You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடலுக்குள் திருமண நாள் கொண்டாட்டம்: அலையால் இழுத்துச் செல்லப்பட்ட மனைவி
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்
சென்னை பாலவாக்கத்தில் தங்கள் இரண்டாவது திருமண நாளன்று கடல்நீருக்குள் நின்று கொண்டு மோதிரம் மாற்றிக்கொள்ள ஒரு தம்பதி முயன்றபோது மனைவி நீரில் மூழ்கி இறந்துள்ளார்.
வியாழன் இரவு உணவுக்கு வெளியே சென்றுவிட்டு, வேலூரைச் சேர்ந்த விக்னேஷ் - வேணி ஷைலா தம்பதியினர் நண்பர்களுடன் கடற்கரைக்கு வந்துள்ளனர். சுமார் 30 பேர் கடலை நோக்கிச் சென்றபோது கடலுக்குள் இறங்க வேண்டாம் என்று அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த காவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்று காவல் உதவி ஆணையர் விஷ்வேஸ்வரய்யா தெரிவித்துள்ளார்.
எனினும் சற்று நேரத்தில் கேக் வெட்டியபிறகு அவர்கள் இடுப்பளவு நீரில் இறங்கி மோதிரம் மாற்ற முயன்றபோது வேணி கடல் அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டார்.
இரண்டாவது திருமண நாளான வெள்ளியன்று, அதிகாலை 2 மணியளவில் கொட்டிவாக்கம் அருகே அவரது உடல் மீட்கப்பட்டது. உயிரிழந்த வேணிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
தினத்தந்தி: 'சபரிமலை கோயில் நகைகளை ஏன் கேரள அரசிடம் ஒப்படைக்கக்கூடாது?'
சபரிமலை ஐய்யப்பன் கோயில் நகைகளின் பட்டியலை தயார் செய்ய நீதிபதி தலைமையில் குழு அமைத்து இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
கேரள மாநிலம் பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில், 'சபரிமலை கோயிலுக்கென தனிச்சட்டத்தை உருவாக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவை கடந்த 5-ந் தேதி விசாரித்த நீதிபதிகள், பந்தளம் அரச குடும்பத்தினர் தங்கள் வசம் உள்ள சபரிமலை கோயில் நகைகளை ஏன் கேரள அரசிடம் ஒப்படைக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பினர். மேலும் நகைகளை ஒப்படைப்பது குறித்து அரச குடும்பம் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
"சபரிமலை அய்யப்பனுக்கு சொந்தமான நகைகள் குறித்து உடனடியாக பட்டியல் தயாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே ஒரு குழுவை அமைத்து அந்த குழுவில் நகைத்தொழிலாளர் ஒருவரின் உதவியுடன் இவற்றை மதிப்பிட வேண்டும். இதனால் வருங்காலத்தில் யாரும் போலி நகைகளை மாற்றி வைக்க முடியாது," என்று கேரளா அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு பந்தளம் அரச குடும்பத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் "கேரள உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயர் தலைமையிலான ஒரு குழு இந்த நகைகள் தொடர்பாக விரிவான பட்டியல் ஒன்றை தயார் செய்து 'சீல்' வைத்த உறையில் ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்," என்று உத்தரவிட்டனர் என்கிறது அந்த செய்தி.
தினமணி: இறந்தவர்களின் ஆதார் எண் சேகரிக்கும் பணி
நாட்டில் முதல் முறையாக விருதுநகா் மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் உயிரிழந்தவா்களின் ஆதாா் எண்களை சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது என இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (ஆதாா்) துணை இயக்குநா் ஆா்.சந்தான கோபாலன் தெரிவித்தாா் என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உயிரிழந்தவா்களின் ஆதாா் அட்டை சேகரிப்பு முதன் முறையாக விருதுநகா் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகா் மாவட்டத்தில் கடந்த ஆறு முதல் எட்டு ஆண்டுகளில் உயிரிழந்தவா்களின் விபரங்களை சேகரிக்கும் பணியில் அரசு அலுவலா்கள் ஈடுபட உள்ளனா் என்றாா் அவா்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: