You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாய் பிஸ்கட் சாப்பிட்டு, 15 மாதம் நிர்வாணமாக தனிமையில் கழித்த நபர் என்ன ஆனார்?
- எழுதியவர், ஸ்டீவன் மெக்கின்டோஷ்
- பதவி, பொழுதுபோக்கு செய்தியாளர்
ஜப்பானில் 1998-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 'ரியாலிட்டி ஷோ' டிவி நிகழ்ச்சி ஒன்றுக்காக, ஒரு நபர் நிர்வாணமாக்கப்பட்டு, ஆள் யாரும் இல்லாத வீட்டில் தனியாக விடப்பட்டார்.
'நசுபி' என்று அறியப்படும் டோமோக்கி ஹமட்சு என்ற அந்த நபரிடம் ஒரு பேனா, சில அஞ்சல் அட்டைகள், ஒரு தொலைபேசி, மற்றும் ஓர் அலமாரி முழுக்க பத்திரிகைகள் மட்டுமே இருந்தன.
ஆனால், அவற்றை படித்து முடிப்பதற்காக அவர் அங்கு விடப்படவில்லை. அந்த ரியாலிட்டி நிகழ்ச்சியின் சவாலே, அந்தப் போட்டியில் அவர் வெல்லும் பரிசுகளை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு மனிதரால் தனியாக உயிர்வாழ முடியுமா என்பதைக் கண்டறிவதுதான்.
அந்தச் சவாலில் வெல்வதற்கு, அவர் வெல்லும் பரிசுகளின் மதிப்பு ஒரு குறிப்பிட்ட வரம்பை எட்ட வேண்டும். அதாவது 1 மில்லியன் யென் அளவு மதிப்பிலான பரிசுகளை அவர் வென்றிருக்க வேண்டும். அந்தச் சமயத்தில் அதன் மதிப்பு 6,000 பவுண்ட் ஆகும். தற்போது இதன் இந்திய மதிப்பு 6,36,000 ரூபாய் ஆகும்.
புதிய ஆவணப்படம்
இந்தச் சவாலுக்காக, நசுபி 15 மாதங்களுக்கு வெளியே செல்லவோ அல்லது வெளியுலகத்தோடு தொடர்பு கொள்ளவோ அனுமதிக்கப்படவில்லை. இதனால், நீண்டநாள் பசி மற்றும் தனிமை காரணமாக அவரது மனநிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.
இது நடந்து 30 ஆண்டுகள் கடந்த நிலையில், நசுபியின் இந்த அனுபவம் குறித்து எடுக்கப்பட்ட ஆவணப்படம் சமீபத்தில் நடைபெற்ற ஷெஃபீல்ட் ஆவணப்பட விழாவில் திரையிடப்பட்டது. இது உலகளவில் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
"நான் வேறொரு திட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, எதிர்பாரத விதமாக வேறு ஒரு லிங்கை கிளிக் செய்த போது தான் நசுபியின் கதையை தெரிந்துக் கொண்டேன்,” என்று 'தி கன்டெஸ்டண்ட்' (The Contestant) என்ற அந்த ஆவணப்படத்தின் இயக்குநர் கிளேர் டைட்லி நினைவு கூர்ந்தார்.
"ஆனால் இணையத்தில் நசுபி குறித்து நான் தேடி கிடைத்த எதுவுமே அவரைக்குறித்து ஆழமாக தெரிந்து கொள்ள உதவவில்லை. அவர் ஏன் அந்த வீட்டுக்குச் சென்றார்? இதனால் அவருக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் என்னுள் இருந்தது. அதனால், அவரை பற்றி ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் நேரடியாக அவரையே தொடர்பு கொண்டேன்,” என்கிறார்.
ரியாலிட்டி ஷோக்களின் முன்னோடி
இந்த நிகழ்ச்சிக்காக ஒரு 'ஓப்பன் ஆடிஷன்' மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நசுபிக்கு, தனது செயல்கள் காட்சிப்படுத்தப்படுவது குறித்து தெரியும். ஆனால், அவை எப்போது முடியும் என்பது குறித்த தகவல்கள் தெளிவாகத் தெரியவில்லை. மேலும், இவை ஒளிபரப்பப்படாது என்ற மனநிலையை இது அவருக்கு தந்தது.
அப்போது 22 வயதாகியிருந்த நசுபி வேகமாகவே நாட்டின் பிரபலமான நபராக மாறினார். இவர் முன்னேறும் ஒவ்வொரு வாரமும், டென்பா ஷோனென் (Denpa Shōnen) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகுதிகளாக ஒளிபரப்பானது.
பெரும்பாலும் விமர்சகர்கள் இந்நிகழ்ச்சியை வெறுத்தாலும், இது இளம் பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது.
இந்த நிகழ்ச்சி ஜிம் கேரி நடித்து வெளியான 'தி ட்ரூமன் ஷோ' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ஒளிபரப்பாகத் தொடங்கியது.
மேலும், இது ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் புது சகாப்தத்தைத் தொடங்கி வைத்த 'பிக் பிரதர்' நிகழ்ச்சி நெதர்லாந்தில் தொடங்குவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே ஒளிபரப்பானது.
என்னதான் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு முன்னோடியாக இந்தத் தொடர் ஒளிபரப்பாகியிருந்தாலும் கூட ஜப்பானைத் தாண்டி இந்த நிகழ்ச்சிக்குப் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை.
"ஒருவேளை கடந்த தசாப்தத்தில் யூட்யூப் போன்ற தளங்கள் பரவலாக இருந்திருந்தால், இந்த நிகழ்ச்சி குறித்தும் பலதரப்பட்ட மக்கள் அறிந்திருப்பார்கள் என்று நினைக்கிறன்," என்று டைட்லி பிபிசியிடம் கூறினார்.
"ஆனால் அந்த நேரத்தில், இது ஜப்பான் மற்றும் தென் கொரியாவிற்கு வெளியே ஒளிபரப்படவில்லை. அப்படி உலகம் முழுவதும் அதை ஒளிபரப்பும் திட்டமும் இல்லை,” என்கிறார்.
இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்ட போது காமெடியனாக இருந்த நசுபி, இந்தச் சவாலில் குறித்து ஓரளவு அறிந்து வைத்திருந்தார்.
ஜன்னலே இல்லாத ஒரு அறையில், உடைகளோ அல்லது அடிப்படைத் தேவைகளோ இல்லாமல், கழிப்பறை காகிதம் கூட இல்லாமல், வெளி உலகோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் அவர் விடப்பட்டார்.
படம் எப்படித் தயாரிக்கப்பட்டது?
'தி கன்டெஸ்டண்ட்' ஆவணப்படத்தில், நசுபி மற்றும் இந்த நிகழ்வின் தயாரிப்பாளரான டோஷியோ சுச்சியா ஆகிய இருவரின் நேர்காணல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்த நிகழ்ச்சியைக் காட்சிப்படுத்திய ஜப்பானைத் தளமாகக் கொண்ட முன்னாள் பிபிசி செய்தியாளர் உட்பட சிலரின் நேர்காணல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளக்.
ஆனால், இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான சமயத்தில், தொலைக்காட்சி பார்வையாளர்கள் நசுபியின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் எப்படி ஆர்வமாகப் பார்த்தார்களா, அதேபோல் இந்த ஆவணப்படத்திளும் காட்சிகள் அதிகம் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்காகத் தானும், தனது குழுவும் முன்பு காட்சிப்படுத்தப்பட்ட அசல் காட்சிப்பதிவுகளை முழுமையாகப் பார்த்து, அதன் சிறு நுணுக்கங்களையும் குறிப்பெடுத்து, கதைக்குத் தேவையான வகையில் பணியாற்றியுள்ளதாக டைட்லி கூறுகிறார்.
"அசல் காட்சிகள் முழுவதும் ஜப்பானிய கிராபிக்ஸால் நிறைந்திருந்தது. இதில் ஜப்பானிய விவரிப்பு, பதிவு செய்யப்பட்ட சிரிப்பு, ஒலிகள் ஆகியவையும் அடங்கும். எனவே ஆங்கிலம் பேசும் பார்வையாளர்களும் புரிந்துக் கொள்ளும் வண்ணம் அதை உருவாக்க முயற்சி செய்தோம்,” என்கிறார் டைட்லி.
இதற்காக இந்தக் குழு ஜப்பானிய கிராபிக்ஸ்களை ஆங்கிலத்திற்கு இணையானவைகளுடன் மாற்றியமைத்தது. மேலும் ஆடியோவை தங்களால் முடிந்தவரை துல்லியமாக அதேபோல் மீட்டுருவாக்கம் செய்தது. அசல் விரிப்பை மொழிபெயர்க்க, ஒரு ஆங்கில விவரிப்பாளர் பயன்படுத்தப்பட்டுள்ளார்.
இதன் விளைவாக இந்த ஆவணப்படம் ஏற்கனவே அமெரிக்காவில் 'ஹுலு' ஓ.டி.டி தளத்தில் வெளியிடப்பட்டது. நசுபியின் இந்தக் கதை விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தது.
'தி கண்டஸ்டண்ட்' ஆவணப்படம், "அதன் வசீகரிக்கும், சிந்தனையைத் தூண்டும் ஆழமான விவரிப்புகளால் பார்வையாளர்களை ஈர்க்கிறது," என்று ,ரோலிங் ஸ்டோன்' பத்திரிகையின் டேவிட் ஃபியர் கூறியுள்ளார்.
"இது ஊடக இயல்பு, ஒரு ரியாலிட்டி டிவியின் அம்சம் மற்றும் உளவியலின் தீவிரம் ஆகியவற்றைப் பொழுதுபோக்காகத் தொகுக்கப்பட்டுள்ள ஒரு ஆவணப்படம். இதில் நீங்கள் பார்ப்பது அனைத்துமே 100% உண்மை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனாலும், உங்கள் மூளையால் நீங்கள் பார்ப்பதை நம்பமுடியாது,” என்கிறார்.
நாய் உணவு, நிர்வாணம்
இண்டிவயர் (IndieWire) பத்திரிகையின் டேவிட் எர்லிச், அசல் காட்சிகளை, 'மிகத் தீவிரமான சேடிஸ்டிக் காட்சிகள்' என்றும், புதிதாக மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ள காட்சிகள் அவற்றுடன் போராடுவதாகவும் கூறுகிறார்.
"படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பழைய நிகழ்வுகள் குறித்த நேர்காணல்கள், இயல்பானதாகவும், சிந்தனைமிக்கதாகவும் இருக்கும் அதேவேளையில், நசுபி எதிர்கொண்ட சவாலின் அசல் வீடியோக்கள் பார்வையாளர்களின் கவனத்தை இருத்தி வைக்கிறது," என்று அவர் கூறியுள்ளார்.
"டைட்லியின் ஆவணப்படமானது, ஊடகத்தின் பரந்துபட்ட சிக்கல்கள் மீதான பார்வையை செலுத்துவதை விட, அதன் ஒரு குறிப்பிடத்தகுந்த விஷயம் மீதும் ஆய்வை முன்வைத்திருக்கிறது,” என்கிறார்.
இந்த ரியாலிட்டி நிகழ்ச்சி முன்னேறிச் செல்லச் செல்ல, நசுபி கலந்துகொண்ட பல்வேறு போட்டிகளிலும் பரிசுகளை வெல்லத் தொடங்கினார். ஆனால், அவை பெரிதும் அவருக்கு உதவவில்லை.
அவற்றில் டயர்கள், கோல்ஃப் பந்துகள், கூடாரம், பூகோளத்தின் மாதிரி பொம்மை, ஒரு டெட்டி பியர் பொம்மை மற்றும் படத்திற்குச் செல்வதற்கான டிக்கெட்கள் ஆகியவை இருந்தன.
உண்மையில், அவர் நாளுக்கு நாள் பலவீனமடைந்து வந்தது நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களைக் கவலையடையச் செய்ததாகவும், அவர் வென்ற பரிசுகளில் ஒருமுறை அரிசியை வெல்லவில்லை என்றால் அவர் இறந்திருக்கக் கூடும் என்றும் ஆவணப்படத்தில் பேசிய தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
பின்னர், பானங்கள் மற்றும் நாய்க்கான உணவுகளை வென்றதால் அவர் பல வாரங்களுக்குப் பிழைத்திருக்க முடிந்தது.
இவர் எப்படி பரிசுகளை வெல்கிறார், அவற்றைப் பயன்படுத்தி எப்படி உயிர்வாழ்கிறார் என்பதை பார்க்கவும் 1.5 கோடி பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து வந்தனர்.
இந்தப் போட்டி முழுவதும் உடைகளை வெல்லாத காரணத்தால், நசுபி தொடர் முழுவதும் நிர்வாணமாகவே காணப்பட்டார். (ஒளிபரப்பில் இவரது பிறப்புறுப்புகள் மறைக்கப்பட்டிருக்கும்.)
'சாமுராய் போன்ற மன உறுதி'
நசுபி இருந்த வீட்டின் கதவு பூட்டப்படவில்லை. எனவே நசுபி அவர் விரும்பும் எந்த நேரத்திலும் வெளியேற அனுமதி இருந்தது. ஆனாலும் அவர் ஏன் அதைச் செய்யவில்லை?
"நிறைய காரணங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன்," என்று டைட்லி கூறுகிறார்.
"அதில் ஒன்று, அவர் மிகவும் துணிச்சலானவர், மற்றும் அவர் ஃபுகுஷிமாவில் இருந்து வந்தவர். மேலும் அவரது பெற்றோர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள்,” என்கிறார்.
"அதேபோல், அவர் மிகவும் விசுவாசமான நபர். அவர் எந்த ஒரு சிக்கலிலும் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. அவர் மிகவும் இளமையாகவும், அதே சமயம் அப்பாவியாகவும் இருந்தார். அவர் இப்போதும் அதை நம்புகிறார். மேலும் 'நான் வெற்றி பெறுவேன், நான் இதைச் செய்து முடிப்பேன்’ என்ற ஜப்பானிய சாமுராயின் உறுதியும் அவரிடம் உள்ளது,” என்கிறார்.
'கொடூரமான அனுபவம்'
ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நிகழ்ச்சியை 'கொடூரமானது' என்று விவரித்துள்ளார் நசுபி. அதில் 'மகிழ்ச்சியும் இல்லை, சுதந்திரமும் இல்லை' என்று கூறினார்.
"அதில் எனது வாழ்க்கையின் ஒரு சில நிமிடங்கள் வாரத்திற்கு ஒரு சில முறை காட்டப்பட்டிருக்கலாம். அதுவும் நான் பரிசு வென்றபோது கிடைத்த மகிழ்ச்சியை 'எடிட்' செய்து காட்டியிருப்பார்கள்,” என்கிறார் அவர்.
"நிச்சயமாக, அதைக் கண்ட பார்வையாளர்கள் 'ஓ, அவரைப் பாருங்கள் ஜாலியாக எதையாவது செய்துகொண்டிருக்கிறார், அதை ரசிக்கவும் செய்கிறார்' என்று நினைத்திருப்பார்கள்,” என்கிறார்.
“ஆனால் அந்த வீட்டில் என் வாழ்க்கையின் பெரும்பகுதி துன்பத்தில் தான் இருந்தது,” என்கிறார்
இருப்பினும், இந்த ஆவணப்படத்தில் அவரது கசப்பான அனுபவங்கள் குறித்து அவர் பெரிதும் பேசவில்லை. அவர் தற்போது நல்ல இடத்தில் இருப்பதாக, நேர்மறையாகவே காட்பட்டிருப்பதாக டைட்லி கூறுகிறார்.
"தனது இந்தச் செயல் குறித்து அவர் வருந்துகிறாரா என்று மக்கள் கேட்கையில், மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு கொடுத்தால், அதைச் செய்ய விரும்பவில்லை என்று கூறும் அதேவேளையில், இந்த வாய்ப்புதான் தன்னை இப்போது இருக்கும் நபராக வடிவமைத்துள்ளது என்பதையும் குறிப்பிடுகிறார்,” என்கிறார் டைட்லி.
நசுபி எப்படி விடுவிக்கப்பட்டார்?
நசுபி, இறுதியாக ஒரு புதிய போலி அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டு, அதன் சுவர்கள் இடிந்து விழுந்து அவர் ஒரு மேடையின் மேல் இருப்பது போலவும், அவரை சுற்றி பார்வையாளர்கள் அவர் பெயரை சொல்லி முழக்கமிடுவதை போலவும் காட்டப்பட்டது. அப்படித்தான் அவர் அந்த வீட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த ஆவணப்படம், தற்போது தன்னுடைய பிரபலத்தை நசுபி நல்ல காரியங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு எடுக்கும் முயற்சிகளைக் காட்டுகிறது. இது அவருக்கு மனநிறைவைத் தந்துள்ளது.
நசுபி, தனது கதையை மீண்டும் உயிர்பிப்பதற்கான நேரம் தற்போது சரியாக இருப்பதாக உணர்ந்ததாகக் கூறும் டைட்லி, இதன் மூலம் 'நடந்தவற்றில் இருந்து அவர் சிறிது அமைதியைக் கண்டடைந்திருக்கலாம்' என்கிறார்.
1990-களில் இருந்தது போன்ற ஊடக நிகழ்வுகளின் தயாரிப்பு நடைமுறைகள் தற்போது இல்லை. அப்படியே இருந்தாலும் கூட அதை ரசிக்கும் மனநிலையிலோ, ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலோ பார்வையாளர்கள் இல்லை.
ஆனால், பொழுதுபோக்கு என்று வரும்போது எங்கு எல்லையை நிர்ணயிப்பது என்ற கேள்வியை இந்த ஆவணப்படம் எழுப்பியுள்ளது. எவ்வளவுதான் பார்வையாளர்களின் விருப்பங்கள் மீதே குற்றம் சுமத்துவது?
"சமூக ஊடகங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் இருந்து பார்வையாளர்களுக்குக் காட்டப்படும் உள்ளடக்கங்கள் எப்படி அவர்களது நடத்தையை வைத்து தீர்மானிக்கப்படுகிறது, மற்றும் அதன் தாக்கம் என்ன என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என டைட்லி கூறுகிறார்.
தி கண்டஸ்டண்ட் ஆவணப்படம் இந்தாண்டு இறுதியில் பிரிட்டனில் வெளியாக உள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)