You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆப்பிள் நிறுவனம் குறித்து ஈலோன் மஸ்க் பகிர்ந்த மீமின் பின்னணி என்ன?
- எழுதியவர், ஜோ க்ளீன்மேன், லிவ் மக்மஹோன்
- பதவி, பிபிசி நியூஸ்
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அறிமுகத்தை கேலி செய்து தமிழ்பட மீம் ஒன்றை பகிர்ந்திருந்தார் ஈலோன் மஸ்க்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் அந்த மீம் வைரலானது.
அதற்கு காரணம் சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது மொபைல் செய்லபாடுகளை ஓபன்ஏஐ (OpenAI) இன் சாட்ஜிபிடி(ChatGPT) தொழில்நுட்பங்கள் மூலம் மேம்படுத்தும் முடிவை எடுத்ததுதான்.
ஆப்பிள் தன் சிரி (Siri) குரல் உதவியாளர் மற்றும் இயக்க முறைமைகளை ஓபன்ஏஐ (OpenAI) இன் சாட்ஜிபிடி(ChatGPT) உடன் மேம்படுத்த உள்ளது. இதன்மூலம் செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஆதிக்கம் செலுத்துவதற்கான பந்தயத்தில் முன்னேறத் திட்டமிடுகிறது.
ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், தன் வருடாந்திர டெவலப்பர்கள் மாநாட்டில் பல புதிய அம்சங்களுடன் ’சிரி’ மேம்படுத்தப்படும் என்று கடந்த திங்களன்று அறிவித்தது.
இது "ஆப்பிள் நுண்ணறிவு" என்று அழைக்கப்படும் ஒரு புதிய தனி செயற்கை நுண்ணறிவு அமைப்பின் ஒரு பகுதியாகும். பயனர்கள் ஆப்பிள் சாதனங்களை மிக எளிதாக பயன்படுத்துவதற்கான வழியை அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐபோன் மற்றும் மேக் (Mac) ஆகியவற்றின் இயக்க முறைகளுக்கான அதன் புதுப்பிப்புகள் சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்த முடியும்.
உரை மற்றும் உள்ளடக்க உருவாக்கம் உள்ளிட்ட அம்சங்களை மேம்படுத்த சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்தலாம். இதன் சோதனை பதிப்பு செப்டம்பர் முதல் டிசம்பர் மாத்திற்குள் வெளிவரும்.
இந்த நடவடிக்கை தனது நிறுவனத்தின் தயாரிப்புகளை "புதிய உயரத்திற்கு" கொண்டு செல்லும் என்று கலிஃபோர்னியாவின் கூபர்டினோவில் உள்ள ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமையகத்தில் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டை தொடங்கி வைத்துப்பேசிய அதன் தலைமை நிர்வாகி டிம் குக் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியான திங்களன்று பங்குச்சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளின் விலை 1.91% சரிந்தது.
இந்த கூட்டுத் திட்டத்தை டெஸ்லா மற்றும் ட்விட்டர்/எக்ஸ் உரிமையாளர் ஈலோன் மஸ்க் வரவேற்கவில்லை. "தரவு பாதுகாப்பு" காரணங்களுக்காக தனது நிறுவனங்களில் இருந்து ஐபோன்களை தடை செய்யப்போவதாக அவர் அறிவித்தார்.
"உங்கள் தரவை ஓபன்ஏஐ-யிடம் ஒப்படைத்த பிறகு உண்மையில் என்ன நடக்கிறது என்று ஆப்பிளுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் உங்களை குளத்தில் இறக்குகிறார்கள்,” என்று எக்ஸ் தளத்தில் மஸ்க் பதிவிட்டுள்ளார்.
அவரது குற்றச்சாட்டுகளுக்கு ஆப்பிள் எந்த பதிலையும் அளிக்கவில்லை.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மற்றொரு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சாம்சங் தனது போட்டியாளரின் அறிவிப்பை கேலி செய்துள்ளது.
"ஆப்பிள் என்று சேர்த்து ஆப்பிள் நுண்ணறிவு என்று பெயரிடுவதால் மட்டும் அது புதியதாகவோ, புதிய கண்டுபிடிப்பாகவோ ஆகிவிடாது. செயற்கை நுண்ணறிவுக்கு வரவேற்கிறோம் ஆப்பிள்", என்று அந்த நிறுவனம் எக்ஸ் தளத்தில் கூறியது.
தென் கொரிய நிறுவனமான சாம்சங் தனது சக போட்டியாளரான ஆப்பிளை கேலி செய்வது இது முதல் முறை அல்ல.
இருப்பினும் இந்த தொழில்நுட்பத்தை விரைவாக தனதாக்கிக்கொண்ட போட்டி நிறுவனங்களை தன் புதிய ஏஐ (AI) கருவிகளால் எட்டிப்பிடிக்க முடியுமா என்பதுதான் ஆப்பிளின் பெரிய கவலை.
ஜனவரி மாதத்தில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி மைக்ரோசாஃப்ட், உலகின் மிக அதிக மதிப்புமிக்க நிறுவனமாக ஆனது. ஜூன் தொடக்கத்தில் சிப் தயாரிப்பாளரான என்விடியாவும் ஆப்பிளை முந்தியது.
'ஆப்பிள் நுண்ணறிவு' என்றால் என்ன?
”ஆப்பிளின் புதிய தனிப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஏஐ அமைப்பு, தற்போது பதற்றத்தில் இருக்கும் அதன் முதலீட்டாளர்களை அமைதிப்படுத்த உதவும். அதே வேளையில் அதன் சாட்ஜிபிடி ஒருங்கிணைப்பானது நிறுவனத்திற்கு ஆழமான பிரச்னைகளை உருவாக்கலாம்,” என்று சிசிஎஸ் இன்சைட் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் பென் வுட் கூறினார்.
"ஆப்பிள் நுண்ணறிவு" என்பதை ஒரு தயாரிப்பு அல்லது செயலி என்று சொல்லமுடியாது.
நீங்கள் டைப் செய்யும்போது, உங்கள் நாட்காட்டி நிகழ்வுகளை செம்மைப்படுத்தவும் ஆப்பிள் தயாரிப்புகளில் இது உதவும்.
அந்த வகையில் இது மைக்ரோசாஃப்டின் செயற்கை நுண்ணறிவு உதவியாளர் ’கோ பைலட்’ போன்றது இது. ஆனால் அதைச் செயல்படுத்த நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
2010 இல் ஆப்பிள் வாங்கிய குரல் உதவியாளரான ’சிரி’, பயனர்கள் தங்கள் சாதனங்கள் மற்றும் பயன்பாடுகளை மிகவும் எளிதாகப் பயன்படுத்த உதவுகிறது.
"ஒரு பயனருக்கு ’சிரி’ உதவ முடியாத கட்டத்தில் ’சாட்ஜிபிடி’ அந்தப்பணியை மேற்கொள்ளும் என்று கூறுவதன் மூலம் தன்னுடைய வரம்புகளை ஆப்பிள் ஒப்புக் கொள்வது போலத் தோன்றுகிறது," என்று பென் வுட் பிபிசியிடம் கூறினார்.
திங்கட்கிழமை ஆற்றப்பட்ட முக்கிய உரையின் போது ஆப்பிள் நிறுவனம், ’ஆப்பிள் நுண்ணறிவின்’ பாதுகாப்பை வலியுறுத்துவதில் ஆர்வமாக இருந்தது.
”சில செயலாக்கங்கள் சாதனத்திலேயே மேற்கொள்ளப்படும். அதே நேரத்தில் அதிக சக்தி தேவைப்படும் பெரிய செயல்கள் ’க்ளவுடுக்கு’(cloud) அனுப்பப்படும். ஆனால் தரவு எதுவும் அங்கு சேமிக்கப்படாது,” என்று ஆப்பிள் கூறியது.
ஓபன்ஏஐ மற்றும் ஆப்பிள் ஒப்பந்தம் என்றால் என்ன?
ஓபன்ஏஐ அமைப்பின் சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் ஆப்பிளின் முடிவு பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தன் சொந்த தயாரிப்புகள் பற்றிய விவரங்களை மிக ரகசியமாக பாதுகாக்கும் ஒரு நிறுவனத்திற்கு இது ஓர் அசாதாரண நடவடிக்கையாகும்.
தங்கள் ஏஐ தயாரிப்புகளால் செய்யப்பட்ட பிழைகள் குறித்து கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் சமீபத்திய மாதங்களில் கேள்விகளை எதிர்கொண்டன. தனது செயற்கை நுண்ணறிவு அளித்த தவறான பதில்கள் வைரலானதை அடுத்து கூகுள் நிறுவனம் மே மாதத்தில் தனது புதிய அம்சத்தை திரும்பப்பெற்றது.
பல ஆண்டுகளுக்கு ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களை ஆப் ஸ்டோருக்கு வெளியே எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கவில்லை. ஏனெனில் அவை பாதுகாப்பானவை அல்ல என்று அது கூறியது.
மேலும் அதே காரணத்திற்காக தன் சொந்த சஃபாரியைத் தவிர வேறு எந்த ப்ரெளசரையும் அது அனுமதிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட பிறகு அது இந்தக்கொள்கையை மாற்றியது.
திங்களன்று அறிவிக்கப்பட்ட பிற புதிய அம்சங்கள் பின்வருமாறு:
• செயற்கைக்கோள் வழியாக உரைகளை (Text) அனுப்புதல்
• ஏர்பாட்ஸ் ப்ரோவை (AirPods Pro) கட்டுப்படுத்த தலை சைகைகளை பயன்படுத்துதல் (ஆம் என்று தலையை அசைத்தல் அல்லது இல்லை என்பதற்கு தலையை அசைத்தல்)
• எல்லா சாதனங்கள் மூலமும் அணுகக்கூடிய, கடவுச் சொற்களுக்கான பிரத்யேக செயலி.
• ஃபேஸ் ஐடி அல்லது கடவுக்குறியீடுகளுக்குப் பின்னால் குறிப்பிட்ட ஆப்ஸை மறைத்துவைக்க அல்லது பூட்டி வைக்கும் திறன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)