வளைகுடா வேலை: தொழிலாளர்களை மட்டுமின்றி, அரபி முதலாளிகளையும் ஏமாற்றும் முகவர்கள் - எப்படி?

    • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
    • பதவி, பிபிசி தமிழ்

“சௌதி அரேபியாவில் நர்சிங் பணிக்காக சென்று, 6 மாதம் சம்பளம் கொடுக்கப்படாமல், அங்கு இலவசமாக கிடைத்த உணவுகளை வாங்கி உண்டு, தப்பித்தால் போதுமென வீடு வந்து சேர்ந்தேன்.”

2017ஆம் ஆண்டு சௌதி அரேபியாவிற்கு நர்சிங் பணிக்காக சென்று, அங்கு ஏற்பட்ட குளறுபடி காரணமாக பல இன்னல்களை சந்தித்து தமிழகம் வந்து சேர்ந்த தென்காசியை சேர்ந்த அம்ஜத் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) கூறிய வார்த்தைகள் இவை.

குவைத் நாட்டின் மங்கஃப் நகரில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 7 தமிழர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடி செல்லும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் பணிச்சூழல் மற்றும் நிலை குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சம்பளம் தராமல் ஏமாற்றிய நிறுவனம்

அம்ஜத், தனது 24ஆம் வயதில் (2017), இரண்டாண்டு நர்சிங் அனுபவத்தோடு, கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சௌதியில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் மருத்துவ பணியாளர்கள் பிரிவுக்கு வேலைக்கு சென்றார்.

செல்லும்போதே அவரது பணிக்கான விசாவை வழங்காமல், பிளம்பர் பணிக்கான விசாவை வழங்கி, இந்திய முகவர் மூலம் சௌதி அழைத்திருக்கிறது அந்த நிறுவனம்.

இதற்காக முகவருக்கு 35,000 ரூபாய் பணம் செலுத்தி, அந்த விசாவையும் பெற்று, திருவனந்தபுரம் விமான நிலையம் சென்ற போது உங்களது விசா தவறாக உள்ளது என்று திருப்பி அனுப்பியுள்ளனர் விமான நிலைய அதிகாரிகள்.

ஆனாலும், மீண்டும் பணி ஆணையை மாற்றி அதே விசா மூலம் சென்னை விமான நிலையம் வழியாக அவரை சௌதி அரேபியா வரவழைத்துள்ளது அந்நிறுவனம்.

தனக்கு இருந்த நிதி பிரச்னைகள் காரணமாக வேறு வழியின்றி அம்ஜத்தும் அதே விசாவில் அங்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற முதல் சில மாதங்கள் முறையாக சம்பளம் வழங்கிய அந்நிறுவனம், அடுத்த 6 மாதங்களுக்கு சம்பளமே தராமல் அலைக்கழித்துள்ளது.

சரி வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லலாம் என்று முயற்சி செய்தாலும், முதல் நிறுவனம் தடையில்லா (NOC) சான்றிதழை வழங்க மறுத்துள்ளது. இதனால், இரண்டாவது நிறுவனத்திலும் அவரால் வேலைக்கு சேர முடியவில்லை.

“எங்குமே வேலை இல்லாமல் கையில் பணமும் இல்லாமல், அங்கு நோன்பு திறப்பவர்கள் பள்ளி வாசலில் கொடுக்கும் உணவு, இலவசமாக கிடைக்கும் அரசி உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டே உயிர் பிழைத்திருந்தேன்” என்றார் அம்ஜத்.

இவ்வளவு அலைக்கழிப்புக்கு பிறகு கொடுக்காமல் வைத்திருந்த சம்பளத்தை கொடுப்பதாக முதல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதை வாங்குவதற்காக தன்னுடைய முகாமில் இருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுடன் மணிக்கணக்காக வரிசையில் நின்று முயன்றுள்ளார் அம்ஜத்.

“சம்பளத்தை வாங்குவதற்காக நூற்றுக்கணக்கானோர் காத்திருந்தோம். என்னுடைய முறை வரும்போது 'நீங்கள் வேறு நிறுவனம் மாற முயற்சித்ததால் உங்களுக்கு சம்பளம் தர வேண்டாம் என்று கூறியுள்ளார்கள். அதனால் உங்களுக்கு சம்பளம் இல்லை' என்று கூறிவிட்டார்கள்.”

இதனால் மனமுடைந்து போன அம்ஜத், தமிழ்நாட்டில் இருக்கும் தனது அப்பாவை தொடர்புக் கொண்டு இந்தியாவுக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொண்டு, அங்கிருக்கும் நிறுவனத்தில் வேறு கூடுதல் பணம் கட்டி, ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு இந்தியா வந்து சேர்ந்திருக்கிறார்.

அந்த நிறுவனம் கொடுத்த மனஉளைச்சலை இன்றும் சுமந்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார் அவர். வாழ்வில் திரும்பி போகவே கூடாது என்று நினைக்கும் இடம் என்றால் அது சௌதி தான் என்று கூறுகிறார் அம்ஜத்.

போலி முகவர்களால் உயிரிழந்த தமிழர்

அம்ஜத்தை போலவே பல ஆசைகளுடன் மற்றுமொரு வளைகுடா நாடான குவைத் சென்றவர்தான் திருவாரூரைச் சேர்ந்த முத்துக்குமரன்.

பி.பார்ம் பட்டதாரியான இவர் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆந்திராவை சேர்ந்த முகவர் வழியாக 1.5 லட்சம் செலுத்தி குவைத் சென்றுள்ளார்.

இவருக்கு கிளர்க் பணி வழங்குவதாக குவைத் அழைத்து சென்று, அங்கு அவரை ஒட்டகம் மேய்க்க சொன்னதாக வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச் சங்கம் மற்றும் அறக்கட்டளையின் நிறுவனரான நெல்லை மரைக்காயர் கூறுகிறார்.

ஆனால், போன ஒருவாரத்திலேயே தனது முதலாளியால் முத்துக்குமரன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி தமிழகத்தையே உலுக்கியது.

முத்துக்குமரனைப் போலவே ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இப்படி போலி முகவர்களால் ஏமாற்றப்பட்டு வளைகுடா நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கூறுகிறார் நெல்லை மரைக்காயர்.

முகவர்கள் எப்படி ஏமாற்றுகிறார்கள்?

ஒரு நாட்டைச் சேர்ந்த நிறுவனம், மற்றொரு நாட்டில் இருந்து ஒரு ஊழியரை பணியில் சேர்த்து தங்கள் நாட்டிற்கு அழைத்துக் கொள்ளும்போது, அந்த நாட்டு சட்டப்படி இலவசமாகவே விசா வழங்குவதாக கூறுகிறார் மரைக்காயர்.

ஆனால், அந்த நிறுவனங்களின் முகவர்களாக இந்தியா போன்ற நாடுகளில் செயல்படும் நிறுவனங்கள், ஊழியர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறிப்பதில் இருந்து போலி முகவர்களின் ஏமாற்று வேலைகள் தொடங்குவதாக குறிப்பிடுகிறார் அவர்.

இதிலும், “ஒரு நிறுவனத்தில் இருந்து உரிமம் பெற்றுள்ள முகவருக்கு கீழ், அதே உரிமத்தை பயன்படுத்தி நான்கைந்து கிளை முகவர்கள் செயல்படுகின்றனர். அவர்கள் 8 மணி நேர வேலை, நல்ல தங்குமிடம் என்று சொல்வதை நம்பி நாமும் வெளிநாடு சென்று விடுவோம். அங்கு சென்றால் இந்த வசதி எதுவுமே இல்லாமல் ஏமாந்து விடுவோம். அப்போது அந்த நிறுவனத்தை கேட்டாலும் அவர் எங்கள் முகவரே இல்லை என்று கைவிரித்து விடுகிறார்கள்” என்கிறார் மரைக்காயர்.

முதலாளிகளையும் ஏமாற்றும் முகவர்கள்

ஒரு சில போலி முகவர்கள் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் வெளிநாட்டில் வேலை என்று விளம்பரம் கொடுப்பதை பார்த்திருப்போம். அதிலும் 8 மணிநேர வேலை, கைநிறைய சம்பளம், வசதியான தங்குமிடம் என்ற கவர்ச்சி வார்த்தைகள் காணப்படும்.

ஆனால், இதன் பின்னால் போலி முகவர்களின் பெரும் மோசடி இருப்பதாக குறிப்பிடுகிறார் மரைக்காயர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த போலி முகவர்கள் அரபி முதலாளியிடம் ஒரு குறிப்பிட்ட பணிக்காக ஆள் தேவை என்பதை கேட்டுக்கொண்டு அவரிடமே விசா மற்றும் இதர செலவுகளுக்காக 1000 முதல் 1200 தினார் (ஒரு குவைத் தினாரின் மதிப்பு இந்திய ரூபாயில் 272 ரூபாய்) வரை வாங்கிக் கொள்கின்றனர்.”

“இங்கு பணியாளர்களிடம் வேறு ஒரு பணியை சொல்லி ஏமாற்றி செலவில்லாமல் வெளிநாட்டிற்கு அனுப்பி விடுகின்றனர். பணியாளர்களும் நம்பி அங்கு சென்ற பிறகே வேறு வேலைக்காக அனுப்பப்பட்டிருக்கிறோம் என்பதை தெரிந்துக் கொள்கின்றார். அப்போது அங்கு முதலாளியிடம் வேலை செய்ய முடியாது என்று சொன்னால், ஒன்று 1200 தினாரை எடுத்து வை அல்லது வேலை செய் என்று சொல்கின்றனர். அதை தாண்டியும் செய்ய மறுக்கும் போதே அடி, உதை, சித்ரவதை உள்ளிட்டவை நடக்கின்றன” என்கிறார் மரைக்காயர்.

பெண்களை குறிவைக்கும் முகவர்கள்

இந்த முகவர்கள் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த பெண்களை குறிவைத்து வளைகுடா நாடுகளுக்கு இலவசமாக அனுப்புவதாக கூறுகிறார் மரைக்காயர்.

“ஆதரவற்ற பெண்கள், கணவனை இழந்த பெண்கள், குடும்பத்தினருடன் முரண்பட்டிருக்கும் பெண்கள் உள்ளிட்ட பெண்களை குறிவைத்தே இந்த முகவர்கள் செயல்படுகின்றனர்.”

இதற்காக முதலாளிகளிடம் பணம் வாங்கிக் கொள்ளும் முகவர்கள், அந்த பெண்களை ஏமாற்றி அனுப்பி விடுகிறார்கள்.

இதனால், வேலை பிடிக்காமல் அவர்கள் திரும்பி வர வேண்டும் என்று நினைத்தால் கூட, அவர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் பெயரை சொல்லி வாங்கப்பட்ட பணத்தை கட்டிவிட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுவதாக கூறுகிறார் அவர்.

வளைகுடா நாடுகளுக்கு இவ்வளவு பேர் செல்வதற்கான காரணம் என்ன?

கேரள அரசு தரவுகளின்படி, 2019-2020 நிதியாண்டில் வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்குள் அனுப்பப்பட்ட பணம் 96,272 கோடி ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது. இதில் பெரும்பங்கு வளைகுடா நாடுகளில் பணிபுரிந்த கேரள தொழிலாளர்களிடம் இருந்து வந்தது.

உலக வங்கியின் 2022 தரவுகளின்படி, வளைகுடா நாடுகளில் இருந்து அதிகமாக பணம் அனுப்பப்படும் நாடுகளில் இந்தியாவே முதலில் உள்ளது. கிட்டத்தட்ட 70,000 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக இந்தியாவுக்கு பணம் அனுப்பப்படுகிறது.

இதில் 19,821 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வருகிறது.

இந்தியாவை விட வளைகுடா நாடுகளில் அதிக சம்பளம் கிடைக்கும், வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்ந்து விடலாம் என்றே பல இந்தியர்களும் வெளிநாடுகளுக்கு வருவதாக கூறுகிறார் மரைக்காயர்.

உதாரணமாக குவைத்தில் வீட்டு வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கு 120 முதல் 150 தினார் வரை மாதச் சம்பளம் கிடைப்பதாக கூறுகிறார் அவர். இந்திய மதிப்பில் இது 40,000 ரூபாய் ஆகும். இதே இந்தியாவில் வீட்டு வேலை செய்பவர்களுக்கு 10,000த்திற்குள் தான் சம்பளம் கிடைக்கிறது.

இதுபோக, குறைந்த வேலை, அதிக சம்பளம், சொகுசு வாழ்க்கை என ஆசை வார்த்தை காட்டும் முகவர்களின் பேச்சில் ஏமாந்து போய் பலரும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதாகவும் குறிப்பிடுகிறார் அவர்.

வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள்

ஐக்கிய நாடுகள் சபையின் 2020ஆம் ஆண்டு தரவுகளின்படி, தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 1.7 கோடி மக்களுக்கும் அதிகமானோர் வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளில் பணியாற்றுகின்றனர்.

இவர்களிலும் அதிகமானோர் இந்தியர்களே. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் 2022 தரவுகளின்படி, கிட்டத்தட்ட 90 லட்சம் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்றனர்.

இதில் முதல் மூன்று இடங்களில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 35,54,274 பேரும், சௌதி அரேபியாவில் 24,65,464 பேரும், குவைத்தில் 9,24,687 பேரும் பணிபுரிவதாக அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.

வளைகுடா நாடுகளில் இந்திய பணியாளர்கள் எப்படி நடத்தப்படுகின்றனர்?

வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் மட்டுமின்றி, பாகிஸ்தான், வங்க தேசம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

முன்பெல்லாம் வெளிநாட்டு பணியாளர்களின் பாஸ்போர்ட்டை நிறுவனங்கள் மற்றும் முதலாளிகள் தங்களிடம் வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. ஆனால், குவைத்தில் இந்த வழக்கம் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டு, தடை செய்யப்பட்டுள்ளது என்கிறார் அவர்.

அதேபோல், பணியாளர்கள் யாருக்குவது அநீதி இழைக்கப்பட்டுள்ளது அல்லது அவர்கள் கொடுமைப் படுத்தப்பட்டுள்ளார்கள் என்றால் அவர்கள் தாராளமாக இந்திய தூதரகம் வாயிலாகவோ அல்லது உள்ளூர் சட்ட உதவிகள் மூலமாகவோ முறையிட வாய்ப்புள்ளதாக கூறுகிறார் இவர்.

வீட்டு வேலைக்காக அழைத்து செல்லப்பட்ட பெண்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு பிரத்யேகமாக இந்திய தூதரகமே சட்ட உதவிகள் வழங்குவதாக கூறுகிறார் மரைக்காயர்.

ஆனால், நாடுகள் மற்றும் சர்வதேச அளவில் பல சட்டங்கள் இருந்தாலும் அவற்றை அமல்படுத்துவதில் உள்ளூர் அரசுகள் பெரிதும் ஆர்வம் காட்டுவதில்லை என்கிறார் குவைத்தில் சேவையாற்றி வரும் மனித உரிமை செயற்பாட்டாளரான ஷாஹீன் சயீத்.

வெளிநாடுகளில் பணிபுரியும் திறன்சாரா பணியாளர்கள் பலரும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மோசமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக கூறும் அவர், குறைந்த கூலி, சுகாதாரமற்ற வாழிடம் உள்ளிட்ட சவால்களை அவர்கள் எதிர்கொண்டு வருவதாக குறிப்பிடுகிறார்.

சர்வதேச தொழிலாளர் மன்றம் போன்ற அமைப்புகளின் சட்டங்கள், உள்ளூர் அரசின் தொழிலாளர் சட்டங்கள் இருந்தாலும் கூட, அதிகமான திறன்சாரா தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதாக கூறுகிறார் ஷாஹீன் சயீத்.

பணி உரிமம் முடிந்தும் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு என்ன ஆகும்?

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணிபுரிய செல்லும் நபர்களுக்கு பெரும்பாலும் அந்தந்த நிறுவனங்களே விசா மற்றும் பணிபுரியும் உரிமம் ஆகியவற்றை ஏற்பாடு செய்கின்றன.

இந்நிலையில் அதை நீட்டிக்க வேண்டுமெனில் அந்த நிறுவனம் அனுமதி வழங்கினால் மட்டுமே முடியும். இதுபோன்ற நிலையில் நிறுவனத்தோடு முரண்பட்டோ அல்லது பணி பிடிக்காமலோ அல்லது விசா முடிந்த நிலையிலும், விசா மற்றும் பணி உரிமம் இன்றி பலர் இந்த நாடுகளில் இன்னமும் இருந்து வருகின்றனர்.

அப்படி குவைத்தில் மட்டும் 40,000 முதல் 50,000 பேர் இருந்து வருவதாக குறிப்பிடுகிறார் மரைக்காயர்.

“இந்த நாட்டு சட்டப்படி இவர்கள் குற்றவாளிகள் என்று புகார் அளிக்கப்பட்டு காவல்துறையால் தேடப்படுவர். யாரும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது. பிடிபடுபவர்கள் முதலாளிகளிடம் ஒப்படைக்கப்படுவர். ஆனால், அந்த முதலாளிகளோ பெரும்பாலும் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு சில மாத விசாரணைகளுக்கு பிறகு அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.”

அப்படி அனுப்பப்படுபவர்கள் மீண்டும் அந்த நாட்டுக்கு வர முடியாதவாறு தடை செய்யப்படுவார் என்று குறிப்பிடுகிறார் மரைக்காயர்.

அப்படியே அவர்கள் தாக்குப்பிடித்து யாருடைய இடத்தில் இருந்தாலும், அவர்களுக்கு எந்த தொழிலாளர் சட்டமும் செல்லாது என்பதால், அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர் அவரது உழைப்பை சுரண்டவே வழிவகுக்கும்.

இப்படி தப்பித்துப் போவதன் பின்விளைவுகள் தெரியாமல் தலைமறைவாகும் பணியாளர்கள் மீண்டும் வீடு திரும்புவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறும் ஷாஹீன் சயீத், அதிர்ஷ்டவசமாக இந்திய தூதரகம் மூலம் பலரும் நாட்டுக்கு அனுப்பப்படுவதாக கூறுகிறார்.

இதுபோன்ற வழக்குகளில் இந்திய தூதரகத்தை அணுகும் நபர்களுக்கு அவசர சான்றிதழ்(Emergency Certificate) வழங்கி நாட்டிற்கு திருப்பி அனுப்புவதாக கூறுகிறார் அவர்.

சிக்கலின்றி வெளிநாட்டு வேலைக்கு செல்வது எப்படி?

தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லும் நபர்களுக்காக அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் என்ற அரசு அமைப்பே இயங்கி வருகிறது.

இதன் மூலம் உரிமம் பெற்ற முகவர்கள் சேவை, முறையான பயிற்சி, நம்பகத்தகுந்த நிறுவனங்களில் வேலை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

குறைவாகப் பணம் வாங்குகிறார்கள் என்பதற்காக போலி முகவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று கூறுகிறார் இவ்வமைப்பின் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி.

பிபிசியிடம் முன்னதாக பேசிய அவர், “தமிழகத்தில் 171 அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் அரசால் பகுப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவர்கள். அவர்கள் மூலமாக வெளிநாட்டு வேலைக்கு செல்வது பாதுகாப்பானது” என்றார்.

“தமிழகத்தில் தற்போது ஏழு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் பார்வையின் கீழ் வெளிநாடு செல்பவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வெகு விரைவில் இதனை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் இந்த பயிற்சி வகுப்பு மூலம் வேலைக்கு செல்லும் நிறுவனம் குறித்து முழு தகவல் பெற்று அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி செல்ல வேண்டும்” என்றும் அவர் கூறுகிறார்.

அப்படி வெளிநாட்டிற்கு சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டால், அவசர காலங்களில் nrtamils.tn.gov.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது 1800 309 3793, 8069009900, 8069009901 என்ற இலவச எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கலாம்.

அதேபோல வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் இந்தியர்களுக்கு, ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் டெல்லியிலுள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாடு அறை எண்ணான 011 - 23011954 / 23012292 / 23017160 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உதவி கோரலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)