You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
50,000 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த இந்த ராட்சத வாத்து என்ன சாப்பிட்டது தெரியுமா?
- எழுதியவர், நியா ப்ரைஸ்
- பதவி, பிபிசி நியூஸ்
ஆஸ்திரேலியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த 'ராட்சத வாத்து' ஒன்றின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த எலும்புகள் ஏற்கனவே அழிந்துபோன 230 கிலோ எடையுள்ள உயிரினத்துக்கு சொந்தமானது. மேலும் இது ஈமு கோழியின் எடையை விட ஐந்து மடங்கு அதிகமானது.
45,000 முதல் 50,000 ஆண்டுகள் வரை பழமையான இந்த புதைபடிவமே, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 'ஜெனியோர்னிஸ் நியூடன்' (Genyornis newton) அந்த என்ற உயிரினத்தின் மண்டை ஓடுகளில், முழுமையான மண்டை ஓடு ஆகும் .
ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 'இந்த பிரமிக்க வைக்கும் அரிய கண்டுபிடிப்பு' அந்தப் பறவை எப்படி இருந்தது என்பது குறித்த நுண்ணிய விவரங்களை நாம் அறிந்துக் கொள்ள உதவும் என்கின்றனர்.
'ஆச்சரியமான கண்டுபிடிப்பு'
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் உள்ள ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் ஃபீபி மெக்இனர்னி 'ஹிஸ்டாரிகல் பயாலஜி' இதழிடம் பேசுகையில், "இது ஒரு முழுமையான மண்டை ஓடு என்பதை உணர்வதே மிகவும் திருப்திகரமாக இருந்தது," என்றார்.
" 'அடக் கடவுளே, இது ஆச்சரியமாக உள்ளது - நாங்கள் உண்மையில் உண்மையாகவே இந்த உயிரினத்தின் ஒரு முழு மண்டையோட்டைக் கண்டுபிடித்துள்ளோம்,' என்று நான் நினைத்தேன்,” என்றார்.
"128 ஆண்டுகளாக ஜெனியோர்னிஸ் இனம் அறியப்பட்டு வருகிறது. ஆனால், இப்போதுதான் உண்மையில் அதற்கான ஒரு முழுமையான மண்டை ஓடு கிடைத்துள்ளது,” என்றார்.
2019-ஆம் ஆண்டில், தெற்கு ஆஸ்திரேலியாவின் புறநகர்ப் பகுதியான கல்லாபொன்னம் ஏரியின் வறண்ட படுகைகளில் பறவையின் முழு உடலுடன் இணைக்கப்பட்ட 32 சென்டிமீட்டர் மண்டை ஓடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஒருகாலத்தில் இங்குள்ள சேற்றில் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் சிக்கி உயிரிழந்துள்ளன.
இந்தப் பறவையின் மற்றொரு மண்டை ஓடாக அறியப்படும் புதைபடிவம் 1913-ஆம் ஆண்டு மிகவும் சேதமடைந்த நிலையில், அதன் அசல் எலும்பின் சிறு பகுதிகளே கிடைத்தன. எனவே, அதிலிருந்து பெரியளவு தகவல்களை சேகரிக்க முடியவில்லை.
ஆனால் இந்தச் சமீபத்திய கண்டுபிடிப்பின் மூலம் இந்த ராட்சத பறவைகளுக்குக் கீழ்காணும் உறுப்புகள் இருந்ததை அறிந்துக் கொள்ள உதவுகிறது.
- பெரிய மண்டை ஓடு
- பெரிய மேல் மற்றும் கீழ் தாடைகள்
- இயல்புக்கு மாறான தலைக்கவசம் போன்ற அமைப்பு கொண்ட தலைப்பாகம்
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
'பார்க்க மிகவும் அழகான பறவை'
இந்தப் பறவைகளுக்கு வாயை மிகப் பெரியதாகத் திறக்கும் திறனும், உணவுகளை வலுவாகக் கடிக்கும் அளவிற்கான தாடை மற்றும் பல் அமைப்புகள், மென்மையான பழங்கள் மற்றும் தாவரங்களை அரைக்கும் அளவிற்கான வாய் அமைப்புகளும் இருந்துள்ளன.
ஜெனியோர்னிஸ் நியூடோனி இனம், ஆஸ்திரேலியாவின் மாக்பி வாத்துகளுடன் தொடர்புடைய ஒரு இனமாகும். ஆனால் அவற்றிற்கு முன்பே தனி வகையறாவில் பரிணாம வளர்ச்சி அடைந்த ஒரு உயிரினம். மேலும் தென் அமெரிக்க ஸ்க்ரீமர் இனங்களுடன் இவை மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளன.
“மற்ற உயிரினங்களுடனான இந்தப் பறவையின் உறவு என்ன என்பதை கண்டுபிடிப்பது சிக்கலானது. ஆனால் இந்தப் புதிய கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்களுக்குப் புதிரை ஒன்றாக இணைக்க உதவியது. இந்தப் புதிய ஆதாரங்கள் இது ஒரு பெரிய வாத்து இனம் என்ற முடிவைத் தருவதாக,” என அவர் கூறுகிறார்.
ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பெரிய மற்றும் பறக்க முடியாத மிஹிருங்ஸ் அல்லது தண்டர் பறவைகள், சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனிதர்கள் வந்தபோது, பல்லிகள் மற்றும் கங்காருக்கள் உட்பட மற்ற ராட்சத உயிரினங்களைப் போலவே வெளியில் சுற்றித் திரிந்தன.
இந்த 'வித்தியாசமான மற்றும் அற்புதமான' பறவையின் அளவு மற்றும் தோற்றம் அதை 'பார்க்க மிகவும் அழகானதாக' மாற்றியிருக்கும் என்று முனைவர் மெக்இனர்னி கூறுகிறார்.
நவீன தொழில்நுட்பம் மூலம், சுமார் 2மீ (6 அடி) பறவையின் துல்லியமான வடிவமைப்பை மீட்டுருவாக்கிய ஜேக்கப் பிளாக்லேண்ட் பேசுகையில், "நவீன பறவைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம், புதைபடிவங்களில் கிடைக்கும் உடல் பாகங்களைக் கொண்டு அந்தப் பறவைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முடிகிறது" என்கிறார்.
இந்த ராட்சதப் பறவைகள் நீர்வாழ் வாழ்விடங்களுக்கு ஏற்றார் போல பல வழக்கத்திற்கு மாறான பண்புகள் மற்றும் உறுப்புகளை வளர்த்துக் கொண்டுள்ளதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நீரில் மூழ்கும்போது அவற்றின் காதுகள் மற்றும் தொண்டையை தண்ணீரிலிருந்து பாதுகாக்கும் அமைப்புகள் அவற்றிடம் காணப்படுகின்றன.
வடக்கு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் தற்போது காணப்படும் நீர்நிலைகள், சுமார் 45,000 ஆண்டுகளுக்கு முன்பு நன்னீராக இருந்து, பின்னர் உப்பு நீராக மாறியதே இவற்றின் அழிவுக்கு வழிவகுத்திருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.
பிராங்பேர்ட் சென்கென்பெர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் பறவையியல் வல்லுனரான டாக்டர் ஜெரால்ட் மயர், பறவைகளின் மண்டை ஓடுகள் புதைபடிவங்கள் 'அற்புதமானவை மற்றும் அரிதானவை' என்றும், இந்த 'அசாதாரண கண்டுபிடிப்பு' அந்தக் காலத்தில் ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் அமைப்புக்குள் ராட்சத பறவைகள் ஆற்றிய பங்கைப் பற்றிய புரிதலை வழங்கியதாகவும் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)