You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின் இதயத்தின் திறனை அதிகரிக்கும் கருவி - எவ்வாறு செயல்படும்?
- எழுதியவர், ஜிம் ரீட்
- பதவி, பிபிசி செய்தியாளர்
பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மென்மையான அதிர்வலைகள் (Shock wave) கொடுப்பது நோயாளிகளின் இதய திசுக்களை மீண்டும் உருவாக்க உதவும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆஸ்திரியாவில் 63 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அதிர்வலைகளை கொண்ட புதிய சிகிச்சையைப் பெற்றவர்களால் அதிக தூரம் நடக்க முடிந்தது.
இன்ஸ்ப்ரூக் மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜோஹன்னஸ் ஹோல்ஃபெல்ட் கூறுகையில், "முதன்முறையாக ஒரு மருத்துவ அமைப்பின் உதவியுடன் இதயத் தசைகள் மீண்டும் உருவாக்கப்படுவதை நாங்கள் காண்கிறோம், இந்தச் சிகிச்சை பல கோடி மக்களுக்கு உதவக்கூடும்," என்றார்.
ஆராய்ச்சியாளர்களால் 'ஸ்பேஸ் ஹேர்டிரையர்' (Space hairdryer) என்று அழைக்கப்படும் இந்தச் சாதனம் குறித்த கூடுதல் ஆய்வுகள் நடத்தப்பட உள்ளது. தற்போது அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை வைத்துப் பரிசோதித்து அதன் விளைவுகளைப் பதிவிடும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதய திசுக்களின் வளர்ச்சியைத் தூண்டும் சிகிச்சை
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும், இதய நோய் அல்லது பிற இதய சிக்கல்களால், உலகம் முழுவதும் 1.8 கோடி மக்கள் உயிரிழக்கின்றனர்.
உயர் ரத்த அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு முறை, மது மற்றும் புகையிலை பயன்பாடு உள்ளிட்டவை இதய நோய் ஏற்படுத்தும் ஆபத்துக் காரணிகளாக கூறப்படுகிறது.
உலகில் மிகப் பெரியளவில் மரணங்களை ஏற்படுத்தும் தீவிர இதய நோய்க்கு அறியப்பட்ட சிகிச்சைகள் இல்லை.
மாரடைப்பு என்பது உறுப்புகளுக்கான ரத்த விநியோகம் திடீரென துண்டிக்கப்படும் போது ஏற்படும் நிலை ஆகும். மருந்துகள் மற்றும் பிற சிகிச்சைகள் நோயைக் கட்டுப்படுத்தவும் மாரடைப்புக்கான வாய்ப்புகளைக் குறைக்கவும் முடியும். ஆனால் நிரந்தரத் தீர்வாக அவை இருக்காது.
நோய் தீவிரமடையும் பட்சத்தில் மருத்துவ நிபுணர்கள் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்கின்றனர். அறுவை சிகிச்சை நிபுணர்கள் மார்பு, கால் அல்லது கை பகுதியிலிருந்து ஆரோக்கியமான ரத்தக் குழாயை எடுத்து, இதயப் பகுதியின் அடைப்பட்ட தமனிக்கு மேலேயும் கீழேயும் இணைத்து அறுவை சிகிச்சை செய்கிறார்கள். இந்த மருத்துவச் செயல்முறையைத் தான் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை (heart bypass) என அழைக்கப்படுகிறது.
ஆனால் இந்த அறுவை சிகிச்சை இதயத்தைப் பாதுகாக்குமே தவிர அதன் செயல்பாட்டை மேம்படுத்தாது.
ஆஸ்திரியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அப்பகுதிகளில் லேசான ஒலி அலைகளைப் (sound waves) பயன்படுத்தி சேதமடைந்த திசுக்களை மீண்டும் உருவாக்க முயற்சித்தனர்.
சுமார் 10 நிமிடங்கள் எடுக்கும் இந்த செயல்முறை, மாரடைப்புக்குப் பிறகு சேதமடைந்த அல்லது தழும்பு இருக்கும் இடத்தில் புதிய திசுக்களின் வளர்ச்சியைத் தூண்டும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோன்ற 'ஷாக் வேவ்' சிகிச்சைகள் ஏற்கனவே விறைப்புத்தன்மை குறைபாடு மற்றும் தசைநார் காயம் போன்ற பிற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்பாட்டில் உள்ளன.
மேலும், ஷாக் வேவ் லித்தோட்ரிப்சி (SWL) என்னும் சிகிச்சையில் சிறுநீரகக் கற்களை இலக்காகக் கொண்ட அதிர்ச்சி அலைகள் (Shock waves) அவற்றை துண்டுகளாக உடைக்கின்றன.
'ஐரோப்பிய ஹார்ட் ஜர்னல்' எனும் மருத்துவச் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், பைபாஸ் நோயாளிகளில் பாதி பேர் பொது மயக்க மருந்துகளின் கீழ் ஒலி அலை சிகிச்சையைப் பெற்றனர், மற்றவர்கள் போலி அறுவை சிகிச்சைக்கு (sham procedure) உட்படுத்தப்பட்டனர்.
‘ஆயுட்காலம் அதிகரிக்கலாம்’
அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு வருடம் கழித்து, இதயத்தின் திறன் அதிகரித்து, பம்ப் செய்யப்பட்ட ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்தத்தின் அளவு அதிகரித்தது:
- அதிர்வலைகள் கொடுக்கப்பட்டக் குழு - 11.3% அதிகரிப்பு
- கொடுக்கப்படாதக் குழுவில் - 6.3% அதிகரிப்பு
அதிர்வலை கொடுக்கப்பட்ட நோயாளிகளால் ஓய்வெடுக்காமல் முன்பைவிட நீண்டதூரம் நடக்க முடிகிறது என்றும் ஆரோக்கியம் அதிகரித்ததாகவும் தெரிவித்தனர்.
"அவர்களால் தங்கள் செல்லப்பிராணியுடன் மீண்டும் நடைப்பயிற்சி செல்ல முடிகிறது. அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பல்பொருள் அங்காடிக்கு சென்று வர முடிகிறது" என்று பேராசிரியர் ஹோல்ஃபெல்ட் கூறினார்.
"அவர்களது ஆயுட் காலம் அதிகரித்திருக்கும். மேலும் அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்றார்.
பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனின் இணை மருத்துவ இயக்குநர் டாக்டர் சோனியா பாபு-நாராயண், இதய நோய்க்கு தற்போது சிகிச்சை அளிக்கும் விதத்தில் 'முன்னேற்றத்திற்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது' என்று கூறினார்.
"இந்தச் சோதனையில் உற்சாகமான விஷயம் என்னவென்றால், ஒரு வருடம் கழித்து, அறுவை சிகிச்சையின் போது இதயத்திற்கு அதிர்வலை சிகிச்சையைப் பெற்றவர்கள் சிறந்த இதயச் செயல்பாடு மற்றும் குறைவான அறிகுறிகளைக் கொண்டிருந்தனர்," என்று அவர் கூறினார்.
"மேலும் இந்தப் புதிய சிகிச்சையின் நீண்ட கால விளைவுகளை ஆராய்ச்சி செய்ய பெரிய மற்றும் நீண்ட சோதனைகள் தேவை," என்றார்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய ஒழுங்குமுறை நிர்வாகிகள் இந்த 'ஷாக் வேவ்' சாதனத்தை அங்கீகரிப்பார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். 2025-ஆம் ஆண்டு அனைத்து நோயாளிகளுக்கும் இந்தச் சிகிச்சை முறை பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆய்வுக்கு ஆஸ்திரிய அரசாங்கத் தரப்பு, அமெரிக்க தேசிய இதயம், நுரையீரல் மற்றும் ரத்த அமைப்பு (the US National Heart, Lung and Blood Institute) நிதியளித்தது, இன்ஸ்ப்ரூக் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட நிறுவனம் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு ஆகியோரும் நிதி அளித்தனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்,எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)