You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருவண்ணாமலை: முட்டை கேட்ட பள்ளி மாணவர் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்தது யார்? முழு பின்னணி
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
திருவண்ணாமலையில் முட்டை கேட்ட ஐந்தாம் வகுப்பு மாணவரை துடைப்பத்தால் தாக்கிய சம்பவத்தில் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியத்தில் செங்குணம் கொல்லைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
இங்கு ஐந்தாம் வகுப்பு மாணவர் ஒருவரை அப்பள்ளியின் சமையலர் துடைப்பத்தால் தாக்கும் வீடியோ காட்சிகள் கடந்த வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 3) இணையத்தில் வேகமாக பரவியது.
மதிய சத்துணவில் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் ஆகியோர் முட்டை வழங்க மறுத்ததை எதிர்த்து ஐந்தாம் வகுப்பு மாணவர் கேள்வி எழுப்பியுள்ளார். தங்களிடம் முட்டை கையிருப்பு இல்லை இருவரும் கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்து சமையல் அறைக்குச் சென்று முட்டை இருப்பில் உள்ளதை மாணவர் கவனித்துள்ளார். இதுதொடர்பாக கேள்வி எழுப்பியதால், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் கோபமடைந்து மாணவரை துடைப்பத்தால் கடுமையாக தாக்கியதாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
பணியிடை நீக்கம் - கைது
''விசாரணையில் சமையலர் லட்சுமி மற்றும் சமையல் உதவியாளர் முனியம்மாள் ஆகியோர் தங்களின் தவறை ஒப்புக் கொண்டதால் அவர்களைத் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்'' என அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
தொடர்ந்து, மாணவரைத் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் மீது பிஎன்எஸ் சட்டப் பிரிவு 131, சிறார் நீதி சட்டம் 2015 பிரிவு 75 ஆகியவற்றின்கீழ் போளூர் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவரை நோக்கி சாதிய ரீதியாக அந்த சமையலர் பேசியுள்ள நிலையில், அவர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏன் புகார் பதிவு செய்யப்படவில்லை என கேள்வி எழுந்துள்ளது. ஆனால், "பாதிக்கப்பட்ட மாணவர் எஸ்.சி/எஸ்.டி சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பதால் அந்த சட்டத்க்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை" என போளூர் காவல் நிலைய போலீஸார் பிபிசியிடம் தெரிவித்தனர்.
அவர்கள் இருவரையும் கடந்த 4 ஆம் தேதியன்று போளூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தொடக்க கல்வி இயக்குநர் கூறுவது என்ன?
"மாணவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அங்கிருந்த ஆசிரியை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு அவர் எந்த அக்கறையையும் காட்டவில்லை" எனக் கூறுகிறார், தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் பி.ஏ.நரேஷ்.
"சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் ஆகியோரின் அநாகரிக செயல் குறித்து தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரிகள், சத்துணவுத் துறை அதிகாரிகள் ஆகியோரிடம் முறையிடவும் அவர் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை" என அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கார்த்திகேயன் விசாரணை நடத்தியுள்ளார். தொடர்ந்து, பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிய ஃபுளோராவுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
"முட்டை கொடுக்க மறுப்பதை தவறு என ஐந்தாம் வகுப்பு மாணவர் வெளிப்படையாக கேள்வி எழுப்புகிறார். இதற்கு தாக்குதலில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.இது மிக அவமானகரமான செயல்" எனவும் நரேஷ் குறிப்பிட்டார்.
"முட்டையைக் கொடுங்கள் எனக் கேள்வி எழுப்பிய மாணவரின் தைரியத்தை அரசு பாராட்ட வேண்டும். உணவு கிடைப்பதில் சிக்கல் இருந்தால் அடங்கிப்போக வேண்டிய அவசியமில்லை. கேள்வி எழுப்ப வேண்டும் என்ற எண்ணத்தை மாணவர்களிடம் அரசு ஏற்படுத்த வேண்டும்," என குறிப்பிட்டார் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு
"மாணவர்களுக்கு காலை மற்றும் மதிய சத்துணவு முறையாக வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணித்திருந்தால் இதுபோன்ற பிரச்னைகள் எழுவதற்கு வாய்ப்பில்லை" எனக் கூறுகிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
"திருவண்ணாமலை அரசுப் பள்ளி விவகாரத்தில் பிரச்னைக்குப் பிறகு ஊழியர்களைத் தண்டிப்பதால் எந்தப் பயனும் இல்லை" எனக் கூறும் அவர், "முட்டை போடாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதைப் பற்றி சத்துணவு ஊழியர்களுக்கு அதிகாரிகள் புரிய வைத்திருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.
"ஒரு சம்பவம் நடைபெறும்போது பதற்றப்பட்டு வீடியோ எடுப்பதைவிட, சட்டத்தின்படி இயங்குவதற்கு ஆசிரியர்களுக்குக் கல்வித்துறை பயிற்றுவிக்க வேண்டும்" எனவும் அவர் கூறினார்.
'அரசு சகித்துக் கொள்ளாது' - அமைச்சர் கீதா ஜீவன்
மாணவர் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கீதா ஜீவன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அரசுப்பள்ளிகளில் சத்துணவுத் திட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளி சம்பவத்தில் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.
"குழந்தைகளின் பசியைப் போக்கும் வகையில் காலை உணவுத் திட்டம் கொண்டு வந்த தி.மு.க அரசு, குழந்தைகளுக்கு எதிரான எந்த வன்முறையையும் சகித்துக் கொள்ளாது" எனவும் அமைச்சர் கீதா ஜீவன் பதிவிட்டுள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு