அடுத்தடுத்த தோல்விகளால் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி என்ன?

ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான போட்டிக்குப் பிறகு, இதுவரை உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணி இதுபோன்ற மோசமான ஆட்டத்தை எந்தத் தொடரிலும் வெளிப்படுத்தியதில்லை என்ற விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.

மோசமான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு, வீரர்கள் தேர்வில் குழப்பம், மோசமான பீல்டிங், கேட்சுகளை தவறவிடுவது என ஏராளமான சிக்கல்களுடன் ஆஸ்திரேலிய அணி இந்த உலகக் கோப்பைத் தொடரில் பயணித்து வருகிறது.

இந்தச் சிக்கல்களை விரைவாகச் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் கேப்டன் கம்மின்ஸ் இருக்கிறார். அப்படிச் செய்யாவிட்டால் அடுத்த சில போட்டிகளில் தோல்வியையே சந்திக்க நேரிடும்.

லக்னோவில் நேற்று நடந்த உலகக் கோப்பை ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 134 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்பிரிக்கா.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. 312 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் 177 ரன்களில் தோற்றது.

 ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, கிரிக்கெட், உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

அதள பாதாளத்தில் விழுந்த ரன்ரேட்

இந்தத் தோல்வியின் மூலம் ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதன் நிகர ரன்ரேட் மைனஸ் 1.907ஆகச் சரிந்துள்ளது.

இதுவரை நடந்த உலகக் கோப்பைத் தொடர்களில் ஆஸ்திரேலிய அணி இந்த முறை போன்று மோசமாக விளையாடியதில்லை என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்நாட்டின் இணையதளங்கள், நாளேடுகள் அனைத்தும் நேற்றைய தோல்வியைக் கடுமையாக விமர்சித்துள்ளன.

ஏற்கெனவே இந்திய அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தோற்றிருந்த நிலையில், நேற்று 134 ரன்களில் தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றது.

அடுத்துவரும் போட்டிகள் மிகவும் முக்கியம்

இன்னும் 7 ஆட்டங்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு மீதம் இருக்கும் நிலையில், அடுத்துவரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமாகும். இதில் குறிப்பாக வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக ஆஸ்திரேலியா வென்றுவிடலாம் என்று வாதத்துக்கு வைத்துக்கொண்டால்கூட, இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளைச் சமாளிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். இங்கிலாந்து அணி முதல் போட்டியில் தோற்றாலும் அடுத்த ஆட்டத்தில் வென்று தன்னை தயார் செய்திருக்கிறது. இலங்கை அணியும் முதல் வெற்றிக்காக போராடி வருகிறது. ஆதலால், அடுத்துவரும் 4 போட்டிகள் ஆஸ்திரேலிய அணிக்கு முள்மீது நடப்பதுபோன்றுதான் இருக்கும்.

 ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, கிரிக்கெட், உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டும் நேற்று 7 கேட்சுகளைத் தவறவிட்டனர். மிட்செல் ஸ்டார்க் கேட்சைத் தவறவிடும் காட்சி

கடைசி இடத்திற்குச் சென்ற கேட்ச் பிடிக்கும் திறன்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது, தோல்விக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டும் நேற்று 7 கேட்சுகளைத் தவறவிட்டனர். 5 முறை உலகக் கோப்பை சாம்பியன்களான ஆஸ்திரேலியா இதுபோன்ற முக்கியத்துவம்வாய்ந்த ஆட்டத்தில் ஒரே போட்டியில் 7 கேட்சுகளைக் கோட்டை விடுவதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலிக்குக் கேட்சை கோட்டை விட்டதற்கான விலையை கடைசியில் ஆஸ்திரேலிய அணி கொடுத்தது நினைவிருக்கும். இப்போது ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராகவும், இங்கிலிஸ், மார்ஷ் உள்ளிட்ட வீரர்களின் பல கேட்சுகளைக் கோட்டை விட்டது, ரன்களையும் தடுக்கவில்லை, தோல்வியையும் தடுக்கவில்லை.

‘கேட்ச் லாஸ் மேட்ச் லாஸ்’ என்று கிரிக்கெட்டில் அழகாகச் சொல்வார்கள். இந்த உலகக் கோப்பையில் இந்த வார்த்தை ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பொருத்தமாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலய அணியின் கேட்ச் பிடிக்கும் திறன் 54% ஆகக் குறைந்து கடைசி இடத்தில் இருக்கிறது.

இதனோடு ஓப்பிடுகையில் இந்திய அணியின் கேட்ச் பிடிக்கும் திறன் 92% முதலிடத்தில் இருக்கிறது. வங்கதேசம் 91%-த்தில் 2வது இடத்திலும், நெதர்லாந்து 83%-த்தில் 3வது இடத்திலும் தென் ஆப்பிரிக்கா 80%-த்தில் 4வது இடத்தில்தான் இருக்கின்றன. 5முறை உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியின் கேட்ச் பிடிக்கும் திறன் 54% குறைந்திருப்பது தங்களை சுய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

‘விவரிக்க வார்த்தைகளே இல்லை!’

ஆஸ்திரேலியாவின் கேட்ச் பிடிக்கும் திறன் குறித்து முன்னாள் வீரர் ஷேன் வாட்ஷன் வர்ணனையின்போது கூறுகையில் “ஆஸ்திரேலியாவின் மோசமான ஆட்டத்தைப் பற்றி பேச எனக்கு வார்த்தைகளே வரவில்லை. மிகவும் வேதனையாக இருக்கிறது. அதிலும் கேட்ச், பீல்டிங்கை நினைத்தாலே இருள் சூழ்கிறது,” என்றார்.

மேலும், “தங்களின் திறனை வெளிப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள். பீல்டிங் மற்றும் கேட்ச் பிடிக்கும் தரத்துக்காகவே உலக அளவில் ஆஸ்திரேலியா மதிக்கப்படும். துரதிர்ஷ்டமாக கேட்ச் பிடிக்கும் திறன் உலகத்தரத்துக்கு உயரவில்லை,” என காட்டமாக விமர்சித்தார்.

வீரர்கள் தேர்வில் குழப்பம்

இந்தியாவில் உலகக் கோப்பை நடக்கும் போது, இங்குள்ள மைதானங்கள் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்பது அனைத்து அணிகளுக்கும் தெரிந்த விஷயம். ஆனால், ஆடம் ஸம்பா என்ற ஒரு ஸ்பெசலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளரை மட்டும் வைத்துக்கொண்டு ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையைச் சந்தித்து வருகிறது. ஆஸ்டன் அகர் ஏன் சேர்க்கப்படவில்லை, லாபுஷேனை சேர்க்கவேண்டிய நிர்பந்தம் என்ன போன்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பகுதிநேரச் சுழற்பந்துவீச்சாளராக மேக்ஸ்வெல் இருப்பது ஸ்பெசலிஸ்ட் ஸ்பின்னர் இருப்பது போன்று ஆகாது என்றாலும் இரு போட்டிகளிலும் ஆடம் ஸம்பாவைவிட மேக்ஸ்வெல் சிறப்பாகவே பந்துவீசியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில்கூட 10 ஓவர்கள் வீசி 34 ரன்கள் மட்டுமே மேக்ஸ்வெல் விட்டுக்கொடுத்தார்.

 ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, கிரிக்கெட், உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஸ்திரேலிய அணிக்குப் பின்வரிசையில் மிகவும் பலம் சேர்க்கும் பேட்டாரக இருந்தவர் அலெக்ஸ் கேரே

அலெக்ஸ் கேரே ஏன் நீக்கப்பட்டார்?

இப்படி சுழற்பந்துவீச்சாளர்கள் ஜொலித்துவரும் நிலையில் ஏன் ஆஸ்திரேலிய அணி 2வதாக முழுநேர சுழற்பந்துவீச்சாளர் அல்லது பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரைத் தேர்வு செய்யவில்லை என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

மேலும், உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன் கடைசி நேரத்தில் அணியில் அலெக்ஸ் கேரேவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, ஜோஷ் இங்கிலிஸ் சேர்க்கப்பட்டதும் தற்போது அந்த அணிக்குப் பாதகமாகி இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணிக்குப் பின்வரிசையில் மிகவும் பலம் சேர்க்கும் பேட்டாரக இருந்தவர் அலெக்ஸ் கேரே. ஆஸ்திரேலய அணிக்கு இக்கட்டான நேரத்தில் பல முறை சிறப்பாக ஆடி வெற்றியத் தேடித்தந்த அனுபவம் உள்ளவர். ஆனால், அலெக்ஸ் கேரேவை நீக்கிவிட்டு இங்கிலிஸை சேர்த்ததும் விவாதமாகி இருக்கிறது.

 ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, கிரிக்கெட், உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாமல் இருப்பது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக இருந்து வருகிறது

ஹெட் திரும்புவாரா?

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாமல் இருப்பது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக இருந்து வருகிறது. தற்போது தொடக்க வீரராகக் களமிறங்கும் மிட்ஷெல் மார்ஷ், ஒன்டவுன் அல்லது 2வது வரிசையில் களமிறங்கி விளையாடக்கூடியவர்.

டிராவிஸ் ஹெட் இல்லாத நிலையில் தொடக்க வீரராக மார்ஷ் களமிறங்கியும் பெரிதாக ரன சேர்க்கவில்லை. டிராவிஸ் ஹெட் அணிக்குள் வந்தால், பேட்டிங்கிலும் வலு சேர்க்கும், பகுதி நேர சுழற்பந்துவீச்சாளராகவும் இந்திய ஆடுகளங்களில் செயல்படுவார்.

 ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, கிரிக்கெட், உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு மூன்றாவது நடுவர் அளித்த இரு அவுட் முடிவுகளும் ஒரு காரணம் என்று சமூக வலைத்தளத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது

சர்ச்சைக்குரிய அவுட்கள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு மூன்றாவது நடுவர் அளித்த இரு அவுட் முடிவுகளும் ஒரு காரணம் என்று சமூக வலைத்தளத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனுக்குரிய ‘உயிர் வாய்ப்பு’ (live chance) என்பது மிகக் குறைவு. தவறான முடிவுகள் ஆட்டத்தை திருப்பிவிடும், ஆதலால்தான் சந்தேகத்தின் பலன் பேட்டருக்கு சென்று சேர வேண்டும் என தார்மீக ரீதியாகக் கூறுவதுண்டு. ஒரு பந்துவீச்சாளருக்கு ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்கூட மற்றொருவாய்ப்புக் கிடைக்கும், ஆனால், தவறான முடிவால் பேட்ஸ்மேன் ஆட்டமிழந்துவிட்டால் அவருக்கான வாய்ப்பு அந்த நிமிடமே மறுக்கப்படுகிறது.

இந்த ஆட்டத்திலும் மூன்றாவது நடுவரின் முடிவு, ஸ்மித், ஸ்டாய்னிஷ் இருவரின் வாய்ப்பையும் பறி்த்துவிட்டதாக விமர்சிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி இருந்த மோசமான கட்டத்தில் ஸ்மித், ஸ்டாய்னிஷ் இருவரின் விக்கெட்டும் மிக, மிக முக்கியமானதாக இருந்தது. இருவருக்கும் 3வது நடுவர் ஒருவேளை அவுட் வழங்காமல் இருந்திருந்தால் ஆட்டம் வேறு திசையில் பயணத்திருக்கவும் வாய்ப்பு உண்டு.

அதிலும், ரபாடா வீசிய பந்து ஸ்மித்தின் கால்காப்பின் மேல்புறத்தில் பட்டது தெளிவாகத் தெரிந்தது. ஸ்மித் க்ரீஸுக்கு வெளியே வந்துதான் கால்காப்பில் வாங்கினார். கிரீஸுக்கும் ஸ்டெம்புக்கும் இடையே சில அடி தூரம் இருக்கும்போது, பந்தின் நகர்வையு ம் கணக்கிலெடுக்க வேண்டும். ஆனால், பந்தின் நகர்வு ஸ்டெம்பின் நுனியில் பட்டுச் செல்வது போன்றுதான் மூன்றாவது நடுவர் ரிச்சார்ட் கெட்டில்பர்க் கணிப்புக் காட்சியில் தெரிந்தது.

ஏறக்குறைய ஸ்டெம்பின் உயர்த்துக்கு மேல் பந்து செல்வதுபோலத்தான் இருந்தது. ஒருவேளை ‘அம்பயர்ஸ் கால்’ வந்திருந்தால்கூட ஸ்மித்துக்கு நடுவர் அவுட் வழங்கி இருக்கமாட்டார். சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு வழங்க வேண்டும் என்ற தார்மீகத்தைப் பின்பற்றாமல் மூன்றாவது நடுவர் கெட்டில்பர்க் அவுட் வழங்க, ஸ்மித் அதிர்ச்சியுடன் வெளியேறினார்.

 ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, கிரிக்கெட், உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்டாய்னிஷ் ‘லெக் சைடில்’ சென்ற பந்தை தட்டிவிடும்போது, அவரின் இடது கை பேட்டின் கைபிடியிலும், வலது கை பேட்டின் கைப்பிடியைப் பிடிக்காமல் இருந்தது

ஸ்டாய்னிஷ் ஆட்டமிழந்ததில் நடந்தது என்ன?

ஸ்டாய்னிஷ்க்கு அவுட் வழங்கிய 3வது நடுவர் கெட்டில்பர்கின் முடிவும் சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

ஸ்டாட்னிஷ் ஆடிய ஷாட்டை ஆய்வு செய்த 3வது நடுவர், பந்து ஸ்டாய்னிஷின் பேட் கைபிடியில் பட்டுச் சென்றதை உறுதி செய்து அவுட் வழங்கினார். இதைச் சற்றும் எதிர்பாராத ஸ்டாய்னிஷ் அதிருப்தியுடன் சென்றார். களத்தில் இருந்த நடுவர் ஜோயல் வில்சன், ஸ்டாய்னிஷ்குக்கு அவுட் வழங்கவில்லை. ஆனால், தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா அப்பீல் செய்தவுடன் இந்த முடிவு வழங்கப்பட்டது.

உண்மையில், ஸ்டாய்னிஷ் ‘லெக் சைடில்’ சென்ற பந்தை தட்டிவிடும்போது, அவரின் இடது கை பேட்டின் கைபிடியிலும், வலது கை பேட்டின் கைப்பிடியைப் பிடிக்காமல் இருந்தது.

ஆனால், இரு கைகளும் கைப்பிடியைப் பிடித்துள்ளபோது பந்து கைப்பிடியில் அல்லது கையுறையில் பட்டு சென்று விக்கெட் கீப்பர் பிடித்தால்தான் ‘அவுட்’ என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆனால், பேட்டின் கைப்பிடியைப் மட்டும் பேட்டர் பிடித்திருந்தபோது, பந்து கைப்பிடியில் அல்லது கையுறையில் உரசிச் சென்று விக்கெட் கீப்பர் பிடித்தால் அது ‘அவுட்’ இல்லை என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கிரிக்கெட் விதி 5.6.2-இன்படி, பேட்டர் கையில் அணிந்திருக்கும் கையுறையில் பந்து பட்டாலே அது பேட்டில் பட்டதாகவே கணக்கில் கொள்ள வேண்டும் எனத் தெரிகிறது.

மூன்றாவது நடுவர் கெட்டில் பர்க், 4வது நடுவர் கிரிஸ் பிரவுன் ஆகியோரின் முடிவுக்கு முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் அதிருப்தியும், வேதனையும் தெரிவித்துள்ளார்.

மோசமான பேட்டிங்

இவை மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணி இதுபோன்று மோசமான பேட்டிங்கையும் எந்த 40ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் வெளிப்படுத்தியதில்லை. அதிலும் 70 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற மோசமான நிலையை எட்டியதில்லை.

பீல்டிங்கில் கவனம் செலுத்தாது, கேட்ச் பயிற்சியில் தீவிரம் காட்டாதது, ஆடுகளத்தை தவறாகக் கணித்தது போன்றவை ஆஸ்திரேலிய அணியின் கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது.

அதிலும் ஒருநாள் போட்டிக்கு கேப்டன் செய்யும் அனுபவம் இல்லாத கம்மின்ஸ், கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதும் கேள்விகளை எழுப்புகிறது. அடுத்துவரும் 7 போட்டிகளில் 4 போட்டிகள் மிகவும முக்கியமானவை, 7 போட்டிகளையும் வெல்வது அவசியம், ரன்ரேட்டும் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டதால், அடுத்துவரும் ஒவ்வொரு ஆட்டமும் ஆஸ்திரேலியாவுக்கு கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் இருக்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)