You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூறாவளியால் தரைமட்டமான தீவு - தங்குவதற்கே இடமின்றித் தவிக்கும் மக்கள்
- எழுதியவர், வில் கிராண்ட்
- பதவி, மத்திய அமெரிக்கா மற்றும் கியூபா செய்தியாளர், பிபிசி நியூஸ், மெக்ஸிகோ
’பெரில்’ சூறாவளி தனது மூர்க்கமான முழு சக்தியுடன் யூனியன் தீவை தாக்கியதன் காரணமாக ஏற்பட்ட பேரழிவின் அளவைக் கண்டு கத்ரீனா காய் அதிர்ச்சியடைந்தார்.
கரீபியனில் செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் தீவுக் கூட்டத்திற்கு அப்பால் அமைந்துள்ள இந்தத் தீவில் ஏறக்குறைய எல்லா கட்டடங்களும் தரைமட்டமாகியுள்ளன அல்லது மோசமாகச் சேதமடைந்துள்ளன என்று அவர் கூறினார்.
“பெரில் சூறாவளி கரையைக் கடந்த பிறகு யூனியன் தீவு பயங்கரமான நிலையில் உள்ளது. உண்மையில் கிட்டத்தட்ட முழு தீவும் தரைமட்டமாகியுள்ளது," என்று கோய் ஒரு வீடியோ செய்தியில் கூறினார்.
"ஒரு கட்டடம்கூட இப்போது இல்லை. வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன, சாலைகள் தடைப்பட்டுள்ளன, மின் கம்பங்கள் தெருக்களில் விழுந்துள்ளன.”
மீனவரும், மீன்பிடி வழிகாட்டியுமான செபாஸ்டின் சைலி இதை ஆமோதிக்கிறார். “எல்லாமே போய்விட்டது. நான் இப்போது வாழ்வதற்குக்கூட எந்த இடமும் இல்லை, ”என்று அவர் கூறினார்.
கடந்த 1985 முதல் யூனியன் தீவில் அவர் வசித்து வருகிறார். 2004இல் இவான் சூறாவளி வீசியபோதும் அவர் அங்கு இருந்தார். ஆனால் "பெரில் சூறாவளியை எதனுடனும் ஒப்பிட முடியாது. அது முற்றிலும் வேறுவிதமாக, மோசமாக இருந்தது" என்று அவர் கூறினார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சூறாவளியின் பயங்கரமான அனுபவம்
"ஒரு மாபெரும் சூறைக்காற்று கடந்து சென்றது போல் இருந்தது. யூனியன் தீவின் 90 சதவிகிதம் அழிக்கப்பட்டுவிட்டது."
அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் பயத்தின் அளவு அவரது குரலில் இன்னும் தெளிவாகத் தெரிகிறது.
"நான் எனது மனைவி மற்றும் மகளுடன் இருந்தேன். உண்மையைச் சொல்வதானால் நாங்கள் தப்பிப் பிழைப்போம் என்று நான் நினைக்கவில்லை,” என்றார் அவர்.
அவரது உறவினர் அலிஸி தனது குடும்பத்துடன் ஒரு ஹோட்டலை நடத்துகிறார். ’பெரில்’ சூறாவளி அவர்களின் நகரத்தைக் கடந்து சென்றபோது ஏற்பட்ட பயங்கரமான அனுபவத்தை அவர் விவரித்தார்.
நீடித்த, கொடுங்காற்று தள்ளித் திறக்காமல் இருக்க கதவுகள் மற்றும் ஜன்னல்களுக்கு எதிராக நாற்காலி, மேசைகளைத் தள்ளி வைக்க வேண்டியிருந்தது என்று அவர் கூறினார்.
"காற்றின் அழுத்தம் மிகவும் தீவிரமாக இருந்தது. அதை எங்கள் காதுகளில் உணர முடிந்தது. மேற்கூரை பிய்த்துக்கொண்டு வேறொரு கட்டடத்தில் சென்று மோதுவதை எங்களால் கேட்க முடிந்தது. ஜன்னல்கள் உடைந்து கட்டடம் முழுவதும் வெள்ளம் நிரம்பியது."
"இது இவ்வளவு மோசமாக இருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. எல்லோரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்." இயற்கை விவசாயம் செய்பவரும், தேனீ வளர்ப்பவரும், மீனவருமான செபாஸ்டீனின் இரண்டு பண்ணைகள் மற்றும் அவரது தேன் கூடுகளும் முற்றிலுமாக நாசமாகியுள்ளன.
இருப்பினும் தீவிலுள்ள மக்கள் சமூகங்களின் உடனடி முன்னுரிமை தங்குமிடம்தான் என்று செபாஸ்டீன் தெரிவித்தார். மக்கள் தங்கள் குடும்பங்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க மரம் மற்றும் பிளாஸ்டிக் தாள்களைச் சேகரிக்க முயல்கின்றனர்.
"கூடவே தண்ணீர் மற்றும் உணவைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.
யூனியன் தீவில் டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள், பால் பொடி, சுகாதாரப் பொருட்கள், முதலுதவிப் பெட்டிகள் மற்றும் கூடாரங்கள் வரை பல பொருட்கள் அவசரமாகத் தேவைப்படுவதாக அலிஸி சைலி கூறினார்.
'வார்த்தைகளில் விவரிக்க முடியாத பேரழிவு'
மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் மூலம் தொடங்கப்பட்ட ஸ்டார்லிங்க் நெட்வொர்க்குடன் இணைவதன் மூலம் செய்திகளை மட்டுமே அவரால் அனுப்ப முடிந்தது.
செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் அரசு, அதன் பங்கிற்கு பிரச்னையின் அளவை அங்கீகரிப்பதாகக் கூறுகிறது.
ஒரு காலை உரையில், செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் பிரதமர் ரால்ஃப் கோன்சால்வ்ஸ் கரீபியன் தேசம் முழுவதும் ஏற்பட்ட அதிர்ச்சியின் உணர்வைச் சுருக்கமாகக் கூறினார்: "பெரில் சூறாவளி - இந்த ஆபத்தான மற்றும் பேரழிவு சூறாவளி - வந்து போய்விட்டது. அது வார்த்தைகளில் விவரிக்க முடியாத அழிவை ஏற்படுத்தியுள்ளது. நம் நாடு முழுவதும் வலியையும் துன்பத்தையும் விட்டுச் சென்றுள்ளது,” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
சூறாவளிக்குப் பிந்தைய முன்னுரிமைகளின் நீண்ட பட்டியலைச் சமாளிக்கத் தனது நிர்வாகம் முடிந்தவரை விரைவாகச் செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
யூனியன் தீவில் அரசிடம் நிதி, வளங்கள் மற்றும் மனிதவளம் உள்ளதா என்பதில் சில சந்தேகங்கள் உள்ளன.
"அவர்கள் எங்களுக்கு உதவ ராணுவத்தையும் கடலோர காவல் படையையும் அனுப்புவார்கள் என்று நம்புகிறேன். அவர்களால் தீவை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை,” என்று செபாஸ்டின் கூறினார்.
"இதற்கு பல கோடிக்கணக்கான டாலர்கள் தேவைப்படும். கட்டியெழுப்ப ஓராண்டு அல்லது அதற்கும் மேல் எடுக்கும் மற்றும் சர்வதேச உதவி தேவைப்படும்," என்று அவர் குறிப்பிட்டார்.
கரீபியன் புலம்பெயர்ந்தோரை தங்களால் இயன்ற விதத்தில் உதவி செய்யுமாறு யூனியன் ஐலண்ட் சுற்றுச்சூழல் கூட்டணியின் இயக்குநரான கத்ரீனா கோய் கேட்டுக் கொண்டார்.
“எங்களுக்கு அதிக அளவில் உதவி தேவைப்படுகிறது. எமர்ஜென்சி உபகரணங்கள், உணவு, மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது, இவை அனைத்தும் இந்த நேரத்தில் தேவை.
பல ஆண்டுகளாக, கரீபியனில் உள்ள சிறிய தீவு சமூகங்களுக்கு ஒரு முக்கிய ஆதாரமான யூனியன் தீவின் நீர் பாதுகாப்பிற்காக கோய் முக்கியமான பணிகளை மேற்கொண்டுள்ளார்.
பெரில் சூறாவளி காரணமாக அந்தப் பணி முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று அவரது சர்வதேச சகாக்கள் கூறுகிறார்கள்.
பெரில் சூறாவளி திங்களன்று நான்காவது வகை சூறாவளியாக நிலத்தைத் தாக்கியது. 150mph (மணிக்கு 240 கிமீ) வேகத்தில் காற்று வீசியது.
ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் மின்சாரம் இல்லாமல் உள்ளனர். பலர் செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், கிரெனடா மற்றும் செயின்ட் லூசியாவில் தற்காலிக தங்குமிடங்களில் உள்ளனர்.
தீவின் ஒவ்வோவோர் அங்குலத்திலும் குழப்பம் மற்றும் வீடற்ற நிலைமை உள்ள போதிலும் விஷயங்கள் இதைவிட மோசமாகவில்லை என்பதற்கு செபாஸ்டியன் சைலி கடவுளுக்கு நன்றி கூறுகிறார்.
"மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் நாங்கள் இன்னும் உயிருடன் இருக்கிறோம். பொருள் இழப்பு மட்டுமே நிகழ்ந்துள்ளது," என்றார் அவர்.
"நாங்கள் எதிர்கொண்டு, கடந்து வந்த அந்த சக்தியைப் பார்த்த பிறகு, இன்று என் அண்டைவீட்டார் இன்னும் இங்கே இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று அவர் தெரிவித்தார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)