் விவசாய தொழிலாளர்களாகவும், தினக்கூலிகளாகவும் உள்ளனர். விவசாய கூலி வேலை, சுமை தூக்கும் வேலை, பெயிண்டிங் பிளம்பிங், கொத்தனார், சித்தாள், காவலாளி போன்ற வேலைகளை இவர்கள் நம்பியுள்ளனர்.

டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானம் வாங்க முடியாத பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள இவர்கள், இதுபோன்ற கள்ளச்சாராயத்தை நோக்கிச் செல்வதாக கள்ளக்குறிச்சி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். இங்கே பாக்கெட் சாராயம் 50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்திருப்பதாக மரக்காணம் பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர் முருகன் கூறுகிறார்.

”உடல் உழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்யும் தொழிலாளர்கள் உடல் வலிக்காக தினமும் மது அருந்த விரும்புகின்றனர். தினசரி 300- 400 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு தொழிலாளி, டாஸ்மாக் கடைக்குச் சென்று 120 முதல் 150 ரூபாய் செலவழித்து மதுபானம் அருந்த விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக பாதி விலையில் சாராயம் குடித்துவிடலாம் என நினைக்கிறார்கள்.’’ என்கிறார் முருகன்.

3. கள்ளச்சாராய வணிகம் ஏன் நீடிக்கிறது?

தமிழ்நாட்டில் 5,329 டாஸ்மாக் மதுபான கடைகள் இருந்தபோதிலும், கள்ளச்சாராய விற்பனை இன்னும் தொடர பல காரணங்கள் உள்ளன.

ஒன்று இதன் விலை. ஒரு பாக்கெட் சாராயத்தின் விலை 50 ரூபாய் மட்டுமே என்பதால், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் விருப்பமாக இது உள்ளது. மற்றொன்று, அதிகாலை முதல் நள்ளிரவு வரை எப்போதுமே கிடைக்கும் என்பதால், கிராமப்புறங்களில் உள்ளவர்கள் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்வதாக முருகன் விவரித்தார்.

கள்ளக்குறிச்சியில் 24 மணிநேரமும் இந்த கள்ளச்சாராயம் கிடைப்பதாகவும், அதுவும் ஆட்டோ, இருசக்கர வாகனம் என பலவற்றிலும் வந்து வீட்டிலேயே கொடுத்துவிட்டு போகும் வழக்கம் உள்ளதாகவும் அப்பகுதி பெண்கள் பிபிசியிடம் கூறினர்.

4. காவல்துறை நடவடிக்கை என்ன?

கள்ளச்சாராயத்தை தடுப்பது தமிழ்நாடு மதுவிலக்கு கலால் பிரிவு காவல்துறையின் பொறுப்பாகும். கடந்த 2021 முதல் கள்ளச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கையில் 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 565 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யட்டிருப்பதாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த வருடம் நடந்த மரக்காணம் கள்ளச்சாராய மரணத்தில், சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் 21 பேரை கைது செய்ததுடன், அதில் 8 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

அண்மையில் கல்வராயன் மலையில் இயங்கி வந்த கள்ளச்சாராய ஆலை ஒன்றை கடலூர் மாவட்ட கலால் காவல்துறையினர் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தனர்.

கல்வராயன் மலை மற்றும் ஜவ்வாது மலையில், சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்படுவது குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகும். அதேபோல, மாவட்ட எல்லைகளிலும், ஆந்திரா - தமிழ்நாடு, புதுச்சேரி - தமிழ்நாடு மாநில எல்லைகளிலும் மதுவிலக்கு கலால் துறையினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இத்தகைய நடவடிக்கைகளால் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை என்பதை கள்ளக்குறிச்சி சம்பவம் சுட்டிக் காட்டுகிறது.

சாராய விற்பனை குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றாலும், போலீசார் பணம் வாங்கிக்கொண்டு தங்களையே திட்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர் கள்ளக்குறிச்சியின் கருணாபுரம் மக்கள்.

தமிழக காவல்துறை சார்பில் போலீஸ் மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்த ‘கிராம காவலர்கள்’ திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், பொதுமக்கள் தங்களது பகுதியில் நடக்கும் பிரச்னைகள், சந்தேக நபர்களின் நடமாட்டம், கள்ளச்சாராயம் விற்பனை குறித்து புகார் அளிக்க ஊக்கம் அளிக்கப்பட்டது. கள்ளச்சாரயத்தின் ஆபத்துகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டம் அரசு எதிர்பார்த்த அளவில் மக்களிடையே சென்று சேரவில்லை என்பதையே கள்ளக்குறிச்சி சம்பவம் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

5. அரசு சொல்வது என்ன?

கள்ளச்சாராய மரணத்தை தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் எ.வ.வேலு, ’’ இந்த சம்பவத்தை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை. இந்த சம்பவம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. விஷ சாராய விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

கள்ளக்குறிச்சியில் மரணங்கள் அதிகரிக்கத் தொடங்கியவுடன், அம்மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டார்.

"இது காவல்துறையின் கவனக்குறைவால் நடந்திருப்பது கண்டறியப்பட்டு, கள்ளக்குறிச்சி எஸ்.பி. உள்ளிட்ட 10 காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும். யாருக்கும் அரசு பரிவு காட்டாது," என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.

கள்ளச்சாராய உயிரிழப்புகள் பற்றிய வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் குறித்தான விரிவான அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் ள்ளக்குறிச்சியின் புதிய மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார்.

அத்துடன் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

மேலும் இது தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் தமிழக அரசால் அமைக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமையன்று இந்த ஆணையம் விசாரணையை துவங்கியது.

6. எதிர்க்கட்சிகள் கூறுவது என்ன?

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதற்கு திமுக முக்கிய நிர்வாகிகளே காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்திருப்பதாக, இந்த மரணங்களுக்குத் தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

‘’தமிழகம் முழுவதும் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாமல் தொடர்ந்து உயிர்கள் இழப்பிற்கு மதுவிலக்குத் துறை அமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காத, அமைச்சர் முத்துசாமியை முதல்வர் ஸ்டாலின் உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்’’ என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

’’கள்ளச்சாராய சாவுகள் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். கள்ளச்சாராய வணிகர்களுக்கு காவலாக இருப்பவர்கள் எவ்வளவு உயர்பதவியில் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணையை சி.பி.ஐ.யிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்.’’ என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

7. விழிப்புணர்வு அவசியமா?

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே கள்ளச்சாராய ஆபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்ற முடியும் என திருப்பத்தூர் மலைக் கிராமங்களில் கள்ளச்சாராயத்தின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.

’’தற்போது அதிகம் செயல்படுத்தப்படாமல் உள்ள கிராம காவல் திட்டத்தின் கீழ், ஊராட்சி மன்றத் தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள் ஆகியோரை காவல்துறை தொடர்பு கொண்டு, அந்தந்த கிராமத்தில் முறைகேடாகச் சாராயம் விற்பது குறித்தும், அதில் ஈடுபடுவோர் குறித்தும் தகவல் அளிக்க அவர்களை வலியுறுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் கிராம அளவில் காவல்துறை அதிகாரிகள் சாராயத்தை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’’ என்கிறார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)