600 ஆண்டுகளுக்கு முன் 64 ஆண் குழந்தைகளை பலியிட்ட மாயன் இன மக்கள் - ஏன்?

    • எழுதியவர், அன்டோனியோ கோன்சாலஸ்-மார்ட்டின் மற்றும் அலிசியா போர்டெலா எஸ்டெவ்ஸ்
    • பதவி, தி கான்வேர்சேஷன்

600 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டம் அது.

யுகடான் தீபகற்பத்தில் (இன்றைய மெக்சிகோவின் தெற்குப் பகுதி) மாயன் இன மக்களின் வியத்தகு பண்டைய நகரமான சிச்சென் இட்சாவில் கிட்டத்தட்ட 64 குழந்தைகள் கடவுள்களுக்கு பலியிடப்பட்டனர். இது அப்பகுதி ஸ்பானிய காலனியாதிக்கத்தின் கீழ் வருவதற்கு முன் நடந்தது.

இந்த மரணங்கள் பற்றி கேள்விப்படுவது இன்று நமக்கு பயங்கரமானதாக தோன்றினாலும், அவர்களின் எலும்புகளின் தொல் மரபணுவியல் (paleogenetic) பகுப்பாய்வை பார்க்கும் போது, அமெரிக்காவின் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் புதிரான ஒரு கலாச்சாரத்தைப் பற்றிய மதிப்புமிக்க தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன.

இதற்காக நாம் புகழ்பெற்ற 'நேச்சர்’ ஆய்வு இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆராய்ச்சிக் கட்டுரைக்குத்தான் தான் நன்றி சொல்ல வேண்டும்.

11 அல்லது 12-ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட 'டிரெஸ்டன் மாயன் கோடெக்ஸ்' (Dresden Mayan codex) என்னும் பண்டைய புத்தகம், ஹெர்னான் கோர்டெஸ் என்பவரால் 1519-இல் ஸ்பெயினின் மன்னர் முதலாம் சார்லஸுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டதாக நம்பப்படுகிறது.

1517-ஆம் ஆண்டில், ஆய்வாளர் பிரான்சிஸ்கோ ஹெர்னாண்டஸ் டி கோர்டோபா (1467 - 1517) மாயன் இன மக்கள் வசிக்கும் யுகடான் தீபகற்பத்தை (மெக்சிகோ) கண்டுபிடித்தார். இது சிறப்புமிக்க கண்கவர் கட்டிடக்கலையைக் கொண்டிருந்த ஒரு சமூகம். வானியல் மற்றும் கணிதம் பற்றிய ஆழமான அறிவு மற்றும் சிக்கலான எழுத்து முறையை உருவாக்கிய சில அமெரிக்க கலாச்சாரங்களில் இது ஒன்றாக இருந்தது.

பழங்குடியினரால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல சடங்குகள் 16-ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய மனநிலைக்கு புரியாத வகையில் இருந்தது. இது அவர்களை ஆச்சரியப்படுத்தியது.

புனிதக் கிணற்றில் குழந்தைகளின் சடலங்கள்

மாயன் நாகரிகத்தில், புனித நகரமான சிச்சென் இட்சா தனித்து நிற்கிறது. தற்போதைய மெக்சிகோவின் மாநிலமான யுகடானில் அமைந்துள்ள இந்த நகரம், கி.பி. 800 மற்றும் கி.பி. 1,100-க்கு இடையில் கட்டப்பட்டது.

நகரின் வடக்கில் குகுல்கன் (Kukulkan) என்றறியப்பட்ட பாம்புத் தெய்வத்தின் அடையாளமாக விளங்கிய சிறிய கோயில் அமைந்துள்ளது. அங்கு இருக்கும் 'புனிதக் கிணறு' (sacred cenote - 'தியாகத்தின் கிணறு') குழியில் 200-க்கும் மேற்பட்ட நபர்களின் புதைபடிவ எச்சங்கள் கண்டறியப்பட்டன. புதைக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் என்றும் அவர்கள் தெய்வீகக் காரணங்களுக்காகப் பலியிடப்பட்டனர் என்பதும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

புதைக்கப்பட்டுள்ள 64 சிறார்களின் புதைபடிவ எச்சங்கள் பற்றிய ஆய்வு, மாயன் காலக்கட்டத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு சாளரத்தைத் திறக்கிறது. புதைபடிவ எலும்புகளின் பகுப்பாய்வு, மாயன் புராணங்கள், மரபணு உறவுகள், உணவு மற்றும் தியாகம் செய்யப்பட்ட நபர்களின் தோற்றம் ஆகியவற்றைக் குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இந்தப் பழம்பெரும் மீசோ-அமெரிக்கக் (Mesoamerica) கலாச்சாரத்தில் ஐரோப்பியர்களுடனான தொடர்புகள், மக்கள்தொகை, மற்றும் தொற்றுநோயியல் விளைவுகள் ஆகியவற்றை ஆராயவும் நமக்கு உதவுகிறது.

பலி கொடுக்கப்பட்ட ஆண் குழந்தைகளும் இரட்டையர்களும்

சமீப காலம் வரை மாயன் தீக்குளிப்புச் சடங்குகளில் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் பலியாகி இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் தற்போதைய 'தொல்மானிடவியல்' பகுப்பாய்வு முடிவுகள் இந்த நம்பிக்கைக்கு முரணாக உள்ளது.

பகுப்பாய்வு செய்த புதைபடிவங்களில் 64 சிறுவர்களின் மாதிரிகள் கண்டறியப்பட்டன. மேலும், மரபணு ரீதியாக ஒத்துப்போகும் ஒன்பது ஜோடி எச்சங்கள் இருந்தன. அதில் இரண்டு இரட்டையர்களின் புதைபடிவ எச்சங்களும் இருந்தன.

இந்த ஆய்வு முடிவுகள், மாயன் இன மக்கள் ஆண் பிள்ளைகளைப் பலியிடுவதற்குப் பின்பற்றிய சடங்கையும், அவர்கள் உறவுமுறை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.

உயிர்தியாகமும் உயிர்த்தெழுதலும்

மரபணு ரீதியாக ஒரே மாதிரியான உடன்பிறப்புகளின் புதைபடிவங்கள், மாயன் கலாச்சாரத்தில் இரட்டை குழந்தைகளுக்கு சடங்குகளில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.

'Popol Vuh’ என்னும் மாயன்களின் புனித நூலில், இரண்டு இரட்டைக் குழந்தைகள் பாதாள உலகத்திற்குத் தியாகம் செய்யப்பட்டது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. நிலத்தடியில் இருக்கும் பாதாள உலகை நோய் மற்றும் மரணத்தின் கடவுள்கள் வசிக்கும் பகுதியாக அம்மக்கள் நம்பினர்.

அவர்களில் இரண்டாவது இரட்டையர்கள் 'ஹீரோயிக் இரட்டையர்கள்’ என்று அழைக்கப்பட்டனர், என்று இந்நூல் விவரிக்கிறது. மேலும், அவர்கள் இரட்டையர்களின் துண்டிக்கப்பட்ட தலையால் எவ்வாறு பிறந்தார்கள் என்பதையும் கதை விவரிக்கிறது. அவர்கள் பாதாள உலகத்தின் கடவுள்களை ஜெயிக்க தியாகம் மற்றும் உயிர்த்தெழுதல் சுழற்சிகளுக்கு உட்பட்டதை புத்தகம் விளக்குகிறது.

மாயன்களின் அன்றாட வாழ்க்கை

பலியிடப்பட்ட மக்களின் புதைபடிவங்கள், அவர்களது உணவு பழக்கவழக்கத்தையும் விவரிக்கிறது. அவர்களது அடிப்படை உணவு சோளம் என்றும், அதனுடன் நில மற்றும் நீர்வாழ் விலங்குகளின் இறைச்சியையும் உட்கொண்டதாக கூறப்படுகிறது.

மறுபுறம், சில புதைபடிவ மாதிரிகளின் ஆய்வில் உணவுமுறையில் சிறிதளவு மாறுபாடுகளைக் கண்டறிந்துள்ளனர். அவை, அருகில் வசித்த சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுடையது என்பதைத் தீர்மானித்துள்ளது. இருப்பினும் சில விவரங்கள் மத்திய மெக்சிகோவிலிருந்தோ அல்லது ஹோண்டுராஸ் போன்ற தொலைதூர இடங்களிலிருந்தோ தோன்றியிருக்கலாம் என்கின்றனர்.

இந்த ஆய்வு வெளிப்படுத்தும் மற்றொரு விவரம் என்னவென்றால், மரபணு ஒத்திருந்த குழந்தைகளின் உணவுமுறை ஒரே மாதிரியாக இருந்தது. இது அவர்கள் குடும்பச் சூழலில் வளர்க்கப்பட்டதைக் குறிக்கிறது.

மேலும், நெருங்கிய தொடர்புடையவர்களின் புதைபடிவங்களும் கண்டறியப்பட்டன. அவர்கள் ஏறக்குறைய இரட்டையர்களின் வயதை ஒத்து இருப்பதால் அவர்கள் ஒரே நிகழ்வில் பலியிடப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. அதாவது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள், அல்லது இரட்டையர்களால் செய்யப்படும் சடங்கு என்பது தெரிகிறது.

கடந்த 500 ஆண்டுகளில் இப்பகுதியில் முக்கியமான கலாசார மற்றும் மக்கள்தொகை மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைய மற்றும் தற்போதைய மாயன் மக்களுக்கு இடையே மரபணு தொடர்ச்சி உள்ளது என்பதையும் முடிவுகள் நிரூபிக்கின்றன.

இவற்றுள் கணிசமான வேறுபாடுகள் உள்ளன, ஆனாலும் மாதிரிகள் அனைத்தும் ஐரோப்பியத் தொடர்பு ஏற்படுத்திய ஆழமான தாக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய மாயன் மக்கள்தொகையில் ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க மரபணுக்கள் 7% மற்றும் 0.03% என்ற அளவீட்டில் உள்ளன. இந்த இனக்கலப்பு (miscegenation) சமச்சீரற்ற முறையில் உள்ளது. அதாவது, பெரும் அளவிலான வெளிநாட்டு ஆண்கள் மற்றும் பூர்வகுடிப் பெண்களுக்கு இடையே நடந்த இனக்கலப்பில் பெரும்பாலான மக்கள் குழு உருவாகி உள்ளதை இது பிரதிபலிக்கிறது.

ஐரோப்பியர்கள் தொடர்பான போர்கள், பஞ்சங்கள் மற்றும் தொற்றுநோய்களும் மாயன் இனத்தில் வியத்தகு மக்கள்தொகை தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உயிர்வாழும் விதிகள்

பிற்காலத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் மாயன் இன மக்கள் மத்தியில் மற்ற மறைமுக விளைவுகளை ஏற்படுத்தியது.

எடுத்துக்காட்டாக, தற்போதைய மாயன் மக்கள்தொகையில், காலனித்துவக் காலத்திலிருந்து அவர்கள் அனுபவித்த பஞ்சங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் தொடர்பில்லாத, கொழுப்பு வளர்சிதை மாற்றம் மற்றும் கருவுறுதல் தொடர்பான மரபணுக்கள் உள்ளன.

1545-ஆம் ஆண்டில் மீசோ-அமெரிக்காவை நாசப்படுத்திய பயங்கரமான கோகோலிஸ்டி தொற்றுநோயை ஏற்படுத்திய பாக்டீரியாவான 'சால்மோனெல்லா என்டெரிகா'வுக்கு எதிராக, குறிப்பாக தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும் நோயெதிர்ப்பு அமைப்பு கொண்ட மரபணுக்களும் தற்போதைய மாயன் இன மக்களிடம் கண்டறியப்பட்டுள்ளன.

எனவே, 'நேச்சர்' இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு, தற்போதைய மானுடவியல் ஆராய்ச்சி நுட்பங்கள் எவ்வாறு கடந்தகால மக்கள்தொகையின் உயிரியலைப் படிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் கலாச்சாரத்தின் மறுகட்டமைப்பு பற்றி அறிந்து கொள்ளவும் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)