வெப்ப அலை: இந்தியாவின் முதல் 'ஹீட் ஸ்ட்ரோக்' அவசர அறையில் என்ன நடக்கிறது?

    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர், "இதற்கு முன்பு இதுபோன்ற ஒன்றை பார்த்ததில்லை,” என்கிறார் அதிர்ச்சியுடன்.

“இது முன்னெப்போதும் இல்லாத வெப்ப அலை. நான் இங்கு பணியாற்றிய 13 வருடங்களில், ஹீட் ஸ்ட்ரோக் (Heat Stroke - வெப்பப் பக்கவாதம்) பாதிப்பால் ஏற்பட்ட மரணத்திற்காக இறப்புச் சான்றிதழில் கையெழுத்திட்டதாக எனக்கு நினைவில் இல்லை. இந்த ஆண்டு, ஹீட் ஸ்ட்ரோக்கினால் மரணித்த பலரின் இறப்பு சான்றிதழ்களில் நான் கையெழுத்திட்டுள்ளேன்,” என்கிறார் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் (RMLH) மருத்துவர் அஜய் செளகான்.

டெல்லி, நீடித்த வெப்ப அலையில் சிக்கித் தத்தளித்து வருகிறது, மே மாதம் தொடங்கி, தினசரி வெப்பநிலை 40 செல்சியஸைத் தாண்டி, கிட்டத்தட்ட 50 செல்சியஸ் ஆக உள்ளது. ஈரப்பதம் மற்றும் அனல் காற்று வெப்பத்தை அதிகப்படுத்துகிறது, தேவை அதிகரித்துள்ளதால் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் மின்சாரம் தடைபடுகின்றன. மக்கள் வெப்பத்தால் இறக்கின்றனர், வெப்பம் தொடர்பான நோய்களால் குறைந்தது 20 பேர் வரை உயிரிழந்துள்ளதாக செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.

வெப்பத்தால் ஏற்படும் மிகக் கடுமையான நோயான 'ஹீட் ஸ்ட்ரோக்', மூன்று முக்கிய அறிகுறிகளால் அடையாளம் காணப்படுகிறது:

  • 40.5C (105F) அல்லது அதற்கும் அதிகமான உடல் வெப்பநிலை
  • லேசான குழப்பம் அல்லது பலவீனமான உணர்வு போன்ற மன மாற்றங்கள்
  • அதீத வெப்பம் மற்றும் ஈரப்பதம் (humidity) இருக்கும் சூழலில் தொடர்ந்து இருப்பது

ஹீட் ஸ்ட்ரோக்கால், பாதிக்கப்பட்டவர்கள் சூரிய வெப்பத்தில் வெளிப்பட்ட சில மணி நேரங்களில் நோய்வாய்ப்படுகின்றனர். இந்தியாவின் நோய்க் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் ஹீட் ஸ்ட்ரோக் 'உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலை' என்று குறிப்பிடுகிறது. இதன் இறப்பு விகிதம் 40-64% ஆக இருப்பதாகச் சொல்கிறது.

டெல்லியில் உள்ள டாக்டர் சௌகானின் மருத்துவமனையில் மே மாத இறுதியில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. அதன் பின்னர் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக 7 பேர் இறந்துள்ளனர் மற்றும் 40-க்கும் மேற்பட்டோர் வெப்பம் தொடர்பான நோய்களுக்குச் சிகிச்சை பெற்றுள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மூன்று நாட்களில் 50-க்கும் மேற்பட்ட இறப்புகள்

பெரும்பாலான ஆண்கள் கடுமையான வெப்பத்தைத் தாங்க வேண்டிய நெருக்கடியான, ஒழுங்குபடுத்தப்படாத தொழில்களில், வெயிலில் வேலை செய்கின்றனர். வெப்ப அலை பாதிப்பு டெல்லி மட்டுமின்றி நாட்டின் பிற மாநிலங்களிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்திலிருந்து, பலர் வெப்பம் தொடர்பான நோய்களால் இறந்துள்ளனர். உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிஷா மாநிலங்களில் ஜூன் தொடக்கத்தில் மூன்று நாட்களில் 50-க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.

ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில், `ஹீட் ஸ்ட்ரோக்’ சிகிச்சைக்காக தனியாக ஒரு மையம் அமைத்து அவசர சிகிச்சைப் பிரிவு உருவாக்கி இருப்பது, இந்திய அளவில் இதுவே முதல்முறை. வெப்பத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்றும் இந்த முயற்சி, விரைவான காலநிலை மாற்றம் மற்றும் சுகாதார அவசரநிலைகளால் ஏற்படும் சவாலை பிரதிபலிக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு, ஒரு நோயாளியின் உடல் வெப்பநிலை 42C (107.7F) ஆக உயர்ந்து ஹீட் ஸ்ட்ரோக் அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உடலின் இயல்பான மைய வெப்பநிலை 37-38 செல்சியஸ் ஆகும். அவரது உடலில் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் இருந்தது.

ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சை மையம் என்றால் என்ன?

இந்த வெப்பநிலையில், ஒரு மனித உடல் செயலிழக்கத் தொடங்குகிறது, செல்கள் சிதையத் தொடங்குகின்றன. இந்த வெப்பநிலையில் உறுப்பு செயலிழப்பும் சாத்தியமாகும். ரத்த ஓட்டம் நிறுத்தப்படுவதால், வியர்வை நின்று, தோல் குளிர்ச்சியாகவும் ஈரமாகவும் மாறும்.

ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சை மையத்தில், மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட நோயாளியை 250 லிட்டர் பீங்கான் தொட்டியின் பனிக்கட்டி நீரில் மூழ்கும்படிச் செய்கின்றனர். அங்கு வெப்பநிலை 0 முதல் 5 செல்சியஸ் வரை இருக்கும். அந்த மருத்துவமனையில் இரண்டு பீங்கான் தொட்டிகள், 200 கிலோ எடையுள்ள ஐஸ் தயாரிக்கும் இயந்திரம், ரெக்டல் தெர்மோமீட்டர்கள், ஐஸ் பெட்டிகள் மற்றும் டப்கள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. நோயாளி நார்மல் வார்டுக்கு மாற்றப்படுவதற்கு முன், அவரது வெப்பநிலை குறைந்து, குளிர்ச்சி அடைந்து குணமடைய 25 நிமிடங்கள் ஆகிறது.

"பாதிப்பின் ஆரம்ப நிலையில் குளிர்ச்சியூட்டும் சிகிச்சை அளிப்பது உயிர்களைக் காப்பாற்றுகிறது. ஒவ்வொரு வினாடியும் முக்கியம்,” என்கிறார் டாக்டர் செளகான். கொஞ்சம் தாமதித்தாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும். நோயாளிக்கு ரத்தப்போக்கு ஏற்படலாம், அல்லது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சேதமடையும்.

டெல்லியில் மிக எளிதில் ஆரோக்கியம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இங்கு வாழ்க்கை கடினமானது. இங்கு குடியிருப்பவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தரமற்ற, நெரிசலான பகுதிகளில் வாழ்கின்றனர்.

நகரின் 6,400-க்கும் மேற்பட்ட குடிசைப் பகுதிகளில், 10 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றன. போதுமான காற்றோட்டமான சூழல் இல்லாததால் பருவகால வாழ்வாதார நெருக்கடிகளை இக்குடும்பங்கள் எதிர்கொள்கின்றன. வெயிலில் வேலை செய்யும் ஆண்கள் நோய்வாய்ப்படுகிறார்கள். பாரம்பரிய விறகு அடுப்பு போன்றவற்றுடன் சமையலறை அடுப்புகளில் வேலைசெய்யும் பெண்கள் நோய்வாய்ப் படுகிறார்கள்.

டெல்லியில் என்ன நிலைமை?

டெல்லியில் பசுமையான இடங்கள் குறைவு. கோடை வெயில் உச்சத்தில் இருக்கும்போது, நகரம் முழுவதும் எரியும் உலையாக மாறி, மேலே இருந்து எரியும் வெப்பத்திற்கும் கீழே உள்ள கடல் நிலத்திற்கும் இடையில் சிக்கிக் கொள்கிறது.

RHML சிகிச்சை மையத்தில் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட ஒரு தினசரி கூலித் தொழிலாளியின் மனைவி அஞ்சனா குமாரி, 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தித்தாளிடம், தங்கள் குடிசை வீட்டில் இருந்த ஒரே மின்விசிறி மின்வெட்டு காரணமாக வேலை செய்யவில்லை என்று கூறினார்.

திங்கட்கிழமை நாள் முழுவதும் வேலை செய்து களைத்துப்போன அவரது கணவருக்குத் தூக்கம் வரவில்லை. பின்னர், அவருக்கு வலிப்பு, வாந்தி, மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இரவில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். "சிறிது நேரம் அவரால் நடக்க முடியாது என்றும், அதிக கவனிப்பு தேவை என்றும் மருத்துவர்கள் என்னிடம் கூறினர்," என்று குமாரி கூறினார்.

வெளியில் வேலை செய்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். டெல்லியில் தெருவோர வியாபாரிகளுக்கு வெப்பத்தின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பது குறித்த புதிய கிரீன்பீஸ் (Greenpeace) கணக்கெடுப்பில், பதிலளித்தவர்களில் பெரும்பாலோர் வெப்பமான வானிலை காரணமாக உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறியுள்ளனர். எரிச்சல் உணர்வு பொதுவாக அனைவருக்கும் ஏற்படுகிறது (73.44%), அதைத் தொடர்ந்து தலைவலி, நீரிழப்பு, தோல் பிரச்னை, சோர்வு மற்றும் தசைப்பிடிப்பு ஆகியவை ஏற்படுகிறது என்கின்றனர். பணப் பற்றாக்குறை காரணமாக மருத்துவச் சேவையை அணுகுவதில் பெரும்பாலானோர் சவால்களை எதிர்கொள்கின்றனர்.

“வெப்பத்தின் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரிக்கிறது. நாங்கள் திறந்த வானத்தின் கீழ் வாழ்கிறோம். அருகில் சில மரங்கள் மற்றும் செடிகள் இருந்தால், கொஞ்சம் குளிர்ந்த காற்று வீசும். உடலுக்குச் சிறிது நிவாரணம் கிடைக்கும்,” என்று கரும்புச் சாறு விற்கும் தொழிலாளி குட்டி கிரீன்பீஸிடம் கூறினார்.

“பகல் முழுவதும் வெயிலின் உஷ்ணத்தில் இருந்த எனக்கு இரவு உணவு சாப்பிட மனமில்லை. கால்களை நீட்டி நிம்மதியாக தூங்க வேண்டும் போல இருக்கிறது,” என்கிறார்.

அதிகம் பாதிக்கப்படும் எளிய மக்கள்

இந்தியா முழுவதும் வெப்பத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ரேபிட் இன்சைட்ஸ் மையம் (Centre for Rapid Insights) நடத்திய புதிய நாடு தழுவிய கணக்கெடுப்பு வெப்ப அலைகள் மக்களை எவ்வாறு பாதிக்கின்றன, உற்பத்தித் திறனை எவ்வாறு முடக்குகின்றன, என்பது பற்றிய சில திடுக்கிடும் புரிதல்களை வழங்குகிறது.

கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 45% குடும்பங்கள் கடந்த மாதம் வெப்பத்தால் குறைந்தது ஒரு குடும்ப உறுப்பினராவது நோய்வாய்ப்பட்டதாகக் கூறினர்.

பாதிக்கப்பட்டவர்களில், 67%-க்கும் அதிகமான குடும்ப உறுப்பினர்கள் ஐந்து நாட்களுக்கும் மேலாக உடல்நலப் பிரச்னைகளைச் சந்தித்துள்ளனர்.

குறிப்பாக, ஏழை மக்களிடையே இந்த பாதிப்பு அதிகமாக இருந்தது. இருசக்கர வாகனம் பயன்படுத்தும் 32.5% குடும்பங்களும், வாகனங்கள் இல்லாத 28.2% குடும்பங்களும் ஐந்து நாட்களுக்கும் மேலாக குடும்ப உறுப்பினர்கள் உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டதாக கூறுகின்றனர். கார்கள் உள்ள குடும்பங்களில் இந்த எண்ணிக்கை 21.8%-க்கு குறைவாக இருந்தது.

இந்தியாவில் இருக்கும் மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள் கட்டுமானம் மற்றும் சுரங்கம் போன்ற வெயிலில் வெளிப்படும் வேலைகளில் பணிபுரிகின்றனர். பகலில் வெளிச் சூழலில் வேலை செய்ய வேண்டி இருப்பதால், வெப்ப அலைகளின் போது அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

2021-ஆம் ஆண்டில் அதிக வெப்பம் காரணமாக இந்தியாவில் 16,720 கோடி தொழிலாளர் மணிநேரங்கள் (labour hours) இழப்பு ஏற்பட்டுள்ளதாக லான்செட் ஆராய்ச்சி இதழ் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

"இந்த உற்பத்தி இழப்பு திகைக்க வைக்கிறது," என்கிறார் ரேபிட் இன்சைட்ஸ் மையத்தின் இயக்குநர் நீலாஞ்சன் சிர்கார்.

‘நிலைமை இன்னும் மோசமாகும்’

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 1992 மற்றும் 2019-க்கு இடையில் வெப்ப அலையால் 25,000-க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். இறப்பு விவரங்களை இந்தியா சரியாக தொகுக்காததால், உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவின் வெப்ப மேம்பாட்டுத் திட்டங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. கிரீன்பீஸ் ஆய்வின்படி, டெல்லியில் 68% தெருவோர வியாபாரிகள் வெப்ப அலைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்கள்.

ஆயினும்கூட, 'வெப்ப அவசர நிலை' நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை.

“வெப்ப அலையை இயற்கையின் நீடித்த செயலாக பலர் பார்க்கிறார்கள், அரசாங்கம் தலையிட வேண்டும் என்று பலர் எதிர்பார்க்கவில்லை. இது இந்தியாவில் பெரிய பிரச்னைக்கு தீர்வுகள் இல்லாத நிலையை பிரதிபலிக்கிறது," என்று சிர்கார் கூறுகிறார்.

டெல்லியில் நிலைமை மோசமாக உள்ளது. 2022-ஆம் ஆண்டில், இந்தியா 203 வெப்ப அலை நாட்களைக் கண்டது. இவை பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை கொண்ட நாட்களின் எண்ணிக்கை ஆகும். டெல்லி மட்டும் 17 வெப்பநிலை நாட்களை அனுபவித்தது. வானிலைத் துறையால் பதிவு செய்யப்பட்ட இந்தியாவின் வெப்பமான மாதமாக மார்ச் குறிக்கப்பட்டது. அதே நேரத்தில் டெல்லியில் 72 ஆண்டுகளில் இரண்டாவது வெப்பமான மாதமாக ஏப்ரல் இருந்தது.

"நிலைமை இன்னும் மோசமாகப் போகிறது. நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்," என்கிறார் டாக்டர் சௌகான்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)