You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆதார்: கட்டணமின்றி திருத்தம் செய்ய காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு - என்னென்ன திருத்தங்களை செய்யலாம்?
ஆதார் அட்டையில் உங்கள் விவரங்களை கட்டணமில்லாமல் திருத்திக் கொள்ள செப்டம்பர் 14-ஆம் தேதி கடைசி நாளாகும். அதற்கு பிறகு, ஆன்லைனில் திருத்தங்களை மேற்கொள்ள ரூ.25, நேரில் மேற்கொள்ள ரூ.50 கட்டணம் பெறப்படும். தகவல்களை புதுப்பிக்க, ஜூன் 14-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கு காலக்கெடு மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மக்களின் சமீபத்திய அடையாளச் சான்றையும், முகவரிச் சான்றையும் பதிவு செய்ய இந்திய ஆதார் ஆணையம் அறிவுறுத்தி வருகிறது. ஆதார் அட்டை தேவைப்படும் அலுவலகங்கள் மற்றும் விண்ணப்பங்களில், பழைய புகைப்படம் அல்லது பழைய முகவரி காரணமாக ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்க இந்தத் தரவுகளை புதுப்பிக்கப் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் ஆதார் விவரங்களை 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிக்க அனுமதிக்கிறது. ஆவணம் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிசெய்வதற்காக எந்தவொரு கட்டணமும் இல்லாமல் தங்கள் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களைப் புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆதார் என்பது பயோமெட்ரிக் மற்றும் மக்கள்தொகை தகவல்களின் அடிப்படையில் இந்திய மக்களுக்கு வழங்கப்படும் 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணாகும். ஆதார் ஒரு நபரின் கண்விழி, கைரேகை ஆகிய பயோமெட்ரிக் தகவல்களுடன் இணைக்கப்பட்டிருப்பதால், போலி மற்றும் பொய் அடையாளங்களைக் கண்டறிவதன் மூலமும் குடியிருப்பாளர்களிடையே நகல் எண்களைத் தடுக்கிறது. எந்தவொரு குடியிருப்பாளருக்கும் நகல் எண் இருக்கக்கூடாது, ஏனெனில் இது அவர்களின் தனிப்பட்ட பயோமெட்ரிக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது, மோசடி மற்றும் பொய் அடையாளங்களை அடையாளம் காணும்.
ஆதார் விவரங்களைப் புதுப்பிப்பது பல்வேறு அரசு சேவைகளைத் தொடர்ந்து பெறுவதற்கு அவசியமாகும். இந்த 12 இலக்க ஆதார் எண், பல சேவை இணையதளங்களில் அடையாளச் சரிபார்ப்புக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆதார் பதிவு மற்றும் புதுப்பிப்பு விதிமுறைகள், 2016-இன் படி, தனிநபர்கள் தாம் ஆதார் பதிவு செய்த தேதியிலிருந்து ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் தங்கள் அடையாளச் சான்று மற்றும் பி.ஓ.ஐ ஆவணங்களை (Proof of Identity - PoI Document) புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். ஐந்து மற்றும் 15 வயதில் நீல ஆதார் அட்டையில் புதுப்பிக்க வேண்டிய குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.
ஆதார் அட்டையை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி?
uidai.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
'எனது ஆதார்' தாவலைக் கிளிக் செய்து, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து 'Update Your Aadhaar' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
'ஆதார் விவரங்களைப் புதுப்பித்தல் (ஆன்லைன்)' பக்கத்தில், 'ஆவண புதுப்பிப்பு' என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஒரு முறை கடவுச்சொல்லைப் பெற 'OTP அனுப்பு' என்பதைக் கிளிக் செய்யவும்.
OTP-ஐ உள்ளிட்டு 'உள்நுழை' என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் புதுப்பிக்க விரும்பும் விவரங்களை (பெயர், முகவரி, பிறந்த தேதி போன்றவை) தேர்வுசெய்து, புதிய தகவலை துல்லியமாக நிரப்பவும்.
'Submit' என்பதைக் கிளிக் செய்து, தகவல்களை புதுப்பிக்க தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றவும்.
பிறகு, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். உங்கள் கோரிக்கையின் நிலையைக் கண்காணிக்க SMS வழியாக இந்த விண்ணப்பத்துக்கான எண்ணை (URN) பெறுவீர்கள்.
ஆதார் அட்டையில் விவரங்களை புதுப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன?
அடையாளச் சான்றை புதுபிக்க :
- பாஸ்போர்ட்
- ஓட்டுநர் உரிமம்
- பான் அட்டை
- வாக்காளர் அட்டை
- அரசு வழங்கிய அடையாள அட்டைகள்
- மதிப்பெண் சான்றிதழ்
- திருமண சான்றிதழ்
- ரேஷன் அட்டை
முகவரி சான்றை புதுப்பிக்க:
- சமீபத்திய வங்கி அறிக்கைகள்
- மின்சாரம் அல்லது கேஸ் பில்கள்
- பாஸ்போர்ட்
- ரேஷன் கார்டு
- சொத்து வரி ரசீதுகள்
இவை தவிர அரசால் வழங்கப்பட்ட வேறு சான்றுகள் இருந்தாலும் அவற்றைச் சமர்ப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலம் சில விவரங்களை மட்டுமே புதுப்பிக்க முடியும். புகைப்படங்கள், கருவிழி ஸ்கேன், கைரேகைகளை போன்ற பயோமெட்ரிக் தரவுகளை புதுப்பிக்க அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்திற்குச் செல்ல வேண்டும். அருகில் எங்கு ஆதார் மையம் உள்ளது என்பதை ஆதார் இணையதளத்திலிருந்தே தெரிந்துக் கொள்ளலாம். பயோமெட்ரிக் தரவுகள் புதுப்பிக்கப்பட்டனவா என்று தெரிந்துக் கொள்ள, URN எனும் எண்ணுடன் சேர்ந்து ஒப்புகை ரசீது வழங்கப்படும்.
செப்டம்பர் 14-ஆம் தேதிக்கு பிறகு எப்படி புதுப்பிக்கலாம்?
2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதிக்குப் பிறகும் ஆதார் தகவல்களைப் புதுப்பிக்கும் நடைமுறைகளில் மாற்றம் இல்லை.
எனினும் ஆதார் விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்க ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும். அதே நேரத்தில் ஆஃப்லைன் அதாவது நேரடியாக சென்று புதுப்பிக்க, ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)