திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு இல்லாதது ஏன்? தமிழ்நாட்டின் நிலை என்ன?

    • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் 2017ஆம் ஆண்டு குரூப் 2 தேர்வில் கலந்துகொண்டு 121.5 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற திருநங்கை அனுஸ்ரீ தொடர்ந்த வழக்கில், மாற்று பாலினத்தவரை சிறப்பு பிரிவினராக கருதி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநங்கைகளுக்கான நலவாரியம், தொழில் தொடங்குவதற்கான நிதி, கட்டணமில்லா பேருந்து பயணம், கட்டணமில்லா கல்வி என பல்வேறு சமூகநலத் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இருப்பினும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மாற்று பாலினத்தவருக்கான சிறப்பு இடஒதுக்கீடு தேவை என்ற கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை.

தமிழ்நாட்டின் திருநங்கைகள் நலவாரியத்தின் உறுப்பினராகவும், செயற்பாட்டாளராகவும் இருந்து வரும் திருநங்கை அனுஸ்ரீ சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஒன்றில் தான், தமிழக அரசு மாற்று பாலினத்தவர்களை சிறப்பு பிரிவாக கருதி அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வழக்கு என்ன?

தான் தொடர்ந்த வழக்கு குறித்து பிபிசி தமிழிடம் திருங்கை அனுஸ்ரீ பேசினார். கீழ்கண்ட தகவல்களை அவர் தெரிவித்தார்.

2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வை எழுதியுள்ளார் அனுஸ்ரீ.

ஆனால், தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அவரது கட்-ஆஃப் மதிப்பெண் போதவில்லை என்று அவருக்கு பணி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யாமல் நிராகரித்து விட்டது டிஎன்பிஎஸ்சி.

திருநங்கையர் பிரிவில் தேர்வெழுதியிருந்தாலும், அந்த பிரிவுக்கான சிறப்பு ஒதுக்கீடு எதுவும் இல்லை என்று சுட்டிக்காட்டிய டிஎன்பிஎஸ்சி, அனுஸ்ரீ சார்ந்த சமூகத்தின் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு வரிசைப்படி அவரது மதிப்பெண் போதவில்லை என்று அவரை நிராகரித்துள்ளது.

இதை எதிர்த்துதான் 2018-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் அனுஸ்ரீ. இந்த வழக்கில் தற்போது அவருக்கு சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் பணி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி கூறியது என்ன?

இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விளக்கமளிக்கக்கோரி உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.

டிஎன்பிஎஸ்சி தாக்கல் செய்த பதில் மனுவில், “நாங்கள் வெறும் அரசுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யும் குறிப்பிட்ட அதிகாரங்களை கொண்ட முகமை மட்டுமே. மற்றபடி யாரையும் குறிப்பிட்ட பிரிவிற்குள் சேர்க்கவோ அல்லது விலக்கவோ அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.”

“திருநங்கைகளை சிறப்பு பிரிவின் கீழ் சேர்க்க வேண்டும் என்பது தொடர்பாக எந்த வித அரசு வழிகாட்டுதலும் இல்லாத காரணத்தால், சம்மந்தப்பட்ட நபர் அவர் சார்ந்த சமூகத்தின் பெண்கள் பிரிவிற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி, அனுஸ்ரீ 121.5 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்திருந்த நிலையிலும், அவரை சிறப்பு பிரிவில் சேர்க்காமல், அவர் சார்ந்த சமூகத்தின் பெண்கள் பிரிவிற்கான 222 கட்-ஆஃப் மதிப்பெண் எடுக்கவில்லை என்று கூறி டிஎன்பிஎஸ்சி நிராகரித்துவிட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிய உயர்நீதிமன்றம்

இந்நிலையில் தனக்கு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவிற்கான இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுஸ்ரீ தொடர்ந்த வழக்கின் மீது 12.6.2024 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த தீர்ப்பின்படி, வருகின்ற 22.6.2024-க்குள் அனுஸ்ரீயின் சான்றிதழ் சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும் என்றும், தமிழக அரசு மாற்று பாலினத்தவருக்கு சிறப்பு பிரிவின் கீழ் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்காக 2014-ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “மத்திய, மாநில அரசுகள் மூன்றாம் பாலினத்தவரை சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்களாக கருதி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து விதமான இடஒதுக்கீடும் அவர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அதே தீர்ப்பில் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தல், சுகாதாரம் மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் வழிகாட்டப்பட்டுள்ளது.

ஆனாலும், இன்றளவும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அதிகாரபூர்வமாக இடஒதுக்கீடு அமல்படுத்தப்படாத நிலையே நிலவுகிறது.

தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டு கொள்கை

தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு கொள்கையின்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 26.5%, இஸ்லாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3.5%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20%, பட்டியலினத்தவருக்கு 18% மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு 1% என மொத்தமாக 69% இடஒதுக்கீடு அமலில் உள்ளது.

இதிலேயே உள்ஒதுக்கீடுகளும் அடங்கும். இது இல்லாத 31%, பொதுப்பிரிவில் வந்து விடும்.

இதைத் தாண்டி டிஎன்பிஎஸ்சி அறிவிக்கும் ஒவ்வொரு பணிகளுக்கு ஏற்றாற்போல் சிறப்பு பிரிவிற்கும் ஒதுக்கீடுகள் உண்டு. அதனடிப்படையில், கணவனை இழந்த பெண்கள், தமிழ் வழி கல்விகற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாட்டுப்பணி செய்து ஓய்வு பெற்றவர்களுக்கான இடஒதுக்கீடுகளும் உண்டு.

ஆனால், இது எதிலுமே உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் படி திருநங்கைகளுக்கான சிறப்பு ஒதுக்கீடு சேர்க்கப்படவில்லை.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, திருநங்கைகளை ஆண் அல்லது பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் சேர்க்காமல், சிறப்பு பிரிவில் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இடஒதுக்கீட்டு விதிகளில் பின்பற்றப்படும் சிறப்பு பிரிவுகளின் கீழ் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

‘வழக்கு முடிந்தவுடன் வழங்கப்படும்’

இந்தியாவிலேயே முதன் முறையாக திருநங்கைகளுக்கான நலவாரியம் அமைத்த மாநிலம் தமிழ்நாடுதான். எனவே விரைவில் திருநங்கைகளுக்கான இடஒதுக்கீடும் வழங்கப்படும் என்று பிபிசி தமிழிடம் கூறினார் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன்.

அவர் பேசுகையில், “இது தொடர்பாக திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஒரு வழக்கு நடந்துக் கொண்டிருக்கிறது. அது முடிந்த பிறகு சட்டத்துறை உள்ளிட்ட பிற துறைகளோடு கலந்தாலோசித்து அதற்கான முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.

‘திருநங்கைகளுக்கான கணக்கெடுப்பு நடத்தவேண்டும்’

தமிழ்நாட்டில் திருநங்கைகளுக்கான நலவாரியம், தொழில் தொடங்கும் திருநங்கைகளுக்கு 50000 ரூபாய் உதவித்தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம், கட்டணமில்லா கல்வி, அடையாள அட்டைகளை பெறுவதற்கான முகாம், மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இருந்தாலும் மாநில அளவில் முழுமையான கணக்கெடுப்பு தேவை என்கிறார் செயற்பாட்டாளரான பிரியா பாபு.

நம்மிடம் பேசிய அவர், “மற்ற மாநிலங்களை விட திருநங்கைகளுக்கான திட்டங்களில் தமிழ்நாடு தனித்து நின்றாலும், மாநில அளவிலான கணக்கெடுப்பு எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். திருநங்கைகள் எந்த சமூக பின்புலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் ஒட்டுமொத்த சமூகத்தால் ஒதுக்கப்படுகிறார் என்ற அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியம்” என்கிறார்.

அப்படியெனில் அவர்களுக்கு குறிப்பிட்ட பிரிவில் உள் இடஒதுக்கீடாக வழங்க வேண்டுமா என்ற கேள்வியை முன்வைக்கையில், அதனால் பலனில்லை என்கிறார் அவர்.

“எந்த இனம், சமூகம் என்று இல்லாமல், அனைத்து பின்புலத்தை சேர்ந்த திருநங்கைகளும் ஒதுக்கப்படும் நிலையில், அவர்களை தனியாக சிறப்பு பிரிவினராக அங்கீகரித்து இடஒதுக்கீடு வழங்குவதே நல்லது” என்கிறார் பிரியாபாபு.

திருநங்கைகளுக்கான அமைப்பு

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின்படி, தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், சண்டிகர், உத்தர பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய 12 மாநிலங்களில் திருநங்கைகளுக்கான நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்தியாவில் ஒரு மாநிலத்தில் கூட உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு இடஒதுக்கீடு இல்லை என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே இருக்கும் இடஒதுக்கீட்டு பிரிவுகளின் கீழ் வேண்டுமானால் அவர்கள் பலன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அது தெரிவித்தது.

திருநங்கைகளுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று பல்வேறு செயற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகள் சட்டரீதியாக போராடி வருகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)