மாதாந்திர 'மகளிர் உதவித்தொகை' பெண்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளது?

பெண்களுக்கு உதவித் தொகை வழங்கும் இந்தியாவின் மிகப்பெரிய முயற்சி

பட மூலாதாரம், Hindustan Times via Getty Images

    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, இந்திய செய்தியாளர்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ஒரு பெண் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய, அதேசமயம் நிலையான தொகையைப் பெறுகிறார். முறையான வேலை இல்லாத அவர் அதை ஊதியமாகப் பெறவில்லை. அரசு வழங்கும் 'எந்த நிபந்தனையும் இல்லாத பணப் பரிமாற்றமாக' அது வழங்கப்படுகிறது.

இந்தப் பணம் மருந்துகள், காய்கறிகள் மற்றும் தனது மகனின் பள்ளிக் கட்டணம் ஆகியவற்றுக்குப் பயன்படுவதாக பிரேமிலா பாலாவி கூறுகிறார். 1,500 ரூபாய் என்கிற அந்த தொகை சிறியதாக இருக்கலாம். ஆனால், யூகிக்கக் கூடிய ஒரு வருமானம், கட்டுப்பாடு உணர்வு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை அது அவருக்குக் கொடுக்கிறது.

அவருடைய கதை மிகவும் பொதுவானது. இந்தியா முழுவதும், 12 மாநிலங்களில் 118 மில்லியன் பெண்கள் இப்போது தங்கள் அரசுகளிடமிருந்து நிபந்தனையற்ற இந்த உதவித் தொகையைப் பெறுகின்றனர். இது இந்தியாவை உலகின் மிகப்பெரிய மற்றும் குறைவாக ஆராயப்பட்ட சமூக-கொள்கை சோதனைகளின் தளமாக மாற்றுகிறது.

தானியங்கள், எரிபொருள் மற்றும் கிராமப்புற வேலைகளுக்கு மானியம் வழங்குவதில் நீண்டகாலமாகப் பழகிய இந்தியா, மிகவும் தீவிரமாக ஒரு விஷயத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. குடும்பங்கள் நடத்துவது, ஊதியம் இல்லாத பராமரிப்பின் சுமையைத் தாங்குவது மற்றும் புறக்கணிக்க முடியாத அளவுக்கான வாக்காளர்கள் சதவிகிதத்தைக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு இந்த உதவித்தொகை கொடுக்கவேண்டிய நிலையில் இருக்கிறது.

அதற்கு தகுதி பெறுவதற்கான விதிகள் மாறுபடுகின்றன. வயது வரம்புகள், வருமான வரையறைகள், அரசு ஊழியர்கள், வரி செலுத்துவோர், கார் அல்லது பெரிய நிலப்பகுதி கொண்ட குடும்பங்களுக்கு விதிக்கப்படும் விலக்குகள் ஆகியவை இதில் அடங்கும்.

"பெண்களுக்கு ஆதரவாக இந்திய மாநிலங்களின் நலத்திட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைவதை இந்த நிபந்தனையற்ற உதவித் தொகை பரிமாற்றம் குறிக்கிறது," என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் சட்டம் மற்றும் சமூக நீதித்துறை பேராசிரியரான பிரபா கோடீஸ்வரன் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு 1,000-2,500 ரூபாய் வரை இந்த உதவித் தொகை மாறுபடுகிறது. இது வீட்டு வருமானத்தில் தோராயமாக 5-12% மட்டுமே. ஆனால் வழக்கமாகக் கிடைக்கிறது. இப்போது 300 மில்லியன் பெண்கள் வங்கிக் கணக்குகளை வைத்திருப்பதால், பணப்பரிமாற்றங்கள் நிர்வாக ரீதியாக எளிமையாகிவிட்டன.

அதை, பெண்கள் பொதுவாக வீட்டு மற்றும் குடும்பத் தேவைகளுக்கு செலவளிக்கின்றனர். குழந்தைகளின் கல்வி, மளிகை பொருள்கள், சமையல் எரிவாயு, மருத்துவம் மற்றும் அவசர செலவுகள் மற்றும் சிறு கடன்களை அடைக்க பயன்படுத்துகிறார்கள். தங்கம் போன்ற தனிப்பட்ட பொருட்களை எப்போதாவது வாங்குகிறார்கள்.

இங்கு கடுமையான நிபந்தனைகள் இல்லாதது தான் பெரிய நிபந்தனைகளுடன் கூடிய உதவித் தொகை திட்டங்கள் உள்ள மெக்சிகோ, பிரேசில் அல்லது இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவை வேறுபடுத்துகிறது. ஒரு குழந்தை பள்ளிக்குச் சென்றாலும் செல்லாவிட்டாலும், குடும்பம் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்தாலும் இல்லாவிட்டாலும் பணம் வரும்.

பெண்களுக்கு உதவித் தொகை வழங்கும் இந்தியாவின் மிகப்பெரிய முயற்சி

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, பிகார் தேர்தலுக்கு முன்னதாக பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு 10,000 ரூபாய் மாற்றப்பட்டது

2013-இல் பெண்களுக்கு நிபந்தனையற்ற உதவித் தொகை திட்டத்தை முதல் மாநிலமாக கோவா அறிமுகப்படுத்தியது. 2020-இல் கொரோனா பரவுவதற்கு முன்னர், வடகிழக்கு அசாமில் பெண்களுக்காக ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, இதன் வீச்சு அதிகரித்தது. அப்போதிருந்து, இந்த 'உதவித் தொகை' அரசியலில் முக்கிய அம்சமாக மாறியது.

நிபந்தனையற்ற உதவித் தொகையின் சமீபத்திய அலை வயது வந்த பெண்களை குறிவைக்கிறது. சில மாநிலங்கள் அவர்களின் ஊதியமற்ற வீட்டு மற்றும் பராமரிப்பு பணிகளை ஏற்றுக்கொள்கின்றன. தமிழ்நாடு அதன் பரிவர்த்தனையை 'உரிமை மானியமாக' குறிக்கிறது. அதேசமயம் மேற்கு வங்கத்தின் திட்டமும் பெண்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதாக அமைந்துள்ளது.

மற்ற மாநிலங்களில், இது மறைமுகமாக அங்கீகரிக்கப்படுகிறது. வீட்டு மற்றும் குடும்ப நலனுக்காக பெண்கள் இந்த உதவித் தொகையைப் பயன்படுத்த வேண்டும் என்று கொள்கை வகுப்பாளர்கள் எதிர்பார்ப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெண்களின் பொருளாதாரம் மீதான இந்த கவனம் அரசியலிலும் தாக்கம் செலுத்துகிறது. 2021-இல், தமிழ் நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன், 'இல்லத்தரசிகளுக்கு சம்பளம்' என்ற வாக்குறுதி கொடுத்திருந்தார். பெண்களை மையமாகக் கொண்ட உதவித் தொகை உறுதிமொழிகள், 2024-க்குள், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஒடிசா, ஹரியானா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநில அரசியல் கட்சிகள் வெற்றி பெறுவதற்கு உதவியது.

பிகாரில் சமீபத்தில் நடந்த தேர்தல்களில் பணப் பரிமாற்றத்தின் அரசியல் பலம் அப்பட்டமாக வெளிப்பட்டது. நாட்டின் ஏழ்மையான மாநிலத்தில் வாக்கெடுப்புக்கு சில வாரங்களுக்கு முன்பு, வாழ்வாதாரத்தை உருவாக்கும் திட்டத்தின் கீழ் அம்மாநில அரசு 10,000 ரூபாயை 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியது. ஆண்களை விட பெண்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்தனர். இது தேர்தல் முடிவிலும் தாக்கம் ஏற்படுத்தியயது.

விமர்சகர்கள் இது அப்பட்டமாக 'வாக்குககளை வாங்குவது' என்று குறிப்பிட்டனர். ஆனால் தேர்தல் முடிவு தெளிவாக இருந்தது. பெண்கள் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற உதவினார்கள். இந்த பணப் பரிமாற்றம், நிதியுதவி என்பதை எவ்வாறு அரசியல் செல்வாக்காக பயன்படுத்த முடியும் என்பதற்கான நினைவூட்டலாக சிலர் நம்புகின்றனர்.

பிகார் மிகச் சிறிய உதாரணம் மட்டுமே. இந்தியா முழுவதும், நிபந்தனையற்ற பணப்பரிமாற்றம், பல்லாயிரக்கணக்கான பெண்களை தொடர்ந்து சென்றடைகிறது.

மகாராஷ்டிரா மட்டும் இரண்டரை கோடி பெண்களுக்கு பலன்களை உறுதியளிக்கிறது. ஒடிசாவின் திட்டம் அதன் 71% பெண் வாக்காளர்களைச் சென்றடைகிறது.

சில கொள்கை வட்டாரங்களில், இந்தத் திட்டங்கள் வாக்கு வாங்கும் இலவசங்கள் என்று விமர்சிக்கப்படுகின்றன. அவை மாநில நிதி நிலைக்கும் அழுத்தம் கொடுக்கிறது.

12 மாநிலங்கள் இந்த நிதியாண்டில் அத்தகைய உதவித் தொகைகளுக்கு சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிட உள்ளன. பிஆர்எஸ் லெஜிஸ்லேடிவ் ரிசர்ச் என்ற குழு இந்த மாநிலங்களில் பாதி, வருவாய் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகச் சொல்கிறது. சொத்துகளை உருவாக்காமல் வழக்கமான செலவினங்களை மேற்கொள்ள ஒரு மாநிலம் கடன் வாங்கும்போது இது நிகழ்கிறது.

ஆனால், 'ஊதியம் இல்லாத வீட்டு மற்றும் பராமரிப்பு வேலைகளின் பொருளாதார மதிப்பு' என்ற விஷயத்துக்கு பல தசாப்தங்களாக இந்தியாவின் பெண்ணியவாதிகள் வாதிட்டதற்கு மெல்ல அங்கீகாரம் கிடைப்பதையும் அவை பிரதிபலிப்பதாக பலர் வாதிடுகின்றனர்.

2024-ஆம் ஆண்டு, இந்தியாவில் பெண்கள் ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் இத்தகைய வீட்டு வேலைகளில் செலவிட்டனர். சமீபத்திய டைம் யூஸ் கணக்கெடுப்பின்படி (Time Use Survey), ஆண்கள் செலவிடும் நேரத்தை விட இது 7.6 மடங்கு அதிகம். இந்த சுமை இந்தியாவின் தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கேற்பு குறைவாக இருப்பதை காட்டுகிறது. இந்த உதவித் தொகை குறைந்தபட்சம், ஏற்றத்தாழ்வு இருப்பதை ஒப்புக்கொள்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெண்களுக்கு உதவித் தொகை வழங்கும் இந்தியாவின் மிகப்பெரிய முயற்சி

பட மூலாதாரம், Swastik Pal

படக்குறிப்பு, தனக்குக் கிடைக்கும் பணம் மூலம் துணிகள் விற்று தன் குடும்பத்துக்கு உதவுகிறார் மேற்கு வங்கத்தின் சோமா தா

இது பலன் தருகிறதா?

இதற்கான ஆதாரம் குறைவாக இருந்தாலும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. மகாராஷ்டிராவில் 2025-இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தகுதியுள்ள பெண்களில் 30% பேர் பதிவு செய்யவில்லை. சில நேரங்களில் ஆவணப் பிரச்னைகள் காரணமாகவும், சில நேரங்களில் தாங்கள் தன்னிறைவு பெற்றவர்கள் என்ற உணர்வினாலும் அவர்கள் பதிவு செய்வதில்லை. ஆனால் பதிவு செய்தவர்களில் பெரும்பாலோர் தங்களின் வங்கி கணக்குகளைத் தாங்களே கட்டுப்படுத்துபவர்கள்.

மேற்கு வங்கத்தில் 2023-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 90% பேர் தங்கள் கணக்குகளைத் தாங்களே இயக்கியதாகவும், 86% பேர் பணத்தை எப்படிச் செலவிடுவது என்று முடிவு செய்ததாகவும் கண்டறியப்பட்டது. பெரும்பாலானோர் உணவு, கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்குப் பயன்படுத்தினர். அது அவர்கள் வாழ்வில் பெரும் மாற்றம் ஏற்படுத்தவில்லை. ஆனால் அவர்களுக்கு அதுவொரு பாதுகாப்பு உணர்வை வழங்குகிறது.

பேராசிரியர் கோடீஸ்வரன் மற்றும் அவரது சக ஊழியர்களின் விரிவான பணி கலவையான விளைவுகளைக் காட்டுகிறது.

அசாமில், பெரும்பாலான பெண்கள் பணத்தை அத்தியாவசியப் பொருட்களுக்கு செலவழித்தனர். பலர் அது வழங்கிய கண்ணியத்தைப் பாராட்டினர். ஆனால், அது ஊதியம் இல்லாத வேலையை அங்கீகரிப்பதாக ஒருசிலர் மட்டுமே தெரிவிக்கின்றனர். பெரும்பாலானோர் இன்னும் ஊதியம் தரும் வேலைகளையே விரும்புகிறார்கள்.

தமிழ்நாட்டில் உதவித்தொகை பெறும் பெண்கள், 'மன அமைதி, திருமண உறவுகளில் ஏற்படும் மோதல்கள் குறைந்திருப்பது மற்றும் புதிய நம்பிக்கை கிடைத்திருப்பது' குறித்துப் பேசினர்.

கர்நாடகாவில், பயனாளிகள் சிறப்பாகச் சாப்பிடுவதாகவும், குடும்பத்தின் முடிவுகளில் அதிகம் ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரிவித்தனர். அவர்கள் அதிக ஊதியம் எதிர்பார்க்கிறார்கள்.

இருந்தாலும் ஒருசிலர் மட்டுமே இந்த திட்டத்தை ஊதியம் பெறாத பராமரிப்பு பணிக்கான இழப்பீடாக புரிந்து கொண்டார். இந்த உதவித் தொகை பற்றிய செய்தி சரியாகச் சென்றடையவில்லை. அப்படியிருந்தும், அரசியல்வாதிகளை கேள்வி கேட்கவும், அவசரநிலைகளை நிர்வகிக்கவும் பணம் அனுமதித்ததாக பெண்கள் தெரிவித்தனர். பல்வேறு ஆய்வுகளில், பெரும்பான்மையான பெண்கள் பணத்தின் முழு கட்டுப்பாட்டையும் கொண்டிருந்தனர்.

"பெண்கள் தங்களின் உடனடித் தேவைகளையும், குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்ய உதவித் தொகைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை ஆதாரங்கள் காட்டுகின்றன. மற்றபடி ஒவ்வொரு சிறு செலவிற்கும் தங்கள் கணவனைச் சார்ந்திருக்கும் பெண்களுக்கு அவை கண்ணியத்தை மீட்டுக்கொடுக்கின்றன" என்கிறார் பேராசிரியர் கோடீஸ்வரன்.

முக்கியமாக, கேல் ஆண்ட்ரூ மற்றும் மதுஸ்ரீ ஜனா ஆகியோருடன் இணைந்து பேராசிரியர் கோடீஸ்வரன் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த உதவித் தொகை பெண்கள் கூலி வேலை தேடுவதிலிருந்து தடுக்கவோ, பாலினக் கட்டமைப்பிற்குள் முடங்கிவிடவோ செய்கிறது என்பதற்கான ஆதாரங்களை எந்த ஆய்வுகளும் கண்டுபிடிக்கவில்லை.

பெண்களின் ஊதியமற்ற பணிச்சுமையையும் அவை குறைக்கவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இருந்தாலும், அவை நிதி சுயாட்சியை வலுப்படுத்துகின்றன. அவர்களின் பங்களிப்பையும் வலுப்படுத்துகின்றன.

அவை அமிர்தமோ அல்லது விஷமோ அல்ல: பணத்தால் மட்டுமே கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளை அகற்ற முடியாத ஒரு ஆணாதிக்க சமூகத்தில் செயல்படும் பயனுள்ள, அதேசமயம் வரையறுக்கப்பட்ட கருவிகள்.

பெண்களுக்கு உதவித் தொகை வழங்கும் இந்தியாவின் மிகப்பெரிய முயற்சி

பட மூலாதாரம், Swastik Pal

படக்குறிப்பு, இது தரு கண்ணியத்தை பெண்கள் வரவேற்கிறார்கள்

அடுத்தது என்ன?

ஆய்வு தெளிவான குறிப்புகளை வழங்குகிறது.

குறிப்பாக அதிக ஊதியமில்லாத பராமரிப்புப் பணியைச் செய்யும் பெண்களுக்குத் தகுதி விதிகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும். பணப் பரிமாற்றம் நிபந்தனையற்றதாகவும் திருமணமானவரா இல்லையா என்பதைப் பொருத்ததாக இல்லாமலும் அமைய வேண்டும்.

ஆனால் பெண்களின் உரிமைகள் மற்றும் ஊதியம் பெறாத வேலையின் மதிப்பை வலியுறுத்தும் செய்தி அனைவரையும் சென்றடைய வேண்டும். நிதியறிவை பரவலாக்கும் முயற்சிகள் இன்னும் ஆழமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதேசமயம், இந்த உதவித் தொகையால் வேலை வாய்ப்புகளை மாற்ற முடியாது. பல பெண்கள் அவர்கள் உண்மையில் விரும்புவது ஊதியம் மற்றும் மரியாதைக்குரிய வேலை என்று கூறுகிறார்கள்.

"இந்த உதவித் தொகை பெண்களின் ஊதியமில்லாத பணியை அங்கீகரிப்பதாக அறியப்பட்டால், ஊதியம் பெறும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்போது அவை வேலை மீதுள்ள பாலின பிரிவை மாற்றியமைக்கும்," என்கிறார் பேராசிரியர் கோடீஸ்வரன்.

இந்தியாவின் அமைதியான இந்த உதவித் தொகை புரட்சி இன்னும் அதன் ஆரம்ப அத்தியாயங்களில் உள்ளது. ஆனால், நேரடியாக பெண்களுக்கு செலுத்தப்படும் சிறிய, வழக்கமான தொகைகள், நுட்பமான, குறிப்பிடத்தக்க வழிகளில் அதிகாரத்தை மாற்ற முடியும் என்பதை இது காட்டுகிறது.

இது அதிகாரமளிப்பதற்கான பாதையாக மாறுமா அல்லது அரசியல் ஆதரவின் புதிய வடிவமாக மாறுமா என்பது பணத்தைச் சுற்றி இந்தியா எதைத் தேர்ந்தெடுக்கிறது என்பதைப் பொறுத்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு